காந்தல்




“ரோ ரோ ரோ எங்கம்மல்லோ… அழாதீங்கம்மோ…”

 

 சகுந்தலாவின் அந்தப் பலவீனமான தாலோலத்தையும் மீறி, அவளின் ஒன்பது மாதப் பெண் குழந்தை வீல்வீலென்று அழுகைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது. அவள் நின்றுகொண்டிருந்த அந்த நீண்ட வரிசை முன்னே நகர்கிற மாதிரி தெரியவில்லை. தாய், சேய் இருவரின் அடிவயிறுகளையும் சுரண்டிக்கொண்டிருந்தது பசி. நேற்றைக்கு பொழுது கவிழ்ந்த நேரத்தில், அரிசிப்பெட்டியில் கடைசியாக மிஞ்சிருந்த குருணையைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்திருந்தாள் அவள். பிள்ளைக்கு மீனாப் பாட்டி கடையிலிருந்து இரவில் கொடுத்துவிட்டிருந்த இட்டிலிகளை ஊட்டிவிட்டிருந்தாள். இப்போது அதெல்லாம் எந்த மூலைக்கு…

 

இரண்டு மூன்று மாதங்களாகவே இதே கதைதான். ஊரெங்கும் காலரா பரவி ஜனங்கள் சுருண்டுகிடந்தார்கள். ஜனக்கூட்டத்தால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன.  ‘எட்டாங்கிளாஸ் படிச்ச பொம்பளைப் புள்ளைகளை எழும்பூர் ஆஸ்பத்திரியில வேலைக்கு எடுக்குறானுங்களாம்...’ என்று ரிக்‌ஷா வண்டியோட்டும் மூர்த்தியண்ணன், நேற்றிரவுதான் நரியங்காட்டுச் சனங்களிடம் சொல்லிச் சென்றிருந்தார். காலையிலேயே பேங்கர் வீட்டுக்குப் பத்துப் பாத்திரம் தேய்க்கப் புறப்பட்டுக்கொண்டிருந்த சகுந்தலாவிடம் அந்தத் தகவலை மீனா பாட்டிதான் ஓடிவந்து சொன்னாள். 

 

“புள்ளைய நா பாத்துக்கிறேன் கண்ணு. நீ போயி அந்த வேலை ஒனக்கு அமையுமான்னு பாரு. உனக்குதான் நாலெழுத்து எழுதப் படிக்கத் தெரியும்லா… எதுக்கு பச்சப் புள்ளையோட கெடந்து இப்படிச் சீரழியுற. சர்க்காரே ஆளெடுக்குறான். பேசாம போயிதாம் பாறேன் கண்ணு...” என்று சகுந்தலாவை அவள்தான் முடுக்கிவிட்டிருந்தாள். 

 

வரிசை செத்த பாம்பைப் போல அசைவின்றி கிடந்தது. பசி அழுகையினாலும் வெய்யிலினாலும் களைத்துப் போன குழந்தை அழுகையை மட்டும் நிறுத்தவில்லை. வசையில் நின்றுகொண்டிருந்த, பெண்கள் சிலர், பாவம் பார்க்கிற பாவனையில் சகுந்தலாவையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். 

 

மெலிசான பருத்திச் சீலை, சுருக்கமும் கசங்கலுமாக வெளுத்துப்போயிருக்க, அரங்கு நிற ஜாக்கெட்டின் அக்குள் பக்கங்களில் லேசாக உப்பு பூத்திருந்தது. வலது பக்கக் கழுத்து விளிம்பையொட்டி, மூன்று வருஷங்கள் கண்ட பழைய தாலி அழுக்கேறிக் கிடந்தது. மூக்கில் பித்தளையாலான தாமரைப்பூ மூக்குத்தியும், இரண்டு காதுகளிலும் பொட்டுக் கம்மல்களையும் தவிர்த்து வேறு கோரங்கள் எதுவுமில்லை அவள் உடம்பில். சிறுத்துத் துவண்டு கிடந்த மார்களும் வத்திக் காய்ந்த வயிறும் ஒடிசலான தேகமும் சகுந்தலாவை ஒரு குழந்தைக்குத் தாய் என்பதையேகூட நம்பமுடியாமல் செய்தன. 

 

சுணங்கி நின்ற வரிசை மெல்ல முன்னகர்ந்தது. வேலைக்குச் சேர வந்தவர்களைவிட, கூட வந்திருந்த பெண்களின் தலைக்கணக்கு அதிகமாக இருந்தது. தனக்கு இந்த வேலை கிடைத்துவிடுமென சகுந்தலாவுக்கு நம்பிக்கையே இல்லை.  என்றைக்கு அர்த்த ராத்திரியில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்காரர்கள் அவளின் குடிசை வீட்டுக்குள் புகுந்து, ‘மாணிக்கம் இங்க வந்தானா…’ என்று அடிக்காத குறையாகக் கேட்டு, அட்டூழியம் பண்ணிவிட்டுப் போனார்களோ அன்றிலிருந்து அவள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து நிலைகுலைந்து  போயிருந்தாள். முதலில் மாணிக்கத்தை எங்கேயென்று காணாமல் அழுதாள். பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அவனைத் தேடி அலைந்து ஒரு தடயமும் தெரியாமல் நொந்தாள். பிறகு, உயரமாய் யாராவது சிவப்புத் துண்டோடு மாணிக்கத்தின் சாயலோடு யாராவது வாசலைக் கடந்து போனால் சென்றுகொண்டிந்தால், ‘மாமா மாமா’ என அவர்கள் பின்னாலே  கத்திக்கொண்டு சென்று  ஏமாந்தாள்.  

 

கடைசி நம்பிக்கையோடு, கும்முடிப்பூண்டியிலிருந்த மாணிக்கத்தின் சித்தப்பன் வீராசாமியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கிட்டே கேட்கலாம் எனக் கிளம்பிச் சென்றாள். அந்தப் பக்கத்தில் மாணிக்கத்தின் சித்தப்பா கொஞ்சம் வளமான ஆள்தான். ரெண்டாவது உலகமகா யுத்தத்தின்போது, வெள்ளைக்கார சர்க்கார் சோழவரத்தில் ஒரு விமான ஓடுபாதையையும் கும்மிடிப்பூண்டியில் ஓர் ஆயுதக் கிட்டங்கியையும்  உண்டாக்கியபோது, அந்த ஆயுதக் கிட்டங்கியில் போர்மேனுக்குக் கீழே வேலையில் இருந்தவர் வீராசாமி. யுத்தம் முடிந்து ஆட்சிகள் கைமாறிய பிறகு, அங்கேயே அவருக்கு மேஸ்திரி வேலையும் கிடைத்தது. மாணிக்கம்கூட கொஞ்சக் காலம் அங்கேயேதான் வேலை செய்தான். பிறகு, தன் சித்தப்பன் கூடேயே சண்டைகட்டிக்கொண்டு, அங்கிருந்து வெளியேறிவிட்டான். அன்றைக்கு அவனை, “செங்கொடிக்காரன் சகவாசம் உன்னைச் சீரழிக்காம விடாது” என்று சாபம் விட்டுத்தான்  துரத்திவிட்டார் வீராசாமி.

 

சகுந்தலா கைப் பிள்ளையோடு, வியர்க்க விறுவிறுக்க அந்தப் பெரிய வீட்டின் வாசலில் போய் நின்றிருந்தாள். முற்றத்தில் சாக்கடை வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. தாழ்வாரத்தில் ஈக்கள் அங்குமிங்கும் தாவிக் கொண்டிருந்தன. கம்பி அழி போட்ட தார்சாலில் ஈஸி சேர் போட்டு,      அமர்ந்திருந்தார் வீராசாமி. காலைச் சுற்றிலும் அவர் குடித்து முடித்து வீசிய பீடித்துண்டுகள். குரலில் அதற்கேற்ப அடிக்கடி ஒரு செருமல். 

 

வீராசாமிக்குப் பார்வை அவ்வளவாகத் துலங்காததால் சகுந்தலாவை, நெற்றிச் சுருங்கக் கவனித்துவிட்டு, “ஆரது..” என்று இழுத்தார். 

 

“நா, சற்குணம் மவ, சகுந்தலா...” 

 

தன் ஒடம்பிறந்தவளின் பெயரைச் சொன்னதும் மாணிக்கத்தின் சித்தப்பன் வீராசாமிக்கு உள்ளுக்குள் ஏதோ உரைத்தது. மெல்ல சேரிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு,  அவளைக் கிட்டே வரச் சொல்லி சைகை காட்டினார். இன்னொரு பீடியை எடுத்துப் பத்தவைத்துக்கொண்டு, ‘என்ன விசயமா வந்திருக்க...’ என்றார் வீராசாமி. சகுந்தலா, மாணிக்கத்தை ஒருவார காலமாகக் காணவில்லை என்பதையும் அவனைத் தேடி போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போனதையும் சொன்னாள். அதுவரை குழப்ப ரேகைகள் ஓடிய வீராசாமியின் முகத்தில் வன்மமும் காழ்ப்பும் கலந்து இறுகியது.  

 

“அருமாந்து கிடந்து குடும்பம் நடத்தத் துப்பில்லாதவன்… எக்கேடோ கெட்டு ஒழியுறான்னு விடாம நீ அவனத் தேடிட்டு அலையுறியா… நீ படிச்சவதான, பேப்பர்காரன் என்ன எழுதுறான்னுல்லாம் பாக்கமாட்டியா...” என்றார் அவர். சகுந்தலா பதிலேதும் பேசாமல் வாசல்படியிலே தவித்துப்போய் நின்றுகொண்டிருந்தாள். வீராசாமி இரண்டொருதரம் தொண்டையைச் செருமிவிட்டு, “அந்த நாயி, போலீஸ்காரன் வண்டி மேலயே குண்டு வீசிருக்கான். அதில ரெண்டு போலீஸ்காரனுங்க செத்துப் போயிட்டானுங்க. அவனப் போலீஸ் தேடிட்டு கெடக்கு. அதுக்கு வக்காலத்து வாங்க நீ எங்கிட்ட வந்தியா…” 

 

சகுந்தலாவுக்கு இப்போது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதற்குள் அந்த வீட்டுக்குள்ளிருந்து குழந்தைகள் ரெண்டு பேர் விளையாட்டுச் சலசலப்புடன் ஓடிவந்தார்கள். அவர்கள் பின்னாலேயே வீராசாமியின் இளைய மருமகள் வந்து நின்று, யார் என்ன விபரமென்று சகுந்தலாவை விசாரிக்க வாயெடுத்தாள். அவளிடம், “புள்ளைகளைக் கூட்டிட்டு உள்ள போம்மா...” என்று எரிந்துவிழுந்தார் வீராசாமி. பிறகு, “அண்ணன் மவன்ற உருத்தெல்லாம் அத்துப்போய் பலகாலமாச்சு. ஒடம்பொறந்தவளுக்காக, ஒன்னக் கண்டு நா எரக்கப்பட்டா, நாளைக்கு என் வூட்டுக்குப் போலீஸ்காரன் வந்து நிப்பான்...” என்று பேச்சை நிறுத்தினார்.

 

சகுந்தலாவுக்கு அதற்குமேல் அங்கே நிற்கத் தோன்றவில்லை. அவள் அழுகை இப்போது கரை உடைந்திருந்தது. ஆற்றாமை பொங்க, மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. பிள்ளையைக் கைமாற்றிக் கொண்டு விடுவிடுவென்று வந்தவழியே திரும்பி நடக்கத் தொடங்கினாள்.  தெருமுனையைத் தாண்டி, பஸ் பிடிக்க அவள் நடந்துகொண்டிருந்தபோது சின்னப்பிள்ளை ஒன்று ஓடிவந்து, ‘எக்கா இத எங்க அம்மா உங்கட்ட குடுக்கச் சொன்னாங்க...’ என்று ரெண்டு ரூபாய் தாள் ஒன்றை அவள் கையில் திணித்துவிட்டுத் திரும்பி ஓடியது. என்ன நினைத்தாளோ சகுந்தலா அந்த ரூபாய் உள்ளங்கை வியர்வைக்குள் சுருட்டிக்கொண்டு தன் திசையிலே நடந்தாள்.

 

***  

 

“ஏமா… கொழந்தைய இப்படியா அழுவ விட்டுட்டு நிப்ப... அது கம்முறத வச்சே தெரியல, எதுக்கு முண்டுதுன்னு. ஒரு மறைவா போயி வாயில சப்பக் கொடுக்காத... அதுகிட்டப்போயி... ம்மோ…மோன்னு மொணங்கிட்டு கிடக்க…” வரிசையில் சகுந்தலாவுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பெரியம்மா ஒருத்தி, குமைச்சலாகத் திட்டினாள்.

 

அவள் திட்டையதைக் கேட்டு விதிர்விதிர்த்துப் போன சகுந்தலா, தொண்டை வறண்டு வெறிக் கூச்சலோடு அழுதுகொண்டிருந்த, பிள்ளையைத் தன் மார்போடு இறுக அணைத்து, அதன் அழுகைச் சத்தத்தைப் பாதியாகக் குறைக்கப் பார்த்தாள். ஆனாலும் அது அமைந்துபோகிற மாதிரி தெரியவில்லை. 

 

பொறுமையிழந்த அந்தப் பெரியம்மா சகுந்தலாவின் கிட்டே வந்து அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “தே புள்ளைய இப்புடிக்கொடு… புள்ளைய அமர்த்த முடியாதது... எதுக்கு புள்ள பெத்துக்கிடுதுங்களோ! தே… தே… தே… என்னா வோணும் இந்தச் சிலுப்பட்டைக்கு, பசிக்குதா... என் கண்ணில்ல… என் ராணில்ல… தே... கூடமாட ஒத்தாசைக்கு வூட்டாளுங்க யாரையும் கூட்டிட்டு வர்றதில்ல…”

 

சகுந்தலா பதில் சொல்லச் சத்தில்லாதவளாக நின்றுகொண்டிருந்தாள். பேசாமல் மீனா பாட்டியிடமே பிள்ளையைக் கொடுத்துவிட்டு வந்திருக்கலாமோ என்று ஒருகணம் யோசித்தாள். அதுவரை கையிலிருந்த குழந்தை இப்போது பெரியம்மா கையில் இடம் மாறியதும் துலாக்கோல் தள்ளாடுவதுபோல மெல்ல நடுங்கவும் செய்தாள். 

 

“என்ன இப்படிச் சரியுற… பச்சப்புள்ளக்காரி நீ மொதல்ல வயித்துக்கு ஏதாச்சும் தின்னியா இல்லியா…” எல்லோரின் முன்னிலையிலும் அந்தப் பெரியம்மா உரத்து உரத்துக் கேள்வி கேட்டது சகுந்தலாவுக்கு என்னவோ போலானது.  

 

“புள்ள பால்குடி மறந்துடுச்சா…”

 

‘இப்பதான் கொஞ்சநாளா’ மென்று முழுங்கினாள். 

 

“அதுசரி அங்க என்ன இருக்கு… பிள்ளைக்குத் தூக்கிக் குடுக்க… ஏ செந்தாமர இங்க வா... இந்தாப் புள்ளையப் புடிச்சி அப்படி நெழல்ல வெச்சி கொஞ்சம் பாலச் சப்பக்கொடு... இந்தாமா… லைனுல பூந்து வர்றவுகளா… ரெண்டு பேரும் இப்ப வந்துருவோம். தே… நீ என்ன நிக்கிற, வா எம்பின்னால” சடசடவென அதிகார தோரணையோடு உடனிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, சகுந்தலாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே தெருச் சாலையிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தாள் பெரியம்மா.

 

“ஏ பாயி... கடையில பன்னு வெச்சிருக்கியா... ஒரு டீயும் ஆத்திக்கொடு... தே இந்தா இதத் தின்னு. என்ன பாத்துட்டே நிக்க.. தெய்வம் காட்டும், வந்து ஊட்டுமா… மனசிலே உள்ளத தூக்கி ஓரம் வெச்சிட்டு… நீ வயித்த நெரப்பு. ஆமா ஊரெங்கடி ஒனக்கு...” சகுந்தலா கையில் அந்தப் பெரியம்மா ரெண்டு பன்னைத் திணித்துக்கொண்டே கேட்டாள். 

 

பிள்ளையை யாரிடமோ கொடுத்துவிட்டு வந்து நிற்கிறோம் என்ற தவிப்புடனும் கையிலிருந்த பன்னை ஒழுங்காக மென்று தின்ன முடியாமலும்,  சகுந்தலா பெரியம்மாவுக்குப் பதில் சொன்னாள்.

 

“கவரப்பேட்டை... கும்முடிப்பூண்டி கிட்ட...” 

 

“அங்கயிருந்தாடி இம்மாந்தொலவு வார...” 

 

“இங்க எழும்பூருலதான் எங்கம்மா, ஆயால்லாம் இருந்தாங்க. காலரால போய்ட்டாங்க. கல்யாணமாயிப் போனது கவரப்பேட்டை...” 

 

“அங்… ஒனக்கு ரெண்டு உசுரா… எனக்கு நாலு உசுரு. செரி என்னா செய்யுறான் உன் ஊட்டாம்பள... இப்படி பச்சப்புள்ளக்காரிய தன்னாந்தனியா உட்டுட்டு எந்தச் சீமையில சீனி யாவாரம் பாக்கப் போனாம்”

 

“அவரக் காணோம்...”

 

“காணோம்னா... இட்டாந்து புள்ளையக் குடுத்துட்டு ஓடிட்டானா கம்மனாட்டி...” கேட்டுக் கொண்டே இன்னும் ஒருவாய் பன்னைத் தின்னச் சொல்லி கையசைத்தாள் பெரியம்மா.  

 

“இல்லல்ல... அவர ஜெயில்ல புடிச்சு போட்டுட்டாங்க...” 

 

“ஜெயில்லயா... இந்தா இந்த டீயக்குடி... விக்கிக்கப்போவுது... எம்புட்டு ஆச்சி பாயி...” பெரியம்மா தன் சீலை முந்தானைச் சுருளிலிருந்து பத்து, இருபது பைசாக்களை எண்ணிக் கொடுத்துவிட்டு, சகுந்தலாவிடம் கமுக்கமாகக் கேட்டாள். “என்ன பண்ணாம்டி, ஜெயில்ல புடிச்சு போடுத அளவுக்கு…” 

 

“என்னென்னம்மோ சொல்றாங்க… போலீஸ்காரங்க மேல குண்டு வீசினாருன்னு சொல்றாங்க. எங்கயோ ஒளிஞ்சி இருந்தவரை ஜெயில்ல புடிச்சு போட்டங்களாம். யாருகிட்ட கேட்டாலும் இதுக்கு மேல எதுவும் சொல்ல மாட்டுக்காங்க. தெனமும் ஜெயில் வாசல்ல வந்து நின்னு, மாமா மாமான்னு கூப்ட்டு பாப்பேன். பிள்ளை அழுகையைக் கேட்டாச்சும் வந்துடமாட்டாரான்னு… ரொம்ப மாசமா அவரு மொகமே பாக்கல…” சகுந்தலாவுக்கு பேச்சு முறிந்து அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

 

“அட சண்டாளி… ஒரு சொந்தக்காரன் கூடவா ஒனக்குத் தொணைக்கு இல்லாம போனான். நாசமாப் போறவனுவ...” சகுந்தலா இன்னும் துயர்கொண்டு தேம்பியழத் தொடங்கினாள். பெரியம்மா அவளைத் தன் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டபோது, ஆஸ்பத்திரி வளாகத்துக்குள்ளிருந்து, “யம்மோ வெரசா வா... நம்ம லைன் வரப்போவுது...” என்று செந்தாமரையின் கூக்குரல் கேட்டது. 

 

இரண்டுபேரும் திடுதிடுவென எழுந்து வரிசையை நோக்கி ஓடினார்கள். சகுந்தலா ஓடிப்போய் செந்தாமரையிடமிருந்த குழந்தையைத் தன் கையில் வாங்கிக்கொண்டாள். பெரியம்மா அவளைத் தடுத்து, “நீ வெரசா போ... புள்ளை என்கிட்ட இருக்கட்டும். நீயும் கூடப் போடி” என்று தன் மகளையும் ஆஸ்பத்திரி வராந்தாவுக்குள் தள்ளிவிட்டாள். உள்ளே இடியும் புடியுமாய் இருந்தது. சகுந்தலா பிள்ளையைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே கூட்டத்துக்குள் கலந்தாள். செந்தாமரை அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு வராந்தா பாதைக்குள் முன்னேறினாள்.  

 

இருபுறமும் கம்பி வலைத் தடுப்பு போட்ட அந்தப் பாதை உள்ளே செல்லச் செல்ல இருட்டு கசமானது. பேச்சுக்குக் கூட காற்றில்லாத அளவுக்குப் புழுக்கமேறியிருந்தது. ஏற்கெனவே உள்ளே வந்துசேர்ந்திருந்தவர்கள் பத்தாம் நம்பர் அறை முன்னால் முண்டிக்கொண்டு நின்றார்கள். அந்த அறை வாசலில் நின்றிருந்த வெள்ளை கவுன் அணிந்த பெரிய நர்ஸ் ஒவ்வொருத்தரின் முகம் பார்த்து, ‘நீ அங்க போ.. நீ இங்க போ’ பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார். சகுந்தலாவை ஏற இறங்கப் பார்த்தவர், அவளைக் குறித்து விசாரிக்க ஆரம்பித்தார். 

 

“உம் பேரென்ன...”

 

“சகுந்தலா...” 

 

“வீட்டுக்காரர் பேரு..”

 

“...மாணிக்கம்.”

 

“என்ன படிச்சிருக்க...”

 

“எட்டாவது வரைக்கும்...” 

 

“க்ளீனிங் வேலையெல்லாம் செய்வியா... ரத்தம், வாந்தியல்லாம் பார்த்தா மயங்கிற மாட்டல்ல...” 

 

“செ...செய்...வேங்க...” 

 

“எங்க அங்க எழுதிப் போட்டிருக்கத வாசி...”

 

சகுந்தலா வாசித்துக்காட்டினாள். பிறகு, கைகளை நீட்டச் சொல்லி, நகங்களில் அழுக்கு இருக்கிறதா என்று சோதித்தார். அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தயக்கத்தோடு என்ன ஏதென்று அவளை விசாரித்தார் பெரிய நர்ஸ். பிறகு, துண்டுச் சீட்டு ஒன்றைக் கிழித்துக் கொடுத்து, அதே வராந்தாவிலிருந்த மற்றோர் அறைக்கு அவளைப் போகச் சொன்னார். 

 

அங்கே, வரிசையில் நின்றுகொண்டிருந்த நூற்றுச் சொச்சம்பேர்களில் முதற்கட்டமாகத் தேர்வான நாற்பது ஐம்பதுபேர் மட்டும் கிடைத்த இடங்களில் அமர்ந்திருந்தார்கள். சகுந்தலா அவர்களுடன் சேர்ந்து அமர்ந்த சில நிமிஷங்களிலேயே செந்தாமரையும் கையில் துண்டுச் சீட்டுடன் அங்கு வந்துசேர்ந்தாள். அவளை அங்கு பார்த்ததும்தான் பிள்ளை பத்திரமாக இருக்கும் என்று சற்று ஆசுவாசமானாள். 

 

ஈறு தெரிய சிரித்துக்கொண்டே வந்த செந்தாமரை, சகுந்தலாவை ஒட்டிக்கொண்டு அவள் கிட்டேவந்து உட்கார்ந்தாள். 

 

“ஓம்பேரு சகுந்தலாவா... எங்கக்கா பேரும் அதுதான். அது செத்துப்போயிடுச்சு. எங்கக்கா வீட்டுக்காரருக்கே என்னையும் கட்டிவெச்சிட்டாங்க. எனக்கு அங்க பிடிக்கல. சண்டபோட்டு கொழந்தயோட வந்துட்டேன். நானும் எட்டாவதுதான் படிச்சிருக்கேன்… ஓம் பாப்பா பேரென்ன… ரொம்ப அழுதுச்சுல்ல. ஆனா, எங்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டா… எங்கக்கா பொண்ணும் இப்படித்தான் என்னக்கண்டா தொத்திக்கும். ரெண்டையும் ஆயாட்ட விட்டுட்டு, எங்கம்மாகூட இங்க வந்தேன். இங்கன டீக்கம்பேனிலதான் வேலை செய்ஞ்சிட்டுதான் இருந்தேன்… எங்கம்மாதான் ஆயா வேலை பாருன்னு இங்க கூட்டிவந்துடுச்சு. எனக்கு இந்த வாடையே பிடிக்கல… ஆமா, அந்த நர்ஸம்மாவ ஒனக்குத் தெரியுமா… ஒன்னப்பத்தி என்கிட்ட விசாரிச்சிட்டே இருந்துச்சு…” செந்தாமரை பேசிக்கொண்டே இருந்தாள். 

 

சகுந்தலாவுக்கு ஆஸ்பத்திரியின் வாசனை ஒரு மெல்லிய கிறக்கத்தைக் கொடுத்தது. அவள் நினைவும் மெல்லப் பின்னோக்கிப் பாய்ந்தது. தன் அம்மாவையும் ஆயாவையும் நினைத்து ஏங்கினாள். கண்கள் வழமைபோலத் தானாகச் சுரந்தன. எல்லோராலும் கைவிடப்பட்ட தன் நிலையை எண்ணித் தேம்பினாள். “ஏய்ய்ச்சீ இந்தா பிள்ள அழாத… ஒண்ணும் ஆவாது. நீ தைரியமா இரு. என் வேலைய கூட நீ எடுத்துக்க. எதுக்குபோட்டு அழுவுற… தைரியமா இரு” செந்தாமரை அவளாகவே ஏதேதோ சமாதானங்களைச் சொன்னாள்.  

 

அம்மாவும், ஆயாவும் அடுத்தடுத்து காலராவில் விழுந்தபோது, மாணிக்கமும் இதே வார்த்தைகளைச் சொல்லித்தான் அவளைத் தேற்றினான். இப்போது அவனும் தன்னை அனாதரவாக்கிவிட்டு கண்மறைந்து போனதை நினைத்து, தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தில் சிக்கிக் கிழிபட்டாள். வாழவும் சாகவும் காரணங்களா இல்லை. 

 

“இங்க சகுந்தலா யாரு…”

 

”ஏக்கா, உன்னத்தான் கூப்புடுறாங்க… கண்ணத் தொடச்சிட்டு எந்திரிச்சு வா...” செந்தாமரை சகுந்தலாவை உசுப்பினாள். 

 

”இங்க பாரும்மா… ஒனக்கு காலரா வார்டுல க்ளீனிங் வேலை போட்டிருக்கு. பச்சப் பிள்ளை வெச்சிருக்கன்னு பாவம் பார்த்து நான்தான் மருந்து செக்‌ஷன்ல டோக்கன் வேலைக்கு மாத்திவிட்டிருக்கேன். ஊரே கொள்ளையில விழும்போதுதான் உன்னமாதிரி, என்னமாதிரி உள்ளவங்க இந்தமாதிரி ஆள் பஞ்சத்துக்கு இங்கன வேலைக்கு ஒதுங்க முடியும். கெட்டியா புடிச்சுக்க. சரியா… எதோ உன்னப் பெத்தவங்க நாலெழுத்து படிக்க வெச்சதுங்களேன்னு சந்தோசப்பட்டுக்க. நாளைக்கு காலைல டான்னு எட்டு மணிக்கு டூட்டிக்கு வந்துடணும்… சரியா” பெரிய நர்ஸ் சகுந்தலாவிடம் ஒரு பாரத்தைக் கொடுத்து நிரப்பி வாங்கிக் கொண்டே சொன்னார்.

 

சகுந்தலா வராந்தா வழியாக ஓடிவந்து, பிள்ளையும் பெரியம்மாவையும் தேடினாள். அவள் கண்களிலிருந்த தெளிச்சியைக் கண்டுகொண்ட பெரியம்மா, “என்னாடி சொன்னாங்க… எடுத்துட்டாங்களா ஒன்ன… வேலைக்கு?” என்று எதிர்பார்ப்போடு கேட்டார். 

 

”நாளைக்கு காலைல வேலைக்கு வரச் சொல்லிட்டாங்க”

 

“முனீசுவரா… ச்சரி… இந்தா புள்ளைய புடி… இனி இதான் ஒனக்கு உசுரு. இதத் தெம்பா புடிச்சுக்க. செத்தவன் சூத்து கெழக்க இருந்தா என்ன… மேக்க இருந்தா என்ன… அம்போன்னு வுட்டுட்டுப் போனவன நெனச்சி சீரழியாத… பொம்பளைங்க சுத்தி இருக்க எல்லாரும் நல்லா இருக்கணும்னுட்டுதான் அத்தனையும் வாரியெடுத்து தலைமேல போட்டுக்குறோம். நாமல்லாம் அடுப்புல வெச்ச கொள்ளி மாதிரி. எரிஞ்சிதான் தீரணும். வெறகு கோணல்னா நெருப்பு பத்தாதா. போனது போவட்டும் இனியாச்சும் ஒனக்காக வாழு”

எல்லாமே கூட இருந்து பார்த்தவள்போல தன்போக்கில் புத்திசொல்லிவிட்டு, ‘இந்தச் சிறுக்கிய எங்க இன்னும் காணும்… ஏ செந்தாமர… செந்தாமர..” என்றபடி அந்தப் பெரியம்மா கண்மறைந்து போனாள் பெரியம்மா. சகுந்தாலாவின் பிள்ளையைத் தோளில் போட்டுக் கொண்டு, “ரோ… ரோ… ரோ… எங்கம்மல்லோ அழாதீங்கம்மோ…” என்று தேற்றினாள்.





-கார்த்திக் புகழேந்தி | 17-08-2023 |

Comments

Popular posts from this blog

கல்மனம்

வெட்டும் பெருமாள்