தலபுராணம்


செம்புலம்

பின்னிரவில் மேல்வானம் கண்ணுக்கு அவ்வளவு தெளிவாய் இல்லை. தெற்கு, வடக்காக வீசும் கூதலும் பொடிச் சத்தம் கூடக் காட்டாதிருந்தது. அதனாலேயே எப்போதும் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டும் தழுவிக்கொண்டும் வம்பளந்து கொண்டிருக்கும் பால்பிடியாத நாற்றுக் கொத்துக்களும் வயல் ஏலாவுக்குள் சுருண்டு படுத்துக்கிடந்தன. ஊருக்குள் கன்று காலிகளின் கழுத்து மணிச்சத்தம் என்றுகூட எதையும் காணும். ஒரு குடிசை, குசினி, மச்சிலையும் விட்டு வைக்காமல் குளிர் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் பெருங்குடியான் அரண்மனை வீட்டுக்குப் பின்பக்கமுள்ள தொழுவத்தின் சாணக்குழியைத் தாண்டிக் குதித்துச் சாடி விழுந்து, கும்மிருட்டுக்குள் மறைந்தான் சங்கையா.

வண்டிப்பாதையில் கடுங்கல்லை ஆரக்கால்கள் ஏறி இறங்கித் தடுமாறும் நொடிப்பொழுதுக்கும் இடைவெளி விடாத ஓட்டம். விலா வெடிக்கப் போகிற அளவுக்கு மூச்சு வாங்கியது. காட்டுத் திக்கில் தூரமாக எரிகிற தூசு வெளிச்சம் சுடலை எரிகிற திசையாகத்தான் இருக்கவேண்டும். தோளுக்கு மேலாக அள்ளி முடித்த கோடாலிக் கொண்டை அவிழ்ந்து விழுந்திருந்தது. மேல்சட்டை இல்லாத உடம்பு விசர்த்து நீர்பொங்கி வழிய, எதுபற்றிய சிரத்தையில்லாமல் திடுதிடுமென ஓடிக்கொண்டே இருந்தான்.

வெள்ளி கீழே விழத்துடிக்கும் தூரத்தில் வீராசமுத்திர ஆற்றங்கரையின் தாழம்புதர் வாடை காற்றில் மணந்தது. அரைமனசோடு ஊரைச் சலசலக்கச் செய்து கொண்டிருக்கும் ஆற்றைக் கடந்து மறுகரை ஏறினால் தலை கண்டு அறியமுடியாத விடிலிக்காடு. நத்தத்திலிருந்து பயினி இறக்குகிற ஆட்களும், பனஞ்சீவிகளும் கும்மாறமிடும் முன்னால் விடிலியைக் கடந்துவிட்டால் மிச்சமனைத்தும் மேற்படியான் விட்டவழி.

சங்கையா இப்போது நிதானத்துக்கு வந்திருந்தான். இடுப்புக் கச்சையில் இறுக்கியிருந்த குத்துவாளை இன்னொரு தரம் தடவிப் பார்த்துக் கொண்டான். பல வருசத்துப் பகை. இவ்வளவு காலம் பொறுத்திருந்து தீர்த்து முடித்ததன் எக்காளம் அவன் மனசில் பிறந்தது.

“அய்யோ எந்தத் தள்ளையடா இந்தக் காரியத்தப் பண்ணவன். அரமண ரத்தம் ஆறா வழிஞ்சி கிடக்கே, எங்கருந்து யெவன் வந்து குதிச்சானுவளோ... அய்யோ எங்க சாமிய இப்படி அக்கக்கா அறுத்துப் போட்டு பேயிருக்கானுவளே... அறுதலிகளா, ஒங்க வமிசம் கருத்தரியுமா, ஒங்க வாச நெல நிக்குமா, பெய மக்களா நீங்க வௌங்க மாண்டிய. ஒங்க சாக்காடு நாதியத்து போவ...” ஏரளமெடுக்கும் ஏச்சுக் குரல்கள் தூரத்திலிருந்து ஒலிப்பது பிரமை எடுத்துச் சிலிர்த்தான். 

 பழி பாவங்கள் என்று இனி புதுசாகச் சேர்க்க ஒன்றுமில்லை. சாவும் பிறப்பும்போல சாபங்களும் இந்த ஊர் உண்டான காலந்தொட்டு இங்கேயே உலவிக் கொண்டிருக்கும் ஆங்காரங்கள்தான். மண் தூற்றி வீசி மாடமழிந்த கதைகள் எத்தனை. அதன் உருவமும் அசைவும்தான் இடம் மாறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றின் பின்னாக அற்றமழிந்துபோன சொந்த வமிசத்தின் ரத்தத்தைத் தானே அவனும் கருவறுக்கவே வேண்டியிருந்தது.

ஆற்றடி கிட்டே நெருங்கியதும் தாழம்புதர் மண்டின ஒத்தையடிப் பாதையில் இறங்கினான். அறுவடை முடித்ததும் கருவைப் போரைக் கொளுத்தின சாம்பல் இப்போது காலடி பட்டுப் புகையாகக் கிளப்பியது. ஆள் வீச்சம் அடித்ததும் கல்லுத் தேரைகள் கூப்பாடுபோடத் துவங்கிவிட்டன. அருவமில்லாமல் ஒவ்வொரு பாறையாக மிதித்துத் தாவி தண்ணீருக்குள் இறங்கினான். ஈரம்பட்டதும் பொதுமின உமிச்சாம்பல் வாசனை அந்நேரத்துக்கு அவனது அடிவயிற்றுப் பசியைக் கிளப்பிவிட்டது. 

வீராத்துத் தண்ணீருக்கும் விடிலிக்காட்டுப் பயினிக்கும் பந்தயங் கட்டினால் பயனி ருசி தோத்துப் போகும். கள்ளுப் பானையைக் கழுவிக் குடித்ததுபோல சுர் என்று அடிநாக்கு இழுக்கும். மலையூத்தில் இருந்து புறப்பட்டு இறங்கிவந்து, காற்றுப் போக்கில் ஊரைச் சுற்றி அலையும் ஆற்றுத் தண்ணீர் இப்போது கிழடு தட்டிப் பள்ளம் கண்டுவிட்டது.

சங்கையா இடுப்புச் சவுக்கையை அவிழ்த்து தலையில் சுற்றிக் கொண்டான். தண்ணீரைக் கைநிறைய அள்ளி வயிறுமுட்டக் குடித்துக் கொண்டிருக்கும்போது, கண் நொடிக்கும் வேகத்தில் பின்னாலிருந்து சரசரவென சத்தம். குறுக்கே பாய்கிற ஆளென்றுதான் முதலில் பரபரத்தான். மஞ்சள் பிடித்திருந்த எருக்கஞ்செடி மூட்டிலிருந்து விரியன் ஒன்று அவசரமாகத் தண்ணீருக்குள் ‘சலப்’ என்று சாடியதைக் கண்டதும் ஒரு சின்ன பதற்றம் அவனைத் தொற்றிக்கொண்டது. 

சத்தம் கேட்ட வேகத்துக்கு சங்கையாவின் கை தானாகக் குத்துவாளை இடும்பிலிருந்து உருவி மேலுக்கு ஓங்கியிருந்தது. தண்ணீருக்குள் உன்னி உன்னி நீந்திச் சென்ற சாரையின் கழுத்தைச் சுற்றி ஏழெட்டு பொடிக் குஞ்சுகள் ஒட்டிக் கொள்வதைக் கவனித்ததும் ஓங்கிய கை தன்னாலே கீழே இறக்கினான். 

இதுநாள்வரை முன்பின் அறியாத எத்தனையோ மனிதர்களை நம்புவதற்குப் பயன்பட்டு வந்த மனிதர்களை நம்புவதற்குப் பயன்பட்டு வந்த கருவி அது ஒன்றுதான். ஒடுக்கத்தில் கற்றாழைக் கூம்புச்சாடை. ரெண்டு தரிப்பிலும் கொஞ்சமும் நெரியாத கூர். ரத்தம் ஒழுகிச் சிவந்து போயிருந்த கலாமரக் கைப்பிடியில் வளை வளையாய் நான்கு அழுத்தமான கோடுகள். அதன் முன்னும் பின்னும் பித்தளை பூண். மேல் பூணின் முனையில் வாங்காகப் பறக்கும் மூளிப் பருந்துச் சின்னம். அதன் கீழே மூன்று நட்சத்திரங்கள். உறையோடு பிணைத்து கட்டுவதற்கு ஏற்ப பொடீசான தோல் கயிறு என்று ரசித்து ரசித்து இழைத்துக் கொடுத்த கருமாரக்காரனை நெஞ்சில் எண்ணிக் கொண்டான். உயிர்களைப் பிரசவிக்கிற கைகள் தானே உறவும் பகையும் அறியாத இந்த கொலைக் கருவியையும் உண்டாக்கி இருந்தது.

எந்த ஒரு கொலைக் கருவியும் ரத்தம் பார்க்காமல் செத்துப் போவதில்லை. யாருடைய ரத்தத்தைத் தொட்டு அது தன் பசியை எழுதப் போகிறது என்பதுதான் விளங்கிக் கொள்ள முடிந்திராத புதிர். இத்தனை காலம் காத்திருந்து அந்தப் புதிருக்கான விடையை அவன் தீர்த்துக் கட்டியிருந்தான். 

ஒரு கையால் தண்ணீரை அள்ளி அள்ளி உடம்பில் தெளித்தான். பசிதீர ஏந்திக் குடித்தான். தலைக்கு மேலே கருநீல நிறத்தில் அடர்ந்து படர்ந்திருந்த வானத்தில், எரிந்து விழும் நட்சத்திரம் ஒன்று தண்ணீரில் பிம்பமடித்தது. உடம்பு சிலிர்த்துப் போனவனாக தன் குத்துவாளைச் செங்குத்தாகத் தண்ணீரில் அலசத் துவங்கினான். 

அத்தனைக் காலமும் அடிமனசில் கசந்து கிடந்த ஆங்காரங்களெல்லாம் குருதியாய்க் கசிந்தது. தண்ணீருக்குள் கைவிட்டு அடிமண்ணை உள்ளங்கையில் கொஞ்சமாக அள்ளி, வாள் முழுக்க ராவினான். ராவின இடங்களில் இருந்து மறுபடியும் ரத்தம் கசிந்தது. வாளை இப்போது தண்ணீரில் அலசினான். பொழிகிற அருவிபோலச் சிவந்து வழியும் குருதிக் கசிவு நிற்பதாகத் தெரியவில்லை. விரல்களால் மழுங்கத் தேய்த்தான். தேய்க்கத் தேய்க்க ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. முழு ஆறும் செம்புலமாகச் சிவந்து கொந்தளித்தபோதும் வாளின் ஒழுக்கு நின்றபாடில்லை. 


வலசை

பாண்டி நாட்டு பலவேசத்தம்மாளுக்கு அடுத்தடுத்து ஆறு பிள்ளைகள். தலைச்சன் பெண்பிள்ளை பிறக்கும் போதே ஆச்சுபூச்சென்று சத்தம் எதுவும் இல்லை. சந்தேகித்த மாதிரி கால்கள் நேருக்கு நிற்கிற வயசு வரைக்குமே எந்தப் பேச்சுக் குரலும் அவள் தொண்டையில் எழும்பவில்லை. லெச்சுமி என்று மார்மேல் வைத்துத் தாங்கியபோதும் ஊமச்சி என்றே ஊர் அழைத்தது. அவளுக்கடுத்தடுத்து ஏழாவதாக இளைத்துப் பிறந்த கடைக்குட்டிதான் சங்கையா. 

ரெண்டு பேருக்கும் இடையில் சங்கு கழுத்தோடு பிறந்த ரெண்டாமவளைப் பிறந்த மறுநாளையிலே கிடங்கு நரிகள் கூட்டமாக வந்து தூக்கிக்கொண்டு போனதென்றும், பாசிப்பூ நிறத்தில் கண்கொண்டு பிறந்த பெண்பிள்ளை கொள்ளையில் விழுந்து இறந்தாதென்றும் ஒவ்வொரு பிஞ்சுக்கும் ஒவ்வொரு கதையை தன் நெஞ்சுக்குள் சுமத்தி வைத்திருந்தாள் பலவேசத்தம்மாள். பிறந்த ஐந்தும் பெண் பிள்ளைகளாய் இருந்துமென்ன அதுகளில் ஒன்றுகூட பிழைத்துக் கிடக்காமல் போய்விட்டதே என்ற ஏக்கம் பலவேசத்தம்மாளுக்கு மீளமுடியாத கொடுந்துயரம். 

சங்கையா பிறந்த வீட்டுக்குள்ளேதான் அவன் ஐயா காமாண்டி நம்பியார், வெண்ணாவல் மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு, நாக்குத் தள்ளச் செத்துப் போனார். மருந்தும் மந்திரவாதங்கள் பண்ணிக் கொண்டிருந்த மனுசனைப் பஞ்சகாளிதான் ‘பொலி’ வாங்கி விட்டதாக ஊர்மந்தையில் சம்சயம் பேசிக் கொண்டார்கள். ஆனால், தூண்டி நம்பியான் கூளிப்பேய்களுக்குச் சடங்கு செய்கிறேனென்று தன் பெண் பிள்ளைகள் ஒவ்வொன்றாக அதற்குக் காவு கொடுத்து, கடேசியில் அந்தச் சதிகளிலேயே செத்தொழிந்து போனான். ஊமச்சியாய் இருக்கவே லெச்சுமி பிழைத்திருந்தாள்.

நம்பி செத்துப்போன சில காலத்திலே தேசாந்திரங்கள் முழுக்க கொடும் பஞ்சம் பிடித்தாட்டியது. மேய்ச்சல் புல்லெல்லாம் கருகிச் சாம்பலாக, வரப்பு வாருகால்கள் வெடித்துக் கிடக்க, குளத்தடிகளில் ஆடுமாடுகள் தண்ணீருக்குத் தவித்துச் சுருண்டு விழுந்தன. வலசுப் பாதைகளிலும் ஒரு குன்னி குருணி தண்ணீர் காணும். ஆறு பட்டுபோன கதையைக் கூத்தாகச் சொல்லி கோடாங்கிகள் வீதிப் பிச்சைக்கு வந்துவிட்டார்கள். 

கந்தலும் கடவங்களுமாகச் சுமந்துகொண்டு நாடுதாண்டிப் போன ஆணும் பொண்ணும், பிள்ளைகளை எங்காவது மடங்களிலும் கச்சேரிகளிலும் விட்டுவிட்டுப் போக வழிகிடைக்காதா என்று ஏங்கினார்கள். எந்த திசைக்கும் வழியற்ற கூட்டம் பசி தாழாமல் சாணக் குழியில் செத்து விழுந்து கிடந்த மாட்டின் எலும்பை வெட்டி எடுத்துக் கொண்டுபோய் சுட்டு வைத்துத் தின்றது.

சுள்ளியும், களையும், கிழங்கு, கொட்டை, வேர்களையும், தோண்டிப் பறித்து நாக்கடியில் ஊற வைத்து பசியை மயக்கியது. எலிவளைகளும் எறும்பு புத்துகளும் அங்கோல கங்கோலமாகச் சிதைந்து கிடக்க இனி எதற்கும் வழியில்லை என்றான பிறகுதான் பலவேசமும் ஊரைக் காலி பண்ணச் சித்தமானாள். அமாவாசை முடிந்த மறுநாள் லெச்சுமியை ஒரு கையிலும், சங்கையாவை இடுப்பிலுமாகக் கட்டித் தூக்கிக்கொண்டு மேற்றங்காட்டை நோக்கி நடையாக நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

‘பூமி பலியெடுக்க புத்திரரோ பரதேசம் 

புண்ணியரும் தன்னாசம்; சோறு சோறுன்னு சொல்லி 

துள்ளுதே பாலரெல்லாம் - அன்னம் அன்னமென்னு சொல்லி 

அழுகுதே பாலரெல்லாம். கோடை அழிய வேணும்; 

கொள்ள மழை பெய்ய வேணும்; மாவு கொதிக்க வேணும்

கொழந்த பசி ஆற வேணும்; பூமி வெளைய வேணும் 

புள்ள பசி ஆற வேணும்’ 

என வாபாட்டுப் பாடிக்கொண்டு எல்லா சனமும் கிழக்குச் சீமைக்கு நடக்கும்போது, மேற்கே மலங்காட்டை நோக்கி நடந்தவளை, ’பாதகத்தி இந்தப் பிள்ளைகளச் சாவடிக்கத்தான் போறா’ என்றே காவல் தெய்வங்கள் கூட கண்மூடிக் கொண்டன. அதுகள் கண்மூடிக் கொள்வது ஒன்றும் புதுசுமில்லை. பாண்டிப் படைகள் இதே பாதையில் புகுந்துவந்து மனுச மக்களை அட்டூழியம் பண்ணிக் கட்டி இழுத்துப் போனபோதும், பாண்டிகளோடு சண்டைகட்டிச் செத்துப் போனவர்களின் சவமெல்லாம் இந்த வீதிகளிலே இறைந்து கிடந்தபோதும் இந்த தெய்வங்கள் இப்படியே தான் கண்மூடிக் கொண்டிருந்தன.

மலைக்கு அந்தப் பக்கத்தில் ஆயி, அப்பனுமாக வேடுவம் பண்ணிக் கொண்டிருந்த குடிபிறப்பினர் யாரும் திரும்ப வந்தவழி ஏறி வாழ்க்கை கண்டதில்லை என்கிற கதையை வாழ்நாள் முழுக்கக் கேட்டிருந்தும் எந்த நம்பிக்கையோ பலவேசத்தை மேலேறி வா என்றழைத்திருந்தது.

பலவேசத்தின் குடிபிறப்பினர் மலைக்கு அந்தப் பக்கமிருந்து வந்தவர்கள். ஆயி, அப்பனுமாக மேய்த்துப் பிழைத்தவர்கள், நாள்பட்டுக் கிழக்கில் இறங்கி வந்துவிட, அங்கேயே வாழ்க்கையும் பட்டுவிட்டாள் பலவேசம். நீண்ட மலையேற்றத்திற்குப் பிறகு வெகுகாலம் பிந்தி, தன் பிறந்த மண்ணின் எல்லையில் அவள் கால்மிதித்த போதும் அந்தப் பரவசங்கள் எதையும் அவள் தனக்குள் பூசிக் கொள்ளவே இல்லை. 

கைக்குக் கையாக பொதிகளை மாற்றிக் கொண்டே மூணாம் நாள் பகல் பொழுதில் மலைக்கு அந்தப் பக்கத்தை முழுவதும் அடைந்தார்கள். சங்கையாவை தூக்கிக்கொண்டு, தன் பொதிகளை லெச்சுமி அந்தப் பக்கம் தூக்கி வீசிவிட்டு, முதல் எட்டை எடுத்து வைத்தபோது, கால்கள் சரேலென்று பள்ளத்தில் இடறியது. 

தரையில் அவ்வளவு ஈரம். தூரத்தில் பாறைகளில் மோதி கெந்திக்கொண்டு தண்ணீர் ஓடும் சத்தம் தொண்டைக்குழிக்கு வலிகொடுத்தது. குரங்கு கூட்டம் கடித்து வீசிப் போட்ட மாம்பிஞ்சுகள் வாசனையில் பசியும் வெடவெடத்தது. மலையடியைத் தாண்டி ஊர்களின் தலைவாசலில் இறங்கியதும் வழிகளில் பூப்பிடித்திருந்த வரகுக் குருணையைப் பறித்து பசிக்குச் சவைத்துக் கொண்டாள். 

அவ்வளவு காடும் நடந்து களைத்திருந்த லெச்சுமிக்கு அன்றைக்குத்தான் இனி நாம் பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது. காவுக் கோயிலின் மடத்தில் நெருப்பு கூட்டி உறங்கிய இரவில் தம்பியின் வாய்க்கு விரலைச் சப்பக்கொடுத்துக் கொண்டே, அம்மையின் மடியில் தலைவைத்து நிம்மதியாக உறங்கினாள். ஒரு தொடையில் மகனையும் மறுதொடையில் பிள்ளையையும் படுக்கப் போட்டுக்கொண்டு, தன்னுடைய அந்த சொந்த மண்ணின் பேறுகளைத் தாலாட்டாக வாயெடுத்துப் பாட ஆரம்பித்தாள் பலவேசம்.

கரை புரண்டு ஓடுமம்மா கொத்தாளன் ஆளும் பூமி -தாலோலம்

நெளிநெளியா ஓடுமம்மா நீலவண்ணத் தண்ணியெல்லாம்

சுழிசுழியா ஓடுமம்மா சுத்தமான ஆத்துத்தண்ணி -தாலோலம்

வெயிலடிக்கும் நேரத்திலே வெள்ளிபோல மின்னுந் தண்ணி

குடிதண்ணியும் குளிதண்ணியும் கண்ணே 

கொடம் கொடமா எடுப்போமடி-தாலோலம்

தண்ணிக்கொரு தீட்டுமில்ல கண்ணே

தடுக்க ஒரு நாதியில்ல-தாலோலம்

பாப்பானுக்கும் பச்சத்தண்ணி கண்ணே

பறையருக்கும் பச்சத்தண்ணி-தாலோலம்

கோதையுங் கோவலனும் கண்ணே

கோரிக்கொள்ளும் பச்சத்தண்ணி -தாலோலம்

தண்ணியக் கடந்தாக்கா தங்கம்போல வெளையும் பூமி

தாமனே தாய்மாமன் தலையேத்து ஆளும் பூமி…-தாலோலம்

லெச்சுமியும் சங்கையாவும் தாலாட்டில் சொக்கிக் கிடக்க, பலவேசம் ரொம்ப நேரமாக ஊரின் கடைக்கோடிப் புள்ளியாய் தீ வெளிச்சம் தெரியும் தன் அண்ணன்மார் கொத்தாளத்தையே இமைக்காமல் உற்று கவனித்துக் கொண்டிருந்தாள்.



சீர்பாகம்

வெயில் விழாத கொட்டாரத்து வாசலில் கட்டுக்கட்டாக நிற்க வைக்கப்பட்டிருந்த குதிரைகளின் கனைப்பொலிகளைத் தாண்டி, அச்சமும் தவிப்புமாக தன் அண்ணன் முத்தையன் முன்னால் பிள்ளைகளோடு இறுக்க அணைத்தபடி நின்றுகொண்டிருந்தாள் பலவேசம். 

பலவேசத்தின் அண்ணன்மார் முத்தையன் அந்த வட்டாரத்தின் ராஜாங்கத்தைக் கண்காணித்து வந்தார். அண்ணன்மார் பேரைச் சொல்லி தவிட்டையாவது தின்று கொண்டு பிள்ளைகளைக் கரையேற்றிவிடலாம் என்கிற அவளது கடைசி நம்பிக்கை வீண்போகவில்லை. அண்ணன்மார் முத்தையனும் அவரது பெஞ்சாதி குமராத்தாளும் மனதுவந்து புன்முகம்காட்டி பலவேசத்தையும் அவள் பிள்ளைகளையும் உபசரித்தார்கள்.

இருதாய் வயிற்றில் பிறந்திருந்தும் அண்ணன்மாரோடு அருகருகிருந்து வளர்ந்ததில்லை. இருந்துமென்ன அங்க லட்சணங்கள் அப்படியே உரித்தல்லவா வைத்திருக்கிறது. யார் வந்து இடையில் நின்று இவர்கள் பந்தத்தை விளங்க வைக்கணும் என்ற முணுமுணுப்பு கொத்தாளமெங்கும் பரவியது. அதற்கொப்ப பராதியாய் வந்த உடன்பிறந்தவளுக்குப் பரிபூரண ஆதரவு தரத் துணிந்துவிட்டார் முத்தையன். 

இடைக்குடியிலே ஒரு விடுதி ஒதுக்கி, கைம்பெண்ணாக வந்தவளுக்கு அண்ணமார் கோடிகளும், விளக்கெரிக்க ஒரு வரையாடும், பாய் படுக்கைகளும், பண்ட பாத்திரங்களும் கொடுத்து, கேப்பையும், புல்லரிசியும், புளி, மிளகுச் சேர்மானங்களும் முடிச்சு முடிச்சாய் கழுதைகளில் கொண்டுசேர்த்து இறக்கினார். அப்போதுதான் ராஜாங்கம் ஆண்டாலும் அண்ணனாய் முறையோடு அரவணைக்கிறான் என்று மனத்தால் பெருமை பூத்தாள் பலவேசத்தம்மாள்.

முத்தையன் பெஞ்சாதி குமராத்தாளும் நல்ல குணம் மாதிரிதான் தெரிந்தது. பொலிவைக் கொண்டே வயசில் ரொம்ப இளமைதான் அவள் என்று பார்த்ததுமே யாரும் கணித்துவிடலாம். ரொம்பக் காலமாக கலியாணம் கட்டாமலேயிருந்து, பத்து சித்திரைக்கு முந்திதான் அவளை மணந்திருந்தார் முத்தையன். 

அண்ணன் பாடு செழிப்பும் வளப்புமாய் இருந்தாலும், அளவோடு எதையும் எடுத்துக் கொள்வது தான் தனக்கு நல்லது என்று பார்த்துப் பரிதவித்து எதையும் பெற்றுக் கொண்டாள் பலவேசம். தன்பலத்துக்குக் காட்டு மூங்கிலைப் பிளந்து, கல்லடுப்பும், விறகும் கூட்டி பிள்ளைகளுக்கு களியும் கீரையும் கிண்டிக் கொண்டாள். கழுதைகளைப் பத்திக்கொண்டு ஊர்வேலி வரை நெருங்கிப்போய் பாதை பொட்டுக்களைத் தெரிந்து கொள்வதும், கிழங்கறுத்து, கொள்ளு பறித்து, கொஞ்சங்கொஞ்சமாக தன் புதுச் சக்கரத்தைத் தானே உருட்டப் பழகினாள். எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்த ஒரு நல்ல நாளில், லெட்சுமி பூப்பு கண்டிருந்தாள். 

தங்கச்சி மகளுக்குச் சீர்செனத்தியோடு பாக்கும், புதுச்சேலைகளும், பொன் சவிரியும் கொடுத்தனுப்பினார் முத்தையன். வந்தது சீதனமும் சவிரியும் மட்டுமா? “தனக்குக் கலியாணம் ஆயிருந்தாலும் இதுவரைக்கும் வாரிசு ஒன்னும் உருசு கொள்ளலே. ஆகையால், உன் மகளை நான் கலியாணம் செய்துகொள்ள உத்தேசித்திருக்கிறேன். இதனால் நம் ரத்த பந்தமும் விட்டுப் போகாமலிருக்கும்’ என்று மலையை முழுங்குவது போல சேதியையும் கூடே அனுப்பி வைத்திருந்தார். கொற்றத்து இடி தன் தலைமேலே நேராக்கில் வந்து விழுந்ததுபோல நொடிந்து போய் விழுந்தாள் பலவேசத்தம்மாள்.

சங்கையாவுக்கு அப்போது விபரம் புரிந்திருக்காத வயது. அக்காளுக்கும் மாமனுக்கும் அறுதலிக் கலியாணம். யார்யாரோ முன்னின்று எடுத்துச் செய்கிறார்கள். அம்மைக்கு என்னமும் சொல்லி யாரையும் தடுத்துவிடக் கூடிய பாக்கியதைகூட கிடையாது என்பதுவும் அவன் அறியவில்லை. பலவேசத்தம்மாள் வாய் வார்த்தை சொல்லத் திராணியற்று தனக்குள்ளே தவித்துக் கிடந்தாள். ஊமைப் பிள்ளையின் வாழ்க்கை சீரழியப் போகிறதா, சீமாட்டியாக மாளிகை புகப்போகிறாளா என்று எதுவும் புரியாமல் இருந்தது அவள் பாடு.

சித்திரை மாசத்திலே சீர்பாகம் தேதியிலே ஞாயிறு திங்களுக்கு நல்ல புதன்கிழமை நல்ல தேதியென்று சொல்லி முகூர்த்தம் முடிவானது. முடி மன்னருக்கும், அம்பத்தாறு அரசருக்கும் அருமையாய் சீட்டெழுதி அழைப்பு அனுப்பினார் முத்தையன். வாழை மரம் பிளந்து வாசலெல்லாம் பந்தல், தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல். ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் தங்கள் வீட்டுக் கல்யாணமாகக் கொள்ள ஊரே தூள் பரத்தினதுபோல் இருந்தது. இளம்பிள்ளைகள் வந்து மஞ்சள் குத்திக் கொண்டாட்டமாகச் சடங்கை ஆரம்பித்தபோது ஆர்ப்பாட்டமாய் வந்திறங்கினார் மாமன் முத்தையன். 

ஏயப்பா என்ன தோற்றம் அது.. கிழ யானையின் கனத்த காலடித் தடம்போல் மண்ணில் பதியப் பதிய நடக்கும் இந்த மானுடத்துக்கும் எலிக்குஞ்சு போலிருக்கும் தனக்கும் இன்றைக்குக் கலியாணம் என்று பதபதைப்பதா அல்லது இந்தப் புத்தம்புது அலங்காரங்கள் தந்த கௌரதையையும், சட்டி சட்டியாக நிரப்பியிருக்கும் பலகாரங்களையும் எண்ணிக் குதுகலிப்பதா என்ற எந்த மனமுடிவுக்கும் லெச்சுமி வரத் தயாராயிருக்கவில்லை.

ராத்திரி நேரத்துக்கு ஊர்ப்பாடுகள் வந்துசேர, வெட்டவெளிப் பந்தலில் கலியாண கச்சேரி களைகட்டத் துவங்கியது. பால் உலையிலும், புளிநீரிலும், கரும்பஞ் சாறிலும் சோறுபோட்டு சமைத்த புகை ஊரை உசுப்பேற்றியது. கள்ளுப் பதக்கு, கதலி, பொங்கல் கறி, எள், அவல், பொரி, வெல்லம், பலாச்சுளை என்று உபசரிப்புத் தடபுடலாக இருந்தது. சந்தனமும் மஞ்சளும் பன்னீருமாக வந்தமர்ந்திருந்தார் மணமகனாக முத்தையன். தந்தூபி ஊதிகள் முன்னால்வந்து கலியாணச் செருக்குகளைப் பாட ஆரம்பித்தார்கள்.

‘சந்திர சூரியர் தானவர் வானவர் முந்தியோர் தேவரும் முனிவரும் காத்திட நல்லக் கலியாணம் நடந்திடச் செய்வாரே! இந்தப் பெண்ணும், மாப்பிள்ளையும் நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும், வேரும் கொழுந்தும் வில்வப் பத்திரமும், தண்ட மாலை, கொண்டமாலை தானணிந்து, ஆடை ஆபரணம் அலங்கரித்து, வெற்றிலைப் பாக்கும் வீட்டுப் பேழையில் நிறைநாழி நெல்லுமெடுத்து, நாட்டிலுள்ளோர் சபைக்கு வர….

தாயிடம் முறைகேட்க, தம்பியிடம் வழிகேட்க, உரும்பு துடும்படிக்க, ஊர்மேளம் பறையடிக்க, கொம்பு, துத்தூரி, மல்லாரி, திமிரித்தாளம், பம்பை, பேரணி எல்லா அமளிகளும் ஒலிக்க ஒலிக்க, வெள்ளைக்குடை சுழல சுழல, வெண் சாமரம் விசிற விசிற… விருதுகள் சுற்றி, தீவட்டிச் சகிதமாய் கட்டுக தாலி மன்னவரே!’ என்று முழங்கியபோது மைத்துனனாக சங்கையா எடுத்துக் கொடுத்த கழுத்து மாலையை லெச்சுமிக்கு அணிவித்து, அரிசிப் பொன்னால் கோர்த்த தாலியை லெச்சுமியின் கழுத்தில் கட்டி எல்லார் முன்னிலையிலும் அவளைத் தன் இளைய பெஞ்சாதியாக்கிக் கொண்டார் முத்தையன். 

மைதானப் பொட்டல் முழுக்க உண்டு களித்த மயக்கத்தில் கலியாணத்துக்கு வந்தவர்கள் மாப்பிள்ளை பொண்ணை கேலிக்கூத்து பண்ணிப் பாடிக் கொண்டிருந்தார்கள். வயசாளிப் பெண்கள் மாப்பிள்ளையின் அழகுகளைப் பாட, இளசு நட்டுக்கள் மாப்பிள்ளையைச் சீண்டவுமாக நெடுநேரம் வரை களியாட்டங்கள் தொடர்ந்தது.  இடக்கை வலைக்கையினர் இருபுறமும் சூழ்ந்து நிற்க, துணைச் சேகரங்கள் தண்டிகையின் மேலே வர, தனக்கு வாழ்வரசியாகிவிட்ட லெச்சுமியைச் சிங்காரமாக மட்டத்துக் குதிரைமேல் ஏற்றி மைதானத்தைச் சுற்றி வந்தார் முத்தையன். மொத்த அமளியிலும் ரெண்டேபேர் மட்டும் கண்காணாமல் போயிருக்கும் செய்தி நேரம் பிந்தியே முத்தையன் காதுக்கு வந்து சேர்ந்தது.



வேடுவம்

கருப்பன் கோயில் பூடத்துக்கு முன்னால் ஒருபாடு அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள் பலவேசத்தம்மாள். சங்கையாவை மட்டும் இழுத்துக் கொண்டு ஊருக்கு எதிர் திசையில் இருட்டுப்போக்கில் கால்நடையாக நடந்தே ஊரெல்லையைக் கடந்திருந்தாள். எந்த ஊருந் தண்ணியும் இனி நம்மை வாழ வைக்கும் என்று நம்பினாளோ அதே வெள்ளத்தில் விழுந்துச் சாகலாம்போல எரிந்தது நெஞ்சு. எப்பேர்பட்ட பாதகக் கூட்டுக்குள் தான் பெத்த ஒரே பெண் பிள்ளையைக் கேப்பார் பொறுப்பார் இல்லாமல் தள்ளி விட்டுவிட்டோம் என்ற ஆத்தாமை அவளைப் பலியாய் சுட்டது. 

அம்மையும் தம்பியும் கோட்டைக்குள் வந்து எப்போது தன்னைப் பார்ப்பார்கள் என்ற கேள்வியை, தன் ஊமை மொழியால் வருவோர் போவோரிடமெல்லாம் கேட்டுக் கேட்டு ஓய்ந்திருந்தாள் லெட்சுமி. யாருக்கும் அவளுக்குப் பதில் சொல்ல நேரமில்லை. இளம்பிராயத்தில் தன் கண்ணுக்கு முன்னாலே அய்யா தூக்கில் தொங்குவதைப் பார்த்தவள். இன்று அம்மையும் தம்பியும் இந்தத் திக்கு தெரியாத காட்டுக்குள் தன்னை தள்ளிவிட்டுவிட்டு எங்கோ போய்ச்சேர்ந்துவிட்டார்கள் என்ற உண்மையும் சுட உள்ளமொடிந்து வாய்வராத வார்த்தைகளால் ஓங்காரமாய் அவர்களைச் சபித்தாள். 

அவளது எந்தத் தவிப்புக்கும் ஒரு சிறு குறிப்பும் கொடுக்கமாட்டாமல் ஒரு மலையைப்போல் எதிரே அமர்ந்திருந்தார் முத்தையன். புராதனமான அவரது ஆஜானுபாகு அத்தனையும் அசந்துபோய் தோல் வற்றி, தொடை வற்றி, குருக்கத்திப் பிஞ்சாய் நரைத்த மார்மயிர்களோடு வாய்பிளந்து சிரித்து அவளைக் கிட்டே அழைத்தார். அவருடைய இந்த ராசா வாழ்க்கை எல்லாம் ஒருகாலத்தில் துள்ளித் திரிந்த வேகத்தில் புத்தி நிதானித்துச் செயல்பட்டதால் அவர் மடியில் வந்து விழுந்தவை. கையில் தடிபிடித்துக் கொண்டு மேட்டாங்காட்டுக்குள் வேட்டுவம் பண்ணவும், வெட்டு மரங்களைக் களவெடுக்கவும் போகும் கூட்டத்தாருக்கு ஊடே முத்தையன் வலுசாலியான வித்து.

சாடி வந்தால் அவர் நடை மட்டும் துண்டாகத் தெரியும். தண்டங்கீரை இலை மாதிரி உடம்பெல்லாம் தடித்த நரம்புகள். தண்ணீருக்குள் சாடுகிற பாம்பை தலக்’கென்று கொண்டையிலே குறிபார்த்து அடிக்கிற கூரான பார்வை என்று தாட்டியமான ஆள். மேற்றை மலங்காடு மொத்தமும் திருவாங்கூர் ராசமார் ஆளுகைக்குள் இருந்தபோது, ஒருதடவை மாவேலிக்கரை படைக் கூட்டத்திடம் தன் கொத்தோடு அகப்பட்டுக் கொண்டார் முத்தையன்.

ரெண்டு தரப்புக்கும் பலத்த சண்டை. காட்டாறில் ரத்த ஆறு கலந்து ஓடும் சண்டை. எல்லா பேரும் சிறைப்பட்ட பிறகும், ராத்திரியோடு ராத்திரியாய் படைக் கூட்டத்திலிருந்து ஒரு குதிரையையும், படையாளி அணிந்திருந்த வெள்ளிக் காப்பையும், அவனது சுடு தோக்கையும் பறித்துக்கொண்டு, அடிபட்ட போர்ச்சேவல்போல கெந்திக் கெந்தி தான் மட்டும் தப்பித்து வந்துவிட்டார் முத்தையன். 

தன் படைகளையே மறித்து ஒருவன் தப்பிப்போன விபரம் கேள்விப்பட்ட திருவாங்கூர் மகராசா, மறுவாரமே இவரைத் தேடிக் கண்டுபிடிக்க ஆளனுப்பி இருக்கிறார். காலடி காயம் ஆறிவந்த முத்தையனைத் தன் ராசாங்கத்திலேயே இருந்து தனக்குக் காவல் காக்கும்படி கேட்டுக் கொண்டார் ராசா. ராசாவின் அந்த வேண்டுகோளை மறுத்து, காட்டுக்குள் தனக்கு ஒரு எல்லையைக் கேட்டு வாங்கி, தன் கூட்டத்தாரையும் தன்னோடு விடச்சொல்லி, பறித்த குதிரையையும், காப்பையும், கொத்தபிடி சுடு தோக்கையும் தனக்கே தந்துதவினால் ராசாங்கத்தின் மேலெல்லை வரைக்கும் தாமே காவல் பார்த்துக் கிடப்போம் என்று நியமனம் கேட்டிருக்கிறார். அப்படி ஒரு தைரியம், அதனுள்ளே ஒரு நிதானம்.

அன்றைக்கு முதல் மேற்றைக் காட்டுக்குள் தனக்கென்று மாவேலி நிலம், மகராசா புலிவேட்டைக்கு வரும்போதெல்லாம் அவருக்குப் பாதுகாப்பு என்று ராசாங்கத் தொடர்புகளில் வலுசாலியாகிவிட்டார் முத்தையன். கூதல் எட்டிப் பார்க்கும் காலத்தில், மகராசா வந்து மேல்மலை கொட்டாரக் கோட்டையில் தங்குவார். அப்போதெல்லாம் அவருக்கான வசதிப்பாடுகள் அத்தனையும் முத்தையன் தரப்புதான் பார்த்துக் கொண்டது.

வெறுமனே பார்த்துக்கொண்டதென்றால் எப்படி… ‘எரியுதே எரியுதே என் கொள்ளி’ என்று பல பெத்தவர்கள் துடிதுடிக்க அவர்கள் பெண் பிள்ளைகளைக் காவிக் கொண்டுவந்து ராசா மடியிலேபோட்டு, அந்த உபகாரங்களுக்குப் பரிகாரம் பெற்று, பொன் பொருள், நிலபுலன், கோட்டைக் கொத்தளம் என்று தன்னை வளமாக்கிக் கொண்டார் முத்தையன். நாளாவட்டத்தில் தாம் களவெடுத்த காட்டுக்குக் கீழே தன் குடிசனங்களைக் கொண்டுவந்து அமர்த்தி, ராசாங்கப் பதவிகளும் வாங்கிக் கொண்டு பெருங்குடிக்காரனாய் மாறிப்போனார்.

இராவானால் இலுப்பைச் சாராயம். எதுக்களித்து படுக்கைக்குப் போகும்போது குளிருக்குக் கட்டிக் கொள்ள பெண்ணுடம்பு. மிடுக்கினால் மடிந்து விழும் பொடித் தலைகள். மடக்கின சாதிகளுக்கெல்லாம் பொஞ்சாதி. சொத்துக்கும் சுகத்துக்கும் பஞ்சமேயில்லை முத்தையனுக்கு. ஆனால், அப்படியும் இப்படியுமாய் வாழ்ந்தவருக்கு வாரிசு இல்லாமல் ஏன் போனது. அந்த ஒரு துரதிஷ்டம் தான் அவரை மாடாய்ப் போட்டு ஏறி மிதித்து உழட்டியது. 

எங்கெங்கெல்லாமோ எகிறி விழுந்து பார்த்தார். ம்ஹூம் ஒரு கொழுந்து கூடத் தளிர்க்கவில்லை. பொண்டாட்டியாய் வந்தவளோ எரியும் நெருப்பு போல ச்சீ மனுசா என்று துப்பாத குறைக்குப் பேசிவிட்டாள். அவள் முகத்தில் கரிபூசவாவது ஒரு பிள்ளையைக் கொண்டார வேண்டும். புத்திர துயரம் வந்து அவரை ஒரு ஆட்டிய ஆட்டில்தான் வந்துநின்ற அன்றைக்கே தன் உடன்பிறந்தாள் பிள்ளையையும் மனசுக்குள் வரித்துக்கொண்டார்.

கன்னி நிலத்தில் விளைந்த கதிர்கட்டு போல கட்டாந்தரைச் சுருளில், லெச்சுமி சுருண்டு கிடந்தாள். சடை சடையான பழைய உடல் திணவோடும் சாராய மூச்சுக் காத்தோடும் அவளை எக்கிப் பிடித்து உலுப்பினார் முத்தையன். மூப்புபின் புழுதி அவர் முகமொட்டப் படிந்துகிடந்தது. கண்களில் இருந்த காமத்திற்கு மட்டும் வயது என்ற ஒன்றில்லை. 

வயதின் நடுக்கமும் புதிய பரவசத்தின் தளர்ச்சியும் அவருக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்கக் காத்திருந்தவன்போல இத்தனைக் காலமும் மலடன் என்று கிடைத்த அவச்சொல்லுக்கு இவள் மூலமாகவேணும் ஒரு பதில் கண்டாக வேண்டும் என்கிற வெறி ஏறியிருந்தது முத்தையனுக்கு. சுருட்டுப் புகையை உள்ளிழுத்து விடும்போது, கொடுக்கும் கமறல் சத்தத்தில்கூட எந்தப் பதற்றத்தையும் காட்டாமல் லெச்சுமியை ஒரே சுண்டில் கிட்டே இழுத்துப் போட்டார்.

லெச்சுமிக்கு குரல் தான் கூடப்பிறக்கவில்லை. மற்றபடி அத்தரும் அஞ்சணமும் கொண்டை ஊசிகளும், தனந்தூக்கிகளும், கண்கட்டி வித்தை காட்டும் மேல்பூச்சுக்கள் எதுவுமே தேவைப்படாத பாண்டி நாட்டுத் தேக அழகி அவள். வயதைத் தோற்கடிக்கும் அவள் வாளிப்பும் வெட்டிவேரின் வாசனை வீசும் அவள் உடலும் ஆளைக் கிறுகிறுக்கச் செய்தது. விருப்பமோ இல்லையோ தன்மீது விழுந்த முதல் ஆணணைப்பின் மூர்க்கத்தில் ம்ட்டும் கொஞ்சம் வெளிறிப் போயிருந்தாள். அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் அவளை ஒரு துணியைப் போல அள்ளி முடிந்துகொண்டார் முத்தையன். 

பிறகு வந்த ஒவ்வொரு நாளும் தசைகட்டிய மார்பில் பொங்கின மருட்சிகள் யாவும் நீங்க, பனிச்சை மரத்தை எருக்கஞ் செடிகள் சூழ்ந்து பாழ்படுத்திப் போட்டதுபோல எந்நேரமும் களையிழந்தே கிடந்தாள் லெச்சுமி. அச்சமும், இரைப்பும், அலறலும், பயமும் மண்டிய அவளது அந்த கிடப்பை உள்ளூறிய குரோதத்துடன் ரசித்துக் கொண்டிருந்தாள் முத்தையனின் மூத்த பெஞ்சாதி குமராத்தாள்.



சாம்பவம்

மலையாள நாட்டின் குமரங்குடி பொற்றையடிக் குன்றத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது திருவாங்கூர் அரச பல்லக்கு. திடீரென விளக்குக் கிண்ணங்களும், தீப்பந்தங்களும் அணைந்துபோய் கும்மிருட்டில் தகித்து நிற்கிறது பல்லக்குப் பரிவாரம். வெளியில் எட்டிப் பார்த்து என்ன விபரம் என்று தெரிந்துகொள்ளத் தன் தளவாயை அழைக்கிறார் திருவாங்கூர் மகராசா.

“பந்தம் பொழிஞ்ஞல்லோ குஞ்சுராமா”

“பனிபெய்யு நுண்டே தம்புரானே”

“இது விதியோ சதியோ குஞ்சுராமா’ என்று ராசா விளித்துக் கொண்டுருந்த தருணத்தில் சரியாய் அவரது விலாவைச் சீவிக்கொண்டு வெளியேறுகிறது தறவாடுகளின் வல்லீட்டி முனை.

சுற்றிலும் கண் மாளும் இருட்டு. பல்லக்கிலிருந்து, மூச்சைப் பிடித்துக் கொண்டு கீழே குதிக்கிறார் மகராசா. தறவாடுகள் எல்லாப் பக்கமும் சூழ்ந்து நிற்கிறார்கள். ராசா அங்குமிங்கும் பார்க்கிறார். கீழ்தலையில் அண்ணாந்து பார்க்கிற உயரத்துக்கு எழுந்து நிற்கிறது பொன்குன்று. குன்றுக்குக் கீழே பரந்துகிடந்த சமவெளியெங்கும் நிலை தப்பிய அமளி. 

ராசாவுக்குத் தசை வலி பின்னுகிறது. மூச்சைரைப்பு குறைந்தால் தேவலாம். துணைக் காவலாட்கள் எவரின் தீவர்த்தி ஜோதியும் கண்ணில் தென்படவில்லை. அலுக்கமாகச் சத்தம் போட்டாலும் அது எதிரிக்கே தான் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும். முடிந்தவரை இருளில் பம்மிப் பதுங்கி ஒளிகிறார் மகராசா.

அன்றைக்கு அந்த ராசாவை கமுகுப் பாளையில் அமுக்கிப் போட்டு தறவாடுகளின் வாசனையில் கூடப்படாமல் மறைத்துக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள் குமராத்தாளின் மூப்பர்கள். சாம்பவக் குடிகளான அவர்களின் மூத்தவர் மகராசா போல உடை தரித்துச் சென்று, ராசாவுக்குப் பதில் தன்னுயிரைத் தந்து தறவாடுகளை திசைதிருப்பி, அவர்களது தேடுதல் வேட்டையைத் தற்காலிகமாக நிறுத்தி, ஒரே ராத்திரியில் என்னென்னவோ செய்து ராசாவைக் காப்பாற்றின விசுவாசத்துக்காக வாரிக்கொடுத்த சொத்துக்களின் பூமியில் தான் குமராத்தாள் செல்வச் செழுமையோடு ஏழு அண்ணன்களின் தங்கையாகப் பிறந்திருந்தாள். அந்த கன்னியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முத்தையன் ஆசை கொண்டது காலத்தின் சூது.

அண்ணன்மார் அரவணைப்பிலும் மிளாவாகத் துள்ளிக்கொண்டு திரிந்தவளைத் தான் கண்டு மயங்கிய ஒரே ராத்திரியில் குதிரையில் போய் கொள்ளையிட்டு, அவள் காடுகளை எல்லாம் அழித்து, சொத்துக்களைக் கொள்ளையிட்டே அவளைத் திருமணம் செய்துகொண்டிருந்தார் முத்தையன்.

உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் குடல் சரியச் சாகக் கிடக்க, தான் வாழ்ந்த மலையடியும் காடும் வயல்புரமும் நெருப்பில் கருக, கை வறண்டு, கால் வறண்டு, கண்ணீர் சுரப்பு மறந்து கதறித் துடித்தவளை தன் கொட்டாரக் கோட்டைக்கு வரும் பாதையில் வைத்தே அங்கலமங்கலமாக்கின அவன் பாவங்களுக்கு பலி முடித்து அவனை நிர்கதியாக்கித் தீர்வதென்ற இறுமாப்பு அவளுக்குள் எப்போதும் குடிகொண்டிருந்தது.


சூலிக்குடம்

லெச்சுமி வயிற்றில் தங்கிய கரு கலைந்து கெட்டது என்று குமராத்தாள் வருத்தம் கொண்டுவந்து சொன்னபோது, முத்தையனுக்குத் தாளவில்லை. இத்தனைக் காலம் தான் சேர்த்தெடுத்த அத்தனை சொத்து சம்பத்துக்களும் எந்தவோர் அவச் சொல்லை தன் மீது சாபமாகப் பொழிந்து கொண்டிருக்கிறதோ அந்தப் பழி அழியவே அழியாதா என்கிற துயர் அவருள் நெருப்புக் குண்டமாய் பற்றி எரிந்தது. 

இயலாமையின் கோபத்தால், லெச்சுமியை தளியில் கட்டி உதைத்தார். தன்னைச் சூழ்ந்து கிடக்கும் இந்த அவமானத்திற்கு மூலகாரணம் குமராத்தாள் என்கிற ஓர்மை அவருக்குள் இருந்தாலும், அவளை வெற்றி கொள்கிற வாய்ப்பு கைநழுவிப் போன உச்சக்கட்டத் தாளாமையில், குமராத்தாள் மீது எழுத முடியாத எல்லா ஆத்திரங்களையும் அவர் இப்போது லெச்சுமி மீது கொட்டத் துவங்கினார்.

நல்லபாம்பு படத்தை திருப்புகிற மாதிரி நாள்தோறும் தன்னைக் கொத்திப் பிடுங்கின மாமனைக் குறித்து மனதாரத் துக்கப்பட்டாள் லெச்சுமி. அவள் அவனது தோல்வியின் நெருக்கமான வடிவமாக இருப்பதை வலியோடு உணரத் துவங்கியபோது, தனக்கென்று பிள்ளை இல்லை என்ற பேர் இனி தன் மாமனுக்கு வரக்கூடாது என்று அவள் மனம் கருணைகொண்டு இரங்கியது. கருப் பிடித்து தன்னையறியாமல் கலைந்து வலியால் துடித்த ராத்திரியின் கொடூரங்களை எல்லாம் வெளிச் சொல்ல முடியாமல் மறைத்துக் கொண்டவள், குடித்த மயக்கத்தில் முங்கிக் கிடந்த மாமனை, ஒரு அந்தி நேரத்தில் ஆளரவம் அறியாமல், பைய ஒழிந்துசென்று தானாய் அவனோடு கூடினாள். அந்தக் கூடலின் விநயமாக லெட்சுமிக்கு மீண்டும் கரு பிடித்தது.

இந்த முறை தன் மடி நிறைக்கப் போகும் பிள்ளையால் மாமனுக்கென்று ஒரு வாரிசைச் சுமக்கப் போகிறோம் என்ற குதிப்பில், யாருக்கும் இந்த உண்மையைச் சொல்ல மறைத்தாள். ஆனால், ஒருப்பொழுதும் எதிர்பாராவிதமாக, ‘எங்கோ யாரோடோ தொடர்பெடுத்துத்தான் வயிற்றில் பிள்ளை வாங்கி வந்திருக்கிறாள் லெச்சுமி என்று நடுக்கூடத்தில் வைத்து அவளை மானமிழக்கச் செய்தாள் குமராத்தாள். வாய்ச்சொல்லால் உள்ளதைச் சொல்ல முடியாத அவளின் ஊனத்தைத் தன் சாதகமாக்கிக் கொண்டாள். லெச்சுமி எவ்வளவோ வாயசைத்தும், கையசைத்தும் எவனுக்கோ வந்ததை தன் பிள்ளையாக்கப் பார்த்தாளே என்ற பித்தம் தலைக்கேறின முத்தையன்கிட்டே அவளால் எதையும் விளங்க வைக்க முடியவில்லை.

அவமானத்தில் தார்க்கோலால் குத்தப்பட்டதாக உணர்ந்த முத்தையன், ஏனென்று கேட்க நாதியில்லாதவளென்று சொல்லிச்சொல்லி லெச்சுமியைச் சாணிக்குழியில் தள்ளி மிதித்தான். ஒழுக்கங்கெட்டுப்போன இவளோடு கூடினவன் யாராய் இருந்தாலும் அவனுக்கும் சாவு இப்படித்தான் என்று தண்டனை அறிவித்து லெச்சுமியோடு சேர்த்து, தான் சந்தேகித்த மூவரையும் ஊரறிய கழுவில் பாய்ச்சினான். 

வயிற்றில் கருப்பிடித்து, உயிர்த் தரித்த அந்தச் சிசுவும் அவளது உதிரத்தோடு உதிரமாய் கழுவில் மாள, வலியின் ஆங்காரத்தோடு தன் நாக்கைத் தானே பிடுங்கி வீசிச் செத்துப்போனாள் லெட்சுமி.



மூளிப்பருந்து

எட்டிக்காயைப் பறித்துத் தின்று சாகத்துணிந்துவிட்ட பலவேசம் தன் மகன் சங்கையன்கிட்டே வாங்கின கடேசி சத்தியம் அவன் தாய்மாமன் குலம் மொத்ததையும் கருவறுத்துவிட வேண்டும் என்பதுதான். தனித்து விடப்பட்ட அவன், காடோ செடியோ என்று அலைந்து திரிந்து, சத்திரம் சாவடிகளில் விழுந்து கிடந்து, கட்டக்கடேசியாக பணிக்கர் கூட்டத்தாரோடு சேர்ந்து மலையாள தேசம் முழுக்கச் காவல் பணியாகச் சுற்றித் திருந்திருந்தான். எந்தக் கொழுகொம்பு கிடைத்தாலும் பற்றிப் படரக்கூடிய கொடியாகக் காத்து வளர்ந்த அவன் வெஞ்சினம் குஞ்சுகுடி வார்படச்சாலையில் அன்று ஓர் தீர்மானத்துக்கு வந்தது.

காக்கையும் இறங்க முடியாத கொட்டாரப் பாதுகாப்பில் வாழ்ந்துவரும் தன் மாமனை நெருங்குவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம் எனத் தெரிந்திருந்தது. சிவப்புச் சீருடையும், நாணல் தொப்பியும் அணிந்து மலையாளச் சிப்பாய்போல அரண்மனைக்குள் நுழைந்தபோது சங்கையனை இன்னார்தான் என்று ஆள் அடையாளம் சொன்னாலும் யாரும் கண்டுபிடித்திருக்க முடியாத தோற்றத்தில் இருந்தான். 

எங்கே திரிந்து சுற்றினாலும் அவன் மண்டைக்குள் நெருப்பு உளியைக் கொண்டு கீறினதுபோலப் பதிந்துவிட்ட உடம்பிறந்தவளின் அவச்சாவும், தாயாளின் சத்தியமுமாகப் பந்தாடி வந்த தாய்மாமன் பகையை அந்தப் பனி ராத்திரியிலே கரம் முடித்தான். பருந்தாய்க் காத்திருந்து இரு உயிர்களின் ரத்தத்தையும் தரை முழுக்கப் பரவவிட்டபோது, எல்லா காலமும் நெருப்பாய் பொழிந்து கொண்டிருந்த அவன் நெஞ்சுக்குள் கூதல் பெருகி உடல் சிலிர்த்தடங்கியது.


கொட்டுமுழக்கு

”இதனால் அறிவிப்பு என்னன்டா… வீராணசமுத்திரத்திலே அம்ம முத்தையஞ் கோயிலில கொடை காப்பு சாத்தியிருக்கு… அம்ம மேலங்காட்டு முத்தையஞ்சாமி கோயில் கொடைத் திருவிழாவுக்கு சுத்துபத்து அத்தனை ஊர்கள்ல இருந்தும் பெரிய மனுசங்க சனங்க எல்லாரும் இன்னையில இருந்து பதினெட்டாம் நாள் வரைக்கும் கறி மீனு அசைவஞ் சாப்புடாம சாமிக்கு வெரதக் கட்டு கட்டிக்கணும்னு கேட்டுக்கிடுறோம்… இது தலையாரி அறிவிப்பு சாமியோ…”

முத்தையன் சாமி கோயில் கொடைக்கு ஊர் தயாராகியிருந்தது. கொட்டுச்சத்தம் விட்டம் அதிர முழங்க, பந்த வெளிச்சத்தில், அலங்காரங்கள் மின்ன, சாந்தில் குழைத்துச் செய்த முத்தையன் முகம் ஜோதியில் துலங்கி நிற்க, ஊர் எல்லையில் குட்டி விளக்கு அலங்காரங்களில் சிவனும் பார்வதியும், பிள்ளையாரும் முருகனும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு புன்னகை பூரித்துக் கொண்டிருந்தார்கள். கோடைநாளில் அந்தி சாய்ந்தபிறகு கோயிலுக்கு வரக்கூடாது என்று கன்னிப் பிள்ளைகளைத் தடுத்துவிட்ட பெரியாட்கள் ஆரமும், தேங்காய் பழமும் ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் தாம்பூலத்தில் எடுத்து வைத்துக் கொண்டு நேந்துவிட்ட கருங்கிடாய்களை கோயிலை நோக்கிப் பத்திக் கொண்டு போனார்கள்.

கமிட்டிக்காரர் பொன்னம்பலம் பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை சாமி வேட்டைக்குப் போகும்போது எதிரே ஊரார் யாரும் வந்துவிடக் கூடாது என்று மைக்செட்டில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவரை நேர்த்திக் கிடாய்களை கோயில் மரத்தடியில் கொண்டுவந்து கட்டாதவர்களை விரசாக வரச்சொல்லியும் அதட்டிக் கொண்டிருந்தார்.


மணி பதினொன்று தொட்டிருக்கும். வில்லுக்கச்சேரி ஆரம்பமாகியது. வீரகேரளம் பாட்டுக்காரர்கள் சலங்கை சத்தம் கலகலக்க முத்தையன் கதையை இப்படிப் பாடத் துவங்கினார்கள்.

‘ஈரேழு பதினாலு லோகங்களையும் அடக்கி ஆண்ட மேலங்காட்டு பெருங்குடி முத்தையனாண்டவன் சுவாமிக்கு ரெண்டு சம்சாரங்களாம்.

“ஆமா…”

“அவர்களிலே பெரிய நாச்சி ரௌத்திர காளி. சின்ன நாச்சி பிள்ளை வரங் கொடுப்பவள்.”

“கேளாத வரமும் கொட்டிக் கொடுப்பவள்..”

“நேரே எதிரே அருவாளை ஓங்கி, குதிரையேறி நின்று கொண்டிக்கும் சங்கையன் இவர்களுக்கெல்லாம் காவல் தெய்வம்.”

“ஆமா.. பொல்லாத காவல்காரன்… பொசுக்கென்றால் கோவக்காரன்.”

“அந்த முத்தையனுக்கும் அவனோட ரெண்டு நாச்சிகளுக்கும் அந்தப் பக்கம் குடியிருப்பவள் பலவேசத் தாயார். இந்தச் சாமிகளுக்கெல்லாம் மூத்த தாயார்…”

“சரிய்…”

“ஈரேழு லோகங்களை அடக்கி ஆண்ட முத்தையன் ஆண்டவர் ஒவ்வொரு பங்குனியும் நடைபெறும் உத்திரத் திருவிழாவில் வெள்ளிக் குதிரை ஏறி அருள் பாலிக்க, மளையாள தேசமிருந்து பக்தர்களெல்லாம் வந்து வணங்கி..”

“வணங்கி…”

“வெள்ளாடு குறும்பாடு மலைமேயும் வரையாடு என்று வெட்டி வெட்டிச் சாத்துகிறார்…”

“எப்படியெப்படியெம்மா சாத்துகிறார்..”

“அஞ்சு கோட்டை அரிசிப்பெட்டி…”

”வந்ததம்மா… வந்த...தம்மா…”

“பஞ்சுப் பஞ்சா படியரிசி..”

“வெந்ததம்மா… வெந்ததம்மா…”

“தலை வாழை இலை விரிச்சி தரமுழுக்க பரபரப்பி..”

“எல்லாம் தயாரா…”

“மாலையோடு கொடியோடு

மதலையெல்லாம் வேக வச்சி..”

“வேக வச்சி…”

“ஈரக்கொலை காமரக்கால்.. எலும்பெல்லாம் மல கணக்கா..”

“சரீய்..”

“பாளை அறுவாளால் நெஞ்சு கீறி வடிச்ச ரத்தம்…”

“அடேங்கப்பா….”

“எல்லாம் கொண்டாந்து வச்சாச்சா…”

“வச்சாச்சு வச்சாச்சு, இனி ஊட்டு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி..”

“அள்ளி அள்ளி ஊட்டுக் கொடுக்க

ஆவேசங்கொண்டு வாராரய்யா…”

“ஆவேசங்கொண்டு வாராரய்யா…”

“முத்தையன் சாமி வாரா..ரய்யா..”

டுண்டுகு டுண்டுகு டுண்டக டுங் டக..













வரைகலை நன்றி : Muhammed Sajid, Bangalore, India

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்