பச்ச...



“யாத்தி இவன் கெடக்கமாட்டாம் போலய...”

“ஏம்ட்டீ ஊரைக் கூட்டிட்டுக் கெடக்க காலேலே”

“நா ஏங் கூட்டப்போறேன். இந்தா வந்து நிக்கப்போறால்லா, ஒங்க மொறைக்கி பொண்ணு பெத்துப் போட்டவ. அவா வந்து கனைப்பா. அப்ப கேளு ஏம்ட்டீன்னு...”

“இப்போ என்னான்னு சொல்லிட்டு கனைக்கியா இல்லையா?”

“பாரும் இங்க வந்து, ஓம் மருமவம் கைய. மூஞ்சில நல்லா முடி மொளைக்கல, பயவுள்ள என்ன வேலை செஞ்சிட்டு வந்து தூங்குதான்னு பாரு”

வேணி காலையிலேயே வீட்டைக் கூட்டும் போது, நாதன் தூங்கி எழுந்திருக்கவில்லை. பாயில் படுத்துக் கிடந்தவனைச் சுற்றி வாரியலைச் சுழற்றித் தூற்றுக் கொண்டிருக்கும்போதுதான் அவன் கையைக் கவனித்தாள். அதற்குப் பிறகே, அவள் காட்டுக் கூச்சல்கேட்டு ரவி எழுந்துவந்து, நாதனின் கையை உற்றுப் பார்த்தான்.

“எட்டிக்கிட்டு நாலு மிதி மிதிப்பீயன்னு பார்த்தா... இங்கன வந்து பல்ல வௌக்கிட்டு நிக்கியே..” வேணி தீர்மானமாய் ஒரு சண்டைக்கு தயாராய் நின்றாள்.

“என்னைய என்ன செய்ய சொல்லுத. அவன் எந்திரிக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம்”

“தாயில்லாப் புள்ளைன்னு கொஞ்ச வேண்டியதுதான். அதுக்குன்னு இப்படியா? அவம் யாரு பேரை பச்ச குத்திக்கிட்டு வந்திருக்காம்ன்னு தெரியுதா... மொத வீட்டு பாளையாத்தா பேத்தி பேரை.. அவளுக்கு மட்டும் தெரிஞ்சிது இவந்தோலை உரிக்கணும்ன்னே தெருவுல வந்து மண்ணள்ளித் தூத்துவா..”

“வாய மூட்றி மூதேவி... நல்லா காலங்காத்தால.. ஆரம்பிக்கா”

“நீ உவ்வீரத்த எங்கிட்டதான காட்டுவ. வந்து நிப்பால்ல வாசல்ல. அப்ப மாமனும் மருமவனும் எந்தக் குதிருக்குள்ள ஒளிஞ்சிருப்பீயன்னு பாக்கத்தானே போறேன். எக்கேடோ கெட்டுத் தொலைங்க.”

சச்சரவுகளுக்கிடையில் சோம்பல் முறித்துப் பாயைவிட்டு எழுந்து, பம்படி பக்கம் முகம் கழுவ வந்தவனை சரஸ்வதி கையை முறுக்கிப் பார்த்தாள். “என்னலே இது..” என்று புன்னகைத்தாள்.

‘அபிராமி' என்று கரும்பச்சையில் எழுதியிருந்தது.

கையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, “உஞ்சோலியைப் பார்த்துட்டு தண்ணியடி ச்செரியா” என்ற நாதன் அவளை முறைத்தான்.

“பெரிய மவராஜா அரண்மனை இவரு காமிக்கலன்னா தெரியாது பாரு. காலயில பப்பரப்பேன்னு கைய கால விரிச்சு தூங்கிட்டு, எங்கிட்ட வீராப்பப் பாரு நாய்க்கி. அங்கன உன்னைய வைச்சுதான் மாமனுக்கும் அத்தைக்கும் பொழுதே விடிஞ்சிருக்கு... போ.. போ.. ஏம்ல போயும் போயும் மொத வீட்டுக்காரப் புள்ள பேரையா பச்ச குத்திட்டுவந்து நிப்ப...”

“யாங்.. அவளுக்கென்னட்டீ. உன்னையவிட சோப்பா இருக்கான்னு பொறாமையில பொங்காத”

“க்கும்... பொங்குதாவ. தங்கச்சிக்காரிக்கிட்ட வாயப்பாரு. இன்னைக்கு முழுசும் உன் வீட்ல ராமாயணம்தான்டோய். எனக்கென்ன வந்தது. வாங்கியழு” சிரித்துக் கொண்டே தவளைப் பானையில் அடித்து நிரம்பிய தண்ணீரில் கொஞ்சம் நாதன் முதுகில் விசிறியடித்தபடி நகர்ந்தாள் சரஸ்வதி.

நாதனுக்கு ஆறு வயது சரஸ்வதிக்கு மூன்றுவயது இருக்கும்போது, தாயைத் தன் கண்முன்னாலே அப்பா மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததை நேரிலே பார்த்தவர்கள். பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது, “எங்கம்மாவ எங்கப்பாதான் எரிச்சுக் கொன்னார்” என்று மதலை மாறாமல் சாட்சி சொல்லியபின், தாயுமில்லாமல் தந்தையுமில்லாமல் நின்ற பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்தது அவர்களது தாய்மாமன் ரவியும் அத்தை வேணியும்தான்.

“எங்கலபோற காலைலே?”

“ஆச்சி சீனி வாங்க கடைக்குப் போவ வரச் சொன்னிச்சி...”

“சரி போயிட்டுவா..”

வாசலுக்குப் பக்கத்தில் நகர்ந்தவனிடம், “கையில என்னாதுல அது..?” என்றார் ரவி.

“ஒண்ணுமில்லையே” கவனமாய்க் கைகளை மறைத்துக் கொண்டான்.

முதல் அறை திம்மென்று விழுந்தபோது, நாதன் கீழே விழுந்துக் கிடந்தான்.

“திமிரெடுத்து திரியுதியோ... அப்படி கேக்குன்ன. ஒழுங்கா படிக்கப்போனமா வந்தமான்னு இல்லாம சேட்ட. வெளுத்துப் போடுவேன் வெளுத்து..”

அடுக்கணையில் வேணியின் காதுகளில் மட்டும் அந்த முதல் அறை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. இனி பாளையத்தாளே வந்து வம்புக்கு நின்றாலும் வேணி வாயாடி நின்று மல்லுக்கட்டி விடுவாள். அவளுக்குத் தேவையெல்லாம் இந்த பிள்ளைகளைப் பாசங்காட்டி வளர்க்கலாம். ஆனால், கண்டிக்காமல்விட்டு கெட்டுப் போய்விட்டதாகப் பேர் வாங்கிவிடக்கூடாது என்கிற அக்கறை மட்டும் தான்.

***
“யக்கா விசயந்தெரியுமா... நம்ம மேலத்தெரு கடைசி வீட்டுப் பயல அவம் மாமம் ரவி போட்டு அறை கொன்னுட்டானாம்'..”

பார்வதி என்ற கதைசொல்லி முதல் பொறியை சொக்கத்தங்கத்திடம் உரசிவைத்தாள். சொக்கத்தங்கம் அளவுக்கு வதந்தி பேச ஊருக்குள் வேறு யார் இருக்கா?

“ச்சோ! தாயில்லாத புள்ளையாச்சே! ஏம் அடிச்சானாம்...?”

“அதையேம் கேக்கிய.. சித்ரா மவ இருக்கால்ல. அதாம் பாளையத்தா பேத்தி. அந்த புள்ள பேர இவம் கையில பச்சி குத்தி வைச்சிருக்கானாம்.”

“அட எளவெடுத்தவனே. அவனுக்கு வேற புள்ளையலே கெடக்கலியா! அதுசரி முளைச்சு மூணு எல விடும்முன்னே எப்புடி கொழுப்பெடுத்து அழையுதுவ பாரு...”

“நாஞ்சொன்னா பொல்லாப்புன்னு ஆடுவாவோ. மனசு கேக்கல.. சின்னப் பிள்ளைவ என்னம்மோ செஞ்சி அதுக்கு பெரியாள்க மண்ணள்ளித் தூத்திட்டு கெடக்கக்கூடாது பாருங்க.”

“சரித்தாம் பார்வதி. நமக்கு எதுக்கு ஊராவூட்டு வெவகாரம். என்னம்மோ. சோறு கீறு பொங்குனியா.”

“கருசலாங்கண்ணி வதக்குனேன். கஞ்சி இருக்கு. குடிச்சிட்டு காலேல வண்டிக்கு வேலைக்கிக் கௌம்பணும்”

“கெதியா போய்ட்டு வா”

அவர்கள் பேசிமுடிக்கவும் கீழத்தெரு முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளுக்குள் மூழ்கியது. சொக்கத்தங்கம் மண்ணெண்ணெய் நிரப்பியிருந்த சாராயப் புட்டியின் மூடிக்கு மேள் நீட்டிக்கொண்டிருந்த திரியில் தீக்குச்சியை உரசி வைத்தாள்.

வெளிச்சம் கம்மலாகப் பரவத் துவங்கியது.

***

“என்ன பாளையாத்தக்கா சும்ம ஒர்க்கார்ந்திருக்கீய... சோறாக்கலீயா” சொக்காத்தா சொக்குப்பொடி வார்த்தைகளோடு மறுநாள் காலையிலே களம் இறங்கியிருந்தாள்.

“வாபிள வா, இப்பத்தான் வழி கண்ணுக்குத் தெரிஞ்சிதா? பேத்தியாளுக்கும் பேரனுக்கும் ஆளுக்கு ரெண்டு இட்லியை ஊத்திக் கொடுத்து, பள்ளிக்கூடம் அனுப்பிட்டு, வெயிலா இருக்கேன்னு நடேன்னு ஒக்காந்திருக்கேன்”

“ஆமக்கா வெயில் என்ன உங்க வூட்டு வெயிலு எங்க ஊட்டு வெயிலா அடிக்குது. அடுப்ப பத்த வைக்க வேணாம். உலைய அப்டி வாசல்ல வைச்சா கொதி வந்துரும் போல. ஆமா, எம் மருமவ இருக்காளா? செத்தோல நீச்சதண்ணி கொண்டாரச் சொல்லுங்க. எம் மருமவ கையால தாகத்துக்கு குடிப்போம்”

“ஏ ராமி”

“என்னா ஆச்சி?”

“கொஞ்சம் சொம்புல நீச்சதண்ணி கொண்டு வா!”

“ஆங்! இந்தா வாரேன்”

“உள்ள உக்காந்து படிக்குதாளோ”

“எங்க.. வீட்டுல ஒரு வேலை செய்யாம படுத்து கெடக்கா”

“ச்சீ.. கட்டிக்கிட்டு இன்னொரு வீட்டுக்கு போற புள்ள இப்படி இருக்கலாமா? யக்கா ஒரு சேதி கேட்டியளாக்கும். அந்தக் மேவீட்டுல ஒரு பொறுக்கி ஒன்னு அலையுது தெரிமா?”
“யாரச் சொல்லுத”

“அதாம் அந்த கட்ட ரவி மருமவம் ஒரு காக்காக்குஞ்சி”

“அந்த பயலா! என்னவாம்? மோட்டர் வண்டில டுர்ரு டுர்ருன்னு இங்குட்டும் அங்குட்டும் பறப்பான”

“அந்தப் பயதே. வௌங்காத பய. எம் மருமவ பேர நெஞ்சிலே பச்சக் குத்திருக்கானாமாக்கா”

“என்ன சொல்லுத வௌங்க மாட்டுக்குத, ஓம்.. மருமவளயா?”

“எம்மருமவன்னா வேறாரு இருக்கா? அதான் ஒங்க பேத்தி ராமி பேரத்தான் பச்சக் குத்திகிட்டு திரியுதானாம். யார் யார் காதுக்கோ போய் கடேசியா எனக்கு வந்திச்சி... நீங்க ஒன்னும் வெசனப்பட்டுக்காதீய.”

“...”

“சேரி நா வாரேன். யாத்தா மருமவளே இந்தா செம்பு உங்கையால நீத்தண்ணி குடிக்கணும்னு இந்த அத்தைக்கு எழுதி இருக்கு. யக்கா வரட்டுமா..”

வெயில் இன்னும் எரிகிறது.

***

“ஏண்டீச் செறுக்கியுள்ளேளா! புள்ள வளக்கியலோ புள்ள. எந்த காட்டுப்பயல அவன், எம்பேத்தியா பேரச் சொல்லிட்டுத் திரியுத மூதி.கொள்ளைல போறவளே வெளிய வாங்கட்டீ” பாளையத்தாள் அகங்காரங் கொண்டவளாய் ரவி வீட்டு வாசலில் நின்று கொக்கரித்தாள்.

“கண்ட பேச்செல்லாம் இங்கன வந்து பேசாதீய ஆமா. எங்கூட்டுப் புள்ளைய ஒன்னும் அந்த அளவுக்கு மெனகெட்டுப் போய்டல. ஒங்க புள்ளய போயி மொதல்ல ஒழுங்கா வளங்க.”.

“ஓடுகாலி மவள. எம்புள்ளேல வளக்கச்சொல்லித் தாரியோ. ஊமக்கொட்டாம் மாதி இருந்துட்டு வௌங்காத வேல பாக்கியளோ”

“ஆமா இதான் எங்க வேலசோலி. அந்த மேனாமினிக்கிக்கு இன்னும் எத்தனைப் பேரு கேக்குதோ.” வேணியும் பதிலுக்கு பம்பரமாடினாள்.

“ச்சீ.. வாயக் கழுவுடி வெள்ளக்கோயில்ல போறவளே! எம் பேத்தியப் பேச உனக்கும் ரோக்கித இல்ல உங்குடும்பத்துக்கும் ரோக்கித இல்ல நாரச் சிறிக்கி...”

“ஆமா நாங்க வெள்ளக்கோயில்ல போறோம். இவளுவோ வைரம் பாஞ்சி இங்கனயே கெடக்கப் போறாளுக! பொட்டச்சிய கண்டிக்கத உட்டுட்டு எங்கிட்ட வந்துட்டாவோ. அவன் ஆம்பளை புள்ள என்னவுஞ்ச் செய்வான். முடிஞ்சா ஒம் பேத்தியப் போய் பூட்டி வையி. அத விட்டிட்டு இங்கன கொரலெழுப்பாத அப்புறம் வாரிய பிஞ்சிரும்.”

“செருப்பாலடி மூதி! யார வாரிய பிஞ்சிரும்ங்க. நீ மண்ணழிஞ்சுதான் போவ. பெத்ததுவ இல்லாத புள்ளையல தறுதலையா ஆக்கி மொத்தத்தையும், விழுங்குனவளுவ. வாரிய பிஞ்சுருமாம்ல வாரிய.. கண்டாரோலி”

“இங்கரு இனி உனக்கும் மரியாத இல்ல. உவ் வயசுக்கும் மரியாத இல்ல பாத்துக்க. உம்மவ எங்க எங்க எவம்கூட நின்னு பல்லக் காட்டுதா. உம்பேத்தி எங்கெங்க யாரார்கூட சுத்துதான்னு ஊரே நாறுது. நீ யார கண்டாரோலீங்க. மொதல்ல போய் உவ்வீட்டு தறுதலைங்கள எண்ணு. அதுக்கப்புறம் வந்து இங்கன குதி” என்று ஆங்காரமாகப் பதில் சொல்லிவிட்டு வாசல் தட்டியை ஓங்கி அடைத்தாள் வேணி.

“எடுப்பெடுத்தவ என்னப் பேச்சு பேசுதா இதுவ வௌங்குமா நாசமாத்தான் போவும்...”

தெருப்புழுதியைக் கைநிரம்ப அள்ளி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்துக்கொண்டு, வேணி வீட்டு வேலித் தட்டியில் வீசினாள் பாளையத்தாள். சத்தத்தைக் கேட்டு வளவுச் சனங்கள் காம்பவுண்டுச் சுவருக்குள்ளே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டன. யாரும் இடைபுகுந்து யாரோடும் வாய்விடத் தயாராக இல்லை.
இருட்டு நெருங்கும் முன்னதாகச் சண்டையின் சாரம் என்னவென்ற தகவல் ஊர்முழுக்கப் பரவியிருந்தது. ஆளுக்கொரு யூகம் சேர்த்து, தங்கள் நினைவில் இருக்கிற மற்ற பழைய சங்கதிகளையும் இணைத்து குசுகுசுவென வம்பு பேசி ஓய்ந்து போனார்கள்.

பகல் வெக்கையில் களைப்பு கொண்டிருந்த நாய்கள் நான்கைந்து தெருவையே சுற்றிவந்து ஊளையிட்டன.

***

“ஹே! ராமி உன் பெயரையாட்டி நாதன் பச்சைக்குத்திருக்கான் நீ பாத்தியா...”

“எனக்கெப்படி தெரியும். ஆனா எங்க ஆச்சிதான் சொல்லுச்சி”

“ஆனா, உன் பேரதான் எழுதினான்னு நீயும் எப்படி சொல்ற. நம்ம கிளாஸ்லதான் ரெண்டு அபிராமி இருக்கீங்கள்ள”

“யேய்! அவன் எங்க ஊரு. வளவுதான் வேற வேற. மத்தபடி ரெண்டு பேரும் ஒரே தெருதான். பின்ன ஏம்பேர குத்தாம எவ பேரையோவா பச்ச குத்தியிருப்பான்”

“அப்போ நீயும் அவனை லவ் பண்ணுதியா?”

“ச்சீ.... வாயைக் கழுவு. எங்க ஆச்சி மட்டும் இதக் கேட்டுச்சு அவ்ளோதான்”

“அப்போ நீ லவ் பண்ணாமதான் உன் பேரை எழுதியிருக்கானா”

“நான் பண்ணல. ஒருவேள அவன் பண்ணிருக்கலாம்ல.”

“அதெப்படி சொல்ற.. அவன் உன்கிட்ட சொன்னானா”

“சொல்லல.. ஹே.. இப்ப நீ சும்மா விடப் போறியா இல்லையா? விட்டா நீயே ஸ்கூல் புல்லா பரப்பிடுவ போல...”

“ஆமாடி! இனிமேதான் பரப்பணுமாக்கும். இந்நேரம் பெல்சி மிஸ்க்கே தெரிஞ்சுருக்கும்..”

“அய்யோ ஷீலா..! நான் இன்னைக்கு செத்தேன். ஹே.. நான் என்னப்பா செய்யட்டும் நான். எதாச்சும் ஐடியா குடேன்.”

“ஓவரா சீன் போடாத. அவன்தான மாட்டிருக்கான். கேட்டா அவனத்தான கேக்கப் போறாங்க, உன்னையவா கேப்பாங்க. பேசாம கம்முன்னு இரு” ஷீலா என்னும் வகுப்புத் தோழி அபிராமியை வேண்டுமென்றே சீண்டிக் கொண்டிருந்தாள். வகுப்பறை முழுக்க இருவரும் பேசுபொருளாகியிருந்தார்கள்.

***

“ஏம் மாப்ள... உங்க மாமா அற வெளுத்துட்டார்போல..”

“ஏண்டா நீயும் வேற கடுப்ப கிளப்பி உட்டுக்கிட்டு”

“பின்ன ஸ்கூல் புல்லா, நாதன் லவ்ஸ் அபிராமின்னு எவண்டா கிறுக்குனான். உனக்கு நீயே பப்ளிசிட்டியா...?”

“காவியக்காதல் போலடா... அதான் கரிக்கட்டையால சத்துணவு கட்டிடத்திலே கிறுக்கினான். எம்ப்பய வாயெல்லாம் பொய்யப் பாரு”

“இல்ல ராமஜெயம் நான் எழுதலடா அதெல்லாம். பச்ச குத்தினதே சும்மா வெளையாட்டுக்குத்தான் பண்ணேன். அது இவ்வளோ தூரம் போவும்ன்னு நான் எங்க கண்டேன். நீயே பார்த்திருக்கேல்ல. அந்த புள்ள வீட்டவிட்டே வராது. ஸ்கூல்ல பார்க்குறதோட சரி. சத்துணோவுக்கூடத்துல பேசப்போனாலே ஓடிரும்”

அரவிந்தனுக்கு நாதனை வாருவது ஒன்றும் அத்தனைக் கடினமானதாய் இல்லை. ராமஜெயமும் கூடவே சேர்ந்து உறுமியடித்தான்.

“சரி மாப்ள் பச்ச குத்தினது நெஞ்சிலியா இல்ல குஞ்.. குஞ்.” அரவிந்தன்.

“யோல்..” -நாதன்.

“ஹ்ஹ்.. இல்ல மாப்ள வலிக்கும்ல்லயா என்ன செஞ்ச” -அரவிந்தன்.

“அவுங்க மாமன்போட்டு பொளந்தத விடவா அந்த வலி பெருசு.”

“போங்கடா டீச்சருக்குத் தெரியாம காப்பாத்த ஏதாச்சும் ஐடியாக் குடுப்பீங்கன்னுப் பார்த்தா என்னையவே ஓட்டிக்கிட்டு?”-நாதன்

“கோச்சுக்காத மாப்ள! சரி நீ கையில குத்துனதாத்தானே நேத்து எங்ககிட்ட சொன்னே... ஆனா, ஸ்கூல் புல்லா நெஞ்சுல குத்திருக்கேன்னு ஔறிட்டு அலையுதானுவளே ஏம்ல?”

“இது என்னல இது. நமக்கு பாடத்துல டவுட்டு வராது. பச்சை குத்துனதுல டவுட்டு வருது”

“யோல் சேப்பல்கிட்ட நிக்கது ராமி தான. மாப்ள உன் ஆளுதான் தனியா நிக்கா போலுருக்கு. நீ போ நாங்க இங்கனே நிக்கோம்.”

***

“நாதன்..”

“சொல்லு ராமி... நீயே என்கிட்ட பேசுற! அதிசயமாருக்கு.”

“சாரிடா.. என்னாலதான எல்லாம்...”

“அய்யய்ய நான் பண்ணதுக்கு நீ என்னப்பா பண்ணுவ...”

“இல்லல்ல தப்பு எம்பேர்லதான். நான் உன்கிட்ட அப்படில்லாம் பண்ணாதன்னாச்சும் சொல்லியிருக்கணும்ல... உங்க மாமா ரொம்ப அடிச்சாங்களா.. ரொம்ப வலிச்சிதா”

“மாமா அடிச்சதெல்லாம் வலிக்கல நீ ஏன் மூணு நாளா ஸ்கூலுக்கு வரல. அதான் ரொம்ப கடுப்பாருந்துச்சு. வீட்லயே வச்சி படிச்சியோ”

“எங்க படிக்க. ஒரே சண்டையும் ஏச்சும்தான். சரி... எங்க ஆச்சி திட்டினதை எல்லாம் மனசில வெச்சிக்காத என்ன அது எப்போவும் அப்படித்தான்.”

“நீயும் எங்க அத்தை திட்டினதை மனசில வைச்சிக்காத என்ன”

“ஓய்.. நான் சொல்றதையே உல்டா அடிச்சு எனக்கு சொல்றியா உன்ன.”

“பார்த்து பார்த்து என்ன அடிச்சி உன் கை வலிச்சிரப் போகுது”

“ரொம்பதான். ஆமா.. நெஜமாவே என் பேரைதான் பச்சக்குத்தினியா?”

“ஏன் அப்டி கேக்க..? உனக்கே எம்மேல சந்தேகமா?”

“அதுக்கில்லடா.. ஷீலா சொன்னா.. நம்ம க்ளாஸ்லயே... சரிவிடு. எனக்கு ஒண்ணு கேட்டா பண்ணுவியா?”


“சொல்லு ராமி. என்ன செய்யணும். டீச்சர்ட்ட சொல்லாம பாத்துக்கணுமா?”

“அதில்லடா. நான் இதுவரைக்கும் நான் பச்சக் குத்தினதை பார்த்தே இல்ல.. ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு ஒருவாட்டி அதைக் காட்றியா!”

அவள் கேட்ட தருணத்திலேயே இடைவேளை நேரம் முடிந்ததை அறிவிக்கும் மணிச் சத்தமும் அதிர்ந்தது. ஸ்டாப் ரூமில் இருந்து பிரம்பும் கையுமாக பத்தாம் வகுப்பு ‘சி' செக்‌ஷன் இருந்த வராந்தாவை நோக்கி, பெல்சி டீச்சர் நடந்து வந்துகொண்டிருந்தார். வகுப்பறையின் பின்வாசல் பக்கம் நின்றுகொண்டிருந்த அரவிந்தனும் ராமஜெயமும் நாதனைக் கைகாட்டி எச்சரிக்கை பண்ணினார்கள்.

“பெல் அடிச்சிடுச்சு ராமி நாளைக்கு காட்டவா”

“போடா.. ஒன்னும் வேணாம். நானா வந்து கேட்டேன்னு தானே இப்டிப் பண்ற..”

“இல்லப்பா இன்னைக்கு பனியன் போட்டு வரல.. நாளைக்கு காட்றேனே ப்ளீஸ்”

முகத்தைச் சுருக்கிக்கொன்டு அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் நடந்த அபிராமியையே பார்த்துக் கொண்டிருந்த நாதன் தன் நெஞ்சுச் சட்டையை விலக்கி எதுவுமே எழுதாத வெற்று மார்பை குறுகுறுப்பாகப் பார்த்தான்.

***

“என்னல... இப்படி மொணங்கிக்கிட்டு கெடக்க..”

காலையில் போர்வையைச் சுருட்டிக்கொண்டு அம்மிக்குளவி போல உருண்டு கொண்டிருந்த நாதனை அவன் தங்கச்சி சரஸ்வதி ஒரே எத்தாக மிதித்து எழுப்பினாள்.

“பேசாமப் போறியா இல்லய”

“கேக்கம்லா, சொல்லு என்ன செய்து. காச்சலடிக்கா?

“உவ்வேல எதுவுண்டோ அதப்பாரு.”

“இப்ப நீ சொல்லப்போறியா இல்ல, மாமன்ட்ட சொல்லட்டா...”

“சொன்னாச் சொல்லு போ!”

“இரு, அத்தையை கூப்புடறேன்”

“யே யே சரசு வேணாம். இங்க வா சொல்றேன். இங்க பாரு.”

“ஸ்ஸஸ்... என்னல இது இப்படி வீங்கி போய் இருக்கு... இப்ப எதுக்கு நெஞ்சுலயும் அவ பேர பச்சக்குத்திட்டு வந்து நிக்க.. நீ ஒழுங்கா கெடக்க மாட்டியா...”
“அதில்லட்டீ. அன்னைக்கு நான் கையில ராமி பேர பச்சக் குத்திட்டு வந்தேம்ன்னு மாமா திட்டுச்சில்லா”

“ஆமா”

“இங்க பாரு”

“என்னண்ணே மொட்டக் கையா இருக்கு.? எங்க போச்சு அவ பேரு?”

“அது நிஜமான பச்ச இல்ல... சரசு. வேப்பங்கொட்ட பால் இருக்குல்லா. அதுல எழுதி கரிய தடவிருந்தேன். அதை பச்சன்னு நெனைச்சுருச்சு அத்த..”

“அடநாயி... இத அன்னைக்கே வாயத் தெறந்து சொல்லிருக்கலாம்லா. அத்த அந்த சண்ட போட்டுச்சு ஒனக்காவ. சரி அப்போ அப்படியே விட்டிருக்கலாம்லால இதெதுக்கு மறுபடியும் இப்போ...?”

“இல்ல ராமி எங்கிட்ட வந்து பேசுச்சா. நான் அவள லவ் பண்றேன்னு சொல்லறதுக்கு முன்னாடி அவகிட்ட நாளைக்கு பச்சக் குத்தினத காமிக்குறேன்னு சொன்னேன் அதான்”

“நீ உருப்புடவே மாட்ட.. கல்லூளி மங்கா”





Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்