குதிரைக்குட்டி



ஆக்னஸை குதிரைக்குட்டி என்றுதான் கிசுகிசுப்பாகச் சொல்லிக் கொள்வோம் பயல்களுக்குள். அப்படி ஒரு உயரம் அவள். தூய யோவான் சர்ச்சுக்கு கீழ்புரத்து வீடு ஆக்னஸுடையது. பழைய ரேனியஸ் பள்ளிக்கூடத்துக்கு நேரே எதிர்ப்புறச் சந்து வழியாகச் சாடினால் அவள் வீட்டு கொய்யாமரத்தில் ஏறிவிடலாம். அந்த ரேனியஸ் பள்ளிக்கூடத்தில் தான் ஆக்னஸ் டீச்சராக இருந்தாள்.

  டீச்சரென்றால் பெரிய அது இதெல்லாம் இல்லை. நாலைந்து பொடி வயது வாண்டுகளுக்கு கதை சொல்லுவது, போர்டில் ஏபிசிடி எழுதிப்போடுவது, மதியம் லஞ்ச் பாக்ஸைத் திறந்துகொடுத்து, சிந்தாமல் சிதறாமல் சாப்பிடவைத்து, இரண்டு மணிக்குள்ளாகத் தூங்க வைத்து, சாயங்காலமானதும் அழுமூஞ்சிப் பிள்ளைகளை அததன் அம்மாக்களோடு, ஆட்டோக்கார அண்ணாக்களோடு வீட்டுக்கு அனுப்பி வைக்கிற வேலைக்குப் பேர்தான் டீச்சர் உத்யோகம்.

  ஆக்னஸ் அவளுடைய அம்மாவோடு அந்த வீட்டில் வசித்து வந்தாள். அவளுடைய தாத்தா ராணுவத்தில் இருந்து உயிர்விட்ட பிறகு, அரசு குடிமையாக வழங்கிய வீட்டிற்கு அவர்கள் சமீபத்தில்தான் குடி வந்திருந்தார்கள். அந்த வீட்டிற்கு நேர் எதிரில் அல்பியண்ணன் டீக்கடை இருந்தது. அங்கே உட்கார்ந்துக் கொண்டுதான் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார்கள் மேத்யூவும் அவன் சகாக்களும்.

 ஞாயிற்றுக்கிழமையானால் போதும் அல்பியண்ணன் கடை அல்லோல கல்லோலப்படும். அந்தப் பகுதியில் பெதஸ்தா மகப்பேறு மருத்துவமனை கொஞ்சம் பேர் வாங்கினது. பிரசவத்துக்காகாக படையெடுத்து வரும் பக்கத்து ஊர்ப் பிள்ளைத்தாச்சிகள், அவரது உறவினர்களுக்கும் அத்தனை  பேருக்கும் அல்பி அண்ணன் வேண்டப்பட்டவராய் இருப்பார். வயிற்றில் பிள்ளை தங்கியதுமே ஆஸ்பத்திரிக்கு வந்து வந்து அல்பியண்ணன் கிட்டே நெருங்கிப் பேச்சுக் கொடுத்து அவர்களும் பழகியிருப்பார்கள்.

  ‘எய்யா… மவள ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம். கொஞ்சம் வென்னீ இருந்தா கொடுப்பீங்களா‘ என்று யாரோ ஒரு கிழவி கேட்ட தினத்தில், அல்பி அண்ணன் செய்த முதல்காரியம் மார்கெட் கணேஷ் பாத்திரக்கடையில் ஒரு பெரிய ஈயப்பானையை வாங்கிவந்து, விறகடுப்பு பற்றவைத்து, வென்னீரைக் கொதிக்கவிட்டதுதான். இன்னைய தேதிவரைக்கும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் அந்தக் கல் அடுப்பும், கரிபிடித்த ஈயப்பானையும் பிரசவத்துக்கு இலவசம் என்று எழுதப்படாத  அட்சய பாத்திரங்கள்.

  மேத்யூ தனது சகாக்களோடு ஜெபத்தோட்ட கிரவுண்டில் ஆடி ஓயும் கிரிக்கெட்டுக்குப் பிறகு, பேட், ஸ்டெம்புகளை எல்லாம் உரிமையோடு அல்பி அண்ணன் கடையில்தான் பதுக்குவான். சமயத்தில் கல்லாப் பெட்டியில் கைவிட்டு, பெட் கட்டிய தொகையில் விழுந்த துண்டை சமாளிக்கிற அளவுக்கு அத்துமீறுகிற பழக்கம் வைத்திருந்தான் அவரோடு. சுருக்கமாகச் சொன்னால் அண்ணன் கடை ஓர் ஆலமரம். மேத்யூ மற்றுமவனது சகாக்கள் அதிலே  கூடடையும் பறவைகள்.

  கிரிக்கெட் ஆடாத நாட்களில், டீ குடிக்கிறானோ இல்லையோ திரும்பத் திரும்ப பவுடர் தூவி, கேரம் ஆடிக் கொண்டிருப்பான் மேத்யூ. சேர்க்கைக்கு அகஸ்டின், கெவின், பிரின்ஸ் பட்டாளங்கள் வேறு. ‘அகஸ்டின் அங்க இருந்தா வரச்சொல்லுங்களேன்‘ என்று அல்பி அண்ணன் கடைக்கே போன் அடித்து வீட்டிலிருந்து அறைகூவல் விடுவார்கள். அப்படி கூடிக்கூடி கழித்துக் கிடந்த பேச்சுக்களில் தான் ஆக்னஸ் ஒரு மழைபோல நுழைந்திருந்தாள்.

‘டேய் அந்தப்பொண்ணு ஸ்கூல் டீச்சராம்டா. அதுவும் அந்த ரேனியஸ் கான்வென்ட்ல’ என்றான் பிரின்ஸ்.

‘பார்த்தா சின்னப்பொண்ணா இருக்கு’ இது கெவின்.

‘பிஷப் சார்ஜெண்ட்ல டீச்சர் ட்ரெய்னிங் முடிச்சுட்டு போஸ்ட்டிங் கிடைக்கிறவரைக்கும் இந்த ஸ்கூல்ல வேலை பார்க்குதாம்’

‘உனக்கு யார்ரா சொன்னது?’ மேத்யூ.

‘ஜெரின் தான். ரெண்டு பேரும் சர்ச்ல பேசிப்பழக்கம் போல. அவங்க வீட்டுக்குத்தான் ட்யூசன் போகப் போறளாம். ஏதும் வம்பு கிம்பு பண்ணிடாதீங்கடா. முதல் நியூஸ் எங்க வீட்டுக்குத்தான்  போகும்’

பிரின்ஸின் தங்கை ஜெரின் சரியான வாயாடி.. ‘அம்மா அண்ணா அந்த ரோக்ஸ் கூட சேர்ந்து சிகரெட் பிடிக்கிறான்’ என்று கொஞ்சம்கூட தயங்காமல் பிரின்ஸைப் போட்டுக் கொடுத்ததை நேரிலே பார்த்திருக்கிறான் மேத்யூ. அவளிடம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ஆனாலும் மேத்யூவுக்கு ஆக்னஸைப் பற்றின ஆர்வம் அவ்வளவு லேசில் முறிந்துவிடவுமில்லை. மற்றவர்களுக்கும்தான்.

‘நம்ம ஏரியாவுக்கு ஒரு பொண்ணு செம அழகா வந்திருக்குன்னா அது நமக்குதானடா பெருமை. இந்த சண்டே பிரேயர்ல மொத்த டீட்டைலையும் கறக்குறோம் என்ன சொல்ற’ என்று கெவின் தனியே மேத்யூவின் வயிற்றில் ஐஸ்கட்டியை கரைத்தான். அகஸ்டினும் அதையே ஆமோதித்தான். பிரின்ஸுக்கு மட்டும் அடிவயிற்றில் கிலியடித்தது.

  பவுடர் அப்பிய, பழைய முகங்களையே பார்த்துச் சலித்தவர்களுக்கு ஆக்னஸின் வரவு புத்துணர்ச்சியை விதைத்திருந்தது. இதற்குமுன் பெதஸ்தாவில் வேலைக்குச் சேர்ந்திருந்த மரியா நர்ஸைதான் மனம் மயக்கும் தேவதையாகக் கண்டார்கள். ஆக்னஸைப் பார்த்த நொடியிலிருந்து மரியாவுக்கு லாங் லீவ் கொடுத்திருந்தார்கள்.  மரியா மட்டுமல்ல, முன்னாள் மேத்ஸ் வாத்தியார் கிறிஸ்டோபரின் மகள், இலங்கையிலிருந்து கிறேஸ் காட்டேஜுக்கு குடி வந்திருக்கும் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தின் பேர் தெரியாத யுவதி, கூடே படித்த மெர்லின், அரோக்கியபுரம் ரேவதி என எல்லோரையுமே இவர்களைப் பொறுத்தவரை தேவதைகள் தான்.

பார்ப்பது, ரசிப்பதோடு முடிந்துவிடுகிற இந்த தேவதை அத்யாயங்கள். நிற்காமல்போகும் பேருந்துக்கு கை காட்டுவது போல.. உண்மையைச் சொன்னால் இதைத்தான் அவர்கள் காதலிப்பது என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆக்னஸ் மேத்யூவுக்குள் நுழைந்த விதம் அப்படியிருக்கவில்லை.

இவர்களுடைய இந்தக் வெட்டிப்  பேச்சுகளை எல்லாம் அல்பியண்ணன் கவனித்தபடியிருந்தாலும் தீவிரமாகத் தன் கடன் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் நடித்துக் கொண்டிருப்பார்.

‘எல்லாத்தையும் ஒட்டுக்கேட்டுட்டு எப்படி ஒண்ணுமே தெரியாத மாதிரி உட்கார்த்திருக்கார் பார்’

வேடிக்கையாக கெவின் அவரைச் சீண்டுவான். பொடிப்பயல் சீண்டின கோபத்தில் அவர் கையில் அகப்பட்ட சணல் பந்தை குறிபார்த்து அவன்மீது எறிவார். கெவின் கொஞ்சமும் அசராமல் அதைக் கேட்ச் பிடித்து கடுப்படிப்பான். வாழ்க்கை இப்படியே சுவாரஸ்யங்களோடு நகர்ந்துகொண்டிருந்தது.

*
  ஐ.எம்.எஸ் மிஷனரி கேம்பஸ் வாசலில் கெவினும் மேத்யூவும் நின்று கொண்டிருந்தார்கள். திருப்பலிக்கான வேலைகளைப் பிரித்துக் கொடுப்பதற்காக ஷீபா ஆன்ட்டி அவர்கள் இருவரையும் வரச்சொல்லி இருந்தார். அவரைப் பார்த்துவிட்டு அலங்காரத் தோரணங்கள் வாங்கப் புறப்படும் போதுதான் கேம்பஸுக்குள்ளிருந்து ஆக்னஸ் நடந்து வருவதைக் கவனித்தார்கள்.

டீக்கடைப் பேச்சுகளுக்குப் பிறகு, ஆக்னஸ் தான் மேத்யூ கூட்டாளிகளுக்கு முக்கியத் தலைப்புச் செய்தி. காலையில் அவள் வேலைக்குப் புறப்படுவது துவங்கி, இரவு அவள் வீட்டின் பின்வாசல் குண்டு பல்பு அணையும் வரைக்கும் அவளைப் பற்றிப் பேசுவதற்கு எக்கச்சக்க சங்கதிகள் அவர்களுக்குள் இருந்தன.

திடீரென அவளை கேம்பஸில் கண்டதும் மற்றவேலைகள் கண்முன்னே மறைந்துபோக ஸ்கூட்டரை உதைத்து அவளையே பின்தொடர ஆரம்பித்தார்கள் மேத்யுவும் கெவினும். நினைப்பதைவிட வேகமாக நடப்பவள் ஆக்னஸ். கெவினினுடைய ஸன்னி ஸ்கூட்டர் பாரம் தாங்காமல் கதறியது. மெல்ல உருட்டிக்கொண்டு டேனியல்தெரு முக்கு வரைக்கும் அவள் பின்னாலே தொடர்ந்து வந்தார்கள்.

அன்றைய இரவின் தேநீர் விருந்தின்போது அவர்கள் செயல் நண்பர்கள் கூட்டத்தில் பெரிய சாதனையாகப் பேசப்பட்டது. மற்றவர்களின் புகைச்சலில் கெவினுக்கும் மேத்யூவுக்கும் ஒனிடா டி.வி விளம்பரத்தில் வருவதுபோல இரண்டிரண்டு கொம்பு முளைவிட்டிருந்தது.

*
  ஆக்னஸ் பற்றி தெரிந்துகொண்ட செய்திகளில் முதலில் வயிற்றில் புளியைக் கரைத்த செய்தி அவள் சேவியர் அண்ணனுக்கு வேண்டப்பட்டவள் என்பதுதான்.

சேவியர் அண்ணன் பூமார்கெட்டில் லோடுவண்டி ஓட்டுபவர். கனத்த உடம்புக்காரர். பார்க்கும்போதெல்லாம் அரசன் பீடி ஒன்றை கை மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டிருப்பார்.

  சின்னவயதில் கெட்டகுமாரன் கதையைக் கேட்டபோது, இளைய குமாரன் சேவியர் அண்ணனை மாதிரி இருப்பான் என்று நினைத்துக்கொள்வான் மேத்யூ. பாளையங்கோட்டை பூமார்கெட்டே தண்ணீர் தெளித்து சாத்திய பிறகு, அந்தக் கும்மிருட்டிலே தன்னந்தனியாக நடந்து வருவார். தெருமுனைக்கு வந்ததும் ஒரு செருமலைப் போடுவார். அது சேவியர் அண்ணன் சத்தமென்று தெருநாய்க்குக் கூட பழகியிருந்தது.

  சேவியர் அண்ணன் ஆக்னஸுக்கு எப்படிச் சொந்தம் என்பது குழப்பமாகவே இருந்தது. அரசல்புரசலாக விசாரித்ததில் கிடைத்த தகவலை நம்பவே முடியவில்லை கூட்டாளிகளால். அல்பியண்ணனும் அதை  ஆமோதித்த பிறகு நம்பாமல் இருக்கமுடியவில்லை மேத்யூவால்.

 ஆக்னஸின் தந்தை அவள் சின்ன வயதிலே இறந்துபோனதாக ஜெரின் சொல்லியிருந்தாள். தாத்தாவுடைய பராமரிப்பில் விக்கிரமசிங்கபுரத்தில் படித்து வளர்ந்து, பாளையங்கோட்டையில் கல்லூரி முடித்திருந்தாள் ஆக்னஸ்.

ஆக்னஸின் அம்மாவுடைய முன்னாள் காதலர்தான் சேவியர் அண்ணன். இளவயதிலே விதவையாகிப் போனவருக்கு பாதுகாப்பாகவும் அடைக்கலமாகவும் தற்போது உடனிருப்பது சேவியர் அண்ணன் தான்.

ஒருவகைக்கு சேவியர் அண்ணனை நினைக்கும்போது, மேத்யூவுக்கு அவர் ஒரு ஹீரோவாகவே தெரிந்தார். இன்னொரு வகைக்கு ஆக்னஸை மனத்தில் நினைத்த நொடிகளெல்லாம் அவரே மேஜரின் துப்பாக்கியோடு மிரட்டிக் கொண்டிருந்தார்.

*
  குடிவந்திருந்த கொஞ்ச நாட்களிலெயே சேவியர் அண்ணனின் வருகையும், புழக்கமும் ஏரியாவில் பலருக்கு புகைச்சலைக் கொடுத்திருந்தது. அவருடைய ராத்தங்கல் மிலிட்டரிகாரர் வீட்டில்தானென்றும், சபைக்கு கெட்டபேர் விளைவிக்கும் அவரை தொடர்ந்து ஊருக்குள் வரவோ, தங்கவோ அனுமதிக்கக் கூடாது என்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதுகுறித்து பேராயரிடம் மனு கொடுத்து ஆக்னஸ் குடும்பத்தை சபையைவிட்டு நீக்கவிருப்பதாகவும்கூட பேச்சு அடிபட்டது.

  இந்தவிசயத்தில் மேத்யூ சகாக்கள் சேவியர் அண்ணனுக்கு ஆதரவாக ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவுகட்டிக் கொண்டார்கள். சொல்லப் போனால் அவருக்கெல்லாம் இது ஒருவிஷயமே இல்லை.

பூ மார்க்கெட்டில் அவர் ஒரு குரல் கொடுத்தால் போதும் மறுசத்தமே எழாது சச்சரவு பண்ணுகிறவர்களுக்குள். அவர் ஒரு வஸ்தாது. ஆனால் ஆக்னஸ் வீட்டுக்கு வரும்போது அதெல்லாம் வெளியிலே தெரியாதமாதிரி அமைதியாக நடந்துகொள்வார்.

  சேவியர் அண்ணன்போல் நாமும் நாலுபேரை மிரட்டிப் பார்க்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் மேத்யூவுக்குள் இளசிலேயே துளிர்த்திருந்தது. இன்றைக்கு அவர்மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப் படுகிறது என்பதையும், அது ஆக்னஸின் குடும்பத்தை வீதிக்கு இழுக்கும் என்பதையும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று சகாக்களை அல்பி அண்ணன் கடையில் ஒன்றுகூட்டினான். திருப்பலி நாளின் மாலையில் ஆயருக்கு வந்திருக்கும் மனுக்களை எல்லாம் ஒன்று திரட்டி கோப்புகளில் சேகரித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யும் சாமிகண்ணுவைப் பிடித்தார்கள்.

 மெல்ல அவனைப் அரட்டி உருட்டி, ஒவ்வொரு மனுவாக பிரித்துப் பார்த்தார்கள். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக உள்ளே ஒரு மனுகூட குற்றப் பத்திரிகையாக இல்லை. எல்லாமே ஜெப விண்ணப்பங்கள். ஒரு பிள்ளைபூச்சியை வீணாக மிரட்டியதுதான் மிச்சம்.

ஆனால், பூச்சி சும்மா போகாமல் ஆக்னஸிடம் போய் யார் யார் தன்னை எதற்காக மிரட்டினார்கள் என்று கொழுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டது. மேத்யூவின் பெயரைக் குறிப்பாக கைகாட்ட, அவள் ஜெரினிடம் ஒன்றுவிடாமல் விசாரித்திருக்கிறாள்.

இந்தத் தகவல்கள் பிரின்ஸ் மூலம் அல்பி அண்ணன் கடைவரைக்கும் வந்துவிட்டது. எங்கே சேவியர் அண்ணனிடம் கோர்த்துவிடுவாளோ என்ற பயமும் ஒருபக்கம் இருந்தாலும், அவள் தன் பெயரைச் சொல்லி விசாரித்தாள் என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மேத்யூவுக்குள் குளிர் அடித்தது. அவன் கொஞ்சநாட்களாகவே காற்றில் பறந்தபடி திரிந்தான்.

 *
ஆக்னஸ் எப்படி அழகாயிருப்பாள் என்பதை இதுவரைக்கும் மேத்யூ தனக்குள்ளாக வர்ணிக்க முயன்றதில்லை என்றாலும் கெவின் அவளை ‘குதிரைக்குட்டி மாதிரி விருட்டுன்னு ஓடீர்றா‘ என்று சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த அடையாளப் பெயரிலே அவளைத் தன் மனத்துக்குள் வரைந்துகொண்டான்.

ஆக்னஸ் புதுரோஜாப்பூ மாதிரி தினம் ஒரு நிறப் புடவையில் எதிர்படுவாள். ஏற்றி சீவிய தலைமுடி, நறுக்கென்று குத்தியிருக்கும் ஹேர்பின்கள், அதில் செஞ்சிவப்பிலும் அஜெந்தா நிறத்திலும் மாறி மாறி குடிகொள்ளும் ரோஜாப்பூக்கள் என்று அட்டகாசமாய் கடந்துபோவாள். பரேட் மாஸ்டர் போல் கால்கள் பின்னாத நடை அவளுடையது. ஒருநாள் அவள் காலடித் தடத்தில் நடந்து பார்த்து இதைக் கண்டுபிடித்திருந்தான் மேத்யூ.

சபைக்கூட்டங்களுக்கு வரும்போதுதான் அவளைச் சிரித்தபடி பார்க்கமுடியும். மற்ற நேரமெல்லாம் ஏதோ ரயிலைப் பிடிக்கிற அவசரத்திலே திரிவாள். அப்படியும் அழகாகத்தான் இருந்தாள்.

 ஜோன்ஸ் அண்ணன் கல்யாணத்தில் கொயர் வாசித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் அவள் பாடுகிறதைக் முதன்முதலில் கேட்டபோதுதான் மேத்யூவுக்கு உலகம் தனது காலடியில் எதனால் நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது என்கிற உண்மை பிடிபட்டது.

 *
அந்தவருடத்தில் பெரிய கலவரத்தை உருவாக்கியது அந்தக் வெடிகுண்டு சம்பவம். சிறை வாசலிலே டிபன்பாக்ஸ் குண்டு வெடித்து உடல்சிதறி செல்வின் இறந்துப் போனதாக அல்பியண்ணன் டீக்கடைக்குப் பேச்சு வந்தது. கட்டத்துரை தான் ஆள்வைத்து அவரை தீர்க்கப் பார்த்தது என்று பேச்சாய் இருந்தது.

 எங்குபார்த்தாலும் காவல் தொப்பிகள் அலைந்து கொண்டிருந்தார்கள். வயதுப் பையன்கள் என்று மேத்யூ கூட்டத்தினரை யார்வீட்டிலும் வெளியில் அனுமதிக்கவே இல்லை. சம்பவம் நடந்த மூன்றாவது வாரத்தில் சேவியர் அண்ணனும் ஏதோ ஒருவகைக்குக் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை நாளிதழில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார்கள்.

அடித்துப் பிடித்து ஓடிப்போய் பார்த்தபோது, ஆக்னஸ் வீடு பூட்டி இருந்தது. எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்று எதுவுமே தெரிந்திருக்க வில்லை.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பூட்டப்பட்டே கிடந்த வீட்டை யாரோ விலைக்கு வாங்கியதாகச் சொன்னார்கள். மனதாலே நேசித்த குதிரைகுட்டியைத் தன்னை அறியாமலே தொலைத்துவிட்டவனாக மேத்யூ அறியப்பட்டான்.

கூட்டாளிகளுக்கு அப்போதுதான் அவன் ஆக்னஸ் விஷயத்தில் எவ்வளவு ஈடுபாடாய் இருந்திருக்கிறான் என்பது புரிந்தது. ஆக்னஸுடைய  விக்கிரமசிங்கபுரம் முகவரியை அல்பியண்ணன் எங்கெங்கேயோ விசாரித்து வாங்கிக் கொடுத்தார். இருந்தும் என்ன அவளைத் தேடிப்போய் நான் உன்னை காதலிக்கிறேன் என்றா சொல்லிவிட முடியும்.

*

2015 டிசம்பர் 02 .
சென்னை, வேளச்சேரி.
பகல்வேளை. கொட்டும் மழைப்பொழுது.

  ஊரே வெள்ளக்காடாகி இருந்தது. அடித்து நொறுக்கிய மழையில் உனக்கு ஆபீஸ் ஒரு கேடா என்று கேட்பதுபோல தனது குடியிருப்பில் சுருண்டு கிடந்தான் மேத்யூ. மூன்றாவது மாடியில் அறையைவிட்டு கீழே இறங்கிச் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்திருந்தது.

நேற்று இரவில்தான் படகுகள் மூலம் இந்தப்பகுதியில் இருந்த வயதானவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் மீட்டுச் சென்றிருந்தார்கள். ஐ.டி ஊழியர்களாயிருந்த வெளியூர்வாசிகள் எல்லாம் தங்கள் அலுவலகங்களிலே முடங்கிவிட்டிருந்தார்கள்.

பசிக்கிற வயிற்றுக்கு பக்கத்தில் ஒரு உணவகம்கூட இல்லை. இரவு நேரத்தில் படகுமூலம் உணவுப் பொட்டலங்கள் கொண்டுவந்து கொடுத்தவர்கள் புண்ணியத்தில் ஒருவேளை உணவும் சாத்தியமானது மேத்யூவுக்கு.

  நள்ளிரவில் செல்போன் இணைப்பு துண்டாகப் போகிற நேரத்தில் பேஸ்புக் நண்பனின் செய்தி கிடைத்திருந்தது. ‘வாலண்டியர்ஸ் தேவைப்படுகிறது’ நீங்களும் கைகோர்த்துக் கொள்ளலாம் என்ற அழைப்பின்பேரில்

*

முடிச்சூர், தாம்பரம் பகுதிகளில் இயங்கிவிட்டு மூன்றாம் நாளில் வாழை அறக்கட்டளை தன்னார்வலர்களோடு இணைந்து திருவெற்றியூர் அருகேயிருந்த சின்னமாத்தூர் சர்ச்சில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப் பட்டிருந்த குடும்பங்களுக்கு உணவும் உடைமைகளும் வழங்குவதற்காகப் போயிருந்தான் மேத்யு.

எவ்வளவு சனங்கள் பசித்த விழிகளுடன் தண்ணீருக்குள் கிடக்கிறார்கள் என்று தெரியவந்தபோது உண்மையிலே பரிதவித்த மனநிலையோடு இருந்தான்.

நிவாரணப் பொருட்கள் வழங்குகிற கூட்டத்தில் மஞ்சளுமில்லாத பழுப்புமில்லாத புடையில் கூட்டத்தோடு முண்டியடிக்காமல் தயக்கத்தோடு ஒதுங்கியபடி நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்மீது அவன் கவனம் விழுந்தது.
ஆம், அது… அவள் ஆக்னஸேதான். அவளை மேத்யூ அடையாளம் கண்டுகொண்டபோது, அவன் கண்களை அவனாலே நம்பமுடியவில்லை. குதிரைக் குட்டி என்று மனத்துக்குள் சத்தமில்லாமல் சொல்லிப் பார்த்துக்கொண்டான்

*
“அகஸ்டின் சத்தியமா சொல்றேன்டா மச்சான். அது ஆக்னஸ் தான். ஆளே அடையாளம் தெரியலை. சென்னையில் தான் இருக்கா பாரேன். இத்தனை வருசம் கழிச்சு என் கண்ணில் பட்டிருக்காடா மச்சான். ”

“என்னடா சொல்ற, செம போ.. சரி இப்பவாச்சும் நீ அவகிட்ட பேசுனியா?”

 “இல்ல மச்சான். அவளுக்கு கல்யாணம்லாம் ஆகி குழந்தைங்கல்லாம் இருக்குடா” என்றான்.

  **

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்