Posts

Showing posts from September, 2022

தலைமுறை

Image
  ம துரை மாவட்டத்திலே, கம்பம் பள்ளத்தாக்கிலே, குமுளிப் பெரும் பாதையில் அப்போது மொத்தமே ஐந்து லட்சம் வரவு செலவுகொண்ட பஞ்சாயத்தான சின்னமனூரில் இருந்துதான் சிவகாமி ஆச்சியைக் கட்டிக்கொண்டு வந்தார் ஞானதிரவியம் பாட்டையா.  பாட்டையா ஞானதிரவியம் கணக்கஸ்தர். எதையும் இருப்பு, எண்ணிக்கை, விலாவரிகளோடுதான் சொல்லுவார். சின்னமனூரைப் பற்றி அவரிடம் யாராவது வாயாடினால், என்ன பெரிய ஊர், மொத்தமே ஐயாயிரம் வீடுகள், வீட்டுக்கு நாலுபேரென்று இருபதாயிரம் ஜனங்கள், கும்பிட மூணு கோயில், குடிக்க இருபது கிணறு, குந்திப் படிக்க பத்துப் பள்ளிக்கூடங்கள், நானூறு தெருவிளக்கு, அதுக்குக் கீழே உக்கார்ந்து படிப்பு சொல்லிக் கொடுக்கத் தெரிந்தது பதிமூணு வாத்திமார்கள். அதிலே, நம்மாளுக ஒருத்தர் மகதான் சிவகாமி. என்னைக் கட்டிக்கிடுறியான்னு அவுங்க ஐயன் கேட்டப்போ, பேதிலபோவா என்ன எளவுன்னே புரியாம ஆட்டும்னு தலையாட்டிருக்கா. இன்னியவரை அதுமட்டும் மாறல. “என்னட்டி நா சொல்லுதது சரிதான… ஏட்டி சின்னமனூர்காரி..”  ”என் சீவன எடுக்காம உடமாட்டீரா.. வெறுவளாங் கெட்ட மனுசா” சிவகாமி ஆச்சி உள்ளறையில் இருந்து எதித்துக் குரல் கொடுப்பாள். வெளியாள் யாராவது பா

மழைக்கு முன்னால்...

Image
1 நாடான நாடதிலே நல்ல லண்டன் பட்டணத்திலே…  தேசாதி தேசந்தனிலே சிறந்த லண்டன் பட்டணத்திலே…  பாரடக்கி அரசாண்ட பரங்கி ராசா துரையின் கதை…  நாங்கள் உங்கள் முன்னால் பாடவந்தோம்..   தோம் தோம் தக்கத் தகதிமி தோம் தோம்…..  செங்கிடாரன் கூத்து நடந்துகொண்டிருந்த பச்சேரி மைதானத்துக்குத் தெற்கே வெளிச்சம் விழாத இருட்டு கசத்துக்குள் நின்றுகொண்டு சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தார் ஊர்ப்பெருசு கருமாடன்.  ‘இந்தா இப்பொ வந்துடுதோம்’ என்று சாராயக் குடுவையுடன் விடிலிக் காட்டுக்குள் இறங்கி நடந்த இளந்தாரிகள் வேம்பயலும், மாயாண்டியும் நேரம் பிந்தியும் இன்னும் ஊரான ஊருக்குத் திரும்பியிருக்கவில்லை.  சுருட்டுக் கங்கு விரல்மடக்கு வரைக்கும் எட்டிவிட்டது.  நேற்று வரை மிச்சமிருந்த சாராயத்தின் மதமதப்பு அடிவயிற்றுச் சூட்டைக் கிளப்பி விட்டிருந்தது. ஆளில்லா இருட்டுச் சுகத்தில் கொஞ்சம் மூத்திரம் பேயலாம் என்று பனைமூட்டுக்குப் பக்கம் தன் வளைந்த கால்களைக் கிளப்பிக்கொண்டு ஒதுங்கின பெருசின் தலைக்கு மேலாக்கில், திடுக்கென்று கருங்காக்கா ஒன்று தனிச்ச குரலில் ‘கரேல்’ சீறிவிட்டுப் போனது. ‘என்னம்மோ சரியாப் படலியே’ வாய் வரைக்கும் வந்த வார்த