Posts

Showing posts from February, 2022

தலபுராணம்

Image
செம்புலம் பின்னிரவில் மேல்வானம் கண்ணுக்கு அவ்வளவு தெளிவாய் இல்லை. தெற்கு, வடக்காக வீசும் கூதலும் பொடிச் சத்தம் கூடக் காட்டாதிருந்தது. அதனாலேயே எப்போதும் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டும் தழுவிக்கொண்டும் வம்பளந்து கொண்டிருக்கும் பால்பிடியாத நாற்றுக் கொத்துக்களும் வயல் ஏலாவுக்குள் சுருண்டு படுத்துக்கிடந்தன. ஊருக்குள் கன்று காலிகளின் கழுத்து மணிச்சத்தம் என்றுகூட எதையும் காணும். ஒரு குடிசை, குசினி, மச்சிலையும் விட்டு வைக்காமல் குளிர் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் பெருங்குடியான் அரண்மனை வீட்டுக்குப் பின்பக்கமுள்ள தொழுவத்தின் சாணக்குழியைத் தாண்டிக் குதித்துச் சாடி விழுந்து, கும்மிருட்டுக்குள் மறைந்தான் சங்கையா. வண்டிப்பாதையில் கடுங்கல்லை ஆரக்கால்கள் ஏறி இறங்கித் தடுமாறும் நொடிப்பொழுதுக்கும் இடைவெளி விடாத ஓட்டம். விலா வெடிக்கப் போகிற அளவுக்கு மூச்சு வாங்கியது. காட்டுத் திக்கில் தூரமாக எரிகிற தூசு வெளிச்சம் சுடலை எரிகிற திசையாகத்தான் இருக்கவேண்டும். தோளுக்கு மேலாக அள்ளி முடித்த கோடாலிக் கொண்டை அவிழ்ந்து விழுந்திருந்தது. மேல்சட்டை இல்லாத உடம்பு விசர்த்து நீர்பொங்கி வழிய, எதுபற்றி

வெஞ்சினம்

Image
மே ற்கே மலையடிப்பாதையில் பத்து மைல் தூரத்துக்குக் குறையாமல் பயணம் போனால், நான்கு மலைகளுக்கும் நட்டநடுவாக, பரந்த எல்லைகளுக்குள் காடாய் விரிந்து கிடக்கும் நாகுப்பிள்ளை தோப்பு. ஒரு காலத்தில் ஊத்தாய்ச் சுரந்த மலைகள், மரமெல்லாம் வெட்டித் தின்ற பிறகு மொட்டையும் கட்டையுமாய் காய்ந்து போனது. காட்டாறு ஓடின பாதையில் கரடி நடந்துபோன தடங்களைத்தான் பார்க்க முடிகிறது. ரொம்பக் காலம் முந்தி மொத்த மலைகளும் சமீந்தார் மாளிகைக்கே பாத்தியப்பட்டிருந்தன. தெக்கத்தி மண்ணில் காங்கிரசு பார்ட்டி வரவேற்பு பெற்ற காலத்தில பேர் சொல்லத்தக்க ஆளாக சமீந்தார் இருந்ததால் அவர் தன் ஜாகையை மெட்ராஸ் பட்டினக்கரைக்கு மாற்றிக் கொண்டார். பிறகு, ஊரோடு இருந்த மாளிகையையும் நிலபுலன்களையும் எட்டிப் பார்க்கவே நேரமில்லாமல் போனவர், மலை மேலிருந்த வேலிகளைப் பராமரிக்கும் பொறுப்பை நாகுப்பிள்ளை வசம் ஒப்படைத்துவிட்டார். நாகுப்பிள்ளை நல்ல விசுவாசி. சமீந்தாரின் பரம ரகசியங்கள் என்று சொல்லப்படுபவை படாதவை பலதும் அறிவார்.  அதனாலேயே, ஆடிக்கு அமாவாசைக்கென எப்போதாவது பியூக் காரில் வந்திறங்கும் சமீந்தார் குடும்பத்தை விட, நாகுப்பிள்ளையின் குடும்பமே சமீனின்

பூனைக்குட்டியைக் கொஞ்சுகிறவள்

Image
  “கிருபா நீ முன்பொரு யுவதியைக் காதலித்துக் கொண்டிருந்தவன் என்று எனக்குச் சொன்ன அந்த இரவில்தான் உன்னை ரொம்பவும் பிடித்துப் போனது. நானே உன்னிடம் ஒவ்வொரு இழையாகக் கழன்று விழுந்து கொண்டிருந்தேன். நல்லவேளை நீயாகவே வந்து, ‘என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டுமா’ என்று கேட்டு நம் உரையாடலின் ஆயுள்ரேகையை நீட்டிக்கத் தொடங்கிவிட்டாய். உண்மையைச் சொல்லவா.. நான் உன்னை அளவு கடந்து நேசிக்கும் அளவுக்கு உன்னைக் காயப்படுத்துகிறவளாகவும் எப்போதும் இருப்பேன். நீ என்னைச் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.. வேறு வழியில்லை உனக்கு. ஒருவேளை உனக்குத் தப்பிக்க வழி இருந்தால் இப்போதே அதற்கான பாதைகளைத் தேடிக்கொள். எனக்குத் தெரியும்… நீ அப்படிச் செய்கிறவன் இல்லை. உனக்கு அவ்வளவு தைரியமெல்லாம் கிடையாது. நீ நான் தேர்ந்தெடுத்திருக்கிற பூனைக்குட்டி. நிஜமாகவே சொல்கிறேன். எனக்குப் பூனைக் குட்டிகளைக் கண்டாலே பிடிக்காது. அதன் கழுத்தைக் கடித்து மென்று துப்புகிற கனவுகளில் இருந்து திடுக்கிட்டு விழித்து தண்ணீர் குடிக்க அலைபாய்கிறவள் நான்…” “ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே” “ஓவர்ங்க இதெல்லாம்…” “ஹாஹா… எனக்காக இல்லாட்டியும் நேருவுக்காக அட்ஜெஸ்ட் ப

கல்மனம்

Image
ச ந்திராவுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. பாத்திரம் பண்டங்களைக் கழுவிக் கவிழ்த்து, போர்வை, சீலை பிள்ளைகளின் துணிமணிகளை எல்லாம் அலசிப்போட்டுவிட்டு, வீட்டையும் ஒட்டடை அடித்துப் பெருக்கித் துடைத்து, வாசலில் ஊடுபுள்ளியில் தரதரவென நாலு கம்பிகளை இழுத்து முடித்து நிமிர்ந்தபோது, அக்கடாவென எங்காவது ஓடிப்போய்க் குறுக்கைச் சாய்க்கலாமென வலி விண்விண் என்றது. சின்னக்குட்டிக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் லீவு விட்டால் போதும் வீட்டுக்குள் கால் தரையில் நிக்காது. பரத்திக் கொண்டு பக்கத்து குடித்தனத்திற்கு டி.வி பாக்கப் பாய்ந்துவிடும். பனங்கிழங்கு தரைக்கடியிலே பருவம் கண்டது மாதிரி எப்போ விடைத்தது என்றே தெரியாமல் திம்மென வளர்ந்து நிற்கிறாள் பெரியவள் உமா. இந்த மார்கழி வந்தால் பதினாலு தொட்டுவிடும். சின்னக்குட்டியும் அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்து தானே வளர்கிறது. இத்தனைக்கும் ஆறு வருசம் இளமைதான் பெரியவளைவிட. பார்த்தால் அப்படி வித்தியாசம் பிரிக்க முடியாது. ரெண்டும் ஒரே சைஸ் பீஸ் பெனியனைத் தொள தொளவென மாட்டிக் கொண்டு அச்சில் காய்ச்சின வெல்லக்கட்டியாட்டம் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடக்கும். சமயத்தில், எது முன்