அபகரி






ரையோர மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம். இரண்டு வாரங்களாகப் பெய்த மழையில் கொஞ்சம் சேற்றுத்த னமான நிறத்தைப் பூசிக்கொண்டிருந்தது ஆறு. ஆற்றங்கரையில் கல்மண்டபத்தின் கலைத்திறனை மெச்சுவார் யாரும் அப்போது அங்கிருக்கவில்லை. அவரவர்களின் உடுதுணிகளைத் துவைக்க இடம் பிடிக்கவும், குளிக்கத் தடம் தேடவுமே நேரம் பத்தவில்லை. மனம்போக்கில் காலியான சீயக்காய் பாக்கெட்டுகளும், கிழிக்கப்பட்ட சோப்பு, ஷாம்பு உறைகளும் படித்துறையெங்கும்  சிதறிக்கிடக்க எதைப் பற்றியும் அக்கறைகொள்ளாமல் அதன் போக்குக்குச் சென்று கொண்டிருந்தது தாமிரபரணி. 

கிழக்கு வட்டம் வெளிச்சம் கண்கூசச் செய்துகொண்டிருந்தது.  மந்திரம் இன்னும் அந்தப் பக்கம் வந்த மாதிரி தெரியவில்லை.  ‘குறுக்குத்துறை முருகனுக்கே இந்நேரம் அர்ச்சனை நடந்து முடிந்திருக்கும். இன்னும் இந்தக் கட்டையன் மந்திரத்தைக் காணோமே... எங்க போய் தொலைந்திருப்பான்...’ என்ற யோசனையோடு, படித்துறைக்கே வந்து சேர்ந்தார் ஆறுமுகம். 

விடிகாலையிலேயே வெளுப்புகளை ஆரம்பித்து, கஞ்சியைக்  குடித்துமுடித்துவிட்டு ஏப்பம் தீரப் புல் தரையில்  உட்கார்ந்திருந்த சங்கரனைப் பார்த்ததும், அவனிடம் விசாரித்துவிட்டு, ஒரு குளியலைப் போட்டுவிடலாமென்று கிட்டே போனார் ஆறுமுகம்.

“ஏ சங்கரா, இந்த மந்திரம் பயலப் பார்த்தியாடே...”

“வாங்க சார்வாளே, அவனுக்காண்டியா இம்முட்டு தூரம் வாரீங்க...”

“அந்த பரதேசி, புள்ளைக்குச் சோமில்லன்னு கைமாத்தா ஒரு ஆயர்ரூவா தாங்க ஏட்டையான்னு வேங்கிட்டுப் போனான். ரெண்டு மாசமாச்சி,  கண்ணுலேயே ஆப்படாம நழுவிகிட்டே கிடக்கான். நமக்கும் இந்தப் பக்கம் வரத்து இல்லாம போய்டிச்சி. தேரோட்டத்துக்கு பந்தோபஸ்த்துக்கு வந்தம். அதாம் கட்டையன் ஆத்துக்குல இருப்பாம், ஒரு ஷேவிங்கப் போட்டு, பணத்தையும் வெசாரிச்சுட்டு போலாம்னு பாத்தா, தூத்துப் போட்ட மாதிரி கெடக்கு எடம். பய தொழிலுக்கே வாரதில்லயோ...” 

“வந்தாம்னாதான் உண்டும். டவுனுக்குள்ள சலூன்ல கையாள் பத்தலன்னு போயிருதான் இப்பல்லாம். போலீஸ்காரவுங்க உங்க கண்ணுலயே ஆப்படலன்னா, மாறி எங்கள்வ கண்ணுல சிக்குவாப்லயா?”

“அதுசேரி. தண்ணில நெறம் கண்டுல்லா கெடக்கு. இங்கன கசம் எதும் இல்லீய...”

“மண்ணுதான். நம்பி எறங்குங்க” 

“சிவ சிவா... தண்ணி என்னா குளுரு குளுருது.... சப்பா என்ன இந்தக் கடி கடிக்கி, மீனுவ. கொஞ்சம் நாள் படித்துறை பக்கம் வரலன்னதும் வெளியூர்க்காரன்னு நினைச்சிக்கிட்டுவளா...”

“நீங்கதாம் ஊருபக்கம் வாரதேயில்லயே...”

“என்ன செய்ய சொல்லுத... நம்ம நெலமை அப்படி ஆகிப்போச்சு. அங்க என்ன ட்ராக்டர் ஓட்டிட்டு கெடக்கானுவ...” 

 “அதெல்லாம் மானங்கண்ணியமா மண்ணள்ளி, அங்கங்க ஆழங்கண்டுபோய் கெடக்கு.”

“இங்கயுமா அள்ளுதானுவ...”

“ஏங்கேக்கீய... ராவும் பவலும் அள்ளி எறைக்கானுவ.  கேக்க ஆள் யாரு இருக்கா. எங்கைய்யா சொல்வாரு, மண்ணு  அம்மைக்கு மாராப்பு. சேலைய விலக்கி அவ நமக்கு தார தண்ணிய நம்பிதான் வாழுதோம்னு. இவனுவ ஆத்தா சேலைய உருவி, அம்மணக்கட்டையாக்கிட்டுத்தான் போவேம்னு அடம்புடிக்கான்வ” 

“நல்லா பேசுதடே. படிக்க வைக்கன்னு வெளிய எங்கெனயும் போவாட்டாலும் உங்கள்வளுக்கு இந்த தண்ணிமேல உள்ள பிரயாசம் மட்டும் போவாது போலய...”

“இவ ஒருத்தியதான எல்லாரும் அம்மைனு ஏத்துக்கிட்டோம்...”

“அடிசக்கன்னானாம்... அந்தத் துண்டு சோப்ப இங்கன வீசு...” 

“தூக்கிப்போட்டா பிடிச்சிருவியலா...”

 “ச்சும்மா எக்கிப் போடுடே... ஆமா என்ன கொடியெல்லாம் அவுத்துக் கெடக்கு. மேக்க தள்ளி கெட்டப் போறியளோ... ஐப்பசி வெள்ளம் வந்துட்டா ஒங்கபாடும் சீரழிவுதாம் போ!”

“என்ன செஞ்சாலும் கரைக்கு வந்துதான ஆகணும் எங்கள்வ பொழப்பு... ஒங்க போலீஸ் உத்தியோகம் மாதிரியா?”

“அது சரி, என் வயித்தெரிச்சல யாரு திங்க. அங்கிட்டு மூட்டம் பொகையுது.. நீதாம் போட்டுவிட்டுருக்கியாடே”

“அது மேக்க வெளுக்காம்லா ராசா. அவனும் அவன் பெஞ்சாதியும். செரட்டையை மூட்டை வாங்கிட்டு வந்து மூட்டம் போட்டு வெச்சிட்டு கஞ்சிக்குப் போயிருக்கான்”

“அவந்தானா நைனார் லாட்ஜுல வெளுப்பு எடுக்கது?”

“அவனேத்தாம்... நீங்க அங்கயா தங்கியிருக்கீய...”

“ஆமாப்பா, போலீஸ்காரன் பொழப்ப கேக்கவா செய்யணும். டூட்டி இப்ப சங்கரங்கோயில்ல. நெதம் காலைல பஸ்ஸுல அலையணுமேன்னு அங்கனயூடி ரூமெடுத்து தங்கிப் பழகிடுச்சு. இப்ப வீட்டுல படுத்தா ஒறக்கம் பிடிபடமாட்டுக்கு. நீ ஒண்ணு செய். அவம் வந்தான்னா நாளைக்கு  401-ல வந்து  யூனிபார்ம் வாங்கிக்கச் சொல்லு.

“சொல்லிருதம், அப்போ நாளை மறுநாளும் இருப்பீயலா இங்க?” 

“இருப்பேன். என்ன ஏதும் சேதி உண்டா?” 

”அதுக்கில்ல, எங்க மச்சான் மவன் தச்சநல்லூர்ல லைனெடுத்து தேய்ப்பு வண்டி வச்சிருக்கான். பொழுது தாண்டி வந்துட்டிருந்தப்ப உடையார் குளத்துக்கிட்ட வெச்சி நாலைஞ்சி பேரு மறிச்சி, சண்ட இழுத்திருக்கானுங்க. ரெண்டு நாளா தொழிலுக்குப் போகாம கெடக்கான். நீங்க ஒரு வார்த்தை இங்குள்ள எஸ்.ஐ கிட்டச் சொன்னா பிரச்சனை என்னன்னு  கேட்டுப்பாரு.” 

“ச்செரி நான் சொல்தன். ஒங்க எடப் பிரெச்னை என்னன்னு  இருக்கு... வீட்டெல்லாம் இடிக்கப் போறம்னு நோட்டீஸ் ஒட்டிக்குக் கெடந்தாங்களாமே?” 

“அது இன்னும் தீரலைங்க சார்வாள். ஊருக்குள்ள சவம் போவக் கூடாதுன்னு ஆத்தங்கரை பாதையள காலி பண்ணனும்போங்காங்க. கைலாசபுரம் எறக்கத்துல ஆரம்பிச்சி தைக்கா தெரு பாலத்த முட்டுற வரைக்கும் இடிச்சி மலத்திரலாம்னு நாயா பேயா அலைதான்வ. எங்க மாமன் ஒருத்தர் இருந்தவரைக்கும் முட்டிமோதிப் பார்த்தாரு” 

“அவம் பேரென்ன தங்கமணியா.. ஒங்க ஆள்வள்ல அவன் கொஞ்சம் துடிதான்ல... வம்பா வெட்டுபட்டுச் செத்துப் போனாம்”

“எங்காளுங்கள்ள நாலு ஞாயந்தெரிஞ்ச மனுசரு அவருதாம்.  அவரு நின்னு பேசிதான இந்தப் பக்கமும் போஸ்ட் லைட்டு, தண்ணி லைனு, சிமிண்டு ரோடுன்னு கொண்டாந்தாரு. பட்டாவுக்காக தலப்பாடு பட்டாரு. அவரு சீவனையும் முடிச்சிவிட்டானுங்க.”

“கொன்னது துவரை ஆபீஸ்காரன்தானாம்ல...” 

“யாரு செஞ்சி என்ன சாட்சி இல்லன்னு கேஸே இல்லாம ஆக்கிட்டாங்களே... எங்க ஐயன், பாட்டன் காலத்துக்கு மின்னயே நாங்க இங்க இருக்கோம்னு கலெட்டரு, தாசில்தாருங்க கிட்டயே சட்டம் பேசினாரு. அவரு சாவுக்கு நீதியில்ல... எங்களை இங்கருந்து வெரட்டணும்னே அலையுதானுவ”

“ஆத்தை நம்பி பொழப்பு பாக்குறது சரிதாம்டே. வெள்ளம் வந்தா மாறி வீட்டுக்குள்ள வந்து அல்லல்படுததும் நீங்க தான... அதுக்கு கரையொதுங்கி கெடந்தா நல்லதுதான...”

“கரையும் பாதையுமா சார்வாள் இங்க பிரச்சன... கேக்க நாதி இல்லாததுதான் இங்க பிரச்சன. ஊரத்தாண்டி பொட்டல் காட்டுக்கு எங்களப் பத்திவிட்டா நாங்கென்ன காரு வண்டி புடிச்சா ஆத்தங்கரைக்கு வந்துபோவோம். ஆளில்லாத கரட்டுல எங்களுக்கு யாரு நாதி. எங்காளுவளுக்கும் ஒத்தும பத்தாது. எடுத்துச் சொல்லுறதும் மண்டைக்கு ஏறாது”

“ஒத்தும இல்லன்னு சொன்ன பார்த்தியா அதுவேணா சரிதான். உங்களுக்குள்ளயும் வேற வேறன்னு இருக்கீங்கல்லா”

“அதுல்லாம் மனம்போல இருக்கு. பெருமைக்கா இங்க கொறைச்சல். வாயத் தெறந்து வேணும்ன்றத பேசத்தான் ஆளு இல்ல. எங்க அய்யாக்காரர் சொல்லுவார், ஒரு நேரத்துல  ஒடியங் கம்பெனிகாரன் ‘வண்ணா வண்ணாத்தின்னு’ எங்கள ஈனப்படுத்தி பாட்டு கேசட்டு போட்டானாம். அதைக் கண்டிச்சு மொத்த சனமும் ஒண்ணுகூடி மெட்ராஸையே கலங்க அடிச்சதுகளாம். அதச் செஞ்சது யாரு. ஒங்க சொக்காரர்தாம். இன்னைக்கும் தாலம்பநாத பிள்ளைவாள்ன்னா பழைய ஆளுங்க மரியாதையாச் சொல்வாங்க. அவர்தான எங்கையா மாதிரியானவங்களத் தட்டிக்கொடுத்து ஒண்ணுமண்ணா நின்னாராம். இன்னைக்கு டவுனுக்குள்ள இந்த மாத்து விரிக்கிற ஈனமெல்லாம் ஒழிஞ்சி, கொஞ்சம் மருவாதையா நிமிர்ந்து நிக்க முடிஞ்சதுன்னா அந்த ஒத்துமையாலதான். இன்னைக்கு ஒத்துமையும் இல்ல... உருத்தும் இல்ல. அதான் எங்க பெரச்சனைகளச் சீந்துவாரும் இல்ல”

“அதுசரி... விட்டா இப்பயே நீ கொடி புடிச்சுட்டு கெளம்பிருவ போல. எலா சங்கரா, நாலு நல்லது நடக்கணும்ன்னா சிலத அனுசரிச்சுதாம்டே போவணும். இந்த எடத்த வச்சி கவர்மெண்டு என்னத்தப் பண்ணப்போவுது. அவனுவ மட்டும் வெள்ளத்துல நீச்சலடிச்சா கெடக்கப் போறானுவ”

“ஏண்ணே! ஜங்சனுக்குள்ல இருக்குற எங்கள காருவண்டிகூட வாராத பொட்டலுக்கு வெரட்டுதாம்ன்னா சும்மயாண்ணே. அம்புட்டும் துட்டு வெளாடுது. கரைவேட்டியெல்லாம் வெள்ளம் வந்தாத்தான் இங்கன எட்டிப்பாக்காம்ன்னு நெனைக்கீயளா... இந்த எடங்கள் மேல குறி அவனோள்க்கு.  அதாம் பட்டாவுக்கு எங்கள நாயா பேயா அலையவுடுதானுவ...”

“என்ன ஒரு நூறு குடும்பங்க இருப்பியளாடே”

“முந்நூறு குடும்பங்களுக்கு மேல இருந்தம். இப்ப எல்லாம் மெல்ல கரையேறிடுச்சுவோ. நாங்க ஒரு நாப்பது அம்பது தலைங்க கெடக்குறோம். அதும் இன்னும் எத்தன நாளைக்கின்னு தெரியல”

“ஹ்ம்ம் ஒரு கொத்தா தான் வாழ்தீய. நல்லா இருங்கடே சரி நாங்கெளம்புதேன். உங்களுவளுக்கும் ஒரு நல்லது நடக்கட்டும்.காந்திமதி ஒங்களுக்கும் கண் தொறப்பா...”

ஆறுமுகம் ஏட்டையா அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் சங்கரன் அவிழ்த்துப் போட்டிருந்த கொடிக் கயிறுகளை அள்ளிச் சுருட்டிக் கொண்டிருந்தார். மணி உச்சிப்பகலைத் தொடவும், ராசா மூட்டம் போட்டிருந்த இடத்துக்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. 

“சங்கரண்ணே, ஒங்க மச்சினன் மவனை ஸ்டேஷன்ல புடிச்சிட்டுப் போய்ட்டாங்களாம். போயி என்னன்னு பாரும்” வந்ததும் வராததுமாகப் பதைபதப்புடன் சொன்னான் ராசா. 

சங்கரன் போட்டது போட்டபடி விட்டுவிட்டு, விரைந்து தன் வீட்டை நோக்கிப் போனார். அங்கே அவர் பெஞ்சாதி சுடலி, வாசல் நெருப்பில் சோறு வடித்துக் கருவாட்டுக் குழம்பைக் கொதிக்க விட்டுக்கொண்டிருந்தார். அவரிடம்  விஷயத்தைச் சொல்லி,  வெளுப்புக் கொடிகளை எடுத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவசர அவசரமாகச் சட்டையை மாட்டிக் கொண்டு பாலம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சைக்கிளில் கிளம்பிப் போனான் சங்கரன்.

ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்ப்பாலத்தின் வழியாக சைக்கிளை உருட்டிக் கொண்டே நடந்தார் சங்கரன். அப்படிச் சென்று கொண்டிருக்கும் போதே, காலையில் போலீஸ்காரருடன் நடந்த பேச்சுக்களில் தொடங்கி, பழைய பிரச்சனைகள் ஒவ்வொன்றாக அவன் மனசில் ஓட ஆரம்பித்தது. 

“எங்களுக்கு  என்ன தலையெழுத்து... இந்தத் தண்ணீர்க்கரையில் கிடந்து தத்தளிக்க... நம்ம பாட்டனும் பூட்டனும் வேணுமின்னா குறுக்குத்துறையும் குட்டத்துறையையும் கட்டி அழுதிருக்கட்டும்.  நமக்கு எதுக்கு இந்தச் சீரழிவு. எப்ப வெள்ளம் வரும் எப்ப  வீடு அடிச்சிக்கிட்டுப் போவும்னே வாழணுமா... இவுரு சொல்லுற மாதிரி கட்சிக்காரனை எதிர்த்து, கவர்மெண்டு ஆபீஸரு கிட்டயும் மோதி, இங்கனயே பட்டா வாங்குறதும், கரைய ஒசத்தித் தரச் சொல்லி கேக்குறதும் நடந்துரும்னு நம்புனா நம்ப சவம்தான் ஆத்துல மெதக்கும். நாங்க இருபது குடும்பமும் வெளியேறிப் போறோம். இனி எங்களுக்குத் தலைவரி கெடையாது இங்க. எங்கள விட்ருங்க...” 

இப்படியெல்லாம் பேசிவிட்டுப் போனவர்தான் சங்கரனின் மைத்துனர். அவரோடு கிளம்பிச் சென்றவர்கள் கே.டி.சி நகரிலும், காலனியிலும், ரெட்டியார்பட்டியிலும், தச்சநல்லூரிலுமாக திக்குக்கு ஒரு குடும்பமாகத் தனித்தனியாகப் பிரிந்தார்கள். எங்கே தொழில் வாய்ப்பு இருக்குறதோ அங்கே அந்தந்தக் குடும்பங்கள் குடிபெயர்ந்திருந்தன. கடன்பாடுகளுக்கு மத்தியில் பிள்ளைகள் வளர்ந்து, அததுகளின் வாழ்க்கைத் தள்ளிக்கொண்டு போனபோதும், ஏதாவது பிரச்சனை என்றால் ஓடிச் சென்று துணை நிற்க இந்தச் சொந்தம்தானே வரவேண்டியிருக்கிறது. என்று நினைத்தபோது சங்கரனை அறியாமலே அவன் கண்களில் நீரு பூத்தது. 

 சன்னதி நெடுஞ்சாலையில் ஒட்டுமொத்தச் சனங்களும் நெல்லையப்பன் கோயில் தேரோட்டம் காணத் திரண்டு சென்றுகொண்டிருந்தார்கள். தேர் உச்சியிலிருந்து விசிறியடித்த பன்னீர்த்துளி தங்கள் மேல் படாதா... என்று அந்தக் கூட்டம் சன்னதி வாசலில் கைதூக்கிக் கும்பிட்டுக்கொண்டிருந்தது. சங்கரன் சைக்கிளைச் சுவரோரம் சாத்திவைத்துவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.



Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்