தேனடை



“ஏலே மாயாண்டி அந்தக் கம்பை இப்படி எடுத்துப்போடு” 

“எல கத்தாம பேசுல வெங்கம்பயலே தோப்புக்காரன் வந்துரப்போறான்” 

"வந்தா வெள்ளப்பாண்டி தான் வரணும். அவன் தான் ஊர்லயே இல்ல இன்னைக்கு” 

“சேரி சேரி நீ முதல்ல தீப்பந்தத்த ஒழுங்காப் புடி. ஏ கண்ணா நீ வேலிக்கிட்ட மறைஞ்சு நின்னுக்கோ. ஆள் யாரும் வந்தா சத்தங்குடு. யேலே தொரப்பாண்டி மரத்துல நீ ஏறாத, உங்கம்மைய கிட்ட நாங்க பேச்சு வாங்க முடியாது, தீப்பந்தத்த புடிச்சு கொளவிய வெரட்டுனா மட்டும் போதும். எலே மயிருபுடுங்கிகளா கொளவி வெரட்டி வந்துச்சுன்னா நேரா கெணத்தங்கரை திசை பக்கமா எல்லாரும் ஓடீருங்க சொல்லிட்டேன்” 

முதலியார் தோட்டத்தில் பலாப்பழம் தண்டிக்கு தேன்கூடு கட்டியிருப்பதைப் பள்ளிக்கூடத்தில் “ஒரு ரகசியம் சொன்னா குச்சு தருவியா” என்று வசந்தி தான் சொன்னாள். குச்சி பெரிய விசயமில்லை. ரகசியம் என்னதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமானதும் அரைக்குச்சியை நீட்டி காது கொடுத்தேன். 

அடுத்தநாள் வெளிக்கிப் போகும் சாக்கில் முதலியார் தோட்டத்தை எட்டிப் பார்த்த போது வசந்தி சொன்னது போலவே பலாப்பழதண்டிக்கு மாமரத்தில் தேன்கூடு கட்டியிருந்தது. தோட்டத்தில் வெள்ளைச்சாமியண்ணன் தான் எப்போதும் காவல் இருப்பான். எப்போதாவது அவன் இல்லாத நேரத்தில் வாசலில் கருப்பைக் காவலுக்குக் கட்டிப்போட்டு மூங்கித் தட்டியை மூடிவிட்டுச் செல்வான். 

நாளைக்கு வெள்ளிமலையில் கோயில் கொடை. கண்டிப்பாய் வெள்ளைச் சாமியண்ணன் கோயிலுக்குப் போயிடுவான். அந்த நேரத்தில் கூட்டைக் கலைத்துத் தேனை வடிச்சிரலாம். கூட்டுக்கு மாயாண்டியைச் சேர்த்துக் கொள்ளலாம் அவன் தேனெடுப்பதில் பெரிய நக்கி. கண்ணன் இப்போதான் வேற ஊரிலிருந்து வந்து பள்ளிக்கூடத்தில புதுசா சேர்ந்திருக்கான். எதுக்கும் இருக்கட்டும் ஆள் பார்க்க ஆவான். துரைப்பாண்டியும் கூட இருந்தால் இன்னொரு கைக்கு ஆவான். பாத்திரத்தில் தேனடையை அறுத்து எடுத்துட்டா, மாட்டுக்கொட்டாயில மறைச்சு வச்சித் குடிச்சது போக மித்தத வித்துடலாம். 

இதுதான் திட்டம் என்று நாலு பேருக்கும் சொன்னதும் துப்பு சொன்ன வசந்தி போட்டுக் கொடுத்துர மாட்டாளா என்று மாயாண்டி கேட்டான். அவன் கேட்டதும் சரிதான். அவளுக்கும் கொஞ்சம் கோபுரம் மஞ்சள் டப்பாவில் ஊத்திக் கொடுத்தா தின்னுட்டுப்போறா என்று சமாதானப் படுத்தி வெள்ளிக்கிழமை மதியம் யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் இறங்குவதென்று முடிவானது. 

“போயும் போயும் மொதலி தோப்புக்குள்ள போய்க் கூடுகட்டிருக்குப் பாரு இந்தச் சவத்த மூதி கொளவி. ஏங் எங்கூட்டுப் பக்கமெல்லாம் மரமே இல்லையாக்கும்” மாயாண்டி மரமேறும் போதே அலுத்துக் கொண்டான். 

“உங்க வூட்டுல கூடு கட்டுனா உங்கண்ணன் தின்னிமாடனுக்கே பத்தாதுலே” 

“அந்தச் சோலியப்பெருக்கிப் பத்தி ஏங்கிட்ட ஏம்ல பேசுத. ஆச ஆசையா நாப்பது சீரட்டு அட்ட சேத்து ஒழிச்சு வச்சிருந்தேன், எங்கம்மாட்ட காணிச்சுக் கொடுத்து எரிக்க வச்சுட்டான் பிக்காலிப்பய” 

“கூடப்பொறந்த அண்ணனையே என்ன கிழி கிழிக்காம் பாரு” 

“எங்கண்ணன் சரியான தின்னிப்பண்டாரம்ல. ஒத்தநாளு அவன் காப்பியை வேணும்ன்னே கொட்டிட்டேன்னு எங்கம்மாட்ட சொல்லிக் குடுத்துட்டான். வாரியக்கட்ட அடி அன்னைக்கு மாதிரி என்னைக்கும் வாங்குனதில்ல. அன்னையில இருந்து அவன் எனக்கு அண்ணனே இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்” 

“ரெண்டுபேரும் தின்னிமாடனுவ. பின்ன, மூடிக்கிட்டு ஒழுங்கா மரத்துல ஏறுத வேலைய பாரு. கோணிய நல்லா மூடிக்கச் செத்தவனே. கொளவி கொட்டுனா என்னாகும் தெரியும்ல” 

“தேனெடுக்க எங்களுக்கே சொல்லித் தாரியாக்கும். அலுங்காம கைய உள்ளவிட்டு அடைய பெருக்கிருவோம். நீ தீய காட்டும் போது சட்டிய அங்குட்டும் இங்குட்டும் அசைக்காம புடி” 

திட்டப்படி கண்ணா ஆள் வருதான்னு பார்த்துக் கொண்டிருந்தான். துரை தேனடைக்குக் வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் தீயைக் காட்ட, தேனியெல்லாம் அங்கும் இங்குமாகச் சிதறிப்பறந்தது.

முன்னெச்சரிக்கையாகச் சாக்குகளைப் போர்த்தியிருந்ததால் கடியில் இருந்து தப்பித்துக்கொண்டோம். தேனடையில் முட்டைகள் வெள்ளை வெள்ளையாகச் சுருண்டிருந்தது. மாயாண்டி கம்பை வைத்து அடையில் தேன் ஊறி நின்ற இடத்தில் குத்தினான். அடை மெல்ல பிளந்ததும் கனத்த நூல் அளவுக்குத் தேன் வடிய ஆரம்பித்தது. வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தூக்குப் போணியைத் தேன்கூட்டுக்கு அடியில் காட்ட கால் மணிநேரம் வழிந்து கொண்டிருந்தது. அடையை அறுத்து கீழே விடாமல் தூக்குச்சட்டியில் நிரப்பினோம்.

மாயாண்டி மரத்திலிருந்து கொண்டே தன் கையை நக்கிக்கொண்டிருந்தான். அவன் பெரிய நக்கி என்பதை மறுபடியும் சொல்ல வேண்டியதில்லை. யானைப்பாறையில் முன்னாடி ஒருதரம் தேனெடுக்கப் போனபோது அவன் நக்குன நக்குக்குக் கட்டவிரலே சூம்பிப் போயிருக்கனும். 


தூக்குப்போணி மிதக்க மிதக்க தேனும் அடைத்துண்டுகளையும் இறக்கிவிட்டு, சாக்கை வைத்து மரத்தடியில் கால்தடங்களை அழித்தோம். கருப்புக்குத் தோட்டத்தில் ஆள் இறங்கினது அதுவரைக்கும் தெரியவிலை போல. சோம்பேறி நாய் தின்னுட்டு தின்னுட்டுத் தூங்கதான் லாயக்குன்னு திட்டினான் மாயாண்டி. “அதுவும் நமக்கு நல்லதுக்குதான்லேய்” என்றான் துரைப்பாண்டி. 

மோட்டார் ரூம் பக்கம் கிடந்த வெள்ளைச் சாராயப் பாட்டில்களை எடுத்துச் சிமெண்ட் தொட்டியில் கழுவினோம். தேனை ஆளுக்கு ஒரு பங்கு ஊற்றிக் கொண்டோம். திட்டம் என்னுடையது தவிர முதலில் அடையாளம் பார்த்தவன் என்பதால் எனக்கு இரண்டு பங்கு. கண்ணா அவன் பங்குபற்றிக் கவலைப்படாமல் காவல் காத்துக் கொண்டிருந்தான். 

முழுபாட்டில் தேனை யாருக்கும் தெரியாமல் வாத்தியார் வீட்டுக்குக் குடுத்தால் காசுகொடுப்பார். வாத்தியாரோட பொண்டாட்டிக்கு மருந்துக்குத் தேனு குடிக்கனுமாம். ஊருல கொளவி எங்க தேன்கூடு கட்டுனாலும் ஒன்னு அது நேரா வாத்தியார் வீட்டுக்குப் போகும், இல்லைன்னா பலசரக்கு நாடார் கடைக்குப் போய் அங்க இருந்து வாத்தியார் வாங்கிட்டுப் போவார். எது எப்படியோ சுத்தத்தேன் உறிஞ்சிக் குடித்தது வாத்தி குடும்பம். ஆனாலும் இடையில நாங்க பயல்வ கொஞ்சம் உறிஞ்சினது போகத்தான் அவருக்கே மிச்சம். 

வீட்டுக்குச் சாராயப் பாட்டில்ல தேனை எடுத்துட்டுப் போனா அவ்வளவுதான் கொன்னு பொதைச்சிருவாங்க. வாத்தியார் வீட்டுல மிலிட்ரி சாராயப் பாட்டில்லாம் இருக்கும். அதனால மாறி அவருக்கு எந்தப் பிரச்சனை இல்ல போல. காப்படி பாட்டிலுக்கு முப்பது ரூவா கொடுப்பாரு. அதை வச்சி ரெண்டு திருவிழாக்கு முட்டாய் வாங்கித்திங்கலாம். ரங்கராட்டுனம் சுத்தலாம். 

சாக்குகளை மடித்து மோட்டார் ரூமுக்கு மேலே வீசினோம். பங்கு பிரித்து மீந்த தேனடையை உறிஞ்சி உறிஞ்சித் தின்னுட்டிருக்கும் போதே, “ஆள் வருது ஆள்வருது”ன்னு கண்ணா சத்தமில்லாமல் கத்திக்கொண்டே ஓடி வந்தான். கண்ணாவின் குரல் கேட்டதும் திக்கென்று ஆனது மூணு பேருக்கும், “கிணத்துக்குள்ள ஒழிஞ்சுருவோமா” துரைப்பாண்டி கேட்டான். 

“மோட்டார் போட வந்தான்னா வகையா சிக்கிப்போம். ஆளுக்கொரு மரத்துல ஏறுவம். நீ குட்டமரமா பாத்து ஏறு. தேனை பொதருக்குள்ள ஒழிச்சு வைங்கல பொறவு எடுத்துப்போம் மாட்னோம் தொலிய உரிச்சிருவானுங்க. எந்த மாடுமேய்க்குறபய வாரான்னு தெரியலையே” 

நானும் கண்ணாவும் ஒரே மாமரத்தில் ஏறிக்கொண்டோம். நல்லவேலையாக அவனுக்கு மரம் ஏறத் தெரிந்திருந்தது. பரவால்ல பய புதுசுன்னாலும் மரமேறத் தெரிஞ்சு வச்சிருக்கான். மாயாண்டி தொலி உரிந்த வழுக்கு மரத்தில் ஏறி கிளையில் படுத்துக் கொண்டான். துரைப்பாண்டி தேன்கூடு இருந்த மரத்திலே ஏறிக்கொண்டான். 

இப்படித்தான் ஒருதடவை மரமேறி குரங்கு விளையாடும் போது கீழே விழுந்து, துரைப்பாண்டிக்கு மூட்டு பெசகி பள்ளிக்கூடத்துக்கு வராமல் எண்ணைக் கட்டு கையோட சுத்திக்கிட்டு இருந்தான். விழுந்த அன்னைக்கு மாயாண்டிக்கும் எனக்கும் எங்கள் வீடுகளில் வாரியப்பூசையே நடந்தது. பத்தாததுக்குத் துரைப்பாண்டி அம்மை வேற நாரக்கேள்வி கேட்டது. 

மூங்கித் தட்டியை திறந்துக்கொண்டு வெள்ளைப்பாண்டி அண்ணன் உள்ளே நுழைந்தான். கருப்பு கடனுக்கு இரண்டு தடவை வள் வள்ன்னு குலைச்சுட்டு தன்னோட இடத்திலே போய்ப் படுத்துக்கிட்டது. இவன் எங்க இங்க வந்தான். கோயிலுக்குல்லா போயிருப்பாம்ன்னு நினைச்சோம். இவன் எப்பப் போயி நாம எப்ப தப்பிக்கன்னு நினைக்கும் போதே தட்டிவழியே இன்னொடு ஆள் கூட நுழைந்த மாதிரி தெரிந்தது.

அது யாரு வெள்ளப்பாண்டி கூட என்று யோசிக்கும் போதே, “அட இது மீனு விக்க வரும்ல அந்தக்கா” என்றான் கண்ணா. வாத்து மேய்க்குற கூட்டத்துல இவ்வளவு செவப்பி யாரும் கிடையாது. வாத்துக்காரங்க வலையில் சிக்கின மீனை வளவுக்குள் கொண்டு வந்து வித்துட்டுப் போகும். அது கலருக்குப் பல்லுபோன கெளடுங்கல்லாம் ஆ பாக்கும்ங்க. இதெதுக்கு இங்க வருது. 

ரெண்டுபேரும் சிரிச்சு சிரிச்சுப் பேசிக்கொண்டே தோப்புக்குள் நுழைந்தார்கள். வெள்ளைப்பாண்டி அண்ணன், வாத்து மேய்க்குறவ தோள்ல கைபோட்டுக்கிட்டு நேரே கிணத்தடிக்கு வந்தான். உள்ளே இறங்கி இரண்டுபேரும் குளிக்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். 

பிறகு தண்ணீரில் சலம்பும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க இரண்டு பேரும் விளையாடுறாவ இதுதான் சமயம்ன்னு நாலுபேரும் தப்பிக்க என்று குயில் மாதிரி சத்தம் கொடுத்தேன். எல்லாப் பயல்களும் மரத்தை விட்டு இறங்கி, புதருக்குள் மறைத்து வைத்த தேன் பாட்டிலை தூக்கிட்டு வேலியைத் தாண்டினோம். நாலு கால் பாய்ச்சலில் எல்லாரும் ஓட, எனக்கு அப்போதுதான் நினைப்புக்கு வந்தது தூக்குப் போணியைத் தோட்டத்திலே விட்டுவிட்டு வந்தது. 

தூக்குப் போணியில் தேன் துப்புரவாக வழித்து நக்கிவிட்டாலும், செண்பகம் மைனி அப்பா கல்யாணத்துக்குப் பேரு பெயரடிச்சு கொடுத்த தூக்குப்போணி அது. மாட்டுறதுக்கு அதைவிடப் பெரிய பிடிதரம் வேற வேண்டியதில்லை. எங்கைய்யா பெல்ட்டை கழட்டுறதை நினைச்சேன் பீதியாகிப்போனது. 

திரும்பத் தோட்டத்துக்குள் நுழைய தான் வருவதாய்க் கண்ணா மட்டும் சம்மதித்தான். மத்த வெளக்கெண்ணைங்க அவனவன் சோலியாச்சுன்னு ஓடிட்டானுங்க பயந்தாங்கோழிக்குப் பொறந்தவனுங்க. வடக்குப் பக்கம் வேலி வழியா குதிச்சு தோட்டத்துக்குள் நுழைந்து தூக்குப்போணியைத் தேடினோம். அது புதருக்கு அடியில் குப்புறக் கிடந்தது. எடுத்துவிட்டு எந்திக்கும்போது மோட்டார் ரூமில் இக்கும் இக்கும்ன்னு சத்தம் வந்தது. 

கண்ணாவும் நானும் மெல்ல சிமெண்ட் ஜாலி வைத்த சன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது வெள்ளைப்பாண்டி அண்ணன் செவப்பியக்கா மேலே கிடந்தான். கன்றாவி அம்மணக் கட்டையா கெடக்காம்லன்னு கண்ணாவிடம் சொன்னபோது, அவன் தான் உள்ளே என்ன நடக்குன்னு விளங்க வைத்தான். அடங்கொக்காலோலி இதுதான் அதா. 

திடீரென நாம கள்ளன்னா இவன் என்ன யோக்கியனா என்று ஒரு எண்ணம் வர, “யெண்ணே வெள்ள பாண்டியண்ணே உள்ள என்னன்னே செய்யுதியோ”ன்னு ஒரு குரல் கொடுத்துவிட்டுக் கிலுகிலுவெனச் சிரித்துக்கொண்டு நானும் கண்ணாவும் மோட்டார் ரூம் பின்னாடி ஒழிந்துக்கொண்டோம். 

சுடுகாட்டுல நடுராத்திரி முனியைக் கண்டது போலப் பதறியடித்து எழுந்து, சாரத்தைக் கட்டிக்கொண்ட வெள்ளப்பாண்டி “யாருலே அவம்”ன்னு சத்தங்குடுத்துப் பார்த்தான். அரைகுறையா சுத்துன ஈரத்துணியில அவன் பின்னாடியே வந்து எட்டிப் பார்த்த வாத்துக்காரிக்கு செவப்பின்னு பேரு அவ்வளவு பொருத்தம். 

வெள்ள பாண்டியண்ணன், “யார்ல அவம் கேக்கம்லா”ன்னு கெட்டவார்த்தையில் மறுபடியும் திட்டினான். நானும் கண்ணாவும் சத்தங்காட்டாமல் வேலிதாண்டி குதித்துத் தப்பி ஓடினோம். 

வெள்ளிமலை கோவில் கொடை முடிஞ்ச ரெண்டாவது ஞாயித்துக்கிழமை வாத்துக்காரங்க நாலுபேர் செகப்பிய காணும்ன்னு ஊருக்குள்ள விசாரிச்சுட்டு இருந்தாங்க. இந்த மொதலியார் தோட்டத்து காவக்காரனையும் காணும்ன்னு பேச்சு அடிபட்டுச்சு.

ரெட்டை டயர் ஓட்டும் பந்தயம் விட்டுக்கிட்டிருந்த தொரைப்பாண்டி, “மொதலியார் தோப்புக்குப் புதுசா காவக்காரன் வேலைக்கு ஆளெடுக்கப் போறாண்டோய்”ன்னு கத்தினான். விபரம் புரிந்த நாங்க நாங்க நாலுபேரும் கெக்கிலி போட்டு சிரிச்சுட்டு கிடந்தோம்.

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்