வெட்டும் பெருமாள்




முருகைய்யன் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட கருவேலமர நிழலில் குப்புறப் போடப்பட்டிருந்த ஆட்டு உரல் மீது தன் துண்டை உதறி, தூசு தட்டிவிட்டு வெயில் கொஞ்சம் தாழட்டும் என உட்கார்ந்தார். இடுப்பில் கட்டியிருந்த பட்டை பெல்ட்டின் பட்டன் திறப்பை நெம்பி காய்ந்து கிடந்த பீடியை வாய்க்குக் கொடுத்து பற்ற வைத்தவாறே நெற்றியைச் சுருக்கி இடது கையை கண்ணுக்கு நிழல் கொடுத்தார். தூரத்தில் வைக்கோல் கட்டோடு சைக்கிளை உருட்டிக்கொண்டு வரும் காமதேனு கோனாரை நோக்கி சத்தம் கொடுத்தார்.

“என்ன கோனாரே... அடிக்குதது வெய்யிலா..? பனியா..? சட்டகிட்ட ஒண்ணும் மேலுக்குப் போடாம சைக்கிளத் தள்ளிட்டு வாரீரவே”

“சட்ட என்ன சட்ட, வெய்யக்காலம் வரும்மின்ன இந்தப்போடு போடுதுங்கேன்”

“செத்த உக்காருமைய்யா இப்புடி”

“ஓவ்... பொழுதுக்குப் போய் மாட்டுக்கு கூளங்காட்டணும்லா” என்றபடிடே தலையிலிருந்த வைக்கோல் பாரத்தைக் கீழே வீசிவிட்டு நிதானமானா காமதேனு கோனார். 

“சொம மாடு வெச்சுத் தூக்கியாற இதொண்ணும் யெடை கூடுன சமாச்சாரமுங் கெடையாது”

“ஏஞ்சொல்லமாட்டீரு... ரெண்டு ஊருக்கும் தூக்கிட்டு நடந்தீருன்னா தெரியும்...” 

“ஆமா... எங்க இங்கனக்கூடி வெக்கப்போர் ஒண்ணயுங் காங்க முடியலயே பூராம் சோளமும் கம்பந்தட்டையுந்தானோ”

“வெள்ளாமையுங் கெடையாது வெளச்சலுங் கெடையாது. பெறவு எங்குட்டுகூடி வெக்கப்போரு... ஒங்க பட்டியெல்லாம் நெலமை எப்படி”

“அங்கயும் இதே கததான், வரும்படியில்லாம சனங்க எஸ்டேட்டுக்கு போவோமின்னு கெளம்பிடுதுவோ. பண்ணையாரு பாடு பெரும்பாடு”

“எல்லாப்பக்கமும் இதே கதியாத்தான் இருக்கு”

“அதுக்காகமாறி நீரும்லா பஞ்சப்பாட்டு பாடுதீரு. கோனாங்கிட்ட காசு இல்லன்னா கோட்டிக்காரங்கூட நம்பமாட்டான். குண்டி டவுசர்ல தீவச்சா புடிக்காத அழுக்கா திரிவீய்ங்க. நல்லதுகெட்டதுன்னா வெள்ளையுஞ் சுள்ளையுமா நிப்பீங்களேய்யா...”

பீடிவலித்து முடித்த முருகைய்யன் இருமத்தொடங்கவும் காமதேனு கோனார் இடுப்பு வார் பெல்டிலிருந்து பொடித்தடையை எடுத்துக்கொண்டு, வசதியாக வாயாடும்படி முருகையனின் முகம் பார்த்து, கால்நீட்டி அமர்ந்துகொண்டார்.

“அதுசரி என்ன இந்த பேயடி வெயில்ல இங்கன கருவக் காட்டுக்கரையில வந்து கெடக்கீரு”

“எல்லாம் ஒரு பேயத்தான் அடிக்கதாம்.”

“வாட்டம் ஒண்ணும் பிடிபடலையே..” 

“யோ அதாம்யா... இந்த கொசக்குடிலருந்து வெடலை ஒருத்தன் பண்ணைகிட்ட மாடுமேய்ச்சிட்டு கெடப்பானே..?” 

“கொசக்குடி பெயன்னா யாரு அந்த வெட்டும்பெருமாளு பேருகொண்ட பயலா... அந்தப் பயலுக்கென்ன?”

“அவனேதான்... கதைய கேளும். தாயோளி அப்பேருபட்ட பண்ணையவே கதிகலங்க வெச்சுப்புட்டு கண்காணாம ஆய்ட்டான். ஆளக் கண்டா, கண்ட எடத்தில கையக் கால முறிச்சுத் தூக்கிட்டு வாங்கன்னு எங்களுவள்ள ஒரு பத்துபேர்த்த நாலா தெசைக்கும் தாட்டி விட்டிருக்கார் பண்ணை...”

முருகையன் அடுத்த பீடியை எடுத்துப் பத்தவைத்துக்கொண்டார்.

“எளவெடுத்தவன் என்ன செஞ்சானாம்... பண்ணையத்துல ஏதும் பொண்ணகின்ன கைய வச்சுப்புட்டானா... கொசக்குடிப் பயலுக்கு அம்புட்டு ஏத்தம் வந்துபோச்சா...”

“நீரு ஒராளு... அதெல்லாம் பண்ணியிருந்தா இங்கனயா ஆற அமர உக்கார்ந்திருப்போம். இவம் பண்ணையத்து மாடுகள மேய்க்கப்போன எடத்துல மாடுகள உசுரோட தொலி உரிச்சுட்டானப்பா”

“யே யாத்தா! நெசமாவா சொல்லுதீரு. சீரழிஞ்சு போற பய. இதெல்லாம் எங்கயோ மலநாட்டுல நடக்கும்னு சொல்வானுவ செரி. இந்தூருலயுமா நடக்கும். பாதகமே... ச்செரி இப்ப மாடுவ கெதி என்ன? எத்தன மாடுவ?”

“அது பத்து பானஞ்சி மேல இருக்கும்ன்னாவ. பயலைத் தேடியாங்கன்னு ஏவும்போது, ஆள்க்காரன் நாங்க மாடு நல்லாருக்கா? எத்தனைக்கு பாடுன்னு கணக்கு வழக்கா கேக்கச் சொல்லுதீரு”

“பெயல கண்டா சும்மா உட்ராதீங்கப்பா... எப்படியாபட்ட ஜீவன சீரழிச்சிருக்கான். இந்தப்பய அப்பன்காரனே பரவால்லயாட்டுருக்கு.”

“அப்போ பய சாதகமே தெரிஞ்சுவச்சிருப்பீரு போலய நீரு...”

“ஏன் தெரியாது... இவன் ஆத்தாக்காரி மேம்பட்டில பெரிய தெலுங்குகாரக் குடும்பத்துக்காரி. என்ன சீரு கெட்டுச்சோ பானை அறுக்குற இவங்கப்பனைப் புடிச்சுப்போய் வூட்ட வுட்டு வந்துட்டா. வந்த சுருத்துலயே இந்த ஒத்தப் பயல பெத்துப்போட்டுட்டு காணாதியாயிட்டா. பயல வளத்ததெல்லாம் அவங்கப்பனூட்டு கெழவிதான். அப்பங்காரன் பானத் தொழிலு, ஓடு யாவாரம்னு ஊரூரா போயிருவான். அவனுக்கு அப்போ அதுல நல்ல பேரும் உண்டு கேட்டீரா...” 

“மாறி என்ன கெட்டது...”

“சொல்லுதேன் கேளும். அப்பத்தாம் கொல்லம் ஓடுக நம்மூருகள்ள வரவு. செங்கோட்ட வழியா ஓடுக வாங்கி பனந்தட்டி, பட்டியல் வச்சி வீட்டுக் கூரை மாத்துறது ஒரு பெருமையாகிப்போச்சு. அந்த சமயத்துலயே ஓட்டுக் கூரைகளைப் பிரிச்சி, கள்ளப்பயக திருட்டுக் குதி குதிக்க ஆரம்பிச்சிருக்கானுங்க. பொண்டாட்டிப் புள்ளயல்வள வுட்டுட்டு கோயில்பட்டி பருத்திச் சந்தைக்கும், பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கும், ஒடங்குடி கருப்பட்டிச் சந்தைக்கும் போயிருப்பான்வ கவுண்டருங்க, நாடாக்கமாரு, செட்டியாரெல்லாம். கள்ளப்பயக சுழுவா உள்ள குதிச்சி, சட்டிப்பானை சங்கிலி கிங்கிலியெல்லாம் பவுனுப் பெட்டியோட பேர்த்து எடுத்துக்கிட்டு போயிட்டிருந்தானுங்க. பொட்டச்சிக குய்யோ முய்யோன்னு கத்திட்டு கெடக்கும்ங்க.”

“களவாண்டவனுங்க ஆப்ட்டுகிட்டானானுங்களா மாறி”

“கேட்டுக்க முருகைய்யா, ஓடு வேஞ்ச இவங்கப்பன் தான் கள்ளன்னு கண்டுபுடிக்க ஒரு தெவசம் ஆகிப்போச்சாம்.” 

“அடங்கொக்காலோலி...” 

“கைத்தொழிலு களவாணித்தனம் ஊருக்குள்ள பட்டுக்குஞ்சலம். ஊரூராப்போய் ஓட்டையும் வேஞ்சு, அத்தனைப் பேருக்கிட்டயும் ஆட்டையும் போட்டிருக்காம்.”

“பெறவு எப்படித்தான் ஆப்புட்டானாம்”

“கேடு வாய்லருந்து வரும்னு சும்மாவா சொன்னாங்க. அதுவரைக்கும் காசு பணம் நகை நட்டு பாத்திர பண்டம்னு கொள்ளையடிச்சவன், மொத தரமா அண்டிப்பருப்ப களவாண்டு மாட்டிக்கிட்டான்”

முருகையனுக்குச் சிரிப்பு தெறித்துவிட்டது. காமதேனு கோனாரும் ஏதோ விட்டடித்தவர் போல கலகலப்பானார்.

“கேளும்... நாகர்கோயில்லருந்து செட்டியார் பெஞ்சாதிக்குத் திங்குறதுக்கு வேங்கி வச்சிருந்த அண்டிப்பருப்பு மூட்டையை என்னம்மோனுட்டு நெனைச்சி தூக்கிட்டுப் போயிருக்கான். விடியக்காலம் தான் வெவரம் தெரிஞ்சிருக்கு. ச்செரி தின்னுத்தான் பாப்பமேன்னுட்டு ரெண்டு விள்ளல் அள்ளி வாயில அதக்கிருக்கான். அது ருசிக்கு ஆம்ட்டுகிட்டான். மூட்டை காலியாகும்மட்டும் குத்துக் குத்தா ஆள் பாக்காத எடங்கள்ன்னு வெச்சி வெச்சி தின்னுருக்கான். அதை அடையாளம் கண்டுக்கிட்ட செட்டிமார் ஆள்வள் ‘கள்ளனைக் கண்டுட்டோம்’ன்னு அள்ளிட்டு வந்து அல்லையில நாலு போட பூராத்தையும் ஒத்துகிட்டான்”

”யோவ் என்னம்யா நீரு... நேருல கண்ட ‘விட்டு’ கணக்கால்லா, சொல்லுதீரு...” 

“இன்னொன்னு தெரியுமா... தங்கச்சங்கிலி வெங்கல குண்டான்னு அம்புட்டு களவையும் சாக்குல முடிஞ்சி பண்ணையாரு தோட்டத்துக் கிணத்துக்குள்ள எறக்கி வச்சிருந்தான்யா”

“பெரிய தன்னக்கோலியா இருந்திருப்பான் போலயே... மாறி அவன என்னதான் பண்ணீய”

“என்ன பண்ணுவாங்க, இங்க பண்ணைக்கு தான் மொத மரியாத. அவுக சொல்லுப்படி ஊரைவிட்டு ஒதுக்கிவிட்டுட்டோம்.”

“அவம்பேருதான் என்ன கோனாரே”

“பேரெல்லாம் நெனவில்ல... சொல்லுததுக்கு கிணத்து கள்ளன்போம்”

“நல்லா சொன்னிய... அப்பனுக்குத் தப்பாமதான் மவனும் சிக்கிருக்கான். என்ன அண்டிப்பருப்புக்கு பதிலா காய்ஞ்ச எலையச் சுருட்டிக் குடிச்சிருக்கான். அந்த மயக்கத்துல மாடுவள விட்டுட்டான் போல, எவனோ ஊடால பூந்து இந்த பொசகெட்ட வேலைய பார்த்துவுட்டுப் போயிட்டான் போல. அதுக்காண்டி இவனச் சும்மயா விடமுடியும் மாறி”

“பசிக்கித் திருடுனவனை விட்டுடலாம் முருகா... கொழுப்பெடுத்து இந்தமாதிரி சீவன்வளை வதைக்கிறவன்வள அதே மாதி உசுரோட தொலியக் கழத்திருணும்...”

“அதுக்குத்தான் காடுமேடா அலையுதோம். இங்கன கருவக்காட்டுக்குள்ள எங்குட்டாச்சும் பாய்ஞ்சிருப்பானான்னு தடம் பாக்க வந்தேன். மலகாட்டுக்குள்ளயும் ஆளுவுட்டுருக்கு. எங்க கெடந்தா என்ன, கொடலு காஞ்சி வெளில வராமலேயா போயிடுவான்”

“என்னமோ பகுமானமா முடிச்சு வைய்ங்க காலாகாலத்துல. நான் கெளம்புறேன். தண்ணி காட்டுற சோலி கெடக்கு” கோனார் கடந்து போனபின் முருகைய்யன் தெற்குதிசையிலே அருமங்குளம் வரைக்கும் ஏதேனும் துப்புகிடைக்குமெனத் தேடிச் செல்லத் துவங்கினார். வழியில் இங்கனயூடி பனங்கள்ளு எங்கே கிடைக்குமென்றும் ஆள்பார்த்து விசாரித்துக்கொண்டார்.

===

பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்ல கூலியாட்களை வருடாந்திர குத்தகைக்கு வேலைக்கு நியமிப்பது தெற்கத்திப் பகுதிகளிலும் வழக்கமாக இருந்தது. தரிசுக்காடுகளுக்கு அப்படி மேய்ச்சலுக்குச் செல்லும் பட்டிகளைக் கவனிக்க ஆண்டு கூலிக்கு பண்ணை அடிமையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தான் வெட்டும் பெருமாள்.

ஊரைவிட்டு விலக்கிவைத்திருந்ததால் காட்டுக்குக் கிழக்கே கல்லடுக்கு கட்டின சத்திரமே இருப்பாக மாறியிருந்தது. நாலுபக்கமும் வாசல்தான். காற்று அனாமத்தாக வந்துபோகும். இனியும் அழுக்குப் பிடிக்க பாகமில்லாத சீலைத்துணி மறைப்பு. கிழவி இருந்தவரைக்கும் உடைமர விறகு, சுள்ளிகள் பொறுக்கி, அதை விற்றுப் பசி அழித்தாள். கஞ்சிகும் கூழுக்கும் பண்ணை வீட்டு குந்துமணி நெல்லுக்கும் கைகெட்டி உழைக்கவந்தபோது வெட்டும் பெருமாளுக்கு எட்டு வயது.

இந்தப் பத்துவருசங்களில் பட்டி ஆடுகள் மேய்த்து, ஆட்டாம் புழுக்கையை தூத்து கூட்டி, காட்டுப்புளி உலுக்கி, தவிட்டு மூட்டையை ஒத்தையாளாகத் தோளில் தூக்கப் பழகி, வெள்ளாமைக் காட்டுக்குக் காவலிருந்து, பண்ணையின் மொத்த எருமைகளையும் பசுக்களையும் ஒத்தையாளாக மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்லும் அளவுக்கு ஆள் தலைதட்டி நின்றான்.

தூக்குச்சட்டி கூழும், பச்சை மிளகாயும் கட்டிக் கொண்டு தேமே என்று மேய்ச்சலை கவனித்துக் கொண்டிருந்த வெட்டும் பெருமாளுக்கு, அவன் அப்பனின் கதைகள் அரைகுறையாகவே தெரிந்திருந்தன. அருங்குடிச் சின்னப்பிள்ளைகள்கூட ‘கள்ளன் சத்திரம்’ என்று காதுபட கத்திவிட்டு ஓடும்போது, அவர்களோடு மல்லுக்கு நிற்கக்கூடாதுய்யா என்றே கிழவி அவனை அடக்கி வளர்த்திருந்தாள். சொல்லப்போனால் தானுண்டு பண்ணைய மாடுகள் உண்டு என்றே பொழுதுக்கும் கிடந்தான் வெட்டும் பெருமாள்.

பண்ணையார் ரொம்ப தங்கமான மனிதர் என்று அவருக்குக் கீழே பிழைத்துக்கிடந்த எல்லாருமே நினைத்துக் கொண்டார்கள். வெட்டும்பெருமாளும்தான். பிறகு சாணியள்ளிக் கொண்டிருந்தவனிடம் இவ்வளவு பெரிய மாட்டுப் பட்டியையே ஒப்படைத்துவிட்டு என்ன ஏதென்று ஒரு கேள்விகூட கேட்காமல் விட்டுவைத்திருப்பாரா?

அந்த எண்ணமே அவனைத் தலைகால் புரியாதவனாக்கியிருந்தது. அவனின் இயல்பான வெள்ளந்தித்தனமும் கூடச் சேர்ந்து வெட்டும் பெருமாளை பண்ணைய கூலிக்கென்றே பிறந்த ஆளாக்கியிருந்தது. தன் வயதொத்த பண்ணையார் வீட்டுப் பிள்ளைகள் சிலுவைப் பள்ளிக்கூடம் கிளம்பிப் போகும்போதுகூட தனக்கு அந்தத் தண்டனை இல்லை என்றே நினைத்துக்கொண்டான். அவனைப் பொறுத்தவரை அத்தாளக் காட்டின் மொட்டைப்பாறைதான் அவன் இராஜாங்கம். அட்டினகால் போட்டு சுள்ளென்ற வெயிலில் தன் குடிமாடுகளுக்கு மேய்ச்சல் காட்டும் பராரி அவன்.

கோடை, சுடுசூரியனோடு சேர்ந்துகொண்டு ஊரை எரித்துக் கொண்டிருந்ததது. குளக்கரைகளில் தண்ணீரையும் புல்லையும் காணாமல் மாடுகள் திகைந்துகொண்டிருந்தன. ஊரிலிருந்த புல் செழித்த தரைக் கட்டுகளெல்லாம் கண் முன்னாலேயே காய்ந்து மஞ்சளாகிக் கொண்டிருந்தன. பண்ணையத்து மாடுகளுக்கு நிறை தீனிக்குப் பற்றாக்குறை வந்துசேர்ந்தது. மாடுகளை மேற்குக்காட்டின் அடிவாரத்துக்கு பத்திக்கொண்டு போவது குறித்த பேச்சு அரசல் புரசலாகப் பண்ணையம் முழுக்க எழுந்தது. 

மேய்ச்சலுக்கு மேற்குக் காட்டுக்குப் போவது வெட்டும்பெருமாளுக்கு தாங்காத ஆர்வத்தைக் கொடுத்தது. ஆளரவமில்லாத காட்டுப்பாதையில் மேனிகுளிர் நீங்குவதற்கு முன்னே விடிகாலையிலேயே ஏழெட்டு மைல் தூரம் மாடுகளைப் பத்திக்கொண்டு போய் கால்ச்சூடு மிச்சமிருக்கும் அந்தியிலே தொழுவத்துக்குத் திரும்பவேண்டியிருக்கும் வேலை. வழியிலே தீக்கங்காணி எங்கிருந்தாவது மாயாவி போல தோன்றுவார். அவருக்குத்தான் கொழுந்து தேன் எந்தப் பாறையிடுக்கில் கட்டியிருக்கிறது என்று தெரியும். பிறகு, புது மூங்கில் தடி செதுக்கிக் கொண்டு வரலாம். இன்னும் என்னென்னவோ...

அதேநேரம், மலங்காட்டில் இலவங்க மரப் பட்டை திருடும் கூட்டங்கள் துப்பாக்கியோடு திரிகிற காரணங்களால் ஊராள்கள் பலரும் தங்கள் மாடுகளை மலங்காட்டுக்கு மேய்ச்சலுக்குப் பத்திக் கொண்டு போவதை எப்பவோ நிறுத்திவிட்டு, வைக்கோல் லாவணிக்கு மாறிவிட்டார்கள். ஆனால், பண்ணையாரின் அத்தனை மாடுகளுக்கும் அப்படி வைக்கோல் அறுத்துப்போட்டுக் கட்டுமா... அவரும் சரி என்றபடி நான்கு கொத்துகளாக பட்டியைப் பிரித்து, இரண்டு திக்குகளாக மேய்ச்சலுக்கு அனுப்பிவைத்தார். வெட்டும்பெருமாளின் கொத்தில் முப்பதுக்கு மேல் மாடுகள் சேர்ந்திருந்தன. 

*** 

மேய்ச்சல் ஒழுங்காகக் காட்டிவந்து இரண்டுவாரங்கள் தீர்ந்திருக்கும். மேற்றங்காட்டில் மிஞ்சின ஈரத்துக்குப் புற்கள் செழித்திருந்தன. அது வறண்டு போகும்முன் மாடுகள் தின்றால் நல்லது. காய்ந்து கருகிவிட்டால் தீக்கங்காணி பாடு பெரும்பாடாகிவிடும். எங்கு எப்போது காட்டுத்தீ பிடிக்குமென்றே தெரியாது. ஆனபோதும், காட்டுக்குள் நுழைகிற யாரும் துளி கங்குகளைக் கொண்டு போகக் கூடாது என்கிற கட்டுப்பாடு தீவிரமாயிருந்தது. 

தீக்கங்காணி அதைக் கருத்தாய் கண்காணித்துக்கொண்டிருப்பார். அவருக்கு மலைதான் வீடு. ஆள் அப்படியிருப்பார்... இப்படியிருப்பார்... அவரால் நடந்தேறிய சாகசங்கள் இன்னின்னது என்று ஊராள்கள் ஏகத்துக்கு அவரைப் பேச்சில்வைத்துப் புனைந்துகொண்டேயிருப்பார்கள். அதனாலேயே வெட்டும்பெருமாளுக்கு ஒவ்வொரு நடையிலும் அவரைப் பார்த்துவிடமாட்டோமா என்ற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருந்தது. 

அன்றைக்கு மேய்ச்சலுக்கு இரண்டு கொத்து மாடுகளையும் அவனே ஓட்டி வரவேண்டியதாயிருந்தது. மேய்ச்சல்காரர்களுக்கு எப்போதாவது உடம்பு சரியில்லாமல் போகிறபோது இதுமாதிரி நடக்கிறது உண்டுதான். வெட்டும்பெருமாள் தன் மாடுகளை அன்றைக்குத் தண்ணீர் மடுவுக்கு அருகிலேயே மேயவிட்டான். கொஞ்சம் முரண்டு பிடிக்கும் இளவட்டக் காளைகளை நீளமானக் கயிறுகளில் கட்டி, புல் பாயவிட்டான். பிறகு, மூங்கில் புதரில் குருத்துவிட்டு நின்ற நாலைந்து இளம் தடிகளை, வாட்டமாய் வெட்டியெடுத்து வந்து, கனு தறித்துக்கொண்டான். 

வெயில் பொழுதைக் கடித்து மேலேறி வந்ததும் கஞ்சிக் கலயத்தைக் காலிசெய்தான். மாடுகள் கண்ணுக்கெட்டும் தூரத்திலே சுற்றிச் சுற்றிவந்து மேய்ந்துகொண்டிருந்தன. கண்கள் லேசாகச் சொருகிக் கொண்டு வர, புல் தரையில் துண்டைவிரித்துப் படுத்துக்கொண்டான். கண்கள் மூடிக் கிடந்தாலும் காதுகளில் மணிச் சத்தம் கிலுங் கிலுங்கென கேட்டுக்கொண்டேதானிருந்தது. அந்தக் கூர்மையை கலைக்கும் விதமாக அந்தக் குரல்கேட்டுத் திடுக்கென விழித்தான் வெட்டும்பெருமாள்.      

“குடிதண்ணி உண்டாமோ” 

கொச்சையான கொல்லத்துக்காரப் பேச்சு. நெடு நெடு உயரம். இடுங்கின கண்கள், முகமெங்கும் மயிர் மண்டியிருந்தது. இவந்தான் தீக்கங்காணியோ என்றுகூட நினைத்தான். பிறகு அவனின் வெளுத்த தேகமும் உடல் வாட்டமும் ஊராரின் கதைக்கட்டுகளுக்குக் கொஞ்சமும் ஒத்துப் போகாத நினைப்புடன்,  வேறே யேரோ என்ற யோசனையுடன் தன்னிடமிருந்த தண்ணீர் குடுவையை எடுத்து நீட்டினான்.

மொள்ளான் அதற்குப் பதில்சொல்லும் முன் நாலைந்து மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு, வாயைத் துடைத்தபடி நீர்க்குடுவையைத் திரும்பக் கொடுத்தான். பிறகு, உடுதுணியை உதறிக்கொண்டு அந்தப் புல் தரையிலேயே உட்கார்ந்துகொண்டு, தன்னைப் பற்றின விஷயங்களை வெட்டும்பெருமாளிடம் சொன்னான். அதிலிருந்து, மொள்ளான் இலவங்க மரப் பட்டைகளைத் திருட கூட்டமாய் மலையேறி வந்தவனென்றும், காட்டுக்குள் வழிதப்பி, தனித்துவிடப்பட்டுக் கீழ்புறமாய் இறங்கி விட்டானென்றும் தெரிந்துகொண்டான் வெட்டும்பெருமாள். அவனிடமிருந்து மேற்குக் காட்டுக்கு அந்தப் பக்கம் எந்த ஊர் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினான்.

“காட்டுக்கு அந்தப்பக்கம் ஊருல புலியெல்லாம் அலையும்ன்னு சொல்றாவளே நெசமா”

“அதெலாமில்ல... இந்தக் காட்டுல யானைங்கதான் திரியும். அதும் நெருப்ப கண்டா ஓடீரும்.” 

“ஆனா, காட்டுக்குள்ள நெருப்பு கொண்டாந்தா தீக்கங்காணி தோலை உரிச்சுர மாட்டாரா”

“அவரெலெல்லாம் கண்டுப்புடிக்காத மாதிரி வேகாத கங்கை சாணியுருண்டையில வச்சிருப்போம்”

“வேகாத கங்குன்னா?”

“நவாமரக் கட்டை இருக்குல்லா, அது நல்லா நின்னு எரியும்யா. அதோட கங்கு எடுத்து கல்லுல வச்சா வெளில கரியாவும் உள்ள கங்காவும் இருக்கும். அப்படியே ஈரசாணில உருட்டி இடுப்புல வச்சிகிட்டா ஒரு ராத்திரிக்கி தாங்கும். வேணும்ங்கிறப்போ சாணிய உதுர்த்துட்டு கங்க ஊதி ஊதி தீ பத்தவைச்சிப்போம்.” 

“அடேயப்பா வித்தைக்காரங்கதான்...” என்றவனுக்கு மொள்ளானிடம் வெடித் துப்பாக்கி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளும் ஆசை துளிர்விட்டது. அதைப் பார்க்க முடியுமா என்று ஒரு குறுகுறுப்பில் தயங்கித் தயங்கி கேட்டுவிட்டான்.

“இருக்கு, அதைக் காட்டுக்குள் ஒரு மரத்திலே குறிபோட்டு கெட்டிவைச்சுருக்கேன்” என்ற மொள்ளான் தன் இடுப்பிலிருந்து ஒரு மூங்கில் துண்டை எடுத்து, அதில் ஏதோவொரு செடியின் இலைகளையுக்ம் விதைத் துணுக்குகளையும் திணித்து கங்கில் பற்றவைத்தான். 

“என்னதிது... உங்க ஊரு சுருட்டா” 

“சுருட்டில்ல இது கஞ்சா... குடிச்சா ரெண்டு நாளைக்கிப் பசியே தெரியாது” வெட்டும்பெருமாளுக்கு அந்த செடியைக் குறித்த  ஆச்சர்யம் எழுந்தது. 

“ரெண்டு நாள் பசி தாங்குறமாதிரி அப்படி என்ன செடி...”

“குடிக்கியா...”

“ச்சை. ஆளவுடுய்யா. பண்ணையாரு கொன்னுருவாரு...”

“ஆமா இங்கத்தான் நின்னு பார்த்துட்டு இருக்காரு... சும்மா குடிச்சுத்தான் பாரு, சொர்க்கமே தெரியும்”

“வட்டவட்டமா பொக வுடுவியா நீயும்”

“நீ கூட உடலாம். இந்தா குடி”

முதல் இழுப்பில் அவனுக்கு நெஞ்சு வலியெடுத்து இருமல் வந்தது. மூச்சு முட்டிக்கொண்டு கண்களில் நீர் பூத்தது. மொள்ளான் விடாமல் வலுக்கட்டாயம் செய்ததில் இன்னும் நாலு இழுப்பு இழுத்தவன், சற்று நேரத்திலேயே புல்தரையில் சேறு ஒட்டினது கூட தெரியாமல் கிறங்கி மலந்தான்.

***

நிழல் கருமையாக கண்களில் விழ, முத்து முத்தாக வியர்த்த வியர்வையைத் துடைத்து எழுந்தபோது  வெட்டும்பெருமாளின் உடம்பெல்லாம் ஈர மண் ஒட்டி இருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு நிர்ச்சலனமாய் தூர இருளில் மாடுகளைத் தேடினான். கயிற்றில் கட்டிக்கிடந்த மாடுகளைத் தவிர மற்ற மேய்ச்சல் மாடுகள் எதுவும் அவன் கண்ணுக்குச் சிக்கவில்லை. மணிச் சத்தமும் கனைப்பொலியும் மட்டும் தூரத்தில் கேட்டதும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தத் திசைக்கு ஓடினான்.

வந்தவன் என்னத்தையோ புகைக்கக் கொடுத்து மாடுகளைக் களவாண்டு போகப்பார்த்தானோ என்று நினைத்தவனுக்கு அந்தச் சத்தங்கள் கொஞ்சம் நிம்மதி தந்தது. இருந்தும் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவன், ஒன்றிரண்டு மாடுகளைத் திருடிக்கொண்டு போய்விட்டானோ என்ற அச்சமும் நீங்கவில்லை. எங்கே போனான் இந்த காட்டுவழி வந்தப்பயல். அவனைப் போய் நம்பினேனே. அவன் சொன்னதற்கு நேர்மாறாக பசி பின்னியெடுக்கிறதே. வெயில் இறங்கி கருக்கல் வேறு வந்துவிட்டது. இந்நேரம் மாடுகளைப் பத்திக்கொண்டு பண்ணையத்துக்குத் திரும்பியிருக்க வேண்டும். கறவையெல்லாம் எப்போதோ முடிந்திருக்கும். பண்ணையார் எப்படியும் இன்று கொன்றெடுத்துவிடுவார்... ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டு மாடுகளின் கனைப்புச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த இடத்தை நெருங்கியவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. 

“அஞ்சுகோட்ட சாமீமீமீ.. கள்ளப்பயல் இந்த வேலை பாக்கவா வந்தான்” கண்கள் மலங்க மலங்க உயிர் அத்துப் போனது பெருமாளுக்கு. லவங்கம் களவாங்க பயன்னு நினைச்சா அடிமடிய அறுத்து எடுத்துட்டு போய்ட்டானே. கலங்கித் துடித்தவன் நடுகாட்டில் ஆள் அரவமற்ற இடத்தில் அலறிக் கொண்டிருந்தான்.

பச்சிலை மூலிகை தடவி மாட்டின் தோலை அப்படியே உயிரோடு உரித்தெடுக்கும் ஈவிரக்கமற்ற சோரமார்கள் சிலர் பக்கத்து பிரதேசங்களில் நடமாடுவதாக ஊருக்குள் ஏற்கெனவே பேச்சிருந்தது.  அதை யாரும் பெரிதாய் நம்புகிறார் போல இல்லை. முழுமாட்டைக் கடத்திக் கொண்டு போவானென்று கண்டதுண்டு, இதென்ன ஈனத்தனம் அப்படிச் செய்யவும் மனசு வருமா எவனுக்கும் என்றே பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். பிறகு, சாயிபுமார்களும் மேற்கத்திய காணிக்காரர்கள் சிலரும் சொல்லித்தான் விசயத்தில் உண்மையுண்டு என ஊர் நம்பத் தொடங்கியது. ஆனால், அது எங்கே தூர தேசத்தில் நடக்கும் கதையென்றே எல்லோரும் எண்ணினார்கள்.  

வெட்டும்பெருமாள் தன் கொத்திலிருந்த மாடுகள் ஒவ்வொன்றின் உடம்பையும் தொட்டுப் பார்த்தான்.   

பச்சிலை மூலிகையின் வீரியத்தில் மாடுகளின் பருத்திருந்தன. தோல் உரிக்கப்பட்டு தசைகளில் ஊண் வடிந்து கொண்டிருந்தது. ஈனமாய் முணகிக்கொண்டிருந்த மாடுகளைக் கண்கொண்டு பார்ப்பதற்கே அவன் உடம்பில் தெம்பில்லை. அழுது அரற்றிக்கொண்டு மாடுகள்மீது பாய்ந்து தழுவினான். அவன் உடலெல்லாம் இரத்தம் பிசின் ஒட்டிக்கொண்டது. தொண்டை வெடிக்க ஓவெனக் கதறினவன்... வெறி பிடித்தவன்போல மேற்குக் காட்டை நோக்கி ஓடினான்.

***

பண்ணையாரின் ஆட்கள் நாலா திசைகளிலும் பயலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மாட்டுக்கு வைத்தியம் பார்த்து ஆகாது கொன்று விடுங்கள், அதன் ஈனச்சத்தத்தைக் கேட்க முடியவில்லை என்று பண்ணையாரம்மாள் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள். அழுகிற அவளின் வேதனையும் துயரமும் கொஞ்சமும் வீரியம் குறையாமல் பண்ணையாருக்கும் ஏற்பட்டிருந்தது. 

இரண்டாம் நாள் பகலில் பண்ணையார் வீட்டு புறக்கடையில் இடி விழுந்தது போல சினை பிடித்திருந்த செவலைப்பசு இறந்து போனது. ஊருக்குத் தெரியாம ஆள்காரர்களைவைத்து அதனைத் தோட்டத்தில் குழிவெட்டிப் புதைத்திருந்தார்கள். 

தட்டழியத் தொடங்கும் குடும்பங்களின் முதல் சாபம் சினைப்பசுவை இழப்பது தான் என்றெண்ணிய பண்ணையார், மற்ற மாடுகளையாவது எப்படியும் காப்பாற்றிவிட வேண்டுமென்று தவிதாயப்பட்டார்.  கீழ்த்திசை ஊர்களிலிருந்து பசுவைத்தியர்களைத் தேடித் தேடி அழைத்து வந்திருந்தார் கணக்கன்.  அவர்களில் பேர்பட்ட ஆள் ஒருத்தர், மாடுகளின் நிலைமையைப் பார்த்துவிட்டுத் தன்னால் முடியாதெனக் கைவிரித்துவிட்டார். 

அதன்பிறகு, ராமநாதபுரத்திலிருந்து மாட்டு வாகடம் பார்க்கும் மாசாணம் என்பவரைக் குறித்துக் கேள்விப்பட்ட பண்ணையார், அவரை வண்டிமாடு கட்டிக் கூட்டிக்கொண்டுவரத் தாமதாமாகுமென  நாடகக் கம்பெனி ஆட்களின் மோட்டார் காரை கடனுக்கு வாங்கிக்கொண்டுபோய் அழைத்துவந்தார். 

வாகடம் பார்ப்பவர் வந்ததும் பண்ணையமே பரபரப்பானது.

வாளி நிறைய புளி கரைக்கப்பட்டது. வெப்பாலை கொழுந்து, மரப்பட்டை, கருவக்களை, இன்னும் பல மூலிகைத் தளைகளைத் தனித்தனியே அளவும் பதமும் பார்த்து ஆட்டுரல்களில் கொட்டி அரைத்துக் கொண்டிருந்தார்கள் கூலியாட்கள். மருந்துச் சேர்க்கை தயாரானதும், தட்டிகளுக்குக் கீழே நிழலில் மாடுகளைத் தனித்தனியே நிறுத்தி, சாம்பிராணிப் புகை போடப்பட்டது. புளிக்கரைசலோடு, அரைத்தெடுத்த மருந்துகளைச் சேர்த்து பண்டுவம் பார்த்தார் மாசாணம். 

மாடுகளின் அனத்தம் இப்போது குறைந்திருந்தது. ஆனால் சீழ்வடிவது நிற்கவில்லை. அதுவும் நல்லதுதான் சீக்கிரமே குணப்பட்டுவிடும் என்று நம்பிக்கையாய்ச் சொன்னார் மாசாணம். அப்போதுதான் பண்ணையார் குடும்பம் ஒரு நிலைக்கு வந்திருந்தது.   

***

காட்டுக்குள் சொறித் தவளை கத்திக்கொண்டே கிடந்தது. அன்றைக்கு அடித்துப் பெய்த மழையும் சேர்ந்து காட்டுப் பாதையை சதசதப்பாக்கியிருந்தது. ஈட்டிமரம் ஒன்றுக்குப் பின்னால் ஏதோ கெட்டவாடை அடித்தது. நரிகளும், பிணந்தின்னிகளும் கூடிக் கடித்துப்போட்ட இரைநாற்றம்போல  ஏதோவொன்று நாசியில் ஊக்குபோல குத்தியது. வெட்டும்பெருமாளைத் தேடிக் காட்டுக்குள் அலைந்து திரிந்துகொண்டிருந்த முனுசு, ஆந்தகண்ணு, சொள்ளமாடன், பட்டுருட்டி ஆகிய நால்வரும் மூக்கைப் பொத்திக் கொண்டு அதன் கிட்டேபோய் பார்த்தார்கள். தலை துண்டிக்கப்பட்டு, உடல் தசைகள் கிழிக்கப்பட்டு எலும்பும் சதையுமாக ஓர் ஆஜானுபாகுவான ஆண் சடலம் ஈட்டி மரத்தில் குற்றிவைக்கப்பட்டிருந்தது.

ஆள்காரர்களுக்கு அது யாரென்று பிடிபடவில்லை. “பார்க்க மலையாளத்தான் மாதிரியில்ல இருக்கான்”  என்று தாங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பிறகு காட்டு மஞ்சள் குலைகளை வெட்டி, அந்த சடலத்தை சாக்கில் அள்ளிப்போட்டுக்கொண்டு, ஊரை நோக்கி எடுத்துக்கொண்டு போனார்கள். 

***

மேற்குக் காட்டின் மேய்ச்சல்காரர்கள் மாடுகளைப் புல்லுக்குக் கூட்டி வந்ததுமே வானம் பார்த்துக் கும்பிட்டார்கள். கீழே முறிந்து கிடக்கும் ஈட்டி மரத்துக் கணுக்கம்பை நிலத்தில் குத்தி, அதில் மாட்டை கட்டிப்போட்டார்கள். “வெட்டும்பெருமா சாமி! நீதான் எங்க ஆடு மாடு கன்னுகளையெல்லாம் கண்ணுங்கருத்துமா நீதான் காத்து நிக்கணும்” என்று அவர்கள் வாய் ரெவ்வெண்டு வார்த்தையாக முணுமுணுத்தது. 

-கார்த்திக் புகழேந்தி 


Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்