ரஜினி முருகன்




விடுமுறை நாட்களில்  ஒருகூட்டம் தெக்குத்தெரு குளத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும். கூட்டத்தில் இளசுகளுக்கிடையே கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் முதிர்ச்சியான தடித்த தேகத்தோடு, கட்டம்போட்ட சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு கிரவுண்டுக்குள் ஃபீல்டிங் நிற்பாரென்றால் அவர்தான் எங்கள் ஊரின் மளிகைக்கடை முருகன் அண்ணன். ஆனால், அவருக்கு ஏரியா முழுக்க அவருக்கு வேறொரு பெயர் இருந்தது. அந்தப் பேர்  ‘ரஜினி முருகன்’.

கீழவளவில் ராணி மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். ராணியக்கா இல்லாதபோது, ஏரியா விடலைகள் ஒன்றுகூடும் இடம் அவர் கடைதான். முன்னாள் “வீரா ரஜினி ரசிகர்மன்ற கிளைச் செயலாளர். வீரா படம் ரிலீஸாகும் போது பிறந்திருக்கவே செய்யாத பொடியன்களோடு இன்னும் கிரிக்கட் ஆடிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அவரது வீட்டம்மா ராணி அக்காளின் பெரிய குற்றச்சாட்டு. முருகன் அண்ணனிடம் குற்றம்பார்க்க அவருக்கு இன்னும் சில காரணங்களும் உண்டு. அவற்றில் முதன்மையானது அவரது முன்னாள் காதல் கதை.

முருகன் அண்ணனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டு பேரும் இக்னேசியஸில் ஏழாவதும் ஐந்தாவதும், படிக்கிறாள்கள். பிள்ளைகளுக்குப் பேர் என்ன தெரியுமா! மூத்தவள் பேர் ஐஸ்வர்யா, ரெண்டாவது பிள்ளைக்குப் பேர் சௌந்தர்யா. ரெண்டும் பொண்ணு என்பதில் அவருக்கு ஏக சந்தோசம். கேட்டால் “தலைவருக்கும் ரெண்டுமே பொண்ணுங்கதான்” என்பார்.

ராணியக்காவை கடையில் உட்கார வைத்து, “குளத்தாங்கரை வரை போய்ட்டு வந்துடுறேன்” என்று புளுகிவிட்டு எங்களோடு வந்து பீல்டிங் நிற்பார். உடும்பு மாதிரி க்ளோஸில் கவர் செய்ய ஒரு ஆளை நிறுத்துவதற்காக அவரை எடுத்துக்கொள்ள, இரண்டு டீமும் அடித்துக் கொள்ளும். கிரிக்கெட்டில் அவர் ஒன்றும் புலியெல்லாம் இல்லை. வலுவாய் ஒரு யார்க்கர் போட்டால் ஸ்டெம்ப் நழுவிடும் தான். ஆனாலும் அவர் தன் டீமில் இருந்தால் ஆட்டம் முடிந்துபோகையில், ஜெயித்த குதுகலத்துக்காவது ரஸ்னா பாக்கெட்டுகள் சிலவற்றை இந்தப் பக்கம் நகட்டுவார் என்ற பச்சையான எதிர்பார்ப்பு இருந்தது எங்களுக்குள்.

விளையாடும்போது,"காலுக்குள்ளே எரிதாம்ல.. கண்டாரோலி" என்றபடி பௌலரைத் திட்டிக்கொண்டே கிரீஸைவிட்டு வெளியேறுகிற அந்தப் பெரிய மனிதரைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கும். எப்போதாவது கண்ணை மூடிவிட்டு சுத்தினால் அத்தோடு பந்து தொலைந்து போகும் தூரத்துக்குப் பறக்கும். ஆட்டமும் முடிவுக்கு வந்துவிடும்.

"ஏண்ணே உங்களுக்கு ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு வயசு இருக்குமா?"

"ஏன் வயசக்கேட்டு என்ன எனக்கு வளகாப்பா பண்ணப்போற மூடிட்டுப் போல"என்பார். எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து சொல்வதென்றால் டவுண் ரத்னா தியேட்டரில் பாட்ஷா ரிலீஸ் ஆகி இருந்தபோது, ஏக தள்ளுமுள்ளு. சட்டை கிட்டையெல்லாம் பட்டன் அறுந்து, கிழிந்து தொட்டி ஆட்டோவில் அழைத்து வந்த தன் ஏரியா ஜனங்களைத் கடினமான அண்டர்கவர் ஆப்ரேசன் மூலம் அரங்குக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமை அவருக்கு ஊருக்குள் இருந்தது.

ரஜினி பட ரிலீஸ் என்றால் ஆளைக் கையிலே பிடிக்கமுடியாது. ரஜினி பிறந்த நாளைக்கு டெய்லர் மிஷின், மூன்றுசக்கர சைக்கிள் என்று டயோசிசன் ஆட்களைப் பிடித்து அல்லோல கல்லோலப் படுத்தி விடுவார். நற்பணிமன்ற வேலைகள் தொடங்கி, நாட்டு நலப்பணி திட்டம் வரைக்கும் வீரா நற்பணி மன்றத்தின் முக்கிய காரியதரிசி ரஜினி முருகன் அண்ணன் தான்.

சொல்லி வைத்ததுபோல அவர் வீட்டம்மாவும் ரஜினி ரசிகை. என்பதால் கடை அடைத்ததும் சோடி போட்டுக்கொண்டு படம் ரிலீசான முதல்நாள் இரவுக் காட்சிக்கு அவர்களுடிய பழைய எம்.எய்ட்டி மொபட்டில் ஊர் அதிரப் புகை கக்கிக்கொண்டு போவார்கள். ராணி அக்காவைக் கல்யாணம் கட்டிக்கொள்ளும் முன் கீழவளவிலே வாடகைக்குக் குடியிருந்த ராஜேஸ்வரி என்கிற ராஜியை தான் அண்ணன் விரும்பி இருக்கிறார்.

வேதக்காரர்கள் வீட்டுப் பிள்ளைபோல நல்ல வெளுப்பாக வளத்தியும் பூசின முகமுமாக இருப்பாள் ராஜி அக்காள். மேரி ஜார்ஜெண்டில் பத்தாவது படித்துக்கொண்டிருந்தவளை ஒருநாள் வழியை மறித்து, காதல் கடிதத்தை நீட்டியிருக்கிறார் முருகன் அண்ணன். அதுக்கு அடுத்த நாலஞ்சு நாளைக்கு அந்த அக்காளுக்கு காய்ச்சல் வந்து தொலைத்துவிடுகிறது. காய்ச்சல் அப்படியே காமாலை நோயில் கொண்டுபோய்விட, அண்ணனே தமிழாஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கிட்டு வந்து அவர்கள் ஆச்சியிடம் கொடுத்துக் கொடுத்து தன் காதலை ஊர்ஜிதம் செய்திருக்கிறார்.

உடல்நலம் தேறி வந்த பிள்ளையை மனதில் நினைத்துக்கொண்டு கையெல்லாம்  ‘ஆர்’  போட்டு அம்புவிட்டு பச்சைக் குத்திக்கொண்ட அண்ணன் எங்களை எல்லாம் காதல் கவிதைகள் எழுதித்தரச் சொல்லி நச்சரிப்பார். கேசட் நாடாவை குதிரைவால் மாதிரி ஹேண்டில்பாரில் கொத்தாகத் தொங்கவிட்டுக்கொண்டு ஜல் ஜல்லென்று போகும் அவர் சைக்கிளுக்குப் பின்னால் ராஜி சைக்கிள் மார்ட் என்கிற எழுத்து பளீரென டாலடிக்கும். முழுநேரமும் அண்ணன் காதல் நினைப்பிலே திரிந்துக் கொண்டிருந்தபோது, கிளி வேறொரு வேதக்காரப் பையனோடு ஊரைவிட்டே ஓடிப்போய்விட்டது.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாக ரஜினி முருகன் அண்ணனை எல்லோரும் பாவமாய் பார்த்து கிலுக்குச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போனார்கள். பிறகு ரெண்டே மாதத்தில் சீவலப்பேரியில் பெண் பார்த்து, ராத்திரியும் பகலும் விடிய விடிய ட்யூப்லைட் செட் போட்டு, கேசட் முழுக்க ரஜினி பாட்டாய் ஓடவிட்டு நடந்துமுடிந்தது ராணி- முருகன் தம்பதிகளின் திருமணம். வந்ததும் வராததுமாக அண்ணனின் காதல் கதையையும் கையிலிருக்கும்  ‘ஆர்’ பச்சையையும் போட்டுக்கொடுத்து புளகாங்கிதப் பட்டுக்கொண்டது மொத்த ஊரும். அண்ணன் எவ்வளவோ கெஞ்சிப் போராடி, மறுத்துப் பார்த்தார். ம்ஹூம் நம்பணுமே… எல்லா பெண்களுக்கும் தன் புருசன் கல்யாணத்துக்கு முந்தி மன்மதனாக இருந்தான் என்கிற நினைப்பு போலுக்கு.

அதிலிருந்து மனிதர் பொண்டாட்டி தாசன் மாதிரி மாறிப்போனார்.  அப்பாவுடைய மளிகைக் கடையை ஆச்சி ஐய்யருமாக சேர்ந்து தலைக்குமேல் தாங்கினார்கள். வரிசையாக ஒன்னொன்னாக பிள்ளைகள் பிறந்தன. அண்ணன் பொறுப்பான தகப்பன் வேடம் போட்டாலும் அவருக்குள் மறைக்கமுடியாத ரெண்டு விஷயங்கள் இருந்தன ஒண்ணு ரஜினி ரசிகன் ரெண்டாவது கிரிக்கெட்.

அது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, படையப்பா ரிலீஸ் ஆன நேரம். கோயில் சுவரில் வால்போஸ்டர் ஒட்டினதற்காக கமல் ரசிகர்கள் வேணுமென்றே பிரச்சனையைக் கிளப்பிவிட, அதைத் தன் இருப்பை நிறுவுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் ரஜினி முருகன் அண்ணன். பிரச்சனை தீர்ந்த அடுத்த திருவிழாவிற்கு வீரா நற்பணிமன்றம் விழா ஏற்பாட்டுச் செலவுப் பொறுப்பை ஏற்றது. கொடைவிழா முடியும் வரைக்கும் "சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு ஏறு என்று ஏறிக்கொண்டிருந்தார்கள்"

பாபா படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு. ஆளாளுக்கு சிவப்புத்துண்டை தலையில் கட்டிக்கொண்டு நடுவிரலையும், மோதிரவிரலையும் மடித்து “கதம் கதம்” என்றபடி திரிந்தார்கள். படம் பப்படமாக படுத்துவிட்டதால் நொந்துபோன மனிதர் சிலபலகாலம் அதே தாடியோடு திரிந்தார். ஒரே நல்லகாரியம் ரஜினி கொடுத்த ஸ்டேட்மெண்டினால் புகைப்பதை விட்டிருந்தார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களில் ரசிகர்மன்றப் பொறுப்பு மேலக்குளம் சந்தான குமார் கைகளுக்கு மாறியது. ரசிகர் ஷோ முதல் ராம் தியேட்டர், பாம்பே தியேட்டர் வரை பேனர் கட்டுவது வரை எல்லாவற்றிலும் நவீன யுக்திகள் புகுத்தப்பட்டது. முருகன்குறிச்சி பெட்ரோல் பல்க் பக்கம் வைத்திருந்த தட்டி விளம்பரத்தில் முன்னாள் செயலாளர் ரஜினிமுருகன் பெயர் எழுதாத காரணத்தால் அண்ணன் வலுக்கட்டாயமான ரிடெய்ர்ட்மெண்டுக்கு தள்ளப்பட்டார்.

குசேலன் ஊற்றிக்கொண்டபோது ரஜினி ரசிகர்கள் கிளைச்சங்கங்கள் பெருகி விட்டிருந்தது. ரஜினி-விஜய் ரசிகர் மன்றம், ரஜினி-அஜீத் ரசிகர் மன்றங்கள் என்று புது போர்டுகள் ஆட்டோ ஸ்டாண்டுகளில் முளைத்துக் கொண்டிருந்தது. மீண்டும் மளிகைக்கடை முருகனாக்கப்பட்ட ரஜினிமுருகன் தன்னைப் புறக்கணித்திருக்காவிட்டால் குசேலன் படம் பிசிறு கிளப்பியிருக்கும் என்று ஆத்மார்த்தமாக நம்பிக் கொண்டிருந்தார். தலைவருக்கு இப்போதைக்குத் தேவை ஒரு சில்வர் ஜூப்ளி என்பதில் மட்டும் எல்லாருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது.

மாஸ் ஓப்பனிங்காக சிவாஜி அறிவிப்பு வந்ததும் கூடைகூடையாக அண்ணாச்சி முகத்தில் சன்லைட் வெளிச்சம். படம் பட்டையைக் கிளப்ப வீரா நற்பணிமன்றம் புதுப்பிக்கப்பட்டு சிவாஜி ரசிகர் நற்பணிமன்றமானது. ரோபோ, எந்திரன் அறிவிப்புகளுக்கிடையில் திடீர் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு தலைவரைக் கொண்டு சென்றபோது ராணி மளிகைக்கடை மட்டுமல்ல தெருமுனை டீக்கடையில்கூட ஒரே பிரார்த்தனை கீதங்களாகவே ஒலித்துக் கொண்டிருந்தது.

வாடிய பயிரைக் கண்ட வள்ளலார் போல ஒவ்வொரு ரஜினி ரசிகரும் முருகன் அண்ணாச்சியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். “எம்.ஜி.ஆர் மாதிரி தலைவர் நிச்சயம் திரும்ப வருவார் பாருடே” என்று எல்லாருக்கும் தைரியம் சொல்லிக்கொண்டு இருந்தார் அண்ணன். தந்தி, மாலைமுரசு எதையும் விடாமல் தலைவர் பத்தின செய்திகளைத் தேடித்தேடிச் சேகரிப்பார். தலைவருக்கு பி.ஏ. யாரும் இருந்தால் அவருக்குக்கூட தெரியாத தகவல்களை முருகன் அண்ணாச்சி தெரிந்து வைத்திருந்தார் அல்லது அப்படித்தான் ஊர் அவரை நம்பிக்கொண்டிருந்தது.

உடல்நலம் சீராகி, எந்திரன் சூட்டிங் தொடங்கியதுதான் தாமதம் ரசிகர் மன்றத்து ஆட்கள் எல்லோருமே ராக்கெட் வேகத்தில் பரபரக்க ஆரம்பித்து விட்டார்கள். ஐஸ்வர்யா ராய் சோடி சேர்ந்தது வேறு பெரிய சாதனையாகப் பேசப்பட்டது.

கோச்சடையான் ரிலீசான நேரத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ரஜினி முருகன் அண்ணாச்சி ஆள் ரொம்பவே மாறிப்போயிருந்தார்.  “என்னண்ணே தலைவர் படம் இப்படி  பொம்மபடம் மாதிரி இருக்கு?” என்றதற்கு, "உடம்பு முழுக்க ஒயரும் கியருமா கண்ட எடத்தில சொறுவி தலைவர ஏமாத்திட்டானுங்க.. எல்லாம் இந்த கே.எஸ் ரவிக்குமாரு பய பாத்த வேல. அவம் கமல் ஆளுல்லா" என்றார். கே.எஸ்.ஆர் தசாவதாரத்தில் கமலை உலகநாயகனேன்னு பாடிய கடுப்பு அவருக்கு. பழைய பங்காளிச் சண்டைபோல கமல் ரசிகர்களுக்கெதிரான பகையுணர்ச்சி அவருக்குள் லேசாக ஒட்டியிருந்தது.

"அடுத்தபடம் லிங்காவுக்கு அவர்தாம்ண்ணே டைரக்டர். இப்போ என்ன சொல்லுதீய" ரஜினி முருகன் அண்ணாச்சி முகத்தில் ஈயாடவில்லை. தலைவர் ஏன் இப்பிடி தப்புத்தப்பா முடிவெடுக்கார்ன்னு தெரிலே. அவரைப் பாக்கவும் முடியுறதில்ல. நேத்து மழைல மொளைச்சதெல்லாம் தலைவர் படத்தை கிண்டல் பண்ணுதுவோ” என்று மூச்சுவிடாமல் புலம்பினார். அதற்கெல்லாம் மத்தியில் புத்தாண்டு தினத்தில் மெட்ராசுக்கே வந்து ராகவேந்திரா அவென்யூ முன்னால் நின்று தலைவரைப் பார்த்து கைக்காட்டின நிகழ்வை அதி அற்புதமாக விவரித்தார்.

ஊர் திரும்புகிற பேரூந்தில் திருச்சி வரும்போது ராஜி அக்காவைப் பார்த்ததையும், பக்கத்துப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்துகொண்டே மாட்டுத்தாவணி வரைக்கும் வந்தபோதும் எதுவுமே பேசலை என்பதையும் ரொம்ப ரகசியமாக பின்னாளில் சொன்னார்.  ஐஸ்வரியா சௌந்தர்யா இரண்டுபேரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ராணியக்காவுக்கு காதுப்பக்கம் முடியெல்லாம் நரைத்துவிட்டது. இப்போ போய் ‘ராணி அக்கா நம்ம முருகன்ணண் அந்த வேதக்காரனோட ஓடிப்போச்சுல்லா அந்த அக்காவ..’ என்று சத்தம்போட்டு போட்டுக்கொடுத்தால் நல்லாவா இருக்கும் என்று அமைதியாக சிரித்துக்கொண்டேன்.

அண்ணன் மளிகைக்கடை டெக்கில் கருப்பு வெள்ளை கிராஸ் சட்டை போட்டுக்கொண்டு ரஜினி பாடிக்கொண்டிருந்தார்.

நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில், ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால், உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்லவா…
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்…

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்