கலகம் பிறக்குது





காடு காடாக பருத்தி வெடித்துக் கிடந்தது களத்தூர் கிராமம். அதிகாலைப் பனி வாட்டம் நின்றுபோய் ஊரின் மீது வெளிச்சம் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. வடக்கூர் குடியிருப்பில் அந்த நேரத்திலே கடும் சலசலப்பு துவங்கியிருந்தது. தெருக்களின் முனையில் அசைபோட்டுக் கிடந்த கன்றுகாலிகள் என்னமோ ஏதோ என்று எழுந்து நின்றுகொண்டு திக்குதிசை தெரியாமல் மிரண்டு விழித்தன. 

முருகன் கோயில் திடலில் வாட்டசாட்டமான இளைஞர்கள் சிலபேர் ஓங்கி ஓங்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிங்கன் செட்டியும் கந்தையாவும் கழுவனும் தவிர மற்றவர்கள் அவ்வளவாகப் பரிச்சயமில்லாத முகங்கள். கூட்டத்தாருக்கு, அடுத்து ஆகவேண்டியது என்னென்ன என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்க, சித்திரங்குடிக்காரர் மயிலன் சேர்வை தன் கருப்புக் குதிரையோடு பாய்ச்சலாக வந்திறங்கினார். 

ஆஜானுபாகுவான தோற்றம். அரையில் மடிப்புவேட்டி. வார் பிலுட்டு, தோல் செருப்பு, அடையாளத்தை மறைக்கும்படி தலைப்பாகையின் ஒரு பிரியால் முகத்தை அரைச் சுற்றுக்கு மூடியிருந்தார். இடுக்கில் தெரிந்த கண்களில் செங்குளவியைப் போல மின்னும் பார்வை. ஈட்டியும் வல்லயமும் பிடித்துப் பழகிய கைகளில் வெலவெலக்கும் துப்பாக்கி முளைத்திருந்தது. 

சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை என்று அந்தச் சேத்திரம் முழுக்கவே அப்போது அனலாகத்தான் இருந்தது. ரணகள பூமி என்று தெரிந்தேதான் தனது கைத்தறித் துணிக் கிட்டங்கிக்கு வலுவான காவலைப் போட்டு வைத்திருந்தது பிரிட்டிஷ் ஜான் கம்பெனி. என்ன இருந்தும் என்ன? யாரும் எதிர்பாராத நேரத்தில் திமுதிமுவென நாட்டுத் துப்பாக்கிகளோடு சித்திரங்குடிக்காரரின் ஆயுதப் பட்டாளம் கிட்டங்கியின் உள்ளே நுழைந்தபோது, உறக்கச் சடவிலிருந்து சிலிரிந்த்த சிப்பாய்கள் அடுத்து என்ன செய்வது என்றறியாமல் திகைத்து மாய்ந்தார்கள். 

‘டணார் டணார்..’ என்றது துப்பாக்கி வெடிச் சத்தம். விட்டத்துக்குக் கீழாக, கல்மாடத் தூணை ஒட்டிக் காத்துக் கொண்டிருந்த சிப்பாய்க்காரன் சுப்பாராம் வெடுக்கென கிட்டங்கியின் வாசலுக்கு ஓடி வந்தான். விஷயம் அவன் தலைக்கேறும் முன்னே வாய் தானாக, “கலகம் கலகம்...” என்று கத்தத் தொடங்கியது. வெடிச் சத்தம் கேட்ட வேறு சிப்பாய்கள் காவல்பிறையில் இருந்து வாசல் மாடத்தை நோக்கி ஓட்டமெடுத்தார்கள். அடுத்த கணமே படீர் என்று சுப்பாராம் முதுகில் நல்ல ஈடு விழுந்தது. ‘ஓ...அம்மோ!’ என்றபடி குப்புற விழுந்தான் அவன். மேல்மாடத்தில் நின்ற சிப்பாய்கள் சிலபேர் தங்கள் துப்பாக்கிகளை எடுத்துச் சுடுவதற்கு ஆயத்தமானார்கள். பல்லுபோன அந்த மஸ்ஸில்லோடர் துப்பாக்கிக் கலனுக்குள் கரிமருந்தைப் போட்டு இடித்துக் கட்டுவதற்குள் மொத்த கிட்டங்கியையும் ஆயுதப்பட்டாளம் சிறைபிடித்துவிட்டது. 

களத்தூர் கச்சேரி சிறைபிடிக்கப்பட்ட தகவல் வெளிக்காற்றில் பரவுவதற்குள் கிட்டங்கி அறையில் இருந்த தானிய மூட்டைகளை ஒவ்வொன்றாக வெளியிலே எடுத்துப் போட்டுவிட்டு, தறித்துணி மூட்டைகளை மட்டும் ஒன்றுவிடாமல் தீயிலிட்டுக் கொளுத்தச் சொன்னார் சித்திரங்குடிக்காரர்.

கந்தையா சிறைபிடிக்கப்பட்ட தலைகளை எண்ணினான். ஒன்று இரண்டு மூன்று மொத்தம் முப்பபதினாலு பேர். “வக்கத்தவனுக்குப் பொட்டிதூக்க எதுக்கடா இத்தனை பொன்ன்ஞ்சட்டிகள்” என்று அத்தனைபேரையும் எட்டி உதைத்து அவர்களை கச்சேரி மைதானத்தில் கட்டிப் போடச் செய்தான். 

“ம்ம் அடுத்த வேலை விரசா நடக்கட்டும்” என்று பட்டாளத்தைப் பார்த்துக் கட்டளைபோட்ட சித்திரங்குடிக்காரர் தன் குதிரையில் ஏறி மேற்குக் காட்டுக்குள் மறைந்தார்.    

***

“ஏரா, வண்டில என்ன பாரம்? அத்தனையும் மறிச்சு ஓரங்கட்டி நிறுத்துன்னேன்.” 

முன்னத்தி காளை வண்டியின் நுகத்தடி சேர்மானக் கட்டையில் உட்கார்ந்திருந்த ஆசாமியைக் கீழே இறங்கச் சொல்லி மிரட்டினான் சின்னத்துரை. 

கட்டியிருந்த உருமாலை இறக்கி, விவகாரம் புரியாதவனாக கூட்டத்தாரின் முகங்களைக் கவனித்தான் வண்டிக்காரன் பண்டாரம். இவர்கள் யாரும் களவெடுக்க வந்தவர்கள்போல் இல்லை. திடகாத்திரமான உடம்பைப் பார்த்தால், மல்லுக்கு நின்று மோதுபவர்கள் போலவும் தெரிந்தது. எதற்கும் பணிந்துபோய் தெரிந்துகொள்வோம் என்று தன் வண்டி மாடுகளை இழுத்துக் கட்டிவிட்டு, கீழே இறங்கி வந்து சின்னத்துரைக்குக் கும்பிடு வைத்தான் மூக்கன். 

பட்டாளத்திலிருந்த ராக்கு, முன்னால் நின்ற வண்டிக்குடத்தின் ஆப்பை கையால் உருவி எடுத்தான். இன்னும் ஏழெட்டுபேர் பின் வரிசையில் நின்றுகொண்டிருந்த மற்ற வண்டிக்காரர்களைக் கீழே இறங்கச் சொல்லி பாரங்களைப் பரிசீலனை பண்ண ஆரம்பித்தார்கள். 

பண்டாரம் தானாக முன்வந்து வாய்திறந்தான்.

“ராமநாதபுரம் கம்பெனி கிட்டங்கிக்கு தறித்துணி கொண்டுபோய் இறக்கிவிட்டு, வழியிலே கால் பாரத்துக்கும் குறைவா சோளம் ஏத்திட்டு வடகரை ஜமீனுக்குப் போகிற வண்டிங்க இது” 

சின்னத்துரை அவனைக் கூர்மையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒவ்வொரு வண்டியிலும் பூட்டப்பட்டிருந்த சோடி மாடுகளைக் கவனித்தான். ஒரு ஏல் சொன்னால் போதும் எவ்வளவு பாரம் ஏற்றினாலும் சிட்டாய் பறப்பேன் என்பதுபோல திமில் நிமிர்த்துக்கொண்டு நின்றன அந்த ஒல்லிக் காளைகள். அவை ஒவ்வொன்றுக்கும் தலைமையேற்றது போல முன்வண்டியின் ஜதை, மணி பூட்டி வில்லாய் நின்றுகொண்டிருந்தது. சின்னத்துரை, அதன் தாடைகளை ஒரேவாக்கில் தடவிக் கொடுத்துக்கொண்டே பேசினான். 

“இன்னையிலிருந்து பதிநாலாம் நாள் அபிராமம் கம்மாய்க்குத் தென்புறம் இந்த வண்டிகளும் மாடுகளும் பத்து கண்டி பாரம் நெல் மூட்டைகளும் காத்திருக்கும். அங்கே வந்து எல்லாத்தையும் பத்திக் கொண்டு போகலாம். இது சேதுச்சீமை மறவன் சித்திரங்குடிச் சேர்வைக்காரன் பேரால் காப்பாளி வீரமாயன் மகன் சின்னத்துரை கொடுக்கிற வாக்கு. இது எந்தக் கும்பினியானுக்கும் அவனுக்கு கால்பிடிக்கும் எந்தப் படுக்காளிகளுக்கும் கட்டுப்படாத உத்தரவு. இப்போது வந்தவழியே ஊரைவிட்டு வெளியேறுங்கள்.”

மாடுகள் சொர் சொர் என்று மூத்திரம் பெய்யத் தொடங்கின.

வழிமறித்திருப்பது யார், அவர்கள் வழிநோக்கம் என்ன, எதற்காக வண்டிமாடுகள் அவர்களுக்கு இப்போத் தேவை என்கிற எல்லா விபரமும் நொடியில் புரிபட்டுவிட்டது பண்டாரத்துக்கு. நெடுங்காலத்துக்குப் பிறகு களத்தூர் சீமை ஒரு பாரிய கலகத்துக்குத் தயாராகியிருக்கிறது. சேதுபதி படையின் மயிலன் சேர்வை களமெடுத்து நடத்துகிறார். திருச்சி கோட்டைச் சிறையில் அடைபட்டிருக்கும் இளைய சேதுபதி விவகாரம் தான் இதெல்லாத்துக்கும் காரணம். வடகரை ஜமீனுக்கு அவரோடு ஆவதில்லை என்றாலும், கும்பினி அட்டூழியங்களுக்குப் பிறகும் ஜமீனும் எப்போ எப்போ என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுக்கான மறைமுக உதவிதான் சம்பந்தமே இல்லாமல் இந்த வழியில் வண்டிகளை ஓட்டிவரச் செய்திருக்கிறார் ஜமீன்.. மளமளவென்று சம்பத்தின் தொடர்புகளை மனதுக்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டான் பண்டாரம். 

சின்னத்துரை கம்மென்று ஒரு செறுமலைப் போட, பண்டாரம் விழிப்படைந்து, தனது பின்மாட்டுக்காரர்களுக்கு அவரவர் வண்டிகளைக் கைவிடும் விதமாகச் சைகை காட்டினான். பிறகு மொத்த பேரும் வந்த லெக்கிலே திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். அதேநேரம் களத்தூர் கச்சேரி இருந்த திக்கிலிருந்து திமுதிமுவென தீப்புகை வான் நோக்கி எழுந்துகொண்டிந்தது.

*

தெக்கத்திச் சீமைகளில் பிரச்சினைகள் வெடிக்கத் துவங்கியது இன்று நேற்று நடக்கிற காரியமா? பாண்டிநாட்டு அரியாசனம் ஒன்றுக்குள் ஒன்றாக அடித்து மாய, கில்ஜி சுல்தான் புதுப் பெண்டாட்டி கட்டிக்கொள்வதைப்போல, தன் ஆட்சி வரம்புக்குக் கீழே பதினேழாவது மாகாணமாக பாண்டி நாட்டை வலுக்கட்டாயமாகச் சேர்த்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே, சூரத்தில் பட்டறை ஆரம்பிக்கவும், வங்காளச் சக்கரவர்த்தியிடம் வியாபாரம் பண்ணுவதற்கும் சுங்கவரிச் சலுகை பெறவும் ‘ஃபர்மான்’ எழுதி வாங்கிக்கொண்ட ஜான் கம்பெனி, இப்போது நவாபின் கழுத்தில் காலைப் போட்டுக்கொண்டு சேதுச் சீமையிலும் அடாத அட்டூழியங்களை நிகழ்த்தி முடித்து அப்போதுதான் களைத்திருந்தது. 

அப்படி அவர்கள் களைத்து ஓய்ந்த சமயத்தில், சித்திரங்குடிச் சேர்வையின் இந்தப் பட்டாளம் இப்படி ஒரு தலைவலியை உண்டாக்கப் போவதுபற்றி எதுவும் தெரிய வந்திருக்காத ராமநாதபுரம் கலெக்டர் லூசிங்டன் துரை அரண்மனைப் பவுனியில் காலாற நடைபோட்டுக் கொண்டிருந்தார். 

திடும்மென குதிரையிலிருந்து தாவி இறங்கி அவர் முன்னால் வந்து நின்ற தபால்சேவகன், களத்தூர் கச்சேரி தாக்கப்பட்ட செய்தியை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க தான் கொண்டுவந்த அவசரச் செய்தியைக் கலெக்டர் துரையிடம் சொல்லத் தொடங்கினான்.

‘களத்தூர் கிட்டங்கியைத் தாக்கி, தறித் துணிகளுக்கு நெருப்புவைத்து அழித்து, சிப்பாய்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அங்கிருந்த சொற்ப ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், தானிய மூட்டைகளையும் கைப்பற்றிக் கொண்டு, ஊருக்குள் நுழையும் வழிகளை மறித்துவிட்டு, அடுத்த இலக்காக அபிராமம் கச்சேரியை நோக்கிச் சென்றிருக்கிறது கலகக்காரர்களின் கேங். கம்பெனி ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திருச்சி சிறையில் இருக்கும் சேதுபதி மன்னனின் தூண்டுதலின் பேரால் இந்தக் கலகம் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கலகத்தை முன்னுன்று நடத்துபவன் சித்திரங்குடிக்காரன் என்று தகவல் கிடைத்திருக்கிறது.’

பதறிப்போன கலெக்டர் லூஸிங்டன் முதல்வேலையாக ராமநாதபுரம் மாளிகையின் காவல் படையில் ஒரு பிரிவை களத்தூருக்குச் செல்லும்படி விரைவுபடுத்தினார். 

சம்பவங்கள் அதற்குள் கைமீறியிருந்தன. கிட்டங்கி மொத்தமும் சாம்பலாகிக் கிடந்த அதே நேரத்தில், அங்கிருந்த தானிய மூட்டைகள் மைதானத்தில் கொட்டிக் குவிக்கப்பட்டிருந்தது. மூட்டைகளில் பேர்வாதி மஞ்சள் சோளமும் மீதிப்பாதி வெள்ளைச் சோளமும் கம்பும். பேருக்கு ஒன்றிரண்டு நெல்மூட்டைகள். ஊரார் திரண்டிவந்து அவைகளைத் தங்கள் மடி நிரம்புகிற அளவுக்கு அள்ளிக்கொண்டு போனபடியிருந்தார்கள். இன்னொரு பக்கம் ஆம்பிளையாள் கண்ணாரன் தலைமையில் ஏற்பட்ட சிறுகூட்டம் ஊர் முனைக்குக் கத்தி, அரிவாள் வேல்கம்புடன் கிளம்பியிருந்தது.

பகல் பொங்கி வரும் நேரத்திற்கெல்லாம், களத்தூருக்கு வந்துசேரும் அத்தனை பாதைகளின் குறுக்கேயும் மரங்களும் கற்களும் சரித்துப் போடப்பட்டிருந்தன. பிறகு ஊருக்குப் பாதுகாப்பாக எட்டு பத்து பேரைக் கல்லும் தடியுமாக நிறுத்திவிட்டு, வேண்டிய மட்டும் இளையவர்களும் பெரியாட்களும் சின்னத்துரை ஓட்டிவந்த காளை வண்டிகளில் கும்பல் கும்பலாய் ஏறிக்கொள்ள, களத்தூரில் இருந்து புறப்பட்ட பட்டாளம் கீரனூர் பாதையில் அபிராமத்தை நோக்கி கெகேவெனப் புறப்பட்டுச் சென்றிருந்தது. 

*

ராமநாதபுரத்தில் இருந்து காமன்கோட்டை வழியாகச் சென்ற மாளிகைக் காவல்படை, கமுதிக்குள்ளேகூட நுழைய முடியாமல் பாதியிலே ராமலிங்க விலாசம் அரண்மனைக்குத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பியிருந்தது. கருவேலமுட்களாலும் பனைமரத் தடிகளாளும் ஓலைப்படல் கொண்டும் பெரும் கற்களைக் கொண்டு பாதைகள் சுற்றிச் சுற்றி மறிக்கப்பட்டு, அதற்கு அந்தப்புரத்தில் அரிவாள்களோடும் வேல்கம்புகளோடும் பெருங்கூட்டம் ஒன்று அவர்களைத் துரத்தி அடித்திருந்தது. கர்னல் மார்டின்ஸ் தாழமுடியாத அவமானத்தோடு களத்தூர் முனையில் நடந்த விவரங்களைக் கலெக்டர் லூஸிங்டன் முன்னாள் குமுறினான். 

ராமநாதபுரம் ஜில்லாவுக்குத் தான் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் இப்படி ஒரு விபரீதச் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை லூஸிங்டனால் கொஞ்சங்கூட ரசிக்கமுடியவில்லை என்பதை எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அவர் முகமே காட்டிக்கொடுத்தது. கடுங்கோபத்தோடு, தன் பணியார்ளர்களை நோக்கிச் சீறினார். 

“ஹூ இஸ் திஸ் இடியட்! ப்ளடி சித்திரங்குடிக்காரன். ஐ வாண்ட் டு நோ ஆல் டீடெய்ல்ஸ் அபவுட் ஹிம்’ எனக் கிராம முன்சீப்பிடம் எகிறிக் குதித்தான். 

அடுத்த சில மணித்துளிகளிலேயே சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை குறித்த விபரங்கள் அவர் மேசையில் அடுக்கப்பட்டன. கூடவே, ஆனால், அதற்குள் அபிராமத்தில் மயிலன் சேர்வையின் பட்டாளம் அடுத்தடுத்து நடத்திய சூறையாடல் குறித்த அவசரச் செய்தியும் அவர் முன்னால் வைக்கப்பட்டிருந்தது. லூஸிங்டனால் தன் வெறிக்கூச்சலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 

கர்னல் மார்டின்ஸ் மெல்லிய குரலில் அவர் கிட்டேவந்து கிசுகிசுத்தான்.

‘நிதானமாக முடிவெடுத்தால் மட்டுமே நம்மால் இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது கலெக்டர் அவர்களுக்கு எனது தாழ்மையான யோசனை’ 

உல்ளுக்குள் ஆத்திரம் எரிந்து கொண்டிருந்தாலும் கர்னல் சொல்வதும் சரிதான், பதற்றத்தில் எந்த முடிவும் எடுப்பது சரியல்ல என்று பொறுமையாகச் சிந்தித்த லூஸிங்டன், ‘நான் இப்போது என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள் கர்னல்’ என்றார் ஆழ்ந்த பார்வையுடன். 

*

“களத்தூர், அபிராமம் கிராமங்களில் நடைபெற்ற மோசமான சம்பவங்கள் குறித்த விசாரணை முடிந்து மறு உத்தரவு வரும்வரை, இந்த இரண்டு ஊர்களுக்கும் சேதுச்சீமையின் அனைத்து கிராமங்களுக்கும் இடையே உள்ள போக்குவரத்துப் பாதைகள் முற்றாகத் துண்டிக்கப்படவேண்டும். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த உத்தரவின் ரகசியம் காக்கப்படவேண்டும்.” 

கலெக்டர் லூஸிங்டன் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட உத்தரவு சேதுச் சீமையின் சுற்றுவழியில் ஊர்களுக்கு மட்டும் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டது. கர்னலின் இந்தத் திட்டம் அவருக்குச் சற்று ஆசுவாசம் அளித்திருந்தாலும், ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவர் தன் மேசை மீதிருந்த  ஜில்லா கெஜட்டின் பக்கங்களைப் புரட்டத் துவங்கினார் லூஸிங்டன்.

ராமநாதபுரம் ஜில்லாவின் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, சேதுச் சீமையில் கம்பெனி வணிகம் பண்ண வழிகொடுக்காமலும், பருத்திக் கொள்முதலில் ஒருதலை வியாபாரம் கூடாது என்று முரண்டு பிடித்தது அதற்காக அவர் கைது செய்யப்பட்டது வரையிலான உள்ளிட்ட பல முந்தைய விவகாரங்களும் கெஜட்டில் குறிக்கப்பட்டிருந்தது. சேதுபதி போல முரண்டுபிடித்த எத்தனையோ பேரை கம்பெனி தன் வழிக்குக்கொண்டு வந்திருக்கிறது. அல்லது ரெகுலேட்டிங் ஆக்ட் மூலம் இருந்த இடம் தெரியாத அளவுக்கு முடக்கியிருக்கிறது. வங்காளமே இதற்கெல்லாம் பாலபாடம். 

ஆனால், தெற்கில் அவ்வளவு கடுமை காட்டவில்லையே கம்பெனி. நவாப் வாலாஜா முகமதலியிடமிருந்து மதுரை, நெல்லைச் சீமைகளின் குடித்தீர்வை வசூலிக்கும் ஏஜெண்ட் அதிகாரத்தை முறைப்படிப் பெற்றுதானே இங்கே நிர்வாகம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். பிறகென்ன இந்த சுண்டைக்காய் பிரதேசம் சேதுபதிச்சீமை மட்டும் தலைவலி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இவர்களுக்கு அப்படி என்ன கம்பெனி மேல் வெறுப்பு. 

சிந்தைனையோடே வாசகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த லூஸிங்டன், தன் மூக்குக் கண்ணாடியின் குவிவு வில்லையை இரண்டொரு முறை வெல்வெட் துணியால் துடைத்துவிட்டு, மீண்டும் கெஜட்டின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தார். அதில் மயிலன் சேர்வை பற்றி முந்தைய கலெக்டர் காலின்ஸ் ஜாக்ஸன் எழுதிய குறிப்பு ஒன்று கலெக்டர் லூஸிங்டனைச் சுறுசுறுப்படைய வைத்தது. 

களத்தூரிலும் அபிராமத்திலும் பறிமுதல் செய்த நெல்மூட்டைகள் அவிக்கப்பட்டு சோறாக்கப்பட்டன. கருங்கிடாய்கள் வெட்டித் தோலுரிக்கப்பட்ட ரத்தவெள்ளம் காய்ந்து கிடந்த இடத்தில், இறைச்சி துண்டுக்காகக் காத்திருந்த காக்கைகள், சோளத்தட்டைகளை மென்றுகொண்டிருந்த காளை மாடுகளின் கழுத்தசைப்புக்கு ஏற்ப, அங்குமிங்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்தன. இருட்டு முட்டும் நேரத்திற்கெல்லாம் பூசணையும் படையலும் தயாரானது. 

பாறையடியில் சேர்வைக்காரருடன் உடன் அமர்ந்திருந்த சிங்கன்செட்டியும் ஷேக் இப்ராஹிம் சாயிபுவும் படைநடத்திய நிலவரம், பொருள் தேவைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். உண்டாட்டைத் துவக்கலாம் என்ற சேதியை சின்னத்துரை வந்து தெரியப்படுத்தியதும் மூவரும் எழுந்து அவனோடு புறப்பட்டுப் போனார்கள். நடுகல் ஒன்று குற்றி வைக்கப்பட்ட காட்டு வெளியில் காலியான சோற்றுக் கலயங்கள் ஒன்றுக்குமேலாகக் குவிக்கப்பட்டு கிடந்தது. படைப்புச் சோற்றை அள்ளி எடுத்து, ஒவ்வொருவருக்கும் பரிமாறச் சொன்னார் சித்திரங்குடிக்காரர்.

ஒரே பகல் பொழுதுக்குள் களத்தூர், அபிராமம், கமுதிப்பேட்டை என்று மூன்று பெரிய ஊர்களைக் கைப்பற்றியிருந்த பட்டாளத்துக்கு இரண்டாவது நாளில் நடக்கிற முதல் கறிச்சோற்று விருந்து. எல்லோருடைய வயிறும் நாக்கும் தணிந்தபோதும் சித்திரங்குடிக்காரரின் நெஞ்சு மட்டும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது. அவர் நினைப்பு மொத்தமும் சிறைக் கொட்டடியில் கிடக்கும் இளைய சேதுபதி நம்மோடு இல்லையே என்ற ஏமாப்பில் திக்கித் தவித்தது. 

சிங்கன்செட்டி அவரது எண்ணத்தை உணர்ந்தவனாகக் கிட்டேவந்து அமர்ந்துகொண்டான். எரிகிற நெருப்பின் வெக்கையை அகலாது அணுகாது தணித்துவிட முயலும் நம்பிக்கையில், அடுத்த நாளைய திட்டங்கள் குறித்து எல்லோருக்கும் முன்னால்  பேசவேண்டியதை எடுத்துச் சொன்னான். சாயிபு அதை ஆமோதிப்பவராக சித்திரங்குடிக்காரரை உசுப்பிவிட்டார். 

“ஒண்ணுகூடி கச்சேரியை அடிச்சு, ஈடு எடுக்குறதால என்ன கிடைக்கப் போவுதுன்னு யாரும் நினைக்க வேண்டாம். அப்படி ஈடு கொடுத்தாதான் கம்பெனியான் தெவங்குவான். அதுமட்டுமில்ல நமக்கு நிறைய துப்பாக்கியும் வெடிமருந்தும் வேண்டும். அதெல்லாம் இப்பொ அவன்கிட்ட சிக்கிக் கெடக்கு. அதைப் புடிக்கணும். வெள்ளனே புறப்பட்த் தயாரா இருங்க. அடுத்த்தா நாம கமுதிப் பேட்டைக்குப் போறோம். அங்க கொடுக்குற அடியில சிப்பாயெல்லாம் வந்த வழிக்கே நின்னு ஒண்ணுக்குப் போவணும். என்ன செஞ்சிரம்லா” 

முகம்தெரியாத அவரது குரலை ஆமோதிப்பதாகக் கூட்டம் அவருக்குச் சம்மதம் எழுப்பியது. 

உண்டாட்டு முடிந்ததும் சிங்கன் செட்டி மயிலன் சேர்வை, தன் பட்டாளத்தார் ஒவ்வொருத்தருக்கும் தலைக்குப் பதினோரு ரூபாய் சுருள் வைத்தார். வெத்திலையில் சத்தியம் பண்ணி, அதைப் பெற்றுக் கொண்டவர்கள் பூசனை முடிந்த தடத்தை அளித்துவிட்டு கமுதிப் பேட்டைக்குப் புறப்பட ஆயத்தமானார்கள். 

குண்டாற்றுக் கரையில் மூன்று சுற்று மதில்களுடன் வானளாவி நிற்கும் கமுதிக் கோட்டைமேட்டை லேசிலே கிட்டே நெருங்கிவிட முடியாது. கோட்டைக்கு மேற்கிலும் வடக்கிலும் இருக்கும் பாறைத் திட்டுக்களின் மேலே ஏறிச் செல்லும்போதே எதிரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்துவிடும். எதிர்பாராத நேரத்தில் ஈடுகொடுக்காமல் கோட்டையைக் கையெடுக்க முடியாது. 

“கட்டுன கோட்டைக்குள் களவாளி போலப் பூந்து போறதுக்குத் திட்டம் போடுறம் பார்த்திரா சேக்கே!” சிங்கன் செட்டி எகனையாக சாயிபிடம் தன் வடவருத்தத்தைச் சொன்னான். 

“என்ன பண்ணுறது அந்நாளையில உடையத்தேவருக்குக் காப்பாளிப் படையிலே இருந்தவன் இப்போ குற்றவாளி மாதிரி தலைமறைஞ்சு நிக்கிற நிலைக்கு வந்தமின்னா சும்மயா” துயரங்களின் அனல் சாயிபின் மூச்சிலும் பேச்சிலும்கூட விரவியிருந்தது. 

***

என்ன தடுப்பு போட்டுப் பார்த்தும் சேதுச் சீமையில் நடக்கும் கலகம் சிராமலையையும் அதைச் சுற்றியிருந்த சிற்றூர்களையும் கூட எட்டியிருந்தது. ஊரே அறிந்த சேதி ஆறாயிரமடி நீளம் கொண்ட சிராப்பள்ளிக் கோட்டையின் சிறைக்கொட்டடி அரணுக்குள், சிதலமடைந்த அரங்கில் சிறை வைக்கப்பட்டிந்த இளைய சேதுபதி விஜயரகுநாத சேதுபதியின் செவிகளுக்குள் எட்டியிருக்காதா என்ன? 

இருட்டு கவிந்து கொந்தளிப்புடன் இருந்த அவரது மனதிற்குள் ரொம்ப நாளைக் கழித்து இப்போதுதான் லேசான குளிர்காற்று புகுந்து இதமாக்கியதுபோல் உணர்ந்தார் இளைய சேதுபதி. உள்ளர்த்ததோடு அமைதிப்பட்ட அவரது சிந்தனைகள் மலையில் வடிந்த காட்டாறு நிலத்தில் பரவுவதுபோல, பின்னோக்கி விரிந்தது.

கொங்குநாடு தொடங்கி நாஞ்சில்நாடு வரையுமிருந்த எழுபத்தியிரண்டு பாளையங்களும் முன்னெல்லாம் இதே கோட்டைக் கதவுகளுக்குள்ளிருந்து ஆட்சிசெய்த மதுரை நாயக்கருக்குக்கே கப்பம் செலுத்திக் கொண்டிருந்தன. நாயக்கருக்குக் கொடுக்கவேண்டியவை எப்போது நவாபுக்குக் கொடுக்கவேண்டும் என்று பேச்சு உண்டானதோ அப்போதிருந்தே தொடங்கிவிட்டது தீவினை.

நவாபுக்கு ஆனைமேலே உட்கார்ந்து செல்ல ஆசை வந்ததில் குறையில்லை. உந்தி ஏறி உட்கார புஜபலம் வேண்டுமே! புதுக்கோட்டை, தஞ்சை வேந்துகளெல்லாம் நவாபைக் கொசுறாகக் கூடக் கருதவில்லை. இதில் கப்பம் வசூலிக்க நவாபின் கைக்கூலிகளுக்குள் பதவிப் போட்டி வேறு. அவர்களது சண்டையைத்தான் சாதகமாக்கிக் கொண்டான் இந்த ஜான் கம்பெனிக்காரன். அடியாள் போலக் கூலிக்குக் கப்பம் வசூலித்துக் கொடுக்கிறேன் என்று வந்தவன் அவர்களின் பதவி அதிகாரத்தையும் பறித்துக்கொண்டான். 

மக்களைக் கேட்டா எல்லாம் நடந்தது? மாகாணக் கோட்டையில் ஒப்பந்தங்களாகக் கையெழுத்துப் போட்டுக் குவித்தார்கள் மாபாவிகள். நவாப் அலியின் அண்ணன் மாபூஸ்கான் திருநெல்வேலியில் பொம்மை ஆட்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டான். ஆண்டுக்குப் பதினைந்து லட்சம் குத்தகைப் பணம். இதில் பாதியைக் கம்பெனிதான் சுருட்டிக் கொள்ளும். ஆனாலும் பாளையக்காரர்களிடம் பணம் வசூலிப்பது கல்லில் நார் உரிக்கும் வேலை என்று மாபூஸ்கானுக்குத் விளங்கவில்லையே. புத்தி உரைத்தபிறகு கம்பெனிக்கே ஊரை உள்குத்தகைக்கு விட்டுவிட்டான். எப்படி லெட்சணம்! 

உழுதவன் கணக்குப் பார்த்த கதையாக கம்பெனிக்கு நவாப் கொடுக்க வேண்டிய பற்றுத் தொகை, படை நடத்திய செலவு என்று கடன்கட்டு ஏறிக் கொண்டேபோக, இன்னும் இன்னும் ஒப்பந்தக்கட்டுகள் குவிந்ததுதான் மிச்சம். கடேசியில் கழுதை கட்டெறும்பான கதையாக, நவாபை நாசம் பண்ணியது கம்பெனி. 

ராணி மீனாட்சியின் சாவுக்குப் பிறகு, கிட்டத்தட்ட இருபது வருஷ காலம் பத்திரமாகக் கைபடாது காத்துவந்த பூமி இது ஒன்றுதான். அதையும் பஞ்சம் பிடித்தாட்டச் செய்துவிட்ட சூனியக்காரர்கள் எனது கோட்டைகளைப் பறித்து, படைகளைக் காயடித்து, ஒட்டகம்போல மொத்த கூடாரத்தையும் தன் வசப்படுத்திவிட்டான்கள்.  

உறவிருந்தும் பகையான தொண்டைமான் கூட ஜான் கம்பெனிக்குத் தொண்டூழியம் பண்ணிக் கடைசியில் மறவர் சீமை மீது படை நடத்துகிறான். எப்பேர்பட்ட சூனியம். அன்றைக்கு, நவாப் உம்தத்தும் தளபதி ஸ்மித்தும் ராமநாதபுரம் கோட்டையை மறித்து நின்றபோதும், கப்பம் செலுத்த முடியாது என்றல்லவா வீரத்தோடு மறுத்தாள் என் ஆத்தா திருவாயி நாச்சியா. 

ஒரே நேரத்தில் கோட்டையைச் சுற்றி நின்ற கம்பெனியின் பீரங்கி வண்டிகள் அடி அடியென்று அடித்து நொறுக்கியபோது கல்லும் கம்பந்தட்டையும் பனம்பதக்கும் பயனியும் சுண்ணாம்பும் சேர்த்தரைத்துக் கட்டிய கோட்டை இரும்பாய் முறுக்கி நின்றதே. அதிலும் கிழக்கு மதில் அத்தனை நேரம் தாக்குபிடித்ததை நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. கிடைத்த சின்ன விரிசலில் கம்பெனிப் படைகள் உள்ளே நுழைந்தபோது, கத்தியும் வாளும், துப்பாக்கி வெடிகளும் முட்டி மோதி வெடித்த சத்தத்துக்கு மத்தியில் ரத்தமும் சதையுமாக மூவாயிரம் வீரர்களை இழந்தார் ஐயா கிழவன் சேதுபதி. 

ஐயாவையும் அக்காளையும் என்னையும் கைதுசெய்து முதல்முறை இதே திருச்சிக் கோட்டைச் சிறைக்கு அரசியல் கைதிகளாகக் கொண்டுவந்தபோது, எவ்வளவு வலியும் வேதனையும் தாங்கியிருந்தது அவரது முகம். இன்று நினைத்தாலும் நரம்பு வெடிக்கிறதே.

பனிரெண்டு வயதிலிருந்து பத்து வருசம் சிறைவாசம். நாடில்லா மன்னனாகச் சிறைபட்டுக் கிடப்பது புதிதில்லைதான். ஆனால், இந்தச் சிறையிலிருந்து முதல்முறை வெளிவந்தபோது கம்பெனிப் படைகளின் தலைகளைச் சிதறடிக்கவும் சேதுச் சீமை வெகுண்டெழவும் வெள்ளையரின் கச்சேரிகள் தீக்கிரையாகவும். சுங்கத்தால் பஞ்சப்படுத்தப்பட்ட பாஞ்சைக் கூட்டம் பலம்கொண்டு போராடவும் துப்பாக்கித் தோட்டாக்கள் வெடித்து முழங்கவும் ஒரு நல்ல நாளை உண்டாக்குவேன் என்று செய்த நான் ஏற்ற சத்தியம் இன்றைக்கு நிறைவேறுகிறது. மன்னன் இல்லாதபோதும் மறக்குடிக்கு வீரம் போகாது என்றுகாட்டியிருக்கிறது சேதுச்சீமை என்று உள்ளூர மகிழ்ந்து, தனக்குக் காவலுக்கு நின்ற சிப்பாய்கள் முன்னால் நின்றுகொண்டு வெறிகொள்ளும்படிச் சிரித்துக் கொண்டிருந்தார் இளைய மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதி. 

***

கமுதிப்பேட்டையின் ரிப்போர்ட் கலெக்டர் லூஸிங்டன் வசம் வந்துசேர்ந்தது. 

“கச்சேரியில் பொறுப்பு தாசில்தாராக இருந்த செவத்தையாபிள்ளை, தன் பாதுகாவலுக்கு வெளியூர்களில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார். அதில் அவர் மருமகனும் உண்டு. இந்த முறை தாசில்தாரைச் சிறைபிடிக்கும்போது, அவரது மருமகனுக்குக் குத்துபட்டு இறந்துவிட்டான். கூடவே துப்பாக்கி உள்ளிட்ட கச்சேரியின் ஆயுதங்களுடன் தீர்வைத் தொகைவாக வசூலான ஆயிரத்தி பதினேழு ரூபாய் பணமும் கேங் வசம் போய்விட்டது. மேலும் குறிப்பிட்த்தக்க செய்தி கேங்கில் இப்போது இருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது முன்னூறு பேராக உயர்ந்திருந்தது.”

லூஸிங்டன் பொறுமையில் எல்லையைக் கடந்திருந்தார். பாளையங்கோட்டை ராணுவத்திடம் உதவி கேட்டு அவர் கடிதம் எழுதி, நாட்கள் கடந்துகொண்டிருந்தன. ராணுவம் எப்போது வந்துசேர்ந்து, என்றைக்கு இவர்களைக் கட்டுப்படுத்தப் போகிறது என்ற சிந்தனை அவரது மனதைக் குடைந்துகொண்டிருந்தது. 

சாலைப் போக்குவரத்து அனைத்தையும் மறித்துப் போட்டும் கலகம் நடந்த செய்தி பாப்பான்குளம், பள்ளிமடம், குண்டுக்களம், பேரையூர் என்று அடுத்தடுத்த ஊர்களுக்கும் தீயாய் பரவிவிட்டது. அங்கங்கு புற்றீசல்போல அதிக எண்ணிக்கையில் கலகக்கூட்டத்தாருடன் புதிய ஆட்கள் இணைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. பாளையங்கோட்டை ராணுவம் இன்னும் ஒட்டபிடாரத்தைத் தாண்டவில்லை. ராணுவத் தளபதி மார்டின்ஸுக்கு அவசரக் கடிதம் எழுதி அனுப்பியும் இன்னும் பதில் வந்துசேரவில்லை.

ஒருநாள் இரண்டு நாள் அல்ல இத்தோடு பதினோரு நாட்களாக ஊரெங்கும் பரபரப்பு. எங்கிருந்தும் எந்தப் போக்கும் வரவும் இல்லை. இடையிலே மாட்டிக்கொண்ட கம்பெனி ஊழியர்களும், ஏவலாளிகளும் கூட ராமநாதபுரத்தைத் தொடர்புகொள்ள முடியாத நிலை. களத்தூருக்கு ஓலைகளுடன் வந்த ஏவலாளிகளின் சீருடைகளைப் பறித்து, அவர்களைக் கோமணத்துடன் விரட்டியிருக்கிறது உள்ளூர் கேங்.

ஆனால், ரொம்ப முக்கியமாக கவனிக்கக் கூடிய விஷயம், இந்தக் கலகத்தில் எந்த விதத்திலும் பொதுசனங்களுக்கு ஊறு விளைவிக்கப்படவில்லை. மிகத் தெளிவாகத் திட்டமிட்டு கம்பெனியின் சொத்துக்கள் மட்டுமே தாக்கப்படுகின்றன. ஆயுதங்களும் தானியமும் வெடிபொருட்களும் மட்டுமே கைப்பற்றப்படுகின்றன. விலையுயர்ந்த தறித்துணிகள் கூட எடுத்துச் செல்லப்படாமல் அழிக்கப் பட்டிருக்கின்றன. ஆட்கள் யாரையும் சிறைபடுத்தவில்லை. கொலைகள் கூட மிகச்சில இடங்களிலே நிகழ்ந்திருக்கிறது. அதுவும் தற்காப்புக்காக முரட்டு நடவடிக்கைகளில் இறங்கியவர்களுக்கு எதிராகவே நிகழ்ந்திருக்கிறது. இதுவெறும் சாதாரண கொள்ளைக் கும்பலின் வன்முறையோ, கலகக்காரர்களின் கிளர்ச்சி நடவடிக்கையோ அல்ல. இதனை முன்னின்று நடத்தும் நபர் மிகச் சிறந்த, போர்முறை அறிந்தவன். அவனை மிகத் தெளிவாக எடை போட்டிருக்கிறார் காலின் ஜாக்ஸன். அவருடைய சிறிய குறிப்பிலேயே அது இடம்பெற்றிருக்கிறது. முன்பே அவனைக் காரணம் தேடிக் கைது செய்யாமல் விட்டது நிர்வாக ரீதியிலான தோல்விதான். 

சிந்தனையின் ஆழத்தில் அமிழ்ந்த கலெக்டர் லூஸிங்டனுக்கு திடீரென்றுதான் அந்த எண்ணம் புலப்பட்டது. அடுத்தவேளையாக அவர் மெட்ராஸ் பிரஸிடன்ஸிக்கும் திருச்சி கோட்டைக்குமாகத் தனித்தனியே இரண்டு கடிதங்களை எழுதத் தொடங்கினார்.

**

“இதனாலே அறிவிப்பது என்னண்டா! ராமநாட்டிலே, களத்தூர் ஜில்லாவிலே, கமுதி, பெருநாழி சுத்துப்பட்டு ஊர்களிலேயும் கலகம் பண்ணிக் காட்டுகுள்ளே ஒழிஞ்சு கிடக்கும் மயிலன் சேர்வையும் அவரோட கூட்டாளிகளும் கும்பினிக்கு விளைவித்த சேதம் பெருத்த நஷ்டம். அவர்களாலே ஏற்பட்ட இழப்பு அவர்களாலே தீர்த்து வைக்கப்படும். ஆனால், மயிலன் சேர்வைக்கோ, அவருக்குப் பாத்திரப்பட்ட சொந்த பந்தங்களுக்கோ உதவி செய்யுறது பொது சனங்களுக்கு நல்லதில்லே. உடனடியா அப்படி உதவி செஞ்சோரும் அதுக்கு உபகாரமா பொருள், பொன், பணங்காசு வாங்கினோரும் ராஜங்காத்திரம் வந்து உண்மையை ஒப்புக்கொள்ள வேணும். அப்படி ஒப்புக்கொள்ள முன்வருவோருக்கு, கும்பெனி அரசாங்கம் ஐநூறு சக்கரம் அன்பளிப்பு கொடுத்து மன்னிப்பும் வழங்கும். டுண் டுண் டுண்…” 

கம்பெனியின் விளம்பரத்திற்குப் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. சேதுச்சீமை தொடர்ந்து இருபதாவது நாளாக சித்திரங்குடிக்காரரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பேருக்குத்தான் சீமையில் போக்குவரத்து துண்டிப்பு. ஆனால், எல்லா திக்குதிசைகளில் இருந்தும் அவருக்கு ஓலைகளும் தகவல்களும் வந்துகொண்டிருந்தன. யுத்தத்தை நடத்துவது என்று முடிவான பிறகு, கண்காணிப்பு வளையங்களைக் கட்டுப்படுத்துவதும், செய்திகளைத் திரட்டுவதும் பொருளுதவி, படைபலம் ஆயுதபலம் ஆகியவற்றைத் திரட்டுவதே முக்கியத்துவம் வாய்ந்த வேலை அவருக்கு. 

இதற்காக மாதக்கணக்கில் திட்டம் தீட்டிக் காத்திருந்தார். ஒவ்வொரு கட்டத்திலும் திருச்சி சிறைக் கொட்ட்டிக்கு ரகசியமாகச் சென்று, இளைய சேதுபதியிடம் கலந்து ஆலோசித்திருந்தார். இலக்கு என்பது இளைய சேதுபதியின் விடுதலை என்று முடிவானபிறகு, சேதுச் சீமையிலே கம்பெனிக்கு ஒத்து ஊதுபவர்கள் என்று கணித்த நபர்களுக்குக் எச்சரிக்கையும், காட்டிக்கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை என்று ஓலையும் அனுப்பிய பிறகே தன் பட்டாளத்தைத் திரட்டியிருந்தார் சித்திரங்குடிச் சேர்வை. கூடவே கம்பெனியின் நகர்வுகளைக் கண்காணிக்கவும் வேறுபல திட்டங்களுக்காகவும் அவரது உளவுப்படை இயங்கிக் கொண்டிருந்தது.

அதனாலேயே, “சேதுச் சீமையைக் கட்டுக்குள் கொண்டுவர, பாளையங்கோட்டையிலிருந்து ராணுவம் வரப்போகிறது” என்ற செய்தியை மிகச் சீக்கிரமாகவே அறிந்துகொண்டிருந்தார் மயிலன் சேர்வை. இதே படைகள்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சேதுச்சீமையில் பெரும் அட்டூழியங்கள் புரிந்து, இளைய சேதுபதி மன்னரைக் கைதுசெய்யவும் காரணமாக இருந்தது. இப்போது மீண்டும் அதே எமகிங்கரர்கள் வந்திறங்கியிருக்கிறார்கள். பலிக்குப் பலிவாங்க நல்ல சந்தர்ப்பம் தான். இந்தமுறை கொடுக்கிற அடியில் இந்தத் திசைக்கே அவர்கள் தலைவைத்துப் படுக்க்க் கூடாது. அதற்குத் தேவையான ஆள்பலமும் ஆயுதபலமும் மேற்கே இருந்து திரட்டிக் கொண்டுவரப் போவது பற்றி, சிங்கன்செட்டியின் மூலம் சின்னத்துரைக்கும் கந்தையாவுக்கும், கழுவனுக்கும் அறிவித்திருந்தார் சித்திரங்குடிக்காரர்.

***

பாளையங்கோட்டை ராணுவத் தளபதியுடன் நடந்த நேர் சந்திப்பில், ராமநாதபுரம் கலெக்டர் லூஸிங்டன் சேதுச் சீமையின் நிலவரத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கினார். 

“மிஸ்டர் மார்டின்ஸ் கம்பெனியின் ராணுவப் படையணி உடனடியாக கமுதிக்கோட்டைக்குப் புறப்பட்டுச் செல்லவேண்டியது மிகஅவசியம். அங்கே, சேது சமஸ்தானத்தில் சிறு படையணி ஒன்றின் தலைவனாக இருந்து, பதவி இழந்த ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி மயிலன் என்பவன், களத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட சித்திரங்குடி, ஆப்பனூர், பேரையூர் நாடுகளின் அடர்த்தியான காட்டுப் பகுதியைப் பயன்படுத்தி, சில அடியாட்களோடு, கமுதி. கிடாத்திருக்கை, முதுகளத்தூர், கருமல் பகுதிகளில் பெரும் கலகத்தை உண்டுபண்ணி வைத்திருக்கிறான். நமது சொத்துக்களைச் சூறையாடி, பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதோடு ஆயுதங்களையும் பறித்து வைத்திருக்கிறான். இதனால் அவனது கேங் சற்று வலிமை அடைந்துள்ளது என்பது கொஞ்சம் கசப்பான உண்மை. அவனை எப்படியாவது நீங்கள் கைதுசெய்து கலகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.” 

“நீங்கள் கவலைப்படுவதுபோல எதுவும் இனி நிகழாமல் பார்த்துக்கொள்வது எங்கள் பொறுப்பு மிஸ்டர் கலெக்டர். வரும் வழியிலேயே இதுதொடர்பான சில வேலைகளை நான் செய்துமுடித்து விட்டே இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். உங்களது கவலைகளை விரைவாகத் தீர்த்து வைப்பது எங்கள் கடமை.” 

“உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள் எண்ணுவதுபோல மயிலன் என்பவன் சாதாரணமான ஆளாகத் தெரியவில்லை. அவனது இலக்கு கமுதிக்கோட்டையோ கம்பெனியின் கிட்டங்கிகளோ அல்ல. அவனது இலக்கு திருச்சி சிறைச்சாலை. அங்கே சிறைவைக்கப்பட்டுள்ள இளைய சேதுபதியை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்றுதான் இந்தக் கலகத்தையே துவங்கியிருக்கிறான். இதற்காக அவன் செய்த முயற்சிகள் கைகூடாமல் போக, நிலவரித் தீர்வைப் பிரச்சனையை காரணமாகக் காட்டி மக்களைத் திரட்டியிருக்கிறான். அவனால் கடந்த இருபத்தைந்து நாட்களாகத் தாலுகாவின் நிர்வாகம் செயல்படவில்லை. சிவகிரியில் இருந்து ராமநாதபுரத்துக்கு வந்துசேரவேண்டிய கிஸ்திப் பணப் பெட்டியைக் கொள்ளை அடித்திருக்கிறான். அவ்வளவு ஏன் இதே மாளிகையில் சிலநாட்களுக்கு முன்பு என்னைக் கொலை செய்வதற்கும் ஒரு முயற்சி நடைபெற்றது.” அச்சமும் தவிப்பும் கலந்த குரலுடன் கலெக்டர் தனது நிலையை விளக்கினார். 

தளபதி மார்டின்ஸ் மிக நிதானமாக, ‘நீங்கள் இனி பாதுகாப்பாக இருப்பீர்கள். திருச்சியில் இருக்கும் கிழவரின் மகனை எனக்கு நன்றாகத் தெரியும். அவரை வடக்கே, நெல்லூர் ராணுவப் பாசறைக்கு மாற்றச் சொல்லி ராஜதானிக்கு இன்னொரு கடிதம் எழுதுங்கள். மேலும் சில தகவல்கள் எங்களுக்கு வரவேண்டியிருக்கிறது அதுவரை நீங்கள் அமைதிகாக்கவும். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றார்.    

*** 

பட்டாளத்தில் புதுசாக வந்து சேர்ந்த இளசுகளுக்கு மயிலன் சேர்வையை நேரில் பார்ப்பது என்பதே ஒருவித கிறக்கத்தைத் தந்தது. படைநடத்தும் தலைவர் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் சித்திரங்குடிக்காரரின் முகத்தைப் பார்ப்பதற்கு அவர்களில் பலருக்கும் வாய்க்கவில்லை. படையல் நாளில் அவரது குரலைக் கேட்டோம் என்று கூடே இருந்தவர்கள் சொன்னபோது, இளந்தாரிகள் இரண்டுபேருக்கு அவரை நேரே பார்த்தே தீருவது என்ற வெப்ராளம் எழுந்துவிட்டது.

குண்டாற்றுக் கரையில் குடிசையிட்டுத் தங்கியிருந்த சிங்கன் செட்டிக்குத் தண்ணீர் எடுத்துச் செல்வதுபோல வெறுங்குடுக்கையுடன் அவர்கள் ஓலைப்பறைகளைச் சுற்றி வந்தார்கள். குடிசையின் ஓட்டைகள் வழியாகச் சித்திரங்குடிக்கார்ர் உள்ளே இருக்கிறாரா என்று எட்டிப் பார்க்க நினைத்தபோது, பின்னாலிருந்து சிங்கன்செட்டி அவர்களைக் கழுத்தைச் சேர்த்துக் கீழே மல்லாத்தினான். 

அதற்குள் கழுவன் அந்த இடத்துக்கு வந்துசேர அவர்களை இன்னார் என்று அடையாளம் காட்டி விடச் சொன்னான். சத்தம் கேட்டு உள்ளிருந்து வெளிப்பட்ட சித்திரங்குடிக்காரர் விவரங்களைக் கேட்டுக் கொண்டார். 

“ஏம்பா என்ன ஆளுப்பசங்க நீங்க? யாரனுப்பி இங்க வந்தீங்க...”

“ரெண்டுபேருமே பரளாச்சிதான். சும்மா... தண்ணிக்கு வந்தோம்” 

“சர்தான், சிங்கா ஒனக்கு தூரப்பட்டுச் சொந்தக்காரப் பயல்களா! ஏம்பா சாப்பிட்டீங்களா. எதுக்கு இந்தப்பக்கம் சுத்துறீங்க. ஆளுகளோட ஒண்ணா இருக்கணும்னு சொல்லிருக்கோம்லா”  

“அதில்லண்ணே உங்களப் பாக்கணும் பாக்கணும்னு நினைச்சோமா… அதான்.”

“என்னப் பார்த்துட்டுப் போய் என்ன பண்ணப்போற. சரி இப்படி வந்து நில்லு” 

மயிலன் சேர்வைக்காரர் அவர்களைத் தனது குடிசைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். இருவருக்கும் இருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்டவர் அவர்களுக்குள் வேறு எந்தக் கள்ளமும் இல்லை என்பதையும் மேல்பேச்சில் உறுதிசெய்துகொண்டார்.

“ஏண்ணே பாளையங்கோட்டைல இருந்து வருத சண்டைக்கூட்டம் ரொம்ப துடியா இருக்குமுன்னு இவன் சொல்லுதான் உண்மையாவா?” 

“அதுக்கெல்லாம் பயப்படுத ஆளால நீங்க” 

“ச்சீய்ய்ய் அதெல்லாமில்ல. இவந்தான் அவனுவோள பத்தி ரொம்ப பரிஞ்சி சொல்லுதான். நம்மட்ட இருக்கதவிட பெருசான துப்பாக்கில்லாம் வச்சிருப்பான்னு சொன்னான். அதான் கேட்டேன்.”

“யோல் நா எங்கலச் சொன்னம்... நீதாம் பெரியண்ணன் கிட்ட அதவிட சத்தமா வெடிக்கிற துப்பாக்கி இருக்குன்ன...”

“ஏலச், சண்டவுட்டுக்காம நில்லுங்கல ஒங்கொப்பன் சித்தப்பனல்லாம் முன்ன நின்னு கம்பு வீசி அடிச்ச சில்வண்டுப் பயகதாம்ல பாளயங்கோட்டக்காரனும் தெயரியமாட்டு இருங்கல. இந்த வாட்டியும் நம்ம ஈடுதான் நறுக்குன்னு விழும்.” இளந்தாரிகள் இருவரையும் பேச்சுவாக்கில் தன்கூடே வெளியேற்றி அழைத்துச் சென்றான் கழுவன். 

மயிலன் சேர்வைக்கு மனசில் பழைய விஷயங்கள் உலாவரத் துவங்கின.       

பாளையங்கோட்டை படையணி ஒன்றும் ராமநாதபுரம் மாளிகைக் காவல் படைபோல் பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடும் கூட்டமல்ல. அது ஒரு கொலைகாரப் படை. கண்மண் தெரியாமல் சுட்டு வீழ்த்தவும், ஈவு இரக்கம் இல்லாமல் அடி நொறுக்கவும் பயிற்சி கொடுத்து உருவாக்கப்பட்ட மிருகக்கூட்டம். கடுஞ்சித்திரவதைகளின் மூலமாக துரோகிகளை உருவாக்கி, அவர்களைச் சுதந்திரமாக வெளியிலே உலவவிட்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் அயோக்கிய நரிகள் அதிலே நிறைய உண்டு. 

நவாபுடன் கூட்டு போட்டுக்கொண்டு ராமநாதபுரம் கோட்டையை பீரங்கி வைத்து அடித்து, ராணி திருவாயி நாச்சியார் கண்முன்னால் கிழவன் சேதுபதியையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு போய் சிறைவைத்த பிறகு, இரண்டரை லட்சம் பணத்தை சூதாகக் கொட்டிக் கொடுத்துத்தான் மன்னரை மீட்க முடிந்தது. 

கிழவன் சேதுபதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இளைய சேதுபதிதான் கம்பெனிகளின் சூதாட்டத்தைப் புரிந்துகொண்டு, அவர்களின் முக்கியமான பகடைக்காய் எது என்று கண்டுகொண்டார். வெட்டரிவாளும் வேல்கம்பும் பிடிகத்தியும் மட்டும் இனி வேலைக்கு ஆகாது என்று அவர்தான் துப்பாக்கியைத் தூக்கிக்  கைகளில் கொடுத்தார். டச்சுக் கம்பெனியிடமிருந்து பீரங்கிகளை வாங்கிச் சேதுச் சீமைக்குக் கொண்டுவந்தார். 

இதற்காக திருப்புல்லாணியில் புதிய கோட்டை கட்டியதும், அங்கே ஆயுதப் பட்டறை உண்டாக்கியதும் இளைய சேதுபதியின் மகத்தான திட்டங்கள். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில்தான் ஒப்பந்தப் பத்திரத்தைக் காட்டி வாசலில் வந்து நின்றது கம்பெனி.

சேதுச் சீமையில் பருத்தி வியாபாரம் பண்ணச் சிறப்புச் சலுகையும், பாம்பன் கால்வாயில் கம்பெனிக் கப்பல்களுக்கு வேகத் தணிக்கையும், சீமைப் பஞ்சாயத்துக்களில் நாட்டாமை செய்யும் பொறுப்பும் வேண்டும் என்று பங்காளிபோல உரிமைகேட்டு வாசலில் வந்துநின்றவர்களை வழியில்லாமல் தான் விரட்டிவிட்டார் இளையசேதுபதி. 

அதையே சாக்காக வைத்து, சென்னைக் கோட்டையிலிருந்த தண்டல்காரனையும், கல்கத்தாவில் தடிக்காரனையும் கைக்குள் போட்டுக்கொண்டு இதே பாளையங்கோட்டை ராணுவத்தைக் கூட்டி வந்து இளைய சேதுபதியைப் பாதுகாப்புக் கைதி என்று கைதுசெய்து போனார்கள். அப்போது அவர்களைத் தடுக்க வழியற்றுப் போன குற்றவுணர்ச்சி சித்திரங்குடிக்காரரின் மனத்தைச் செல்லாய் அரித்தது.

“உண்மதான் இதே பாளையங்கோட்டை ராணுவத்தாலேயே அப்போ நமக்கிருந்த கோட்டைகள் போச்சு, கொத்தளங்கள் போச்சு, இராமநாதபுரம் அரண்மனை போச்சு. ஊரும் மாளிகையும் கம்பெனியும் கலெக்டரும் கூத்தடிக்கும் இடமாச்சு. இதெற்கெல்லாம் சேர்த்து வைத்துப் பதிலடி கொடுக்கத்தான், சேதுச்சீமையின் அத்தனை நாட்டுத் தலைவர்களையும் ஒன்றுதிரட்டி, ஐஞ்சு பேரோட களத்தூர் கச்சேரியில் ஆரம்பிச்சு, இப்போ ஆயிரம் பேரா மாறி நிக்கோம். கைவசம் அறுவது துப்பாக்கி ஒப்பேறும். நாற்பது வெடி மிச்சமிருக்கும். இன்னும் கத்தி வேல்கம்பு அருவா… இந்த இருவத்தஞ்சு நாளையிலும் ஒருத்தனாலும் கிட்டவே நெருங்க முடியல. வெக்கையில் கம்பெனியைத் துடிக்க வைத்துவிட்டோம். அதேமாதிரி பாளையங்கோட்டக்காரனுவளையும் துடிக்க வச்சிரமாட்டமா” என்ன சிங்கா சொல்லுற.

சிங்கன்செட்டியால் அவரது ஆவேசத்தை உள்வாங்கிக் கொள்ளமுடிந்தது. அதேநேரம் இது வாழ்வா சாவா போராட்டம் தான் என்பதும் செட்டி ஏற்கெனவே முடிவுகட்டியதுதான். எழுநூற்றுச் சொச்சம் கிராமங்களின் உழவுமாடுகள், வீடுகளின் கதவு சன்னல்கள், தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் வரிக்குப் பாத்தியதையாகப் பறித்துக்கொண்டுபோய், நெசவாளிகளுக்குச் சுங்கம் போட்டு, சாலியர் வீடுகளுக்குள் புகுந்து, பொம்பளை ஆட்களை அசிங்கம் பண்ணி, வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லாமல் பெஞ்சாதியையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு நடந்தே கயத்தாருக்கும், திருநெல்வேலிக்கும் நாடுவிட்டு நாடுதாண்டிப் போன சனத்தின் சாபத்துக்கு வலு இல்லாமலா போகும். 

மொத்தச் சீமையின் வியாபாரத்தையும் கலங்கடித்தவர்களை கண்ணசந்து தூங்க முடியாமல் செய்துவிட்டோம். இப்போது கம்பெனிக்காரன் சோற்றுக்கு வழியில்லாமல் வீட்டைந்து கிடக்கிறான். ஒரு சித்திரை மாசத்தின் அக்கினி வெயிலில் தன்னுடைய வீடும் பற்றி எரியும் என்று தெரியாமல் ஏழை சனத்தின் அடிமடியில் கைவைத்தவனின் தொப்பிகளைத் தெறிக்கவிடாமல் நம்ம கட்டை வேக்க்கூடாது.” சிங்கன்செட்டி தன்னுடைய உறவுக்காரர்களை மனதில் எண்ணி முறுக்கிக் கொண்டான்.

***

மதுரையிலிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் கலெக்டர் லூஸிங்டனைத் துள்ளிக் குதிக்க வைத்தது. 


“எட்டையபுரம், நாகலாபுரம் ஆகிய இரண்டு பாளையங்களில் இருந்து புதிதாக வந்த இருநூறு பேர் மயிலன் சேர்வை கேங்கில் சேர்ந்திருக்கிறார்கள். ராமநாதபுரம் இளைய சேதுபதியின் அமைச்சராக இருந்த முத்தையாபிள்ளையின் தம்பி முத்துக்கருப்பப்பிள்ளை இவர்களுக்குப் பொருளதவி செய்கிறார். மேலும் வெள்ளக்குளம் அருகே ஐநூறுபேர் கொண்ட கேங், கமுதிக் கோட்டைக்குக் கீழே, குண்டாற்றின் எதிர்கரையில் தங்கியிருக்கிறது. மயிலன் சேர்வை அங்கிருந்து கிழக்கே அரைமைல் தள்ளியுள்ள பாறைக்கட்டுப் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக நமது உளவாளி ஒருவர் மூலம் செய்தி கிடைத்திருக்கிறது.” 


கடிதத்தை அனுப்பிய மதுரை லெப்டி கர்னல் டிக்பர்ன் மட்டும் அருகில் இருந்தால் அவரைக் கட்டிப் பிடித்து ஆர்ப்பரித்திருப்பார்போல. அப்படியான மனநிலையில் தான் இருந்தார் லூஸிங்டன். கையோடு, இந்த ரகசியத் தகவலை தானே நேரில் பாளையங்கோட்டை ராணுவத்துக்கு நேரில் சென்று தெரியப்படுத்தினார். அடுத்தவேலையாக இரண்டு பாளையக்காரர்களுக்கும் எச்சரிக்கைக் கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். அதேநாளில், பாளையங்கோட்டைப் படைத் தளபதி பானர்மேன் தலைமையில் கமுதி, ஆப்பனூர், குமாரக்குறிச்சிக்குள் நுழைந்து, மயிலன் சேர்வை கேங்கைத் தாக்கப் போகிறது என்ற செய்தியும் வந்துசேர, லூஸிங்டன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி பெருமூச்சு ஒன்றைக் காற்றதிர வெளியிட்டார். 


*


இளஞ்செம்பூர் ஊர்த்தலைவர் பண்டாரத்தேவர் தன் மகனைத் தூது சொல்வதற்காக மிக ரகசியமாக காட்டுக்குள் அனுப்பி வைத்திருந்தார். 


“கிளர்ச்சியில் ஈடுபட்ட குடிமக்களுக்கு கம்பெனி சர்க்கார் பொதுமன்னிப்பு வழங்கும். ஆனாலும் ஆப்பனூர் நாட்டுச் சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்கும், முதுகளத்தூர் கிராமம் முத்துக்கருப்பப் பிள்ளைக்கும் தண்டனை கட்டாயம்” 

சுற்றுவட்டாரம் முழுக்க பறைகொட்டப்பட்டிக்கும் செய்தியையும் ஊர் நடப்புகளை ஆடுமேய்ப்பது போல காட்டுக்குள் வந்த அந்தச் சிறுவன் சித்திரங்குடிக்காரரிடம் நேர்முகமாகத் தெரிவித்ததோடு, தன் அப்பா கொடுக்கச் சொன்னதாக ஓர் ஓலையையும் அவர் கையில் திணித்தான்.

கம்பெனியின் தேடுதல் வேட்டை சேதுச் சீமையின் நாலா பக்கமும் நீட்டிக்கப்பட்டிருந்தது. கடலடித் தீவுகள் சல்லடையாகச் சலிக்கப்பட்டன. காடல்குடிபாளையம், பிள்ளையார்குளம், பாஞ்சலங்குறிச்சி வில்லார்குளம் என்று நாளுக்கொரு உறைவிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. 

பெரிய போராட்டம் தான். பின்வாங்கியிருக்கக் கூடாத யுத்தம்தான். சிறையில் இருக்கும் மன்னரை விடுவிக்க முடியாமல், கலகமும் தோல்வியில் முடிந்து, களப்பலியான தோழர்களை இழந்த வலியுடன் இப்படி ஒழிந்து மறைந்து திரியும் நிலைமையை நினைக்க நினைக்க காய்ந்த பனவோலையைப் போல மனசு அறுத்துக்கொண்டே இருந்தது அவருக்கு. 

பாளையங்கோட்டைப் படை கமுதிக்கு வந்துசேரும் திசை கிட்டத்தட்ட உறுதியானதும், இறுதிக்கட்டப் போருக்குத் தயாராகும்படி, சேதுச்சீமை முழுவது ஓலை எழுதி அனுப்பிவிட்டு கமுதிக்கோட்டையின் பிற்பாடுள்ள காட்டின் வழியே மாற்றுத் திசைக்கு விரைந்தார் சித்திரங்குடிக்காரர். ஆனால், எதிர்பாராவிதமாக அந்தவழியிலே, கன்னம் வைத்துக் காத்திருந்தது பாளையங்கோட்டை ராணுவம். தளபதி கிரிப்ஸ் சித்திரங்குடிக்காரரையும் சிங்கன்செட்டியையும் சுற்றி வளைத்துப் பிடித்திருந்தான். 

சுற்றிவளைப்பு ஒன்று சாமானியப்பட்டதல்ல. மொத்தப் பட்டாலியனையும் திரட்டிக்கொண்டு வந்து ஈடுபிடித்துச் சுடமுடியாத வேகத்தில் வளைத்துக் கொண்டார்கள். பாறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தபோது, பீரங்கிக் குண்டுகள் வந்து வெடித்துப் பிளந்தது. பிரங்கிகளை இங்கே கொண்டு வந்து இரக்கியிருக்கிறார்கள் என்றால் இந்தப் பாதையில் வருவது எங்கோ யாரால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒன்று என்பது மயிலன் சேர்வைக்குப் புரிபட்டது. இனி தாக்குப்பிடித்துத் திருப்பி அடிப்பதைத் தவிர வழியில்லை. வந்தவரைக்கும் வெடியை வீசுவோம் என்று போராட நினைத்தவரை கீழ்க்குளம் காட்டுக்குள் பின்வாங்கச் சொன்னான் சிங்கன் செட்டி.

சேதுபதியை விடுவிக்கவேண்டும் என்ற ஒற்றை இலக்கைக் காரணம் காட்டி, மயிலன் சேர்வையைக் காட்டுக்குள் தப்ப வைத்த சிங்கன்செட்டி சண்டையை முன்னின்று நடத்தினான். ரத்த காயங்களுடன் காக்கூர் நோக்கிப் புறப்பட்டார் மயிலன் சேர்வைக்கு இரண்டு நாள் பிந்தியே சிங்கன்செட்டி கொல்லப்பட்ட சேதி காட்டுவழியாக வந்து சேர்ந்தது. தூக்கிச் சுமக்க முடியாத வலியாக அவர் நொடிந்துபோனார். இருந்தும் கிரிப்ஸன் பட்டாலியனுக்குத் தங்கள் ரகசியத் திட்டம் எங்கே யார் வழியாகக் கசிந்தது என்ற குழப்பம் மட்டும் அவருக்குள் தீராமலிருந்தது. 

நாற்பத்து இரண்டு நாட்கள் தலைமையேற்று நடத்திய கலகம். கமுதிக் கோட்டையைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட தோல்வி. சிங்கன்செட்டியின் மரணம், கீழ்க்குழம் காட்டுப்போரில் கம்பெனி நடத்திய படுகொலை. இப்படிப் பேரையூரில், கள்ளக்குளத்தில், உலகனோடையில், ஆனையூரில் அடுத்தடுத்து கலகத்தை அடக்குகிறேன் என்று நடந்த அடூழியங்கள் அனைத்தும் மயிலப்பன் சேர்வையை வந்தடைந்தபோது, ஆடுமேய்க்கும் அந்தச் சிறுவன் வழியாக வந்து சேர்ந்த ஓலை அவரைக் கொலைவெறிக்குள் தள்ளியது. 

*

இடையனைப்போல தலையில் முண்டாசு, இடுப்பு வேட்டி, தோளைச் சுற்றிக் கம்பளியும், கையில் களைக்குச்சியுமாக மாறுவேடத்தில், திருச்சுழி பார்த்திபனூர், காளையார் கோவில், தொண்டி, சுந்தர பாண்டியப்பட்டினம் வழியாக ஒட்டி சோழநாட்டுக்குத் தப்பிச் செல்ல இருந்த மயிலன் சேர்வை உடனடியாக அந்தத் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு, இரவோடு இரவாக எஞ்சியிருந்த தன் கூட்டாளிகள் ஏழெட்டுபேரைச் சேர்த்துக்கொண்டு மதுரையை வந்தடைந்தார். 

தான் பெண்ணெடுத்துக் கட்டின உறம்முறைக்காரனான தன் மாமனின் வீட்டில் ஓட்டைப் பிரித்து இறங்கியவர், ‘காட்டிக் கொடுத்தியோடா கயவாளி மவனே’ என்றபடி கரகரவென மாமனின் தலையை அறுத்தெடுத்து, ரத்தம் வடிந்தோடிய முண்டத்தை ஊர் முச்சந்தியில் இருந்த கோயிலடியில் கிடத்தி, தலையைச் சூலத்தில் சொருகிவைத்துக் கண்காணாமல் மறைந்துபோனார்.


கார்த்திக் புகழேந்தி©2022


Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்