அவளும் நானும் அலையும் கடலும்



மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும், என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன். உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு.

முதல்தடவை திருவான்மியூர் புத்தகக் கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனை எதிர்ப்பார்த்து காத்திருந்ததுபோல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்தக் களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள்.

*

இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?” என்ற அவளுடைய மிகச் சுருக்கமான கேள்விக்குத் 'திருவல்லிக்கேணி வரைக்கும் ஒரு வேலையாக....' என்ற முடிவுறாத பதிலைச் சொன்னேன். படிக்கட்டுகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

“அந்திமழையில் வந்திருந்த உங்க சிறுகதை வாசிச்சேன். எக்ஸ்டார்னரி” என்றாள். கதையைப் பற்றி இன்னும் ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. அதற்குமேலே அதுபற்றி ஒருவார்த்தையும் வரவே இல்லை. அளவுக்கு அதிகப்படியாக வார்த்தைகளை உதிர்க்கிறவள் இல்லைபோல என்று நினைக்கும்போதே திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். மனசுக்குள் நினைத்தது கேட்டிருக்குமோ!

“எனக்கு இப்போ சூடா ஒரு காபி குடிக்கணும். உங்களுக்கு!” என்றபோது வந்தா வா வராட்டிப் போ என்பதுபோல இருந்தது. ரோசம் எதுவும் பார்க்காமல் ‘ஓ.. தாராளமாக’ என்று ஒட்டிக்கொண்டேன். 

கென்னத் சந்துக்குள் நுழைந்து, அங்கிருந்த தரை லோக்கலான டீக்கடையில் தனக்கொரு காபி சொன்னாள். ஆவி பறந்த கண்ணாடித் தம்ளரை ஒரு மடக்குக் குடித்துவிட்டு ‘ஓ சாரி உங்களுக்குச் சொல்லவே இல்லை பாருங்க, அண்ணா இன்னொரு காபி’ என்றாள். கூடவந்து அசிங்கப்பட்டதாக இருந்தது. இன்னைக்கு யார் முகத்தில் முழித்தோமோ!

*

நண்பர் பிரபு காளிதாஸின் அடையாறு இல்லத்தில் நடந்த முழுநாள் இலக்கிய விருந்தில் கலந்து கொண்டிருந்தேன். இரவு நெடுநேரம் பிந்தி, ஓலாவில் வீட்டுக்குத் திரும்பும்போது, வாட்ஸப்பில் அந்தச் செய்தி வந்திருந்தது.

“கலாபம் போல் ஆடும் கனவில் வாழ்கிறேன்’ அப்படின்னா என்ன அர்த்தம்..?”

யார் என்ன என்று தெரியாமல் கலாபத்திற்கான அர்த்தத்தை அனுப்பினேன். சிலவினாடிகளிலே அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. நான் தான் ஜெ., என்றாள்.

குரல் கேட்டதுமே சட்டென்று யாரெனப் புரிந்துவிட்டது. எண் எப்படிக் கிடைத்தது என்றெல்லாம் அபத்தமாகக் கேட்டுவிடக் கூடாதென முடிவெடுத்துக் கொண்டேன். பேச்சு நீண்டு வளர்ந்தது.

“சங்கப் பாடல்களில் கலாபம் என்று எங்கேயாவது சுட்டிக் காட்டியிருக்கிறார்களா?” என்றாள்.

“நிறைய இருக்கிறதே! சிறுபாணன் ஆற்றுப்படையில் நல்லியக்கோடன் பெருமைகளைச் சொல்லும் வரிகளில் ‘மணிமயிற் கலாப மஞ்சிடை பரப்பி’ என்ற வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லி விளக்கினேன்.

‘கலாபத்துக்கு வேறு எதிலாவது பொருள்படக் கூறியிருக்கிறார்களா’ என்று வினவினாள். ‘கலாபக் காதலன் என்று கண்ணனை அழைக்கிறோமில்லையா!’ என்றேன். நிறைய விவரணைகளுக்குப் பிறகு அழைப்பைத் துண்டித்து, வீடு வந்து சேர்ந்தபோது மணி பனிரெண்டு அடித்திருந்தது.

*

“நீங்கள் கலந்துகொண்டு பேசினால் நன்றாக இருக்கும்” என்று திரும்பத் திரும்பச் சொன்னாள். உங்களுக்காக வருகிறேன் என்று ஒப்புக் கொண்டிருந்தேன். தேனாம்பேட்டை தொடக்கத்தில் அமைந்திருந்த அந்தக் கத்தோலிக்கக் கல்லூரியில் நாட்டுப்புற கதைகளில் பெண்கள் என்ற தலைப்பில் பேச வேண்டும். பெண்கள் தினத்தை முன்வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கல்லூரிக்குள் நுழையும்போதே தோழமைகள் சிலரோடு வந்து வரவேற்றாள். அன்றைக்கு நீலநிற மேல் வஸ்திரத்தை கழுத்துச் சுருக்கமாகச் சுற்றி, எம்ப்ராய்டரி அலங்காரங்கள் கொண்ட கருப்பு நிற சல்வார் அணிந்திருந்தாள்.

கண்களுக்கு மையிட்டு இமைகளை ஒழுங்குபடுத்தி இருந்தாள். வெள்ளையும் நீலமும் கலந்த குண்டு வடிவ இமிட்டேஷன்களைத் தாராளமாகச் சூடியிருந்தாள். மேடையில் அமர்ந்திருக்கும்போது, நிகழ்ச்சியில் பேசும்போது, பார்வையில் படுகிறமாதிரி அவள் மட்டுமே அங்கு நடமாடுவதாகப் பட்டது.

நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது, கிட்டேவந்து, 'ரொம்ப தாங்ஸ்' என்றாள். முதல் தடவையாக அனிச்சை செயல் மீறி கை குலுக்கிக் கொண்டோம்.

*

ரொம்ப உற்சாகமாக இருந்தது அன்றைக்குக் காலைத் தூங்கி எழுந்தபோது. இரவு முழுக்க அவளோடு குறுஞ்செய்திகளில் பேசிக் கொண்டிருந்தேன். இலக்கியமில்லாமல் நிறைய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொண்டாள்.

‘உங்களுடைய அந்தப் புத்தகத்தை வாசித்து, பிடித்துப்போன பிறகே, வேண்டுமென்று தேடிவந்து உங்களிடம் அறிமுகமாகிக் கொண்டேன்’ என்று அவள் சொன்னபோது உண்மையிலேயே கிளர்ச்சியாக இருந்தது. 

நீங்க வாங்க போங்க எல்லாம் வேண்டாம். சரவணன் என்றே… குறுக்கிக்கொள்ளச் சொன்னேன். எதிர்பார்த்துக் காத்திருந்தவள்போல பட்டென ஓகே என்றுவிட்டாள். அதேநாளில், ‘இதுவரைக்கும் ஒரு கதையைப் பற்றியாவது ஒரு வார்த்தை பேசியிருப்பாயா! வாசிக்காமலே வாசித்ததுபோலப் பாவ்லா பண்ணிக் கொண்டிருக்கிறாய் ஜெ., நீ..!’ என்று சேட்டையாகச் சீண்டினேன்.

மழுப்பிக்கொண்டே போனவள் எதிர்பாராத தருணத்தில் பொசுக்கென்று உடைந்து அழுதேவிட்டாள். என்ன ஏதென்றே தெரியாமல் விக்கித்து நிற்கிற நொடியில், ‘நான் உன்னுடைய கதைகளில் அப்பாவைப் பற்றினக் குறிப்புகளில் எல்லாம் மறைந்துபோன என் அப்பாவையே நினைத்துக்கொண்டேன். அவர் இல்லாத காரணங்களால் பல பிரச்சனைகள் எழும்போதெல்லாம் மனசுக்குச் சங்கடம் தீர உன்னுடைய அந்தக் கதையைப் படித்துக்கொள்வேன், கண்ணீர் நிரம்பி ஓடும். நிறையத் தூக்கம் வரும். நிம்மதியாகக் கனவும் வரும். அப்பா கனவில் வந்து தலையை வருடிக் கொடுப்பார் என்றாள்.

உணர்வு ரீதியாக என்னை வீழ்த்தி விடும்படிக்கு இப்படி ஒரு பதில் அவளிடமிருந்து வரும் என்று நான் நினைக்கவே இல்லை.

*

நாங்கள் அந்த நூலகத்தின் பின்னால் உள்ள கல் இருக்கையில் ஒருவருக்கொருவர் இரண்டடி இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தோம். நாகலிங்க மரத்தின் உதிர்ந்த பூ ஒன்றைக் கையில் பிடித்துச் சுற்றிக்கொண்டே இருந்தாள்.

இரண்டொரு நாளுக்கு முன் மழை பெய்திருந்த பிறகான சுத்த வாசனை காற்றில் அடித்தது. பழைய செங்கல் கட்டடம் பாசி பிடித்து அமைதியோடிருந்தது. 

அந்த அர்த்தமற்ற அமைதியைக் கலைத்து, ‘ஏன் அப்படியே பார்த்துட்டு இருக்கே!’ என்றாள். அடக்கமாட்டாமல், 'உன் கண்கள் ரொம்பவே தனித்துவமானது. யாராவது ஒரு ரெண்டு வினாடி சேர்ந்தமாதிரி அதைப் பார்த்துட்டே இருந்தான் செத்தான். தயவு செய்து உன் கொலைக்கருவியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்றேன்.

கையில் சிக்கிய ஒரு பூவை எடுத்து என்மீது தூக்கி எறிந்தாள். நாகலிங்க மரத்திற்குக் 'குண்டு பொழியும் கெனான் மரம்' என்ற பேர் ரொம்பப் பொருத்தம்.

*

“வேம்பின் பைங்காய் என்தோழி தரினே, தேம்பூங் கட்டி என்றனிர் இனியே!” எனும் சங்கப் பாடலுக்கு அர்த்தம் கேட்டாள். 

பச்சை வேப்பங்காயைக் கையிலெடுத்து தலைவனுக்குத் தருகிறாள் தலைவி. நீ தந்தால் அது தேன் சிந்தும் பூங்கட்டி என்று தலைவன் அதனை உண்ணத் தொடங்குகிறான்.

இதெல்லாம் அசட்டுத்தனம் என்றாள். இருக்கட்டுமே கேட்க நன்றாக இருக்குதில்லையா என்றதும் சிரித்துக்கொண்டாள். இப்படிக் கால நேரமில்லாமல் ஓயாமல் தோள்கள் உரசப் பேசிக்கொண்டே இருந்தோம்.

*
புத்தகங்களின் வரிகளை, பிடித்த் பாடல்களை, மேற்கோளிட்டு விளக்கங் கேட்டுக்கொண்டே இருப்பாள். அலைப்பேசிக்கு ஓய்வே கொடுப்பதில்லை. ஒவ்வொரு குறுஞ்செய்தியின் அசைவிலும் மனதுக்குள் ஒரு மலைநாகம் சுருண்டு படுத்தது.

கண் கண்ணாடிகள் அணிவதைத் தவிர்த்துவிட்டு லென்சுக்கு மாறச் சொன்னாள். இருட்டும் அரக்குமான சட்டைகளைத் தவிர்த்து, வெளிர் நிறச் சட்டைகளை அவள்தான் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுத்தாள். அவளுக்குப் பிடித்த பாடலையே அழைப்பொலியாக வைத்திருந்தேன். ரெண்டுபேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடித்திருந்தது. மிகச் சரியாகச் சொன்னால், பழகின இரண்டாவது வருடத்தில் காதல் என்கிற பூ மொட்டவிழுகிற பருவத்தின் நுனியில் நின்று கொண்டிருந்தோம்.

*
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ஜெ., அதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை. நான் நிறைய அடிகளை வாங்கி முக்கித்தக்கி முன்னுக்கு வந்தவன். நல்ல வேலை இருக்கு. அது இல்லைன்னாலும் காப்பாற்ற ஊரில் தொழில் இருக்கு. கொஞ்சமா எழுதுறேன். அது மனசுக்குப் பிடிச்சு செய்யும் வேலை. இப்போ அதே அளவுக்கு உன்னையும். கஷ்டத்திலயும் உன்னை நல்லாப் பார்த்துப்பேன்னு நீதான் நம்பணும். யோசிச்சுகூடச் சொல்லலாம்”

பட்டென்று பதில் வந்து விழுந்தது அவளிடமிருந்து.

“நான் அப்படில்லாம் உன்னை நினைச்சதுகூட இல்லை. நீ என்னோட நல்ல நண்பன். என் குடும்பத்தில் ஒருத்தன். என் அம்மாவுக்கும் மேல. உன்னை நல்லா தெரியும் எனக்கு. சும்மா உப்புச் சப்பில்லாத காரணத்துக்காக உன்னை மிஸ் பண்ண வைக்காத ப்ளீஸ். முடியாதுன்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனால் அதை அவ்ளோ ஈஸியா உன்கிட்ட சொல்லிட்டுப் போகப் பிடிக்கலை. இப்படியே இருப்போமே.. ப்ளா.. ப்ளா.. ப்ளா..” அதன்பிறகு அவள் பேசின எதையும் காதிலே ஏற்றிக்கொள்ளவே யில்லை.

ஒரு விருப்பம் அதைச் சொல்லியாகிவிட்டது. அது நிராகரிக்கப் படலாம் அல்லது எந்த மூணுசாமி புண்ணியத்திலாவது ஏற்றுக் கொள்ளவும் படலாம். இரண்டில் ஏதாவது ஒன்றுதானே வழி! எனக்கு முதலாவது நேர்ந்திருக்கிறது. அதற்காகக் கலங்கிப் போய் அந்த இடத்திலே சரிந்து விழுந்துவிடவா வாழ்க்கையில் இவ்வளவு போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறோம்.

*
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதன்பிறகும் அதே அதே நட்போடு பொழுதுகள் கழிந்தது. எந்தச் சிக்கலும் இல்லை. சண்டைகள், சிரிப்புகள், கேலிகள், சாப்பாட்டுக் கடைகள், காபிகள், சிகரெட், அதிகதிகம் கடற்கரைப் பொழுதுகள் என்று நாட்கள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

எந்தப் புள்ளியிலும் மீண்டும் வேதாளமாகி முருங்கை மரத்தை நாடுகிற எண்ணம் மட்டும் வந்துவிடவே கூடாது என்ற முடிவோடிருந்தேன். நிஜத்தைச் சொன்னால் ஒரு கதையை எழுதிமுடித்துத் திருத்தம் பார்க்கிறதைவிட அது ரொம்பச் சங்கடமான வேலையாகவே இருந்தது.

*

தூங்கி எழுந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி எட்டு இருபது காட்டியது. குளித்துப் புறப்பட்டு, பைக்கில் ஆனந் தியேட்டர் நிறுத்தத்தை வந்தடைந்தேன். பஸ்ஸில் இருந்து இறங்கிய வேகத்திலே வந்து முதுகில் ஓங்கிக் குத்தினாள்.

‘எத்தனை போன் டா அடிக்கிறது பிசாசு!’ என்றாள். போன் அடிச்சியா எப்போ என்று பாக்கெட்டைத் தடவினேன். ஆறு மிஸ்டு கால்கள். ‘பைக் ஓட்டிக்கிட்டு இருந்தேன் எரும. ஆமா நீ இன்னும் வேலைக்குக் கிளம்பல?’ இடைப்பட்ட நாளில் கல்லூரி முடித்து, தனக்கு விருப்பப்பட்ட பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.

‘இன்னைக்குக் கோல்டன் பீச்ல ஒரு அசைன்மெண்ட். பதினோரு மணிக்கு நேரா ஸ்பாட்டுக்கு வந்துட்றதா சொல்லிட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே இருக்கணும். சரி டிபன் சாப்ட்டியா! வா சாப்பிடப் போகலாம்.பசி உயிர் போகுது”

‘சரி ஏறு! ஆமா, அதென்ன அப்படி ஒரு மெஸேஜ் அனுப்பி இருக்க. என்னை ஏன் வரக்கூடாதுன்ற”

“எங்க!”

“ம்ம்ம் உன் கல்யாணத்துக்குத் தான்”

“அத நாம அப்புறம் பேசிப்போம்”

“அதெல்லாம் முடியாது, எனக்கு இப்போ சொல்லு. நான் ஏன் வரக்கூடாது!”

“வரக்கூடாதுன்னா வரக்கூடாதுதான். ஏன் எதுக்குன்னுல்லம் கேக்காத!”

“சனியனே கூட வேலை பாக்குறவனுக் கெல்லாம் இன்விடேஷன் கொடுத்துட்டு இருக்க. வாட்ஸப் க்ரூப்ல இருக்குறவன்லாம் எனக்கு மெஸேஜ் சொல்றான். டிசம்பர்ல டிக்கெட் போட்டுட்டோம்னு.. நீ என்னடான்னா யார்கிட்டயும் சொல்லாதன்னு என்னைச் சொல்லிட்டு, ஊருக்கே சொல்லிட்டு இருக்க. கேட்டா கடைசில என்னையே வரக்கூடாதுன்னு சொல்ற..”

“ஆமா அப்படித்தான் சொல்லுவேன்டா. நேரா பார்த்து வண்டியை ஓட்டு”

“இங்கபாரு இதெல்லாம் நல்லால்ல பார்த்துக்க. நீ கூப்பிடலன்னா வரவே கூடாதுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீயே இப்படி வரக் கூடாதுன்னு சொல்லி அசிங்கப்படுத்துவேன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல”

“யார் இப்ப உன்னை அசிங்கப்படுத்தினா?”

“நீதான்..”

“………”

“ என்னதான் பிரச்சனை உனக்கு”

“எதுவுமில்ல பேசாம போ!”

*

மழை இப்போது ஓய்ந்திருந்தது. ஜெ., கல்யாணத்திற்குப் போகவா வேண்டாமா என்ற குழப்பத்தைத் தூர வைத்துவிட்டு, கணினியில் பழைய புகைப்படங்கள் இருந்த போல்டரைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அழைப்பொலியில் ‘அவளும் நானும் அலையும் கடலும்’ பாடல் ஒலித்தது. அவளுக்குப் பிடித்த பாடல் நான் இன்னும் மாற்றியிருக்கவே இல்லை.

காலம் எதையும் மாற்றிவிடப் போவதில்லை. முதல்தடவை அவளைச் சந்தித்தபோது இருந்த அநேக பிரியங்களுடன் நான் அப்படியேத்தான் இருக்கிறேன். அன்றைக்கு அவள் கையில் ஏதோ புத்தகம் வைத்திருந்தாளே.. என்ன புத்தகம் அது? ஆங்.. என்னைத் தீண்டிய கடல். இவள்கூட அப்படித்தான்.

‘ஹலோ .. சொல்லுங்க பிரதர், இதோ இப்போதான்.. கிளம்பிட்டே இருக்கேன். நேரே பஸ் ஸ்டாண்டுக்கே வந்துட்றேன்.’

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்