ஊழி


மயானக் கொள்ளை நிகழ்ந்து முடிந்ததுபோல ஊரே கந்தல்கோலமாய் சிதைந்து கிடந்தது. எதுவுமில்லாத சூன்யத்தனமும், இயலாமையும் மனசைக்கிடந்து குத்திக்கிழிக்கிறபோது, பிறகு என்னதான் இருக்கிறது இந்த சாபங்கெட்ட வாழ்க்கையில் என்ற எண்ணமே மேலுழுகிறது. காலங்காலமாய் ஒரே பாதையில் போய்க்கொண்டிருக்கிற ஆறு ஏன் ஐப்பசிக்கு ஐப்பசி வெள்ளங்கண்டு ஏன் கம்மாய்க் கரைமீறி ஊருக்குள் ஏறணும். காணிச் சொத்தும், சிறுவாடுகளும் தண்ணீரோடு போய், பசியும் தூக்கமும் அற்று நடுத்தெருவுக்கு ஏன் இந்த சனங்களைத் துரத்தணும்.   பருவங்கண்ட சோளக்குருத்து நெறு நெறுவென்னு வெடிக்குமில்லையா அப்படித்தான் வெடிச்சி கிளம்புது கோபதாபங்கள். வாய்க்கும் வயித்துக்கும் உழைச்சு மிஞ்சும் சனங்களை வஞ்சிக்க எப்படி மனசு வருது இந்த கடவுளுக்கு…

வெறித்து வெறித்து சகதிக்காட்டையேப் பார்த்துக்கொண்டிருந்தான் கொடும்புலி. மழைவெறித்து வெள்ளூரே சதசதத்திருந்தது. வெள்ளம் வடியாத கரை நிலத்தில் இருந்ததாலோ என்னம்மோ ஊருக்கு அப்படி ஒரு பே. சாணி பூசின திண்ணையில் இப்படி வெத்து உடம்பில் படுத்துக்கிடந்தால் ஆத்தா ஒரு மூச்சு ஏச ஆரம்பித்துவிடும்.

“காலை புடிச்சு இழுத்துக்கும்லா தரை, அந்தக் கோரையை விரிச்சு படுத்தா என்னவாம்” என்பாள். அவள் மூச்சு அடங்கும்போது இருந்த பட்டிகளும் கோரைக் குடிசையும் இப்போது இல்லை. வேலி தடுப்பும், வெஞ்சன பானைகளும் கூட இல்லாமல் சதமட்டமாகி குலைந்திருக்கிறது இருப்பு. எதுவுமே இல்லாமல் ஆகிப்போயிருந்த துயரம் மட்டும் குடிகொண்டிருந்தது.

கொடும்புலி பட்டி போட்டிருந்தால் காடே வசமெனக் கிடப்பான். கஞ்சியும் கறியும் பெஞ்சாதி மாரித்தாய் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கொஞ்சம் வாகை மரத்தடியில் இளைப்பாறித் திரும்புவாள். அவளுக்கு வாகைப்பூ மரத்தடி மீது அப்படி ஒரு ஒட்டுறவு. கல்யாணங்கட்டி வந்த சிறுக்கிக்கு தன் வீட்டுக் கொல்லையில் நிற்கும் வாகை மரத்தடியும் அய்லா ஆச்சியின் நினைப்புகளையும் அந்த கன நேரத்துச் சுகம் திரும்பக் கொண்டு வந்துவிடும்போல. பெத்தாள் விட்டு மத்தாள் வீட்டுக்குக் கட்டிக்கொண்டு போகிற பெட்டை ஆடுகளுக்கு நினைப்புத் தானே சீர் செனத்தி.

கஞ்சிக் கொப்பரைகளைத் திரும்பக் கொண்டு போகிறவளை வெறுங்கையில் அனுப்பாமல் மலைப்பழமும், கிழங்கு சாமான்களும், கொஞ்சம் கீரை, கசாயச் செடிகளையும் ஆய்ந்து அரைக் கோணி எடைக்குக் கொடுத்தனுப்புவான். அவளும் தேவைக்குப்போக மீதி இருப்பவைகளை ராத்தல் ராத்தலாக அளந்து தெருமுழுக்கக் கூவி அணா துட்டுக்கு விற்றுவிடுவாள்.

மாரித்தாயும் ஓய்ந்தவள் இல்லை. காடு போகாத காலத்தில் கீரை விதைப்பாள். அடைகோழிகளை நேரம்பார்த்து பஞ்சாரத்தில் கவிழ்ப்பாள். காட்டுக்கரையில் சுள்ளி பிறக்கப் போவாள். வைப்பாற்றிலும், கம்மாயிலும் தண்ணீர் சுமப்பாள். எரு அள்ளுவாள், கோரை அறுத்து பாய் முடைவாள். கீத்தை முடைந்து தட்டி கட்டுவாள், விதைக்கு மண்ணுருட்டி சேகரம் பண்ணுவாள், ஊர் முனிக்கு சாயங்காலம் சாயங்காலம் விளக்குப் போடுவாள். தீட்டு நாட்களில் வீட்டுக்குள் முடங்கினாலும் தனியாளாய் செவ்வாட்டுக்கு காவல் இருப்பாள். ஆகாதது தெரியாதது பண்ணாதது என்று எதுவுமில்லை அவளுக்கு. உழைக்கிற இடுப்பு ஓய்வுக்கு திண்டு தேடுமா என்ன?

நிலா தூசி துரும்பில்லாமல் பழுத்துக் கிடக்கிற நாளில் கொடும்புலி அவளை காட்டுக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டிருப்பான். சீவிச் சிங்காரித்து கனகாம்பரம் கட்டி, பொட்டுவைத்து பட்டி காவலிருப்பவனோடு ராத்தங்கலுக்கும் போவாள். தனித்துக் கிடக்கும் அவனுக்கு மாரித்தாயோடு சரசம் பண்ணும் ராத்திரிகளும் கனா மாதிரி அமைந்துவிடும். நல்லதும் சாரையும் பின்னிக்கிடந்த ராத்திரிகளை ஊர் அறியுமா உறவுதான் அறியுமா.

பெஞ்சாதி அமைந்தால் இவளைப்போலே இருக்கணுமென்று ஊர்க்காரன் சொல் காதுபடவே எடுபடும். கொடும்புலிக்கு ஊரும் காடும் பெரிய வித்யாசமில்லை. ஆத்தாள் பெரியநாச்சி இருக்கிறவரை மடித்துணியைப் பிடித்துக்கொண்டு, பட்டியே சொகமெனக் கிடந்து பழகினவன். “பொட்டச்சி வளர்ப்பு ஒட்டுக்குள்ளே திரியுமாம்” என்ற ஊர் பேச்செல்லாம் அவன் காதிலே விழுந்ததில்லை. இளம்பிராயம் முடிந்து, அவனுக்குக் காது விடைக்கும் போதே பண்ணையக்காரர் நிலத்தில் வேலிக்காவல் காரனாய் இருந்த அய்யன் பாம்புகடித்துச் செந்த்துப்போனார். இனி பிள்ளையே கதியென்று பிரண்டைச் செடிபோல வரிந்துகிடக்கும் தலையை வாரி முடித்துக்கொண்டு பேச்சியம்மன் மாதிரி பிள்ளையும் கையுமாக காடுகரையில் ஆடு மேய்க்கப் போனாள் பெரியநாச்சி.

 ஆடுகள்தான் அவளுக்கு எல்லாமும். பட்டியில் இருந்த கிடாக்களில் இரண்டை நல்லவிலைக்கு விற்றுவிட்டு, சாத்தூர் சந்தையில் புதுசாய் ஆறேழு வெள்ளாட்டுக் குட்டிகளைப் பிடித்துவந்தாள். புல்லும், பயிர்தும்பும் காட்டிக்காட்டி, ஒரு பட்டியையே உருவாக்கியிருந்தாள். கொடும்புலி வளர்த்திகண்ட பிறகு இரண்டு பட்டி ஆடுகள் நிறைந்திருந்தன. ‘ஆதீண்டு குத்தி’ நட்டிருந்த முற்றத்தில் புழுக்கைகள் அள்ளி மாளாது.

கொத்து செழித்ததும் காட்டுக்குள்ளே உரமள்ளிப்போட்டு காட்டு முனையில் தானியங்கள் விதைத்தாள். காட்டுப்பயிருக்கு என்ன விதைப்பும் வெள்ளாமையும். ஆடுதின்ன கீரை போக தானியமாய் வீட்டுக்குள் குவிந்தது.  ‘தொம்பை’ கட்டி சேகரிப்புகளை உண்டாக்கினாள். தானியம் போட்டு பானைச் சட்டிகள் வாங்கினாள். காட்டு முனிக்கு வெங்கல மணி சாத்தினாள்.  ‘எம்புள்ளைக்கு ஒரு கொறையும் இல்லாம பாத்துக்கைய்யா’ என்கிறதைத் தவிர்த்து என்ன வேண்டுதல் இருக்கப் போகிறது பெரியநாச்சிக்கு.

‘சேவல் செழிக்குதென்றால் நரிக்கு நாக்கு புடைக்குமில்லையா’ அய்யன் செத்து பல தெவசத்திற்குப் பிறகு, “பண்ணை வேலைக்கு உன் பிள்ளையை அனுப்பு” என்று காரியமாய் ஆளனுப்பினார் பெரிய பண்ணை. பதறிப்போன நாச்சி பண்ணைக்கே நேரேபோய், “அய்யோ, அவன் தனிச்சி நின்னுக்கிட மாட்டானுங்களேய்யா” என்று கெஞ்சினாள். “அப்போ உம் புருசன் வாங்கின கிரையத்துக்கு பட்டியை எழுதி வச்சிட்டுப் போ” என்று மந்திரமாய் வார்த்தையைப் போட்டார் பெரிய பண்ணை. 

 ‘சுத்தி சூரை முள்ளிருக்க, தப்பிச்சி இண்ட முள்ளில் விழுந்த’ கதையாய் வாபூட்டுப் போட்டுக் கொண்டு அழுது நின்றாள் பெரியநாச்சி. “சரி ஆனது போகட்டும். இனி உன் தொம்பையில் விழும் தானியத்த்தில் மூணில் இருபங்கு என் கும்பாவில் வந்து சேரணும். ஆனிக்கு ஒரு ஆடும் பங்குனிக்கு ஒரு குட்டியும் வட்டியா வந்து கட்டிடணும். காட்டு நெலமென்ன உங்க அய்யன் வூட்டுச் சொத்தா! இல்ல வாங்கின கெரையம் என்ன காத்துல கரைஞ்சிருமா” என்று சத்தியவாக்கு வாங்கிவிட்டு பத்திவிட்டார் பண்ணை.

கொத்திப் பயிரிட்டதெல்லாம் பண்ணையத்து தோட்டத்தில் இறங்கியது. மிச்சம் மீதமெல்லாம் வயித்துக்குச் சரிப்பட்டுப் போனது. மலட்டு மாட்டைவிட வெள்ளாடு புண்ணியம் என்று சகித்துக்கொண்டாள் நாச்சி. நின்றநெடுக்கிலே கொடும்புலியும் தேகம் பெருத்துவிட்டான். வளர்ந்த பிள்ளைக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்க்க, சீமை சீமையாய் ஆள் சொல்லி வைத்தாள். ‘சொந்தத்து சேர்க்கைகள் உதவாதே போச்சே!’ என்று என்று சிவகங்கைப் பக்கம் தானாய்க் கேட்டுவந்த தாக்கலுக்கு மனம் கனிந்தாள். அப்படி பார்த்து முடிந்தவள் தாள் மாரித்தாய்.

சீமைதாண்டி பொட்டிச்சேலை தூக்கிக்கொண்டு வந்தவளானாலும், நுனி கருக்கலுக்கு முன்னால் அத்தனை சுத்துவேலையும் சிட்டாய் முடித்துவிட்டு, அடுத்தென்ன செய்யட்டும் என்று நின்றாள். நாச்சிக்கு கொஞ்சம் நின்று நிதானிக்க நேரம் கிடைத்தது. கிடைப் பட்டியை கொடும்புலி ஒருத்தனே கண்ணாய்ப் பார்த்துக்கொண்டான். ஆடுகள் முடையடித்து, பொலிந்து கொள்வது, ஊளை மூக்குவடிப்பது, சீக்கு, சினை பார்ப்பது வரைக்கும் அத்தனையும் கருத்தாய் கவனித்தான். ஈத்துக்குட்டிகள் காது கொழுத்துப் பிறந்தன.

இரண்டு உழைப்பினங்கள் ஒன்று சேர்ந்ததில் நாச்சிக்கு, தண்ணிக்குப் போன இடத்தில் தங்கப்பாளம் வெட்டியெடுத்த சந்தோசம். கண்ணெல்லாம் நீர் வழிய மருமகளுக்கு ‘நெய்த்தலை’ நீவி விட்டாள். அம்மையில்லாமல் அய்லாச்சி கையில் வளர்ந்த மாரித்தாய்க்கும் அவள்காட்டும் பரிவில் கண்ணை முட்டிக்கொண்டு வந்தது. பிள்ளைகள் புழங்கட்டுமென்று தைப்பனியில் காவலுக்குப் போனவளுக்கு சோதனையாக வந்தது இளைப்பு. மண்டு மருத்துவமெல்லாம் பார்த்தும் பேச்சில்லாமலே கிடந்தாள். “என்னை வைப்பாத்தில் கரைக்கிற காலம் வந்துட்டம்மா. இனி எம்புள்ளை உங்கையில ஒப்படைக்கேன்” என்று மாரித்தாய் மடியிலே படுத்து உயிர்வார்த்தை அடங்கும் முன்னே சீவன் அந்து போயிருந்தது.

பெரிய நாச்சியின் சாவு பொல்லாதது. கொடும்புலி தன்சிரத்தை இல்லாதவனாகவே மாறிவிட்டான். சோறுதண்ணி இறங்காமல் ஆத்தாள் சீலைத்துணியிலே புரண்டுகிடந்தான். மாரித்தாய் தான் மனசு சலிப்பு இல்லாமல் அவனைத் தேற்றினாள். சூனியம் எதுவும் பிடித்து அவனை ஆட்டாத வண்ணமாய் பொத்திப் பொத்திப் பார்த்துக்கொண்டாள். முடங்கியே கிடந்தவனை பட்டி மேய காட்டுக்கு அனுப்பிவைத்தாள். ‘கிட்டத்தில் தட்டான் பறந்தாலே காட்டிலே மழைபோல’ என்று கோணிச்சாக்கைத் தூக்கிக்கொண்டு கொடும்புலி இருந்த திசைக்கு ஓடினாள். காட்டிலே கிடைக் காவலிருந்தது முதல் சந்தையில் தரம்பிடித்து ஆடுமாற்றுவதுவரை பம்பரமாய் சுழன்றாள். விளக்கெரியாத கூடலுக்குப் பிறகு மாரித்தாய் வயிற்றில் கருவான சிசு கொடும்புலியை நிதானிக்கச் செய்தது.

தாய்ச்சியாக இருந்தவளுக்குச் சீமைக்குப்போய் அப்பனோடிருந்து வர ஆசை இருந்தும், ஆடுகளுக்குத் துணை புருசன்; புருசனுக்குத்துணை நான் என்று மறுத்துவிட்டாள். வெளிச்சமே புகாத அந்தக் குடிசையில் ஒத்தை மனுசியாக மகவை வலித்துப் பெற்றெடுத்தாள். கண்ணெல்லாம் பூத்து கையடக்கி பொஞ்சாதியைத் தாங்கிக்கொண்டான் கொடும்புலி. பிள்ளை ரங்க ரங்கமாய் விழித்து அழுதது. அப்படியே அம்மை பெரியநாச்சி சாயல். போன ஆத்தாளே திரும்பப் பொறந்ததுபோல நினைத்து பொங்கி அழுதான்.

ஆலமரம் இடிவிழுந்து சரிந்ததெனக் கதை உண்டா? அரசமரம் பால்வற்றி பட்ட கதைதான் உண்டா? ஆனால் இரண்டுமே படத்தான் செய்தது.  வைப்பார் மிதப்புக் கட்டை கரையேறி இருந்தது. ஓயாமல் அடித்த ஐப்பசி மழைக்கு ஊர்க் கண்மாய் கொந்தளித்து உடைப்பெடுக்கத் துவங்கியது. எல்லா காலத்துக்கும் வரும் மழைதானே என்று கதவடைத்து உறங்கிக் கொண்டிருந்த சனங்களெல்லாம் வீட்டுக்குள் தண்ணீர் வந்ததும் திகைத்துப் போனார்கள்.  கரை கங்காணி வந்து கம்மாய் உடைந்ததாகக் கத்திவிட்டுப் போனபிறகுதான் அந்த ராத்திரியில் மாரித்தாயையும், சின்ன நாச்சியளையும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு, சாக்குத் துணிமணியென்று கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு மேடான கரைக்கு ஓடிப் பாய்ந்தான் கொடும்புலி.

மேட்டில் இருந்த முதலியார் சத்திரத்தின் கல்மண்டபத்திற்குள் சாரல் விசிறியடித்ததது. மழைக்கு நனையாமல் பிள்ளையை போர்த்தி, மாரித்தாயை சாக்கை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டு நிமிர்ந்தவனுக்கு குடிசைக்குப் பின்னால் கத்திக் கொண்டிருந்த ஆடுகளின் நினைப்பு உயிர்க்கொலையாய் அறுத்தது. ஆத்தாள் வளர்த்த ஆடுகள் அத்தனையும். மழைக்கு எங்கே பத்திக்கொண்டு போக என்று கொல்லையிலே மறித்து வைத்திருந்த ஆடுகள் வெள்ளத்தில் என்னாகுமோ என்று பதறியவனாக நின்றுகொண்டிருந்தான். விவரத்தைப் புரிந்தவளாக மாரித்தாய் ‘நீ போய் ஆட்டைப் பாரு மாமா’ என்று அனுப்பி வைத்தாள். பச்சை உடம்புக்காரியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு எங்கே போவது தண்ணீருக்குள். வாட்டத்தைப் புரிந்தவளாக பிள்ளையை மண்டபத்தில் ஒதுங்கியிருந்த சனத்தில் தாய்ச்சீ ஒருத்தியிடம் கொடுத்துவிட்டு, தானும் சீலையைச் சுருட்டிக்கொண்டு பள்ளத்துக்குள் குதித்தாள் மாரித்தாய்.

புரண்டு ஓடும் அரை வயித்தளவு தண்ணீரில் ஆடுகள் முண்டிக்கொண்டு கிடந்தன. குட்டிகள் மூக்கும் வாயும் மட்டும் மேலே எக்கி உயிருக்குப் போராடுக்கொண்டிருந்தன. குட்டிகளை முதலில் ஒவ்வொன்றாய் கூரைக்கு மேலே தூக்கி வீசினார்கள் மாரித்தாயும் கொடும்புலியும். வெள்ளம் இடுப்புக்கு ஏறிக்கொண்டிருந்தது. மண்சுவர் கரைந்து பொத்துப் பொத்தெனச் சரிந்துகொண்டிருந்தது. விட்டோம் பிழைத்தோம் என்று திமிறி ஓடின ஆடுகளை வெள்ளம் இழுத்துக்கொண்டு போனது. கரை கங்காணி முடியுமட்டும் ரெண்டுபேரையும் வசையாய் வைது மேட்டுக்கு ஓடச் சொன்னான். நெஞ்சளவுக்குமேல் ஏறியிருந்த தண்ணீர்  அவர்கள் கண் முன்னாலேயே கங்காணியையும் இழுத்துச் சாத்திக் கொண்டுபோனது. இனி பெலக்காது என்று பிடிபட்டதும் மாரித்தாயும் கொடும்புலியும் சத்திரத்துக்கு காலங்கொள்ளாமல் தண்ணீர் வேகத்துக்கு நீந்திப் போனார்கள்.

வருசப் பட்டினியாய்க் கிடந்து, கொடைக்கும் பிணைக்கும் சேர்த்துவைத்த தானியமெல்லாம் தண்ணீராய்ப் போனது. ஆடுமாடு கோழியெல்லாம் அடித்துக்கொண்டு போனது. வீடுவாசல் கதவெல்லாம் கரைந்தொழிந்து போனது. அன்னவாய் திறந்து அழுவதற்கு வழியில்லாமல் சனங்கள் எல்லாம் அரற்றிக்கொண்டே கிடந்தார்கள். மறுபொழுது இல்லாமல் பெய்த மழையில்  மாரித்தாய்க்குச் கொடுஞ்சுரம் கண்டுவிட்டது. அழுது அனத்திய பிள்ளைக்குப் பால்கொடுக்க வழியில்லை. இடர்பாடுகளுக்குள் சிக்கிய மனுச மந்தையில் மருந்து மாயத்துக்கு எங்கே போக. இன்னும் ரெண்டு நாளில் வெள்ளம் வடியும், மூணு நாளில் வெள்ளம் வடியும் என்று காத்திருந்து காத்திருந்து மழை கொட்டித் தீர்த்ததுதான் மிச்சம். சுரம் முற்றிய பச்சை உடம்புக்காரிக்கு உடனிருந்தவர்கள் இருந்த கேப்பையைக் காய்ச்சிக் கொடுத்துப் பார்த்தார்கள். கெதியானவள் மாதிரித் தெரிந்தாலும் மறுபடியும் முடங்கி விழுந்தாள். பிள்ளையைச் சுமப்பேனா என் பெஞ்சாதியைச் சுமப்பேனா என்று கலங்கி நின்றான் கொடும்புலி.

எட்டாவது நாளில் மழைவிட்டு பூமி நசநசத்திருந்தது முட்டியை நனைக்கும் சேற்றில் ஜனங்கள் நடந்து பார்த்தார்கள். கொஞ்சம் தேறியிருந்த மாரித்தாயையும், பிள்ளையையும் மற்ற சனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, குடிசையைநோக்கி நடந்தான் கொடும்புலி. பிழைத்தது எது, மிஞ்சியது எது என்ற ஏக்கம் எல்லோருக்குள்ளுமாய் இருந்தது. வயிறு ஊதிய மாடுகள் காலைப் பிளந்து செத்துக்கிடந்தது. காத்துகாலத்தில் முள்ளுப்படலில் சிக்கிய சீலைபோல ஊரே கந்தலாகிக் கிடந்தது.

பெரிய நாச்சி கட்டின குடிசை சுவரெல்லாம் கரைந்தாலும் மூங்கில் தடி ஊந்தலில் ‘இன்னும் கொஞ்சம் வலுவிருக்கு என்னிடம்’ என்றபடி தாங்கி நின்றது. பட்டியில் ஒரு ஆடும் பிழைக்கவில்லை. எல்லாமும் போச்சே என்று சங்கடமாய் அழுதவனை ஆதரவாய் தழுவிக்கொண்டாள் மாரித்தாய். ‘எதுன்னாலும் சரி மாமா. நீ கலங்காத உனக்கு நானும், உங்க ஆத்தாளோட அம்சமா நம்ம பிள்ளையும் இருக்கோம். ரெண்டு துளி தண்ணியக் குடிச்சாச்சும் நாம மீண்டுக்குவோம். ஆத்தா பேச்சிமாதிரி கூட இருந்து அவ நம்மளை கைவிடமாட்டா. கவலப்படாம வீட்ட மொத சரிபண்ணு” என்று தைரியம் கொடுத்தாள். 

உள்ளுக்குள் அரற்றினாலும் மனசு கலக்கத்தை விட்டுவிட்டு, பிள்ளை வயிற்றுக்கு வழி பண்ணத் துவங்கினாள். கலைந்து, முறிந்துக் கிடந்த கொம்புகளை எல்லாம் புரட்டிப் போட்டு பட்டியை மீண்டும் சீர்பார்க்கத் தொடங்கினான் கொடும்புலி. அடித்துப் போன வெள்ளத்தில் வைக்கோல் படப்புமீது ஏறித் தப்பித்துக்கொண்ட, மாரித்தாய் வளர்த்த வீட்டுச் சினையாடு பசியிலும் மழையிலும் வாடி வதங்கி கொடும்புலியின் குடிசை வாசலில் நின்று கத்தத் தொடங்கியது.  சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த மாரித்தாய் சந்தோசத் துள்ளலோடு, “நான் சொல்லல ஆத்தா நம்மள கைவிடமாட்டான்னு” என்றபடி வெள்ளாட்டின் கழுத்தை ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்.


ஆதீண்டு குத்தி = ஆதீண்டு குற்றில்; கால்நடைகளில் தங்கள் உடல் அரிப்பைத் தீர்க்க உராய்ந்துகொள்வதற்காக நட்டுவைக்கும் கல்தூண்.  கரை கங்காணி  = கண்மாய் கரைகளை காவல்காக்கும் கண்காணிப்பாளர். தொம்பை = நெற்குதிர்; தானியங்கள் சேகரிக்கும் கூடு. பொட்டிச்சேலை = கல்யாணச் சீராகக் கொண்டுவரும் துணிப்பெட்டி. சூரை முள்ளு, இண்ட முள்ளு : வேலி முள் வகைகள்.

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்