கொடி வீரன்


“நேரா கேமராவப் பார்த்து பேசுங்க. அங்க இங்க திரும்பக் கூடாது. இந்த மைக்ல நீங்க பேசுறதெல்லாம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கும். அதை அசைக்காம பார்த்துக்கோங்க. சரி ஆரம்பிக்கலாமா!”

“என்னன்னு சொல்லட்டும்”

“நீங்க இந்த ஊருக்கு எப்போ வந்தீங்க. எத்தனை தலைமுறையா இங்க இருக்கீங்க. எப்படி இந்த தொழில் கத்துக்கிட்டீங்க.செங்கல் சூளைகள்ள குழந்தைங்களை வேலைக்கு வைக்கிறது சட்டப்படி தப்புன்னு இருக்கே. உங்க காலத்தில் எப்படி அதெல்லாம் பார்க்கப் பட்டது.. அப்புறம் உங்க ஊர் பெருமைகள் இதெல்லாம் சொல்லலாம். தண்ணி வேணும்னா இப்பவே குடிச்சுக்கோங்க. இடையில் இறுமினீங்கன்னா கொஞ்சம் கேப் விட்டுட்டு, திரும்ப விட்ட இடத்தில் இருந்தே பேச ஆரம்பிங்க. மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்ல. இடையில ஏதும்கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லும்போது கேமிராவப் பார்த்தே பேசுங்க சரியா!”

“நெறய கண்டீசன்லாம் வச்சிருப்பீங்க போலய தம்பி”

“அதெல்லாம் இல்லைங்க ஐயா. மண்பாண்டங்கள் செய்யுறவங்களப் பத்தின ஆவணப் படம் இது. அவங்களோட வாழ்க்கையை பதிவு பண்ணனும்னு விரும்பி பண்றோம். அதான் உங்களை பேட்டி எடுக்குறோம்”

“டீவில வருமோ”

 “இல்ல.. இது டீ.விலல்லாம் வராது. ஆனா அடுத்த தலைமுறைக்கு உங்க அருமை பெருமைகளைக் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு விருப்பப்பட்டு ஆவணப் படமா எடுக்குறோம். ”

“நல்லா இருய்யா.. சரி நான் சொல்லட்டா” 

“நல்லது. ஆரம்பிச்சுடலாமா, கவிமணி வாய்ஸ் ஓகே தானே.. போய்டலாமா.  டேக்.. அய்யா நீங்க பேச ஆரம்பிங்க”

 “எங்கைய்யாவுக்கு தாய்வழிக் குடும்பம் மொதமொத இந்த ஊருக்கு வந்தப்போ இந்த செவக்காடு முழுக்க குளுர நனைஞ்சிபோயி சதசதன்னு சவுதியா கெடந்ததாம். அப்புடி ஒரு பேய்மழ ஊரை ரெண்டுல ஒன்னு பார்த்துட்டு போயிருக்கு. காஞ்ச வயக்காடெல்லாம் ஈசல் பறக்க, சனங்கல்லாம் வெத தானியத்த சேத்து வச்ச குதிருகளயும், பத்தாயத்தையும் உருட்டிக்கிட்டு கெடப்பாங்க.

நாயக்கர் கட்டின மடை நிரஞ்சி வழிய, கோப்புமாடுகள வச்சு கம்பங்காட்டை உழுது, வெதப்பாட்டு பாடிக்கிட்டே தூவ ஆரமிச்சிருவாங்க. மானாவாரில ஆடிப்பட்டம், பொரட்டாசி பட்டம், எறவையில மாசிப்பட்டம் சித்திரப்பட்டம்ன்னு கம்பு வெதைக்க காலநேரம் ஏகக்கணக்குல இருக்கும்லா.

குச்சி தளுத்து எந்திரிச்சி செவக்கச் செவக்க பூ உட்டதும் பாக்கணுமே ஒவ்வொரு சனங்களோட மொகத்துலயும் அம்புட்டு குளுமை இருக்கும். அன்னா நிக்கான் பாருங்க கொடிவீரன். அவன் காத்துநிக்குற மலையத்தான் சனங்க ஏந்தழையா கும்புடுவாங்க. ஆமா அப்ப அங்கன கொடிவீரனே கெடையாது.

இன்னைக்கு நீங்கல்லாம் பாக்குத கொடிவீரஞ்சாமி எங்க பாட்டனுக்கு முப்பாட்டன் உண்டாக்கினது. இந்த ஊர என்னங்கீய. வெறும் பூச்சிக்காடு. உசிலம்பட்டிக்கு மேக்க நாலு காடுதாண்டி செடியுங் கொடியும், மரமும் மட்டையுமா கிடந்த இந்த  பூச்சிக்காட்டை திருத்தி, வயல் வரப்பு கம்மாய்ண்ணு பக்குவம் பாத்தது பூராம் நாயக்கமார் சனங்க தான். அவங்கள நம்பி நாங்க தெக்க இருந்து பொழைக்க வந்த கூட்டம். அதான் பேச்சுவாடை தனியா தெரிஞ்சிரும்.

எரசின்னமநாயக்கருன்னு அவருக்கு பேரு. அவருதான் மொத சமீந்தாரி. ஊருக்கு மேக்கால கோயில் அமச்சி குடிகளுக்கு குடியா, மன்னருக்கு மன்னரா வாழ்ந்திருக்காரு. பெரிய கெழவி சொல்லி இருக்கால்லா… காடா இருந்தா என்ன நாடா இருந்தா என்ன ஒம்மேல நடக்குறவன் நல்லவனா இருந்தா நீயும் நல்லா இருப்பா எம்மண்ணேன்னு. அப்படித்தான் நாயக்கரும் நல்ல மனுசன். ஊரும் நல்ல ஊரு.

அண்ணாத்தெரியுது பாருங்க பொந்து வெளக்கு. அதுக்குகூடு எப்புடி வக்கனையா இருக்கு பார்த்தீயலா. அப்படித்தான் இந்த ஊரும். சுத்தி மூணுபக்கமும் மலைங்க, ஒருபக்க வாசல். கள்ளன் வந்தாலும் மலதாண்டித்தான் வரணும். அதான் ஏழுமலைய அரணா வச்சி எழுமலையின்னே பேரு.

பெரிய நாயக்கரு ஊருக்கு கட்டுன கோயிலுக்கு சொத்தா நானூறு ஏக்கரா நெலத்தையும் எழுதிவச்சிட்டு மவராசனாப் போய் சேந்துட்டாரு. அவர் ஜமீன இடையில நல்காமு நாயக்கரு சேத்தூர் ஜமீனுக்கு கெரையம் பண்ணி கொடுத்தாலும் கொடுத்தார் அப்ப இருந்து இப்பவரைக்கும் பெரச்சனைதான்.

ஊடால வெள்ளக்காரங் காலத்துல ஜமீன நாயக்கரு வாரிசுங்க மீட்டு எழுதிவாங்கிட்டாலும் இன்னும் கோர்ட்டு கேசுன்னுதா அலைஞ்சிகிட்டு இருக்காங்க. நல்காமு நாயக்கரு பேரன் இப்ப கோயில் அறங்காவலரா இருக்காரு. வெவரமான புள்ளைங்க தான். ஆனாலும் என்ன கவர்மெண்டு கட்டடம், தண்ணிடாங்கி எல்லாம் அவுங்க நெலத்துலதான ஏறி நிக்கி. கேக்க முடிலயே.

  ஆச்சி இருவது இருவத்தஞ்சி தலைமொற, நாயக்கியரம்மா பொம்மத்தம்மா கையில ஜமீன் இருந்த காலத்துல மூட்டை முடிச்சுகளோட, கட்டுகொலஞ்சுபோன ஒத்த கட்டவண்டியும், சுழலு மனையும், நாலைஞ்சு கலயஞ் சட்டியுமா வந்து எறங்கின எங்க மூத்தக்குடி சனங்களுக்கு கண்ணு எறங்கி குடிகொடுத்தது அந்தத்தாயிதான்.

எங்க தாத்தனுக்கு எங்காத்தா ஒத்த பொம்பளப் புள்ள. அஞ்சாறு தலையெடுப்புக்கு பெறகு ஒரே பொம்பளப் புள்ள அவதான். எனக்கு நேர் மூத்தவா ஒருத்தி பொட்டயா பொறந்து ஏழுவயசு கண்டப்போ செந்தேளு குஞ்சி கொட்டி செத்துப்போச்சுன்னு அடிக்கடி பொலம்புவா. செங்காட்டுப் புழுதில குடுசபோட்டு கூலி கெடைச்சா கூலிவேல, மத்த நேரம் கொசவ வேலையின்னு புருசனும் பொஞ்சாதியுமா வாழ்ந்திருக்காங்க.

மண்ணு மிதிச்சு சட்டி வனஞ்சி எடுத்துட்டுப்போய் உசிலம்பட்டி சந்தையில கூடுமான வெலைக்கு வித்து, அந்த துட்டுல பேர்வாதிக்கு கம்பும் பருப்புமா வாங்கியாந்து வயித்துப் பாட்டை தீர்த்துக்கிட்ட குடும்பம்.

எட்டுவயசுல நான் மண்ணுச்சட்டிய கையில தொட்டேன். மண்ணு வேலையில எங்கைய்யாவும் ஆத்தாவும் தான் எனக்கு எல்லாமே. எங்க தாத்தன் காலம் வரைக்கும் ஜமீன் செழிச்சி இருந்திச்சி. வெள்ளக்காரன் ஆட்டங்கண்டதுக்கு அப்புறம் அங்கிட்டிருந்து எதுவும் வாரதுமில்ல. இங்கிட்டிருந்து எதுவும் போறதுமில்ல.

கடேசி நெனைப்பா எங்கைய்யாவுக்கு பாட்டன் பொம்மத்தம்மா பேரனுக்கு அக்கி எழுதிட்டு வந்திருக்காரு. அது ஒண்ணுமில்ல முழுமுட்டை மேல அக்கிவந்த ஆளுக்க படத்த வரைஞ்சி, அத தண்ணில வேக வச்சி பூச கீசல்லாம் பண்ணி அப்புடியே எடுத்து தின்னுரணும்.

அப்படியே கட்டி வந்த எடத்துல தொக்கம் பாக்கையும் காவிக்கட்டியையும் கரைச்சி தடவி உட்ருரணும். மருந்து முக்காபங்கு மந்தரம் காப்பங்கு கததான். எல்லாம் கண்கட்டு ஆனா நோய் குணப்பட்டுரும். மண்ணுக்குள்ள கெவுரதை அப்படி.

இன்னைக்கு இந்த மண்ணுல கோயில்பேரச் சொன்னீங்கன்னாகூட தெரியாதுன்னு சொல்லிரலாம். நாயக்கரம்மாவோட நாலுகால் மண்டபம் எங்க இருக்குன்னு கேட்டா பச்சப்புள்ளக்கூட வழிசொல்லும். அதுக்கு வடபுறம்தான் எங்கய்யா சுள்ளை. இங்குட்டு காளவாசல்ன்னும் ஜனங்க சொல்லுறதுண்டு. பூர்வீகம்ன்னு வேறன்னு இருக்கும்போது பேரும் மாறுபட்டுக்கும்லா.

காலங்காத்தால மண்ணு மிதிக்கும்போது பிள்ள இடுப்புல நிக்கமாட்டுக்கான்னு எங்காத்தா பூவரசமரத்துல சீலத்துணிய தூரிகட்டி என்னைய தொங்கவிட்டுரும். உடுப்பை எடுத்து இடுப்புல சொருவிக்கிட்டு மிதிக்க ஆரம்பிச்சான்னா, எங்கைய்யன்  மனைய சுத்தவுட்டு வரிபிடிக்க ஆரம்பிச்சிருவாரு.

இந்த மண்ணுக்குத்தான் எத்தன வக. மணமண்ணும், சண்டுமண்ணும் சரிக்கி பாதியா குமிச்சி வச்சிருக்கும். சட்டிப்பானைக்கு மொத ரகம், குதிரு மொடா செலைங்கன்னா ரகம்ன்னு மண்ணப் பார்த்தே இது என்னாத்துக்கு ஆவும்ன்னு சொல்லிடறதாலத்தான் வேளாளன்னுபேரு. வேளுன்னா வேறென்ன மண்ணுதான். மண்ண ஆளுதவன்.

கொடிவீரன் செலை செஞ்சாருன்னு சொன்னனில்லயா. அந்தக் கதை என்னான்னு தெரியுமா! சொல்லுதேன் கேளுங்க. கொடிவீரன் கோயிலுக்கு அப்ப செல கெடயாது. மலங்காட்டுல கல்லெடுத்துத்தான் கும்புட்டுருக்காங்க. ஆகாத எவனோ கல்லைச்சரிச்சு விட்டுப்போக ஊருக்கு பீடைபிடிச்சுப்போச்சு.

அப்பல்லாம் குலாலன் தான பூசாரி. அதான் முதுகுல புரி தொங்கிட்டு கெடக்கு. எங்க மூப்பரையே செலை எடுக்கச்சொல்லி  சனங்க கேட்டு நின்னதும் இந்தா இந்த சுள்ளைலதான் வெந்து எந்திச்சாரு கொடிவீரஞ்சாமி. அதுவரைக்கும் அரூபந்தான். பாம்பக் கண்டா சாமின்னு கண்ணுல போட்டுக்கிறதில்லையா அப்படி.

அலங்கார அலங்காரமா சாமி செஞ்சி, வீதிவீதியா எடுத்துப்போய் கொடிவீரனை மலைக்காட்டுல சாத்துனாங்க. அப்புறம் எங்கப்பாரு காலம் வரைக்கும் மறுசாமிங்க, குதிரைங்க வச்சது இதே சுள்ளையிலத்தான்.

வண்ணமுன்னா வண்ணம் அப்படி ஒரு வண்ணம்லா கொடிவீரனுக்கு. செரட்டைய எரிச்சு கம்பச்சோத்துல அரைச்சி கருப்பு மையெடுத்து கண்ணெடுத்து செஞ்சோம். காக்காப்பொன்னு பொறக்கி சுள்ளையில எரிச்சி தங்கவார் பிலிட்டு செஞ்சோம். வாவரகாச்சி யெலையெடுத்து பச்சையில தோடு செஞ்சோம் இப்படி பாட்டாவே பாடுவோம். மண்ணில கெடைக்குறதவச்சி வண்ணமெடுத்து செஞ்ச கொடிவீரந்தான் இன்னைக்கு பெயிண்டப் பூசிகிட்டு பொணநாத்தம்ன்னு பொலம்புதாரு.

உசிலம்பட்டி முழுக்க கேட்டாலும் செல செய்யனும்ன்னா எங்க அய்யன் தான் பெரியாளு. கொத்துக்கரண்டி, மூங்கிகட்ட, ஈக்கங்குச்சி, அம்மிக்கல்லு, கோழி றெக்க, அணில்வாலுன்னு எதுகெடச்சாலும் அத வச்சி வடிவம் போடுவாரு. கிட்ட இருந்து பாத்து வளந்தவன்லா. அவரு வேலைசெய்யும் போது, மண்ணுல கிண்ணுல உருண்டு பொரண்டு மூஞ்சி முகரையெல்லாம் செகப்பாக்கிக்கிடுறது. அப்ப இருந்து மண்ணுல இருந்து என்னையும், எங்கிட்ட இருந்து இந்த மண்ணையும் பிரிக்க முடியல.

எங்காலத்துல கஞ்சிச்சட்டி சுத்திமுடிச்சா அதுகள சீர்பாத்து,  வெடிப்பு இருந்தா  அடையாளந் தெரியாம நீவிவுட்டு, பிசிறு உதுத்து, காயவச்சி, ரெண்டாம்நேத்து சுள்ளையில சுட்டு எடுத்து, உசுலம்பட்டி சந்தைக்கிப் போனா வார சனங்க எல்லாம் பானயோட கழுத்த ஒத்தக்கையில புடிச்சுட்டு நங் நங்குன்னு சுண்டவும் சத்தம் கணக்கா வந்தாத்தான் இடுப்புல இருந்து ஒட்டக்காச நவுட்டுவாங்க.

அப்படி வாங்கிட்டுப் போன சட்டிப்பானைக தேய்ஞ்சி தொலி உரிஞ்சி ஓட்ட விழுந்து கட்டமண்ணா போனாலும், வயக்காட்டு கொளுற பூசி வச்சிவச்சி புளங்கிக்குற சனங்க வாழ்ற ஊருல கொசவன் என்னத்த வருமானம் பார்த்துறமுடியும்.

ஊரே மழையடிக்கனுமேன்னு வேண்டிக்கிட்டுக் கெடந்தா கொசவன் எங்க மழை வந்துருமோன்னு பயந்துட்டே தொழிலு செய்வான். என்ன செய்ய பொழப்பு அப்படி. முன்ன இருந்தமாதி அச்சக்கிரயம் கொண்டான்னு வாங்கி அளவு வைக்கிற நெலைமை இப்ப எங்க இருக்கு.

நல்ல கொசவனுக்கு கலயம் தோண்டி பானை சட்டி குடம் குலுக்கை வரைக்கும் செய்யத் தெரிஞ்சிருக்கும். இன்னும் பேரெடுத்த வேலைக்காரன் மொடாவே மொதநாள்ள வனஞ்சி எறக்கிருவான். செல செய்யுறதெல்லாம் மேற்படியான் காரியம்.

என்னதான் குலத்தொழில்ன்னு இருந்தாலும் அதுக்கு கௌரவம் கொடுக்கன்னு ஆள் இல்ல பாருங்க. இதுல இருக்கும் நுணுக்கமும், பகுமானமும் எவனுக்குத் தெரிஞ்சிடப் போகுது. ஒலகத்துல எந்த மூலைல குழிய வெட்டுனாலும் பானத்துண்டுதான மொதல்ல கெடைக்கி. அதனாலத்தான் மொதமொத மண்பானை செஞ்சவன் எந்தநாட்டுக்காரன்னு இன்னைய வரைக்கும் எவனும் மார்தட்டுனது கெடையாது. அப்பேர்பட்ட பழந்தொழிலு.

பிள்ள பொறந்தா எங்ககிட்டத்தான்யா தூக்கிட்டு வருவாங்க. நாங்கதான மண்ணெடுத்து தண்ணி தடவி வப்போம்.  அதுக வளர்ந்து வாலிபமாயி, மூப்பாகி மாஞ்சி போனதும் காட்டுல ஒடைக்குற சட்டிய நாங்கதான் செஞ்சுகொடுக்கணும்.

இம்புட்டு ஏன்! ஒருகுத்து உப்ப கையில கண்டாலும் புடிச்சி வரி போட்டுருவான் வெள்ளக்காரன். ஆனா அவங்கூட எங்க பொழப்பில் இருந்த சங்கடங்கள மனசுல வாங்கி, உங்கிட்ட இருந்து வரியே வேணாம்யா போய்த் தொலைன்னுட்டான். சேத்தை நம்பி ஒழவன் மட்டுமா நின்னான். நாங்களும் தான் நின்னோம். ஆனா கால்வைக்கும் பூமி எங்களுக்குஞ் சொந்தமில்ல. அவங்களுக்கும் வாரிக் கொடுக்கலையே. கொடுக்க விடல ஆளவந்தவனுவ.

மத்தமாதிரி படிக்க வைக்கன்னு போக எங்களுக்கென்ன காடா வெளையிது. எட்டு வயசுலயே மண்ணு மிதிச்ச காலு. இன்னைய வரைக்கும் ஈரம் காயல. சவுதியுமில்லாம சரலுமில்லாம மிதிச்சி மிதிச்சு எங்க காலமுந்தான் நசுங்கிப்போச்சி.

எப்பயாச்சும் இந்த சனங்க பழச மறக்காம, வேண்டுதலைய்யா பேச்சியம்மன் செஞ்சுகுடு, பேராச்சியம்மன் செஞ்சிகுடுன்னு வந்துநிக்கும். அந்தசனங்கதான் இன்னும் எங்கள மண்ணுக்குள்ள கொஞ்ச நஞ்ச மரியாதையோட நிக்க வைக்க இருக்குற ஒரே பிடிமானம்.

இன்னைக்கெல்லாம்  எல்லா சுள்ளையிலயும் செங்கல்தான் வேகுது. அலுங்கு அலுங்கா அழகுபாத்த கையி. கட்டையில மண்ணத்திணிச்சி கட்டங்கட்டமா வெட்டி எடுக்கோம். காலம் என்ன ஒரே மாதியா சுத்திக்கிட்டுக் கெடக்கு. சனங்க ரசனை மாறுதப்போ தொழிலும் மாறிக்கிடுது. மோடா வனைஞ்சவன் கையி பூந்தொட்டிக்கும், பொங்ககட்டிக்கும் குறுக்கிக்கலையா.

செவக்காட்டு செங்கலுக்கு இன்னையதேதிக்கு நல்ல கிராய்க்கி. மூணு சுள்ளை வச்சிருக்கப் பயலுக்கு  ஒரு கிலுக்கஞ்சட்டி வளைக்கத் தெரியாது பார்த்துக்கிடுங்க. அவந்தாம் வேலை சொல்லுறான். கூலியுங்கொடுக்கான்.

குந்துமணி நெல்லு கீழ சிந்தாம, கஞ்சம் புடிச்சி, இந்தா எதுத்தாப்புல இருக்கும் சுள்ளையையும் வெலபேசி முடிச்சிருக்கானாம். இன்னைய ஈட்டுக்கு நாப்பதாயிரங்கல்லு போதும்ங்கான். கட்ட மண்ண எல்லாம் உப்புத்தண்ணி சேர்த்து பெணைஞ்சி எடுத்து எரிச்சிர வேண்டியதுதான். எதன்னு கேக்குறியா, செங்கக் கட்டிக்கூட எங்க நெனப்புகளையும் சேர்த்துத் தான் சொல்லுதேன்.

இதெல்லாம் எங்க பொலம்பலைய்யா. இது யாரு காதுக்குப் போய் சேரும் சொல்லு. சேந்தா சேருது சேராட்டி வுடு. இப்படி ஒரு கெழவன் வாழ்ந்தான்னு மட்டும் நாலுபேருக்குச் சொல்லுய்யா. அவன் கடசிவரைக்கும் பொறப்புட்டு வந்த மண்ணவிட பொதைஞ்சுக் கெடந்த மண்ண மனசார நேசிச்சான்னு சொல்லுய்யா. என்னையும் வந்தான் போனான்னு சொல்லி வச்சராதீங்க. நான் இந்த மண்ணுக்காரன். இந்த சாமி அதுக்கு சாச்சி”

“Cut It.."

*

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்