Posts

Showing posts from April, 2023

வெட்டும் பெருமாள்

Image
மு ருகைய்யன் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட கருவேலமர நிழலில் குப்புறப் போடப்பட்டிருந்த ஆட்டு உரல் மீது தன் துண்டை உதறி, தூசு தட்டிவிட்டு வெயில் கொஞ்சம் தாழட்டும் என உட்கார்ந்தார். இடுப்பில் கட்டியிருந்த பட்டை பெல்ட்டின் பட்டன் திறப்பை நெம்பி காய்ந்து கிடந்த பீடியை வாய்க்குக் கொடுத்து பற்ற வைத்தவாறே நெற்றியைச் சுருக்கி இடது கையை கண்ணுக்கு நிழல் கொடுத்தார். தூரத்தில் வைக்கோல் கட்டோடு சைக்கிளை உருட்டிக்கொண்டு வரும் காமதேனு கோனாரை நோக்கி சத்தம் கொடுத்தார். “என்ன கோனாரே... அடிக்குதது வெய்யிலா..? பனியா..? சட்டகிட்ட ஒண்ணும் மேலுக்குப் போடாம சைக்கிளத் தள்ளிட்டு வாரீரவே” “சட்ட என்ன சட்ட, வெய்யக்காலம் வரும்மின்ன இந்தப்போடு போடுதுங்கேன்” “செத்த உக்காருமைய்யா இப்புடி” “ஓவ்... பொழுதுக்குப் போய் மாட்டுக்கு கூளங்காட்டணும்லா” என்றபடிடே தலையிலிருந்த வைக்கோல் பாரத்தைக் கீழே வீசிவிட்டு நிதானமானா காமதேனு கோனார்.  “சொம மாடு வெச்சுத் தூக்கியாற இதொண்ணும் யெடை கூடுன சமாச்சாரமுங் கெடையாது” “ஏஞ்சொல்லமாட்டீரு... ரெண்டு ஊருக்கும் தூக்கிட்டு நடந்தீருன்னா தெரியும்...”  “ஆமா... எங்க இங்கனக்கூடி வெக்கப்போர் ஒண்ணயுங் க