மழைக்கு முன்னால்...




1

நாடான நாடதிலே நல்ல லண்டன் பட்டணத்திலே… 

தேசாதி தேசந்தனிலே சிறந்த லண்டன் பட்டணத்திலே… 

பாரடக்கி அரசாண்ட பரங்கி ராசா துரையின் கதை… 

நாங்கள் உங்கள் முன்னால் பாடவந்தோம்..  

தோம் தோம் தக்கத் தகதிமி தோம் தோம்….. 

செங்கிடாரன் கூத்து நடந்துகொண்டிருந்த பச்சேரி மைதானத்துக்குத் தெற்கே வெளிச்சம் விழாத இருட்டு கசத்துக்குள் நின்றுகொண்டு சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தார் ஊர்ப்பெருசு கருமாடன். 

‘இந்தா இப்பொ வந்துடுதோம்’ என்று சாராயக் குடுவையுடன் விடிலிக் காட்டுக்குள் இறங்கி நடந்த இளந்தாரிகள் வேம்பயலும், மாயாண்டியும் நேரம் பிந்தியும் இன்னும் ஊரான ஊருக்குத் திரும்பியிருக்கவில்லை. 

சுருட்டுக் கங்கு விரல்மடக்கு வரைக்கும் எட்டிவிட்டது. 


நேற்று வரை மிச்சமிருந்த சாராயத்தின் மதமதப்பு அடிவயிற்றுச் சூட்டைக் கிளப்பி விட்டிருந்தது. ஆளில்லா இருட்டுச் சுகத்தில் கொஞ்சம் மூத்திரம் பேயலாம் என்று பனைமூட்டுக்குப் பக்கம் தன் வளைந்த கால்களைக் கிளப்பிக்கொண்டு ஒதுங்கின பெருசின் தலைக்கு மேலாக்கில், திடுக்கென்று கருங்காக்கா ஒன்று தனிச்ச குரலில் ‘கரேல்’ சீறிவிட்டுப் போனது.

‘என்னம்மோ சரியாப் படலியே’ வாய் வரைக்கும் வந்த வார்த்தையை தன் காதுபடவும் ஒருமுறைச் சொல்லிப் பார்த்துவிட்டார்.

மெல்ல இருட்டில் இருந்து வெளிப்பட்டு, மைதானத்தின் ஓரமாக நெருங்கி வந்தார். ஓலைப் பாயை விரித்து கால் நீட்டிக்கிடந்த கெச்சலான கிழவிகளும், அவர்கள் கைபடும் நெருக்கத்தில் சுத்தி உட்கார்ந்திருந்த நெஞ்சு வளர்ந்த குமரிகள் ஏழெட்டு பேரும், இன்னும் சில மண்ணில் புரண்டழும் பள்ளிப் பொடிசுகளும் அவரவரது தாய்மாரும் அறுதலிகளுமாக மைதானம் கசமுசவென வாப்பாறிக் கொண்டிருந்தது. 

கூட்டமென்றிருந்த அந்த மொத்த தலைகளை எண்ணினாலும் முப்பது நாப்பது தேறாது. ஊர் மொத்தமுமே அப்படித்தான் கிடந்தது. காக்காய் கூடுபோல. புல்பூண்டு வாசம் பார்க்காமல், புளிச்சவாடை வீசிக்கொண்டு, வயக்காட்டுப் பாதைக்கும் வாய்க்கா கரைக்கும் நடுவாந்தரமாய், தண்ணி காணாப் புழுதியோடு… 

மழையும் மானமும் மேனாமினுக்கி மருமகள்போல நடந்துகொண்டது. ஒரு நல்ல விதைப்பாட்டுக் காலத்திலும்கூட காலூன்றிப் பெய்யவில்லை. மழைக்குறி தோன்றாமல் ஊரே துன்பத் தூரியிலே தொங்கவிட்டதுபோல ஆகிவிட்டது.

வயித்துப்பசியெல்லாம் வாய்ச்சவனுக்குத்தானே படைச்சவனுக்கில்லீயே. கொஞ்சங் கூடக் கூச்சநாச்சமில்லாமல் படைப்புச் சோற்றுக்கு வாயைப் பொளந்துகொண்டு நின்றார்கள் ஊர்மாடனும் மாடத்தியும். இவர்களுக்குக் கூட்டு நாட்டாக பேய்ச்சி, முண்டன், செங்கிடாக்காரன், கருங்கிடாக்காரன், தளவாய்க்காரன்… 

‘ஊருல ஒருத்தனுக்கும் அவிச்சித் திங்கத் துப்பில்லாதெ, அறுதலி மவனுவளா நிக்கறீய. ஒங்க சூடுபாடுகெட்டச் சாமிவளுக்கு கொடை எடுக்கதுதான் முக்கியமாப் போச்சா. பேசாது போங்கல. ரோக்கியம் கெட்டச் சாமிவளுக்கு கெடாவெட்டுதான் கேடா. போங்கல” 

பழனி முடிப்பட்டம் குமார விசையகிரிச் சமீன் எடுத்ததும் இப்படித்தான் ஆங்காரமாகத் தான் எரிவார். வேணா வெறுப்பாக மூஞ்சை வைத்துக் கொள்வார். கோணிக் கோணி ஏசுவார். சன்னபின்னலாக ரெண்டுபேரை உதைக்கவும்கூடச் செய்வார். கொன்னே போட்டாலும் கேட்க ஆள் உண்டா என்ன. இருந்தாலும் கொண்டையை ஏற்றி முடிந்து, சுருளில் கணக்கு எழுதச்சொல்லி, கைச்சாத்தும் வாங்கிக் கொண்டு, கமுகு, வெற்றிலை, கா மூட்டை கறுக்காய் நெல்லு, ரெண்டு இணை இளந்தையாடு என்று வருவாசி கடனுக்குக் கொடுத்தனுப்புவார். பிறகு அந்தக் கடனுக்கு ஏழெட்டு வம்சப் பிறப்புக்குச் செக்கு மாடாய் உழைக்கணும்.

சமீனிடம் இப்படித் தவிதாயப்பட்டுப் பிழைக்கணுமா ஒரு பிழைப்பு என்கிற நினைப்பு அத்தனைப்பேரையும் அசரடித்திருந்தது. சமீனையும் விட்டால் ஊருக்கு வேறு என்ன நாதி என்கிற கோவிப்பில் அல்லாம் அடங்கிக் கிடந்தது. 

சாத்து வாங்கிக் கொடுத்த கா மூட்டை முத்தின நெல்லில் எந்தச் சாமிக்குப் பசியடங்கும்? சொல்லுபடி அதுகளுக்குச் சூடுபாடு மட்டுமில்லை. சூரமும் போய் பலகாலம் ஆகிவிட்டது. இருந்தும் அதுகளை அனாதியாகவா விட்டுவிட்டவா முடியும்.  

கிழக்குக் கரைக்குப்போனால், காமூட்டை நெல்லுக்கு முழு மூட்டை கம்பும் மூணு பொதி கேப்பையும் கிடைக்கும். மூணு நாள் கொடைக்கு அதுவே தாங்கும். கூத்துக்காரனுக்கு ஆட்டுத்தோலைத் தந்தால் ஆவலாதி இல்லாமல் வாங்கிக்கொண்டு போவான். நைந்த துணி பொதிந்து கொடுத்தால், கோமரத்தாடிக்குச் சல்லியமும் பந்தலும் பாணாத்தியே தைத்துக் கொடுப்பாள். மற்றபடி பெரிய மேச்செலவு என்று பார்த்தால் எல்லோரின் நாக்கையும் சாராயத்தில் நனைப்பது ஒன்றே பிரதானமாயிருந்தது.

சாராயத்துக்கு என்ன செய்ய என்று முடிவெடுக்கும்படி ஊர்க்கூட்டம் போடப்பட்டது. 

ஊரின் தலையாள் என்றால் அது பெருசு கருமாடன் ஒருத்தர்தான். அவர்தான் தாய்க் கிராமத்தின் பழைய மிச்சம். அவர் ஐயாவும் தாத்தனும் தாயூரில் பொண்ணு கட்டிப் பொண்ணு எடுத்தவர்கள். இப்பொ தாயோ கிராமமோ பொண்ணோ அங்கில்லை. மொத்தபேரும் ஊரையே கிளப்பிக்கொண்டு, சமீனிடமிருந்து விடுபட்டு எங்கேயோ கண்காணாத திக்குக்கு மாயமாய்ப் போயிருந்தார்கள். 

போகும்போது, உழுபாட்டுக்காக அவர்கள் வைத்திருந்த கன்று, காலி, கொழு, கலப்பை, வடக்கயிறு, எல்லாத்தையும் ஈழுவச் சாணானிடம் விற்று முதலாக்கியிருந்தார்கள், சாமிகளுக்கு ஏழுநாள் கொடைகொடுத்தார்கள். ஏழாம் நாள் சாயும்பொழுதில் தாயூர் ஆம்பிளை பொம்பிளை எல்லாபேரும் கள்ளுப் பானைக்குள் குதித்துக் கும்மாளம் அடித்துக் கிடந்தது. 

ஏதோ பெரிய சோகத்தை உள்ளே மறைத்துக்கொண்ட பள்ளிகள் ஒப்பாரி வைத்து பள்ளேசம் பாடினார்கள். ஆம்பிளைகள் கள்வெறியில் சட்டிப் பானைகளை உடைத்துப்போட்டு வெறியாட்டம் போட்டார்கள்.

திடீரென்று ஊர் குப்பென்று தீப்பிடித்து எரியத் துவங்கியது. வயல் காடு கரை குடிசை எல்லாத்தையும் கைகளை வீசி வீசி விளையாடி அழித்தது நெருப்பு. புகை புகையாய் மங்கி மயங்கிய வேளையில், மொத்த தாயூர் சனமும் கண் காணாமல் மாயமானது. 

எங்கே போனார்கள் என்னவானார்கள் என்று சமீன் மொத்தத்திலும் சல்லடைபோட்டுச் சலித்தும் சின்னத் தடயம் கூட ஆப்படவில்லை. 

தடம் பார்த்து அலைந்த கண்களுக்கு ஊர் வாவியைத் தாண்டி ஒரு மண்ணசைவு கூடத் தென்படவில்லை. மனுசமக்கள் எல்லாபேரும் தீயில் அழிந்தாலும் ஒருத்தர் அங்கம் கூடவா சாம்பலாய் கிடக்காது.  

என்னடா கூத்து இது என்ற பையித்தியம் எல்லாரையும் ஆட்டியது. சமீன் விசயகிரி வையாவேள் கையொடிந்ததுபோலப் புலம்பினார். இனி இதுபோல நடக்காமல் இருக்கட்டும் என்று சுத்துப்பட்டுக் கிராமங்களுக்கெல்லாம் படையெடுத்து வந்து உருப்படியானவர்கள் கைகால்களை உடைத்து நொண்டியாக்கிப் போனது. 

அப்போ சுரத்திழந்ததுதான் இந்தச் சனமும். அதுகளுக்கு இப்போ சாராயத்துக்காக் தானா கேடு. ஆனாலும் வேறு யோசனை ஒன்று அவர் மனசில் ஓடிக் கொண்டிருந்தது. அதை வேம்பயலையும் மாயாண்டியையும்கொண்டு சாதித்துவிட முடியும் என்று தீர்க்கமாக நம்பினார் கருமாடன். 

2

மைதானத்தின் மத்தியில் வெள்ளக்காரத்துரை வேசங்கட்டின கூத்துக்காரன் நேரங்காலம் ஆளிருப்பு பத்தியெல்லாம் எந்த யோசனையும் இல்லாமல் ஏலேலோ போட்டு தன் ‘வாய்க் கப்பலை’ கடல்விட்டுக் கடல் தாண்டி, லண்டனில் ஆரம்பித்து கன்னியாமரி தவிட்டுத்துறை வரைக்கும் பாராயணமாகத் தள்ளிக் கொண்டுவந்து சேர்த்திருந்தான். 

ராப்பூசை முடிந்தபிறகே அவனுக்கு இரண்டு ஆட்டுத்தோலும் கூலியாகக் கைவந்து சேரும். இந்தப் பீடை காலத்தில் ஒராட்டுத் தோலே தாராளம்தான். அதற்கே ஏழு நாள் ஏழூர் நடந்து எட்டு பத்துக் கூத்துக்களைப் போடச் சொன்னாலும் பாடித் தள்ளும் மனநிலையில்தான்  கூத்தாடிகளும் இருந்தார்கள்.

கூத்தில் இப்போது செங்கிடாரனும், அவன் தங்கச்சி மண்டைக்காரியும் பருந்துகளாய் மாறி, வெள்ளைக்காரத் துரையின் கப்பல் கொடிமரத்தை ஆட்டி ஆட்டிக் கடலுக்குள் மூழ்கடித்துக் கொண்டிருந்தார்கள். 

துரையின் துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தை பின்பாட்டுக்காரன், தென்னமட்டையை உள்ளங்கையில் ’டப் டப்’பென அடித்து எழுப்பினான். 

பிள்ளைகள் சில மிரண்டுபோய் தாய்ச்சீலையைப் பற்றிக் கொண்டதுகள். சனம் மொத்தமும் கண்ணுக்கு முன்னாடி கடல் சண்டை நடப்பது மாதிரி ஆவேசம் தொற்றிக்கொண்டது. வயசுப் பிள்ளைகள் வா பிளந்தபடி புதினம் பார்த்துக் கொண்டிருந்தன. 

எல்லாம் இன்னும் ஒரு சாமம் தான். 

மொத்த ஊரும் சமீனுக்குத் தெரியாமல் பொத்திப் பொத்தி வெளியேற வேண்டும். எத்தனையோ பனிக்கு முன்னால்  தாயூர் சனம் மொத்தமும் சமீனைக் கைவிட்டுத் தப்பிப்போனதுபோல கமுக்கமில்லாமல் வெளியேற வேண்டும். 

சமீன் துப்புரவாய் தெளிந்திருந்தது. கொடுத்த கைச்சாத்துக்கும் வாங்கின கடனுக்கும் ஊரைச் சுற்றியும் காவல்பிறை போட்டு வைத்திருந்தார். அதில் ஏறி நின்று காவல்காக்கும்  குடியான்களை மீறி, ஒரு ஊனாக்குருவிகூட ஊரைவிட்டு வெளியேற முடியாது.

முப்போதும் இப்படி ஊரையே சுற்றிவந்து காவல் காத்துக் கொண்டிருந்த அந்தப் படைகளுக்குச் சுரம் வரச் செய்கிற ஒரே சுரத்து சாராயக்குடுவை ஒன்றுதான். 

மைதானக் கூத்துக்கு காதை மட்டும் கொடுத்தபடி, கண்பார்வை முழுக்க விடிலிக் காட்டையே கவனித்துக் கொண்டிருந்த கருமாடனின் இன்னொரு சுருட்டும் இப்போது எரித்து முடித்திருந்தது. 

கரிந்த துண்டை அவர் காற்றுத் திசையில் தூக்கி வீசின ஏககாலத்தில் ஆண் பனையில் கூடுகட்டியிருந்த தூக்கனாங் குருவி சத்தம்போட்டு ஆள்வரத்து தென்படுவதை அடையாளம் காட்டியது. 

கட்டை உடம்பும் கனத்த கால்களுமாக வேம்பயலும், நெடுநெடு உயரத்தில் ஒடுங்கிய முகவாயுமாக மாயாண்டியும், முப்பது மைலுக்கு நடந்து களைத்த மூஞ்சுடன் மேடேறி வந்து கொண்டிருந்தார்கள். 

”வார நேரமா இது செரிக்கியுள்ளயளா.. பொம்பள பாவாடைக்குள்ள தலவுட்டவங் கூட இன்னெரம் எந்திரிச்சி கம்மாக்கர ஒதுங்கிருப்பான். போன நேரமென்ன வார நேரமென்ன..?” 

“இல்ல அப்பு, வாற வழியிலே மொட்டப்பாற பக்கம் கள்ளக்கூட்டம் பரசனம் பார்த்துட்டு கெடக்கு. குறுக்கால போவானேன்னு சுத்திட்டு வந்தம். நேரமாயிட்டு” 

”காவக்காரன மயக்கடிச்சி, கள்ளங்கிட்ட சிக்கயிருந்தீயளா. அதுசெரி. எங்கால போறானுவன்னு லெக்கு பாத்தீயலா”

“அது.. பாகம்பாகமா எறங்கி காட்டாளம்மங் கோயில் தெசைக்கிப் போனமாதிதான் தெரிஞ்சுது. நம்மப் பக்கம் வரமாரி தெரியல்ல. இங்க என்ன கெடக்கு. மண்ணத்தாம் பெறக்கிட்டுப் போவணும்..” மாயாண்டி  வெறுப்பாகச் சொல்லிக்கொண்டான். 

கருமுண்டனே அடுத்த பேச்செடுத்தார். 

“ச்சரி அந்தச் சோலியெல்லாம் கெடக்கட்டும். போன விசியம் என்னாவாச்சி...”

“அதெல்லாம் சொன்னபடி செஞ்சிட்டம். வடக்கயும் கிழக்கையும் காவல்பெற போட்டு நிக்க ஆளுகளுக்கு நல்லா ஊத்திவிட்டுத்தாம் இன்னும் கறியெடுத்து வாரமின்னு வந்தம். அசந்து கெடக்குதான்வ. இடி உசுப்புனாலும் எந்திக்க மூணு சாமம் தாண்டிரும்” 

வேம்பயல் முகத்தில் சாதுரியமாக வேலையை முடித்துவிட்டு வந்த பரபரப்பு தெரிந்தது.

3

பகல் பொழுது கிழக்குச் சீமையை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது. 

ராவும் பனியுமாக மறைந்து மறைந்து வெக்கு வெக்கென பல மைல் தொலைவுக்கு நடந்தே வந்திருந்த சனக் கூட்டத்தின் கண்களில் இப்போது வெயிலையும் தண்ணீர்க் கரையையும் கண்ட சந்தோசத்துக்கு அளவே சொல்ல முடியாது. ராமன் விட்ட அம்பு அம்பறாத்தூணியிலேயே திரும்ப வந்து தைத்துக் கொள்ளுமாமே அப்படி, எங்கேயோ எப்போதோ தொலைத்துவிட்ட சந்தோச அம்புதான் திரும்பவந்து தைக்கிறதோ என்று தன் நெஞ்சிலே அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டது.

இருட்டோடு இருட்டாக முப்பது தலைக்கட்டுள்ள குடும்பங்களும் அணக்கமில்லாமல் ஊரைவிட்டே வெளியேறியிருந்தன. வயசு தொலைந்த சில கிழங்களும் வளர்ப்புக்கென வைத்திருந்த காடை குருவி நாய்களும் தவிர ஊரில் எதுவும் மிச்சமில்லை. 

ஓலைப் பாய்களுக்கு முன்னே கூத்துப் பாடியவன் விடியுமுன்னே கிளம்பிப் போயிருந்தான். 

இப்படி நடக்கப்போகும் விபரம் மட்டும் முன்பே அவனுக்குத் தெரிய வந்திருந்தால் அந்தத் திசைக்கே தலைகாட்டியிருக்கமாட்டான். 

இளந்தாரிகள் வேம்பயலும் மாயாண்டியும் கருமாடனைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். அடுத்தது பற்றின ஆவலாதி மற்றவர்களுக்குள் நிரம்பி வழிந்தது. அத்தனை மைல் நடையிலும் ஒரு சொல்லும் பேசாது பின்தொடர்ந்து வந்த சனம் இப்போது என்னெ என்னெ என்றிருந்தது.

கூட்டத்துக்கு முன்னே நடுநாயகமாக வந்து நின்றார் கருமாடன்.

“பொழுது சாயம்முன்ன இருக்குறதை பொங்கி ஆக்கித் திம்போம். நடுசாமத்திலே சம்மாங்காரன் வருவான். நம்மள எல்லாம் ஆத்தங்கரைக்கு அங்கன உள்ள திட்டில கொண்டோய் விடுவான். ஆத்தத் தாண்டிட்டா கடல்தாண்டிப் போற வரை இந்த உசுரு நம்மளுது இல்ல. சாமிய வேண்டிக்கோ. இங்கனெ வாப்பாறினாதான் உண்டு.” 

எல்லோரும் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலே இருந்து ஒரு குரல் மீறிவந்து விழுந்தது. 

“இனுமப்பட்டு நாம போற ஊருலே ஏரு பூட்டி உழுகலாமில்ல. அங்க மழையும் மானமும் உண்டா, அங்க உள்ள சமீன்ராசா நம்மளச் வெள்ளாம பண்ண விடுவாரா?” 

இன்னொரு கூரல் இப்போது கூட்டு சேர்ந்துகொண்டது.

”அந்த ஊருலயும் பஞ்சம் கிராக்கி கலவரம் இதேபோலச் சமீனுன்னு இருந்துட்டா என்னாச் செய்யுறது?” 

“இதேபோல உசிரத் தூக்கிட்டு வேற ஊரு தேடிப் போவோம்.” பொம்பளையாள் குரல் ஒன்று தப்பிலியாக வெளிப்பட்டது.

கருமாடன் இந்த எல்லாக் கேள்விக்குமான பதிலை ரொம்பக் காலமாய் மனசுக்குள் உழப்பியபடியேதான் இருந்தார். அவர்கிட்டே எந்தப் பதிலும் இல்லை.

எவ்வளவோ சாவுகளைக் கண்முன்னே பார்த்துவிட்டது சனம். உயிர் ரொம்பப் பெருசுதான். பசி பாவம் கூட அது பொறுத்துக் கொள்ளும். அடியும் புடியும் கூடப் பழகிவிட்டது. பின்னே என்னத்துக்கு இப்பொ திடீரென வீராப்பு? 

காலிலே வெள்ளெலும்பு எட்டிப் பார்த்த காலந் தொட்டு தலமுற தலமுறயா பூமிக்கு அடிமயாத்தானே இருந்து வந்த்து. மாடனுக்குப் பயப்பிட்டதைவிட பழனிச் சமீனுக்குப் பயந்ததுதான் அதிகம். சாமி, எஜமான் ஆண்டேன்னு கூளப்பாட்டுப் பாடியே வீணாப் போன உசிர்கள். 

சமீனக் கண்டா நெடுமரம் போல வீழணும். ஊருலே ஒரு கலியாணம் எளவ அவங்க உத்தரவுப் பத்தரம் வாங்காம நட்த்தவிட்டதில்லை. அவ்வளவு நல்ல மனசு. இளந்தாரிப் பயக சமீனுக்கு அடிமைக் கூலி. வயசடையாத பிள்ளைக சமீன் உடம்புக்குச் சேவகம். மேல போனா சாட்டையடி, சாணக்குழி, உசுரோட கொள்ளை. இதுக்கா உண்டானது இந்தப் பொறப்பு. 

வித்து மாடு கலப்பைன்னு விதவிதமா அறிவுள்ள சனம்தான். அச்சு முறிஞ்சு விழும் எடைக்கு பொலிபொலியா விளையுற அம்பது அறுபது ரகம் நெல்லு பயிர் பண்ணும். அணையடிக் கருப்பனிலே ஆரம்பிச்சு முப்பது சொச்சம் தெய்வமுண்டு. என்ன இருந்து என்ன பரிவாரச் சாமிக்கும் சாதிக்கும் போக்கிடமின்னு ஒரு திக்குதிசை இல்லையே! இப்போ அப்படி ஒண்ணு தென்பட்டிருக்கு. அது இந்தத் தலைகளை விடுவிக்குமுன்னா, அங்கேயே போய்ச் சாவோமே என்ன கெட்டது இப்பொ. 

வேம்பயலும் மாயண்டியும் இருவரும் கருமாடனின் அமைதியையே வாபார்த்துக் கொண்டு நின்றனர். அவர்களுக்கு அவரது மனவோட்டம் பிடிபட்டுவிட்டது. 






4

கா மூட்டை நெல்லையும் காவடியாகக் கட்டிக்கொண்டு, வேம்பயலும் மாயாண்டியும் கிழக்குச் சீமையின் ஆற்றுக்கரைக்கு வந்துசேர்ந்த நேரம், சந்தை ஓவென வெறிச்சோடிக் கிடந்தது. 

”ஏடா வேம்பா இதென்னடா ஒரு குருவியக்கூட காணல. ரொம்ப நேரம் முந்தி வந்துட்டமா. கிழவரு சொல்லவுஞ் செஞ்சாரு. இந்த விட்டவிடியங் காட்டுல நடையோ நடன்னு நடந்து வந்தும் ஆள விட்டுட்டமோ. பார தூரஞ்சொல்லக்கூட ஒருத்தரயுங் காணம். எங்க போயி யாரன்னு வெசாரிக்க..”  

மாயாண்டியின் பேச்சைக் காதில் வாங்கிக்கொண்டே வேம்பயல் தன் தலையில் இருந்த சும்மாட்டை அவிழ்த்து கட்டிக்கொண்டான். வியர்த்தடங்கிப் போயிருந்த போதும் தண்ணித் தாகம் ஆளைக் களைப்பாக்கியிருந்தது. 

ஆற்றடியில் தாகந்தீர்ந்த்தவன் புரசு மரத்தின் நிழலுக்குள் நின்றுகொண்டு சுற்றி முற்றி நோட்டம் பார்க்க ஆரம்பித்தான். கொஞ்சம் முந்தி வரைக்கும் மனித நடமாட்டம் அங்கே உலவியதை அவன் உள்ளுணர்வு சொல்லியது. 

 “இந்தத் தடத்திலே நடப்போம் ஆட்க யாராச்சும் முன்னே நடக்கலாம். வா வேகமா” 

வேம்பயல் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் மாயாண்டி நெல்லுக் காவடியை தோள்மாற்றிக் கொண்டு பின்னாலே நடந்தான். 

வெற்றிவேல் செழியப்பட்டணத்தின் அக்கசாலைப் பிள்ளையார் கோயில் முன்னால், சந்தை முடித்த வண்டிமாடுகள் தோணிப் பாரத்துடன் காத்துக் கிடந்தன. 

மூட்டை மூட்டையாய் கச்சைத்துணி. தானியக்கட்டு, கூளம், உப்பு, மரக்கறி…  அத்தனையும் வரும் சின்ன மாசத்தில் கப்பலேறிக் கடல்கடந்து போகும் சரக்கு.  கப்பலுக்குப் போகும் பாரங்களுடன், ஆடுமாடுகளைப் போல ஆட்கள் சிலபேரையும் வாணியச்செட்டி தலைக் கணக்கு போட்டு எழுதிக் கொண்டிருந்தார். 

செட்டியைக் கண்டுவிட்ட வேம்பயலும் மாயாண்டியும் சமீன் கையளித்த சாத்துடன் கறுக்காய் நெல்லைக், கம்பாக ஆக்கித்தரும் மனுவோடு முன்னேபோய் நின்றார்கள்.

காடுகாடாய் நடந்துவந்த இரண்டு பேரையும் ஏற இறங்கப் பார்த்த வாணியச் செட்டி  “சந்தை முடிஞ்சுபோன பின்னாடி வந்து நின்னா எப்படி. இப்போவெல்லாம் வாங்க முடியாது. எடுத்துட்டு ஊர் போய் சேருங்க. அடுத்த சந்தைக்குப் பார்க்கலாம்” என்று முட்டாக மறுத்துவிட்டார்.  

செட்டியின் வியாபாரத் தோது பிடிபடாத மாயாண்டி ‘ஆறாம் நாலையிலே சாமிக்குக் கொடை கொடுக்க என்னா செய்யுறது’ என்று தம்பித்து நின்றான். 

எப்படியாச்சும் நெல் படிஞ்சு போயிரணும் என்று செட்டியின் கண்பார்வை படும்படி பிள்ளையார் கோயிலடிக்கு வடபுறமாகக் குத்துக்காலிட்டு உட்கார்ந்தார்கள் இருவரும். 

அதேநேரம் மாறுவேசங் கட்டி பண்டாரம் போலத் திரிந்துகொண்டிருந்த கடலோடி ஒருத்தர் இரண்டு பேரையும் ஏக்காலத்தில் நெருங்கிப் பேச்சுக் கொடுத்தார்.  “கா மூட்டை நெல்லுக்கு ரெண்டு மூட்டை கம்பு நான் தரேன். ஆனா…” 

ரெண்டுபேர் முகத்திலும் அநியாயத்துக்கு அச்சம் குடியேறிக் கொண்டது.

”ஒண்ணும் பயப்படவேண்டாம். சொன்னபடி பொருள் கிடைக்கும். ஊருக்குத் தென்புறமுள்ள தோப்புக்குள்ளே ஒரு குளத்தடி இருக்கும் அங்கே உங்களுக்குக் கேட்ட பண்டம் கிடைக்கும். போய் வாங்கிக்கோங்க” என்றார் பண்டாரம். 

வேம்பயலும் மாயாண்டியும் தாங்கு தாங்கென நடந்து வாழைத்தோப்புக்குள் நுழைந்து குளக்கரையைத் தொட்டனர். தாங்கள் எந்தச் சமீனில் இருந்து வருகிறோம். கைவசம் உள்ள நெல் எங்கேயும் களவெடுக்காதது என்பதற்கான சமீன் சிட்டை முதலானதை எடுத்து வேம்பயல் நீட்டியபோது, தோணிக்காரன் பொலபொலவெனச் சிரித்துவிட்டான்.

“நடுக்கடலிலே சீறிப்பாயுற கப்பலையே மறிக்கிறவன்கிட்டேயே உன் களவாளிச் சீட்டை கொண்டாந்து நீட்டிறியே... போ போ. நீ தந்த நெல்லுக்கு ஈடா இதை நான் தரலே. உங்களாலே எனக்கு ஒரு காரியம் நடக்கணும். அதுக்கான உபகாரம் தான் இது.” என்று ஒன்றுக்கு இரண்டாக கம்பு தானிய மூட்டைகளை அவர்கள் முன்னே இழுத்துப் போட்டான் தோணிக்காரனாக மாறியிருந்த பண்டாரம்.

வேம்பயலும் மாயாண்டியும் விக்கித்துப் போய் நின்றார்கள். 

சுமக்க முடியாத பாரத்தோடு அவர்கள் ஊருக்குத் திரும்பி நடந்தபோது, பண்டாரம் சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அதை வார்த்தை மாறாமல் பெரியவர் கருமாடனிடம் போய்ச் சொன்னபோது, வானம் வேல் வேல் என இரண்டுமுறை மின்னி இடித்தது.

5

முடிப்பட்டம் குமார விசையகிரிச் சமீனின் ஆட்கள் ஊருக்குள் புகுந்திருந்தார்கள். எப்பவோ ஒருதடவை நடந்ததுபோலவே மறுபடியும் நிகழ்ந்திருப்பதை அவரால் நம்ப முடியவில்லை. இவ்வளவு காவல்கட்டுக்களை மீறி, பள்ளியர் சனம் மொத்தமாக காணாமல் போனது எப்படி என்று தடுமாறினார். பக்கத்துச் சமீன்களுக்கு அவசரம் அவசரமாக ஓலை அனுப்பினார். ஆட்களைவிட்டு நாலாப் பக்கமும் தடம் பார்க்கச் சொன்னார். 

வெட்டவெளி மைதானம்போல கரிந்து புகைந்துகொண்டிருந்த சாம்பல் குடிசைகளுக்கு மத்தியிலிருந்து நகரமாட்டாத உடம்புடன் தவழ்ந்து தவழ்ந்து வந்த கிழவி ஒருத்தி, கிழக்கு பார்த்துப் படையல் வைக்கப்பட்டிருந்த மாடனையும் மாடத்தியையும் அவர்களது கூட்டுச் சாமிகளைப் பார்த்து, “எல்லாரையும் காப்பாத்து எல்லாரையும் காப்பாத்து, கை காலிருந்தும் மொடமான சனம் மொத்தத்தையும் காப்பாத்து. அதுகளாச்சும் இனி போற எட்த்திலே தலையெழுந்து நிக்கட்டும். கூட இருந்து காப்பாத்து நீ கூட இருந்து காப்பாத்து...” என்று வாய் ஓயாமல் அழுதாள்.



நன்றி @ சிறுகதை இதழ்.

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்