Posts

Showing posts from January, 2018

தேனடை

Image
“ஏலே மாயாண்டி அந்தக் கம்பை இப்படி எடுத்துப்போடு”  “எல கத்தாம பேசுல வெங்கம்பயலே தோப்புக்காரன் வந்துரப்போறான்”  "வந்தா வெள்ளப்பாண்டி தான் வரணும். அவன் தான் ஊர்லயே இல்ல இன்னைக்கு”  “சேரி சேரி நீ முதல்ல தீப்பந்தத்த ஒழுங்காப் புடி. ஏ கண்ணா நீ வேலிக்கிட்ட மறைஞ்சு நின்னுக்கோ. ஆள் யாரும் வந்தா சத்தங்குடு. யேலே தொரப்பாண்டி மரத்துல நீ ஏறாத, உங்கம்மைய கிட்ட நாங்க பேச்சு வாங்க முடியாது, தீப்பந்தத்த புடிச்சு கொளவிய வெரட்டுனா மட்டும் போதும். எலே மயிருபுடுங்கிகளா கொளவி வெரட்டி வந்துச்சுன்னா நேரா கெணத்தங்கரை திசை பக்கமா எல்லாரும் ஓடீருங்க சொல்லிட்டேன்”  முதலியார் தோட்டத்தில் பலாப்பழம் தண்டிக்கு தேன்கூடு கட்டியிருப்பதைப் பள்ளிக்கூடத்தில் “ஒரு ரகசியம் சொன்னா குச்சு தருவியா” என்று வசந்தி தான் சொன்னாள். குச்சி பெரிய விசயமில்லை. ரகசியம் என்னதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமானதும் அரைக்குச்சியை நீட்டி காது கொடுத்தேன்.  அடுத்தநாள் வெளிக்கிப் போகும் சாக்கில் முதலியார் தோட்டத்தை எட்டிப் பார்த்த போது வசந்தி சொன்னது போலவே பலாப்பழதண்டிக்கு மாமரத்தில் தேன்கூடு கட்டியிருந்தது. தோட்டத்தில் வெள்ளைச்சாமியண்

குதிரைக்குட்டி

Image
ஆக்னஸை குதிரைக்குட்டி என்றுதான் கிசுகிசுப்பாகச் சொல்லிக் கொள்வோம் பயல்களுக்குள். அப்படி ஒரு உயரம் அவள். தூய யோவான் சர்ச்சுக்கு கீழ்புரத்து வீடு ஆக்னஸுடையது. பழைய ரேனியஸ் பள்ளிக்கூடத்துக்கு நேரே எதிர்ப்புறச் சந்து வழியாகச் சாடினால் அவள் வீட்டு கொய்யாமரத்தில் ஏறிவிடலாம். அந்த ரேனியஸ் பள்ளிக்கூடத்தில் தான் ஆக்னஸ் டீச்சராக இருந்தாள்.   டீச்சரென்றால் பெரிய அது இதெல்லாம் இல்லை. நாலைந்து பொடி வயது வாண்டுகளுக்கு கதை சொல்லுவது, போர்டில் ஏபிசிடி எழுதிப்போடுவது, மதியம் லஞ்ச் பாக்ஸைத் திறந்துகொடுத்து, சிந்தாமல் சிதறாமல் சாப்பிடவைத்து, இரண்டு மணிக்குள்ளாகத் தூங்க வைத்து, சாயங்காலமானதும் அழுமூஞ்சிப் பிள்ளைகளை அததன் அம்மாக்களோடு, ஆட்டோக்கார அண்ணாக்களோடு வீட்டுக்கு அனுப்பி வைக்கிற வேலைக்குப் பேர்தான் டீச்சர் உத்யோகம்.   ஆக்னஸ் அவளுடைய அம்மாவோடு அந்த வீட்டில் வசித்து வந்தாள். அவளுடைய தாத்தா ராணுவத்தில் இருந்து உயிர்விட்ட பிறகு, அரசு குடிமையாக வழங்கிய வீட்டிற்கு அவர்கள் சமீபத்தில்தான் குடி வந்திருந்தார்கள். அந்த வீட்டிற்கு நேர் எதிரில் அல்பியண்ணன் டீக்கடை இருந்தது. அங்கே உட்கார்ந்துக் கொண

கொடி வீரன்

Image
“நேரா கேமராவப் பார்த்து பேசுங்க. அங்க இங்க திரும்பக் கூடாது. இந்த மைக்ல நீங்க பேசுறதெல்லாம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கும். அதை அசைக்காம பார்த்துக்கோங்க. சரி ஆரம்பிக்கலாமா!” “என்னன்னு சொல்லட்டும்” “நீங்க இந்த ஊருக்கு எப்போ வந்தீங்க. எத்தனை தலைமுறையா இங்க இருக்கீங்க. எப்படி இந்த தொழில் கத்துக்கிட்டீங்க.செங்கல் சூளைகள்ள குழந்தைங்களை வேலைக்கு வைக்கிறது சட்டப்படி தப்புன்னு இருக்கே. உங்க காலத்தில் எப்படி அதெல்லாம் பார்க்கப் பட்டது.. அப்புறம் உங்க ஊர் பெருமைகள் இதெல்லாம் சொல்லலாம். தண்ணி வேணும்னா இப்பவே குடிச்சுக்கோங்க. இடையில் இறுமினீங்கன்னா கொஞ்சம் கேப் விட்டுட்டு, திரும்ப விட்ட இடத்தில் இருந்தே பேச ஆரம்பிங்க. மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்ல. இடையில ஏதும்கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லும்போது கேமிராவப் பார்த்தே பேசுங்க சரியா!” “நெறய கண்டீசன்லாம் வச்சிருப்பீங்க போலய தம்பி” “அதெல்லாம் இல்லைங்க ஐயா. மண்பாண்டங்கள் செய்யுறவங்களப் பத்தின ஆவணப் படம் இது. அவங்களோட வாழ்க்கையை பதிவு பண்ணனும்னு விரும்பி பண்றோம். அதான் உங்களை பேட்டி எடுக்குறோம்” “டீவில வருமோ”  “இல்ல.. இது டீ.விலல்லாம் வர

ஊழி

Image
மயானக் கொள்ளை நிகழ்ந்து முடிந்ததுபோல ஊரே கந்தல்கோலமாய் சிதைந்து கிடந்தது. எதுவுமில்லாத சூன்யத்தனமும், இயலாமையும் மனசைக்கிடந்து குத்திக்கிழிக்கிறபோது, பிறகு என்னதான் இருக்கிறது இந்த சாபங்கெட்ட வாழ்க்கையில் என்ற எண்ணமே மேலுழுகிறது. காலங்காலமாய் ஒரே பாதையில் போய்க்கொண்டிருக்கிற ஆறு ஏன் ஐப்பசிக்கு ஐப்பசி வெள்ளங்கண்டு ஏன் கம்மாய்க் கரைமீறி ஊருக்குள் ஏறணும். காணிச் சொத்தும், சிறுவாடுகளும் தண்ணீரோடு போய், பசியும் தூக்கமும் அற்று நடுத்தெருவுக்கு ஏன் இந்த சனங்களைத் துரத்தணும்.   பருவங்கண்ட சோளக்குருத்து நெறு நெறுவென்னு வெடிக்குமில்லையா அப்படித்தான் வெடிச்சி கிளம்புது கோபதாபங்கள். வாய்க்கும் வயித்துக்கும் உழைச்சு மிஞ்சும் சனங்களை வஞ்சிக்க எப்படி மனசு வருது இந்த கடவுளுக்கு… வெறித்து வெறித்து சகதிக்காட்டையேப் பார்த்துக்கொண்டிருந்தான் கொடும்புலி. மழைவெறித்து வெள்ளூரே சதசதத்திருந்தது. வெள்ளம் வடியாத கரை நிலத்தில் இருந்ததாலோ என்னம்மோ ஊருக்கு அப்படி ஒரு பே. சாணி பூசின திண்ணையில் இப்படி வெத்து உடம்பில் படுத்துக்கிடந்தால் ஆத்தா ஒரு மூச்சு ஏச ஆரம்பித்துவிடும். “காலை புடிச்சு இழுத்துக்கும்லா தரை, அந

ரஜினி முருகன்

Image
விடுமுறை நாட்களில்  ஒருகூட்டம் தெக்குத்தெரு குளத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும். கூட்டத்தில் இளசுகளுக்கிடையே கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் முதிர்ச்சியான தடித்த தேகத்தோடு, கட்டம்போட்ட சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு கிரவுண்டுக்குள் ஃபீல்டிங் நிற்பாரென்றால் அவர்தான் எங்கள் ஊரின் மளிகைக்கடை முருகன் அண்ணன். ஆனால், அவருக்கு ஏரியா முழுக்க அவருக்கு வேறொரு பெயர் இருந்தது. அந்தப் பேர்  ‘ரஜினி முருகன்’. கீழவளவில் ராணி மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். ராணியக்கா இல்லாதபோது, ஏரியா விடலைகள் ஒன்றுகூடும் இடம் அவர் கடைதான். முன்னாள் “வீரா ரஜினி ரசிகர்மன்ற கிளைச் செயலாளர். வீரா படம் ரிலீஸாகும் போது பிறந்திருக்கவே செய்யாத பொடியன்களோடு இன்னும் கிரிக்கட் ஆடிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அவரது வீட்டம்மா ராணி அக்காளின் பெரிய குற்றச்சாட்டு. முருகன் அண்ணனிடம் குற்றம்பார்க்க அவருக்கு இன்னும் சில காரணங்களும் உண்டு. அவற்றில் முதன்மையானது அவரது முன்னாள் காதல் கதை. முருகன் அண்ணனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டு பேரும் இக்னேசியஸில் ஏழாவதும் ஐந்தாவதும், படிக்கிறாள்கள். பிள்ளைகளுக்குப் ப

அவளும் நானும் அலையும் கடலும்

Image
மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும், என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன். உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு. முதல்தடவை திருவான்மியூர் புத்தகக் கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனை எதிர்ப்பார்த்து காத்திருந்ததுபோல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்தக் களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள். * இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் ச