கொடிக்கால் (2022)




ந்தக் குடும்பத்திலும் உண்டா இப்படி ஒரு அழிச்சாட்டியம்? அப்படி என்ன விவஸ்தை கெட்ட இருமாப்பு? பெத்த பிள்ளை மேல என்ன மனக்கசப்பு இந்த கிழவிக்கு? சரி அவளுக்குத்தான் ஏதோ வராதது வந்துட்டது. ஒரு ண்பது வயசுக் கிழவி ஆச்சியம்மாள் மேலே அப்படியென்ன பொல்லாப்பு இந்த இவனுக்கு?

ஊரே இப்போது ரெங்கதாசன் குடும்பத்துக் கதையைக் குறித்துத்தான் மூகூர்த்தம் பேசிக் கொண்டிருந்தது. அம்மையும் மகனும் ஒருத்தroருத்தர் முகம்பார்த்துப் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வதை நிறுத்தியே வருசங்கள் ஓடிவிட்டது.

ஆனாலும் ஆச்சியம்மாள் சொல் இல்லாமல், ஆவுடையாபுரம் பெரிய வீட்டில் எந்தக் காரியமும் நடக்காது. எந்த நல்லது கெட்டதுகளில் தாயும் மகனும் அவரவர் கட்டுக்குள் நின்று கொண்டு வெடித்து மாய்வார்கள். பிறகு அவர்களாகவே சாந்தப்படுவதற்குள் போதுமென்றாகிவிடும்.

இவர்களின் இந்த ஜோடனைகளை எல்லாம் வெளியில் இருந்து பார்த்தால் அதில் ஒரு வேடிக்கை இருப்பதுபோலத்தான் தெரியும். இருந்தாலும் அவர்கள் பேச்சுக்குள் ஏதோ பல வருஷ சூட்சமம் ஒழித்து கிடக்கிறது என்பது அன்னம்மாளுக்கு மட்டுமே தெரியும். அதைக் கேட்டுத் தெளிந்து கொள்ளும் அளவுக்கு அவளுக்குத் துணிவு பத்தாது.

அதற்காகவே அசலிலேயே வேண்டாம் என்று அந்நியத்தில் தேடிப் பிடித்து, சாதியிலேயே ஏழ்மைப்பட்ட குடும்பத்திலிருந்து அவளைத் தன் மகனுக்குக் கலியாணம் கட்டி அழைத்து வரப்பட்டால்.

ஆச்சியம்மாள் கிழவி அப்படியில்லை. பதினோரு வயதில் தன் தாய்வழியில் சொந்தத் தாய்மாமனைச் சீதனத்தோடு வந்தவள். அவள் பாக்குரல் இடிக்கும் இந்தப் பெரிய வீடும் அவள் கொண்டுவந்த சீதனம் தான்.

இருக்கும் சொத்து சம்பத்துக்கள் மீது எனக்குள்ள உரிமையும் பாத்தியமும் ஒருக்காலும் உனக்கு வந்துசேராதுஎன்று சொல்லாமல் சொல்லுகிற மாதிரியே அன்னம்மாளை நடத்தினாள் கிழவி.

பேருக்குத்தான் கொடிக்கால் வமிசம்; உள்ளே வெறும் ஈறும் பேனும் கதையாக பெரிய வீட்டுக்கு மருமகள் என்றாலும் ஒரு பரோபகாரியாக, ஏகாலியாக, குடிமகளாகச் சுருங்கிப்போனது அன்னம்மாளின் வாழ்வு.

ஊர் விழாக்களில் பெரிய வீட்டின் சார்பில் கலந்துகொள்வது, வேலையாட்களுக்குக் கூலி கொடுப்பது, கொடிக்கால் குத்தகைகளைக் கவனிப்பது என்று பெரிய வீட்டின் எல்லா நகர்வுகளையும் ஆச்சியம்மா கிழவி அந்த வயதிலும் தன் பொறுப்பிலே வைத்திருந்தாள்.

இந்த பதினாறு வருஷங்களில் இதில் எதுவுமே மாறவில்லை.

ஒரே நல்ல விஷயம் ஆச்சியம்மாளால் கட்டுப்படுத்த முடியாத ஒரே ஆளாக இருந்தது அவளது எட்டாவது மகனான ரெங்கதாசன். ஏழு பெண்ணுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆண் வாரிசு. அதுவும் ஆசை ஆசையாக கிருஷ்ணநாமம் சூட்டிய கடைக்குட்டி வாரிசு.

அவரைக் கட்டிக்கொண்டு பெரியவீட்டின் ஒரே மருமகளாக வந்ததில் அன்னம்மாளுக்குக் கொஞ்சம் ரகசிய கர்வம் உண்டு. ஆனால், ரெங்கதாசருக்குப் பதிலாக கிழவிக்கு முன்னால் மண்டியிடும் இன்னொரு பெண்ணாகத்தான் நடத்தப்பட்டதில் அவளுக்கு மீளமுடியாத எரிச்சல் மிச்சமிருந்தது.

ஆச்சியம்மாளின் சீதனம்

தலையெல்லாம் பஞ்சாகப் வெளுத்துவிட்டது என்றாலும் பருவத்தில் துள்ளி வளைய வந்தவள் ஆச்சியம்மாள். அவளுக்குப் பெயரே அப்படித்தான். ஒய்யாரமாய் நெளிந்து, உடம்பைத் திருகும் பாவனைகளோடு பருவம்பூத்த பெண்பிள்ளை ஒருத்தி, பெரிய வீடுகளில் வளைய வருகிறாள் என்றாலே, அந்தக் காலத்து வடபதி தட்டார்களுக்கு மூக்கு வேர்த்துவிடுமே!

அம்புநாட்டுச் செட்டிகளிடம் பொன்னுருக்கி, கொங்குநாட்டு கோனேரிகளிடம் புரளும் அசல் ரத்தினங்களைச் சீவி வாங்கி, முத்துமாலை என்ன, மலைநாட்டுத் தந்த வளையலென்ன. தினுசு தினுசான ஆபரணங்கள், தேயா வஸ்திரங்கள் எனச் சும்மாடாகச் சுமந்துகொண்டு, வாசல்நடையில் வந்து வரிசைகட்டி நின்ற்பார்களாம்.

பொன் பொருளைக் கொட்டி, கைக்கு காலுக்கு கழுத்துக்கு என்று ஒவ்வொன்றாக இருந்திருந்து அழகு பார்த்துத்தான் ஆச்சியம்மாளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும்போக, அவளுக்கென வந்த சீர்செனத்தியில் குதிரை, காளை மாடுகள், சொத்து சம்பத்துகள் என்று பெரும்பாட்டம் உண்டாம். அதுவெல்லாம் கடலில்போட்ட கல் உப்பாகக் கரைந்து, மிச்ச பெருமைக்கு அச்சலச்சலாய் மழைபெய்யும் ஒருபாட்டம் கரிசலும், இந்தக் கருங்கல் சுவரெழுப்பி, கருங்காலி மரத்தில் தூண்நட்டு, நாழி ஓடும் உள்ளொழுக்குக் கூரையும் விட்டுக் கட்டின பெரியவீடு எனும் மாளிகையும் தான் கைதங்கியிருக்கிறது.

அத்தனைக்கும் காரணம் ஆச்சியம்மாளின் காலஞ்சென்ற கணவர் கைலாசபதி கொடிநாட்டார். ஏழு பெண்மக்களைப் பெற்றெடுத்த சீமான். அவரும் பெரிய குடும்பத்து ஆள் தான். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களில் கம்பும் வரகும் சோளமும் கொருகொருவென முண்டிய காலத்திலேயே, ஆவுடையார்புரத்தில் கொடிக்கால் வைத்துகிருஷிபண்ணியவர்.

சொத்துவரப்புகள் எக்கச்சக்கம். அதேபோல உடன்பிறப்புகள் கணக்கும். அவ்வளவு பேருக்கும் மூத்தவரென்றும் அவரைக் காட்டிலும் பெரிய இடத்ததில் சம்பந்தம் செய்தவர் என்றால் கேட்கணுமா? வளப்பங்கள் தீரும்மட்டும் வாழ்ந்து தீர்த்தார். பிறகு எப்படி குடி முறிந்து விழுந்தது? பிறகு, மனங்கெட்டு செய்த பாவத்துக்கும் அதுகொண்டுவந்து சேர்த்த சாபத்துக்கும் கிடைத்த ஒரு வெகுமதி உண்டில்லையா?

தாத்தையா என்றழைக்கப்பட்ட கைலாசபதி கொடிநாட்டார் உயிரை சீமைச் சாராய சகவாசம் குடித்திருந்தாலும் அவர் சொத்து, சம்பாத்தியங்களைக் குடித்ததில் முக்கியப் பங்கு அவரது கூத்திமார் குடித்தனம். ஆனால், அதுபற்றியும்கூட ஆச்சியம்மா கடுகடுத்து நாலு வார்த்தைப் பேசியது கிடையாது.

அவ்வளவு ஏன், தாத்தையாவுக்கு அதன்வழி பிறந்த சில வாரிசுகளும் உண்டு. ஆச்சியம்மா அதுபற்றி ஒரு வாக்கும் விட்டதில்லை. அவள் எதைத்தான் வெளிப்படை வைத்துப் பேசியிருகிறாள்? கொடிநாட்டார் வம்சத்தின் வாழ்வரசியாக, வம்சகௌரதையைக் காப்பாற்றுபவளாக எப்போதும் தன் சீலை முந்தானையிலேயே அந்த அர்த்தப் பேறுகளை முடிந்து வைத்திருப்பளாக அத்தனைக் காலமும் தன் உயிரை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தாள் ஆச்சியம்மா.

தன் சிறு வயதில் ரெங்கதாசன் இவ்வளவு கடுமையான ஆளாக இல்லை. அவரது பதிமூணாம் வயதில் ஒருநாள் தீவிரக் காய்ச்சல் கண்டு படுக்கையிலே விழுந்தார். இனி பிழைக்க லாயக்கே இல்லை என்று கொடிக்குளம் பெரிய வைத்தியரும், இங்கிலீஸ் ஆஸ்பத்திரியாரும் கைவிரித்தபிறகு, ஆச்சியம்மாள் தன் கரிசலுக்கே வடக்காட்டில் வைத்த செல்லியம்மனை நெக்குருக வேண்டிக்கிடந்து, நேர்ச்சைகள் மூலம் அவர் உயிரை மீட்டெடுத்து வந்தாள்.

கண்திறந்தபோது, உடம்பெல்லாம் அப்படியே ரத்தச் சிகப்பு கண்டுவிட்டது. ஆள் பேச்சு ஜாடை எல்லாம் மாறிவிட்டது. ஒரே பிள்ளை என்று படிக்க கொள்ள என்றுகூட வெளியிலே எங்கும் அனுப்பாமல் வளர்த்தவரின் நடையுடை தோரணைகள் எல்லாமே மாறிவிட்டது. விவகாரம் கொடிநாட்டாருக்கும் ஆச்சியம்மாளுக்கும் மெல்லதான் உரைக்க ஆரம்பித்தது.

ரெங்கதாசன் மேலேமேனிஇறங்கியிருக்கிறது என்று என்று தெரிய வந்தபோது, வேலையாட்கள் உட்பட எல்லோருமே அஞ்சி அலறி ஓட்டமெடுத்தார்கள். பூரண குணம் இல்லை என்றாலும் தனக்கு எதுவோ நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் ரெங்கதாசனுக்குப் பிடிபட்டது. மண்ணள்ளிப் போட்டு புகையை மறைக்கும் காரியம் ஒன்று நிகழ்வதை அவனால் ரொம்பக் காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

அன்னம்மாளைத் திருமணஞ்ச் செய்துகொள்வதற்குச் சில காலத்துக்கு முன், ’தெரிந்ததைச் சொல்லேன்என்று அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மூத்த அத்தை குமுதநாச்சியாள் தான் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து முதன்முதலாக வாய் திறந்தார்.

கைலாசபதி நாட்டாரின் உடன்பிறந்த தம்பி, சின்னையா எனும் திருப்பிரகாச பழபதி கொடிநாட்டார் தடயமின்றிச் செத்துப் போனது, அவரதுமேனிகுடும்பத்து ஆண்களைப் படுத்துவது குறித்து ஒவ்வொரு சொல்லாக அவள் எடுத்து வைத்தாள்.

திருப்பிரகாச பழபதி

கொடிக்காலுக்கு வடபுறத்தில் செல்லியம்மனுக்குக் கோயில் எழுப்பப் பட்டிருந்தது. வெளியாட்கள் யாரும் எட்டிப் பார்க்காத ஆவுடையாற்றுப் பள்ளத்தின் ஓடைபிரியும் அந்த இடத்தில் தான், ஓடைக்கரை தென்கலம் சிவனையாவின் குடிசை இருந்தது. சுத்துப்பட்டு ஊர்களின் மிராசுகள் அத்தனைபேரின் வில்வண்டிக் காளைகளுக்கும் பிடித்த பிடியில், ஒற்றை ஆளாக லாடம் அடிப்பவர் சிவனையா. அவரது மூத்த மகள் செல்லியை ஒரு வெட்டாப்பு காலத்தில் ஊருணிக் கரையில் பார்த்து அவள்மீது மனசு வைத்தார் சின்னையா திருப்பிரகாச பழபதி

அவர் வயசுக்கு நாலுவட்டம் இளையவளான செல்லி, உழு மாடுகளோடும் உடுப்பனவுகளோடும் வாழும் சிறுகுடிக்காரி. வெள்ளி குலுங்கினாலும் சத்தம் வரும். அவள் பேச்சுக்கு வாயெடுத்த வார்த்தை வெளியிலே வந்து விழாது. எந்த உயிருக்கும் குற்றமும் தீங்கும் செய்ய நினைக்காதச் சின்ன உயிர். அப்பேர்பட்டவள் சின்னையாவின் மனசுக்குள் பூத்துவிட்டதில், அவளது குற்றம் என்று என்ன இருக்க முடியும்?

களையெடுக்கிற இடம், காடு கரைவெளி எங்கும் பின்னாலே அலைந்து வார்த்தை வளர்த்திருக்கிறார். எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் அச்சமும் தடுப்பும் கொள்ளாமையும் அவளுக்கும் தான் ஏற்பட்டது. இருந்தும் கடல்கடந்த நாடுகளுக்கெல்லாம் சென்று பெரும்படிப்பு படித்து வந்தவரான சின்னவரின் பிரியம் அவர்மீது வசியம் வரவைத்தது. நம்பிக்கைகொண்டு அவருடன் துலங்கிவிட்டாள். கரிசல்காட்டுப் பிஞ்சு கண்ட பருத்திக்காம்பு மீது கொடிக்கால் வெற்றிலை சுற்று கண்டுவிட்டது.

செல்லியைக் கலியாணம் கட்டிக்கொண்டு அவள் கூடே வாழ்வதெல்லாம் இந்த ஜென்மாந்திரத்தில் இங்கே நடக்காது என்றறிந்த சின்னவர் அவளை ஈழவநாட்டுக்குக் கையோடு கூட்டிச் சென்றுவிடுவது என்று திட்டமிட்டார். அதற்கான ஏற்பாடுகளில் முழுத்தீவிரமாக ஈடுபட்டபோது, ஆச்சியம்மா காதில் இந்த விஷயம் காத்துவாக்கில் வந்து விழுந்தது.

தன் இளைய கொழுநன் செய்யப்போகும் காரியத்தில் அவளுக்குப் பெரிய கிலேசம் வந்துவிட்டது. கைலாசபதி நாட்டாருக்கும் ஏகபோகக் கோபப்பெருக்கு. விவகாரம் முற்றிபாற்பட்ட பெரிய மனிதர்களைக்கொண்டு, தன் மற்ற சகோதர, சகோதரிக் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார் சின்னையா.

அவர்களோ, எப்படியாவது இந்த விவகாரத்தில் இருந்து தங்கள் தம்பியரை வெளியேற வைத்துவிட முடியும். என்றே நம்பி இருந்தார்கள். எந்த நம்பிக்கையும் கைகூடி வரவில்லை. சொத்து சம்பத்துக்களைக் காட்டி மிரட்டினார்கள். ”நீங்களும் சரி; உங்கள் சம்போக சங்காத்தங்களும் சரிஎன்றுவிட்டார்.

அப்படித்தான் போகிறான் என்றால் ஒழியட்டும்என்று கொடிநாட்டாரும் உட்பட அனைவரும் அவரைத் தலைமுழுக நினைத்தபோது, ஆச்சியம்மாவுக்கு ஆவேசம் பெருத்துவிட்டது.

எனக்குச் சமானமுள்ள இடத்தில் ஒரு கீழ்க்குடி பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்துவேன் என்கிறான். ஒழியட்டும் என்று எப்படி விடலாம். நாளைக்கு அவளுக்குப் பிறக்கும் சீமாந்திரப் புத்திரங்கள் வாசலில் வந்து நிக்குமே? அப்போ கொடிநாட்டார் குடும்பம் முகத்தை எங்கே கொண்டுபோய் வைக்கும்என்று தாத்தையாவை. பொரிந்து தள்ளிவிட்டாள் ஆச்சியம்மா. எல்லோருக்கும் திக்கென்று இருந்தது.

செல்லி

தேய்பிறை முடிவுக்கு வர நாலு நாள்கள் இருந்த அந்த அர்த்த சாமம் முடிந்திருந்தது. ஊரார் யாரும் கண் பார்க்காத ஊமைச் சடங்காக வடக்குக்காட்டு காட்டு முற்றத்தில் அந்தப் பாதகம் நிகழ்ந்திருந்தது.

முகத்தைக் கோணியில் இறுக்கிக்கட்டி, உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் இச்சி மரத்தில் அங்கலமங்கலமாகத் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு பெண்ணுடம்பு.

காத்தில் ஊசலாடி இறுவிப்போன கயிறு, அதன் தொண்டையை உடைந்து, தலை மூட்டையை திசைக்கில்லாமல் சரித்து விட்டிருந்தது. ஒடிந்த காலும் கைகளும் அந்த உடம்புக்குச் சம்பந்தமில்லாத உருப்புகள் போல பருத்து வீங்கியிருந்தன.

மயிர் அளைந்திராத உடலுக்கு நேர்கீழே ஊனும் ஊளையும் ரத்தமும் நரவலும் வழிந்து நிலமெங்கும் கவுச்சி பட்டுக் கிடந்தது.

சங்கடம் பொசபொசவெனப் பரவிவிட்டது.

போட்டது போட்டபடி பள்ளிக்குடி பெண்களும் ஆண்களும் முற்றத்துக்கு வந்துவிட்டார்கள். யாரோ எவரோ எங்கிருந்து கொண்டுவந்து இங்கபோட்டாங்களோ என்று உள்ளூற எழுந்த   வயனங்களை அடக்கிக்கொண்டு அழுகைமுட்ட தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள்.

 “எள உசுர இப்படி நாசம் பண்ணிப் போட்டுருக்கானுகளே! யாரு ஊட்டுப் புள்ளைடா இது. ஏள யப்பா! அன்னாந்து காணாம ஊருப் பொட்டப் புள்ளைகள்ள யாரக் காணுமமுன்னு தேடுங்கடாப்பா!” குப்பாயி கிழவி ஆம்பளை ஆட்களை புறம்சொல்லி அங்கிருந்து விலக்கிவிட்டாள்.

என்னனுடா ஒறங்குச்சு இந்த ஊரு. ச்சீன்னு போச்சே பொம்பள பொளப்பு ஒரு ராவுலே! எம்மா தாயிபெருமாச்சி கனைப்போடு, தான் உடுத்தியிருந்த சீலையை உரிஞ்சிக் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த உடம்பைப் பார்த்துத் தூக்கித் வீசிச் சொன்னாள். அது கிளையையும் உடலையும் எட்டாமல் அலைபாய்ந்து எந்த நிலையுமற்றுக் கீழே விழுந்தது.

எடுத்து மறங்கடி நம்மூட்டு மானம்னு அறிஞ்சோமா!’  வயது பெருத்தவர்கள் துடித்துப்போய் கைக்கு மாட்டிய துணிகளை எல்லாம் எடுத்து எறிந்தார்கள்.

புறந்தேடிப் போன ஆம்பளைமார்களில் ஒருத்தர் கடுத்துக் கூக்குரல் போட்டார்.

எம்மோவ் தெங்கலத்தூராளு மருந்தடிச்சு வரப்புல கெடக்காரு. மாடு கண்ணுவளும் உசுரில்லாம வெட்டிச் சரிச்சுக் கெடக்குபதைபதைப்பு எல்லாருக்கும் தொற்றிக் கொண்டது.

மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது செல்லி!

கிளையிலாடிய அவள் பருத்தியுடம்பு இப்போது ஒரு சீலைக் கொத்தாக மாறிப் போயிருந்தது

திடீரென கண்மறைத்து நின்ற இளஞ்சிறுமிகளுக்கு எங்கிருந்து கிளம்பியதோ அத்தனை அழுகையும் ஆவேசமும் விசும்பலும். இப்போது அவர்கள் பங்குக்கும் அன்னாந்து பார்த்து கதறிக் கொண்டிருந்தார்கள்.

வைக்கல்பிரியை அவசரமாக முடைந்து, அதைக் கயிறாகப் பாவித்துக்கொண்டு, குடும்பரும் வேறு சில ஆண்களும், மரத்தின் கிளையில் கொத்திப் பிடித்துத் தாவி ஏறினார்கள்.

குடும்பர் செல்லியின் கழுத்தை இறுக்கியிருந்த எருமைத்தோல் கயிற்றை அறுக்க மற்றவர்கள் கயிற்றை முறுக்கி ப் பிடித்துக் கொண்டார்கள். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு செல்லியின் உடல் தரையை நோக்கித் தளர விடப்பட்டது.

பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவளைத் தாங்கிப் பிடிக்க, பேய்க் காத்தில் மொட மொடவென்று உடைந்து விழும் பனைமரம்போல பள்ளியர் கைகளில் வந்து விழுந்தாள் செல்லி.

வடகாட்டுத் தெய்வம்

தேநாளில் செல்லியின் உடம்பு அந்தரத்தில் துலாக்கோல் போலத் தொங்க விடப்பட்டது கேட்டு, பைத்தியமும் வெறியும் ஒருசேரப் பிறந்துவிட்டவராக, தன் வீட்டார் எல்லா பேரையும் வாளெடுத்து வெட்டப் புறப்பட்டார் பழபதி. இந்த ஈனச் செயலைச் செய்தவன் ஒவ்வொருத்தன் தலையையும் வாங்காமல் விடமாட்டேன் என்று புறப்பட்டுப் போனவரைக் குறித்து அதன்பிறகு எந்தத் தகவலும் ஊரார் காதுக்குக் கிடைக்கவில்லை.

சிலகாலம் கழித்து, அவர் அவர் மதுரைக்குச்சீமைக்கு ரயிலேறி, அங்கிருந்து தனுக்கோடி துறையடைந்து சிலோனுக்குக் கப்பல் பிடித்துப் போனதாகவும், பாதி வழியிலே பையித்தியம் முத்திப் போய் கடலில் குதித்துச் செத்துப் போனதாகவும் சில கதைகள் பரவியது. அவரது சொத்துக்களை மொத்தக் குடும்பமும் பங்குபோட்டுக் கொண்டது. குமுதநாச்சியும் அவள் தங்கைகள் இருவரும் மட்டும் ஒரு குறுமணி கூட இந்தப் பாவத்தில் இருந்து எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.

சொத்துபட்டக் குடும்பங்களில் இருந்து ஒவ்வொரு உயிரும் துள்ளத் துடிக்கப் பறிபோய் கொண்டிருந்தது. அதுவும் சூலை நோய் கண்ட கைலாசபதி கொடிநாட்டார் தன் வளர்ப்புக் காளை முட்டிச் செத்துப் போனார். கொடிக்கால் கிணறு பொத்தல் விழுந்தது. சுற்றியுள்ள கிணற்றுச் சுவர்கள் ஈரப்பதம் கூட இல்லாமல் வாடியது. கல் ஒட்டர்கள் வந்து பார்த்து விட்டு தலையைப் பிய்த்துக்கொண்டு போனார்கள்.

ஆவுடையாப்புரத்துச் சொத்துக்களைச் பிராமணனுக்கு இனாம் எழுதிக் கொடுத்து தப்பிக்க எண்ணினார்கள். அதுவரைக்கும் இருமாப்பு குறையாதிருந்த ஆச்சியம்மாள் கடேசியாகத் தன் பிள்ளை ரெங்கசாதனுக்குச் சூலை கண்டவிட்டபோதுதான் செய்த பழிக்கு அஞ்சி, மறவன்மடம் கருமசண்டாளன் காளமுத்துத் தேவரிடம் போய் பரிகாரம் கேட்டாள்

ஈசான மூலையில் பேறுகாலக் குடிசை ஒன்று கட்டுத் திறந்து கிடக்குது. அதைத் தட்டி வைத்துக் கட்டு. பக்கத்திலே குளிப்பதற்கு அடுப்பு வைத்து, ஊரிலுள்ள ஏகாலியிடம் மாற்றுத் துணி கொண்டுவந்து போடச் சொல்லு. பேறுகாலச் சாமான், நாட்டு மருந்து, படையல், பொரிகடலை எல்லாம் வைத்துப்பிள்ளை பிறக்கப் போகிறதுஎன்று கூப்பிடு. கடேசியாக தட்டாம் பயிறை வேக வைத்து, உருண்டை பிடித்து இதுதான் உன் பிள்ளை என்று கொண்டுபோய் குடிசை வாசலில் காணி. கூடவே, ஒரு நார்பெட்டியில் புதிய சேலையை வைத்து வழிபாடு பண்ணு. கொல்லப்பட்ட உயிர் சாந்தப்படும். உன் குடி மிஞ்சும். தெய்வக்கணம் கைகொடுக்கும்என்று அவர் சொன்னதின் பேரில் வடக்காட்டை நோக்கிப் படையெடுத்தாள் ஆச்சியம்மாள்.

பயிர்பச்சை வளர்ந்து, பூமியை மறைத்துச் செழித்துக் கொழுத்த பூமி கழுகு தின்ன மாட்டெலும்புக் கூடாக கரையான் அரித்துக் கம்பும் கழுக்கலுமாகக் கிடந்தது. பனந்தடித் தூண்களுக்குக் கீழாகச் செம்மண்ணில் மஞ்சள் பூசி, வாய், மூக்கு, கண்ணு என வனாந்தரமாக வைக்கப்பட்டிருந்தாள் செல்லிஆச்சியம்மாள் அவளுக்குச் சுவர் வளர்த்து க் கூரை கட்டினாள். முன்பக்கம் ஓலையில் தட்டிக்கதவு வைத்தாள். சம்பு வளர்ந்துகிடந்த கருங்குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து வைத்து தானே ஏகாலித் துணியும் கொண்டுவந்து வைத்தாள். பேறுகாலச் சாமான், மருந்துப் படையல் எல்லாம் வைத்துவிட்டு,  “புள்ளை பிறந்திருக்குஎன்று கொண்டுவந்து அந்தப் பேறுகால குடிசையின் வாசலில் நார்ப்பெட்டியோடு தன் மகன் ரெங்கதாசனைக் கொண்டுவந்து படுக்கப் போட்டாள்.

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்