காளிக்கூத்து

by Guy Blank


மேளச் சத்தத்தின் உக்கிரம் கூடியிருக்க, ஆதாளி வந்த அம்மை ஒருபாடு ஆட்டம் ஆடித் தீர்த்துக் கொண்டிருந்தாள். மஞ்சள் சீலையின் சிவப்பு முந்தியை வாயில் கவ்விக்கொண்டு, அங்கும் இங்கும் அசைந்து ஆடும் கழுத்து மாலை காலடியில் சிந்திச் சிதற, ஒருகையில் வெங்கலத் திருநீத்துச் சட்டியும், மறுகையில் வேப்பிலைக் கொத்தும், கண்ணிரண்டில் அருளும் வந்திறங்கி நின்ற நிலையிலே உடல் அதிர 'யேய்..' என்று  ஒரு அதட்டுதான் கொடுத்திருந்தாள். அம்மையின் கர்ணத்தைப் புரிந்த வாக்கில் கொட்டுக்காரர்கள் அடியை நிறுத்திப் பிடித்திருந்தார்கள்.

ஆடியும் சித்திரையும் வந்துவிட்டாள் போதும். எங்கள் வீட்டுக் கோவிலைச் சுற்றி விரிந்திருக்கும் ஒவ்வொரு தட்டிக்காலுக்கும் ஒரு வெள்ளாடுக்குட்டி மாலை சூடி குலைகளை மென்றுகொண்டே நிற்கும். அதுநாள்பட்டு என்னென்ன மன வேண்டுதல் எல்லாமோ வைத்துவிட்டுப் போயிருந்த சனங்கள் வண்டிகட்டிக் கொண்டு வந்திறங்கியிருக்கும். பொங்கல் சட்டி அடுப்புக்கு தட்டாம்பாறைக் குழியில் கல் வெட்டி எடுக்கும் வேலையை ஆம்பளையாட்கள் தொடங்க, பொம்பளைகள் சாரைவாரியாக தண்ணிக் குடத்தோடு குழிப் பாதைக்குள் இறங்கி ஏறுவார்கள்.

ஆச்சிக்கு மூத்தார் தான் இந்தக் குடிலை எடுத்து வேய்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கும் முன்னவர்கள் இந்தக் காளித் தெய்வத்தை பூசணை கொடுத்துக் கும்பிட்டு வந்திருக்கிறார்கள். அப்போது காளி அடுப்பளவு சின்னதாயும், பலிவிடும் பீடம் ஒரு கஞ்சித் தொட்டி அளவுக்குப் பெரியதாயும் இருந்திருக்கிறது. குடிலைச் சுத்தியும் பந்தல்போட்ட போதெல்லாம்கூட கோவிலுக்கு ஒரு கைப்பிடிச் சுத்துச் சுவர் இருந்ததில்லை. கல்கட்டு நடை படி எதுவும் இல்லாத வெட்டவெளி வெயிலில் காந்தும் அக்கினி காளி.

இன்றைக்கு அருள் வந்து அம்மை ஆடுவதற்கு முன்னெல்லாம் ஆச்சிக்குள் தான் காளி இறங்கும். சுதியேற ஏற அடித்து முழக்கும் கொட்டுச் சத்தத்துக்கு சுழண்ட்டித்து கிழக்கும் மேற்கும் கால்வீசி சலங்கை கட்டி ஆடும். ஆடி முடித்து அருள் சொல்லி அடங்கியதும் ஒரு பித்தளைக் கும்பா முழுக்க வழிந்து ஒழுகும் நீத்துப் பாகத்தை ஒரே மடக்காகக் குடித்து விழுங்கும். அந்த நேரத்தில் தான் கும்ம வயித்து வலியெடுத்த பொட்டச்சிப் புள்ளைகளை அவரவரது வீட்டாள்கள் கொண்டு வந்து ஆச்சியின் காலடியில் கிடத்துவார்கள். கண்கொண்டு கண்டதைப் போல் ஆச்சி காளியாக நின்று அருள்வாக்கு உதிர்ப்பாள்.

"எம்மோவ்.. நின்னா நடந்தா புள்ள உசுருபோக துடிக்கா. ரவைக்கு தூக்கமில்ல. ஈருக் குச்சியா எம்புள்ள மெலிஞ்சி போறத நெதமும் கண்கொண்டு பாக்க நெஞ்சு கொடையுது. நீ என்ன கேக்கியோ அதக் கொண்டுவந்து உங்கோவிலடியில கொட்டுதேன். நீதாம் எம்புள்ளைக்க வயித்து வலியத் தீத்து நல்ல வழி காம்பிக்கணும்.."

"என்னத்தல கொண்டாருவ.. பச்ச ரத்தம் குடிச்ச பாவி. நீ செஞ்ச பாவமில்லா இந்தப் பிஞ்சு உசுர படுத்தி எடுக்கு. வங்கொலயா கெடந்து கதறுனாளே.. ஒம் ஒடம்பொறந்தவ.. அவள கருவறுத்திருக்கியே அது நாயமா. ஏஞ் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கெடந்தாலும் அவ பசிக்கி பசிக்கி கொண்டா கொண்டான்னு எங்கிட்ட உம்புள்ள உசுரல்லா கேக்கா.. கொடுத்துரவா!"

"எம்மா தாயி. உங்காலடியில விழுந்து கெடக்கேன். எம்புள்ளய மட்டும் வுட்டுரச் சொல்லு. அவ நெழலுக்கும் கொடபுடிச்சு எம்பாவத்தக் கழுவுறன்"

"ச்சீ  எந்திரிரா.. இப்பச் சொல்லுதேன் கேளு. தெக்காலயும் வடக்காலயும் காத்தடிக்கும் தெரட்டு மேட்டுல ஒன்னால செத்த ஒந்தங்கச்சிக்காரி ஒத்தக் கல்லா நிக்கா. அங்க அவளுக்கு ஒரு பூடம் எழுப்பு. கெழம தவறாம வெள்ளி செவ்வா வௌக்குபோடு. சித்திரைக்கு மூணாம் சனிக்கெழம சாமக்கொட குடுத்து கெடா வெட்டி ரத்த பலி குடு. கேட்டியா... ஒருகோட்ட நெல்லக் குத்தி பச்சரிசிச் சோறாப் படையல் போடு.  படப்புச் சோத்துல ஒரு பருக்க நீ திங்கக் கூடாது. பந்த போட்டு எல விரிச்சு ஊரக் கூப்புட்டு ஒக்கார வச்சிப் பரிமாறு. உம் புள்ள உசுரு வலி உருவுன சுளுக்கா போயிரும்."

"நீ சொன்னத ஒண்ணுவுடாம செஞ்சிருதெம் தாயீ. எம்புள்ளய மட்டும் நீ உட்டுராத..."

***

ச்சியின் அருள்வாக்குகளும் தெறித்து விழும் கட்டளைகளும் காளியின் உக்கிரத்துக்குக் கொஞ்சமும் குறையில்லாதது. அவளது துடிக்கும் உடம்பும் கனன்றெரியும் கண்களும் வெட்டின ஆட்டின் துடிப்புக்கும் கொள்ளாமல் ஈரக் கொலையை ருசிக்கும் ஆவேசமும் எந்தச் சண்டியனையும் கெதக்'கென மருள வைத்துவிடும். செய்த குத்தத்தை சாமியே வந்து கேட்டாலும் ஒத்துக் கொள்ளாதவர்கள் கூட காளி ரூபங்கொண்டு அவள் அதட்டும்போது எதிர்த்து ஒருவார்த்தை சொல்லிவிட முடியாதபடி தெய்வ வாக்கு அவளிடம் குடிகொண்டிருந்தது.

நாளும் கிழமையும் தள்ளி ஒருநாள் காளியின் சொரூபம் ஆச்சியிடமிருந்து விலகி அம்மை மீது வந்திறங்கியது. அம்மையின் உடற்பூச்சும் வாசனையும் காளிக்குப் பிடித்துக் கொண்டது. கொட்டு மேளம் கொட்ட ஆரம்பித்த சாயங்காலத்தில் தட்டாம்பாறைக் கல்குழி கரையடியில் தண்ணிக்குப் போன அம்மை அங்கிருந்து ஈரப் பாவாடைச் சொட்ட சொட்ட ஒரே மூச்சாய் சன்னதமெடுத்து ஓடிவந்து கோவிலடி முன்னால் மண் தெறிக்க ஆடினாளாம். ஆட்டத்தின்போது அம்மை பிடித்த ஒவ்வொரு அடவிலும் ஆச்சியின் அதே ஆவேசம்.

இனி காளியாயி தன் மீது இறங்க மாட்டாள் என்று ஆச்சிக்குப் புரிந்துபட்டது. தன் நாலு பெண் மக்களில் நடுவாந்திரமாகப் பிறந்த அம்மையையே தனக்குப் பிறகு அடுத்த வாரிசாக்கி கோவிலுக்கென நேர்ந்துவிட்டது.

அம்மைக்குள்ளும் ஆசாபாசங்கள் நிறைய இருந்திருக்கிறது. கல்குழியின்  வேலியோரத்து தாழம்புதரில் கொத்துக் கொத்தாய் சுருண்டு கிடக்கும் பாம்புக் குட்டிகளை உதிர்த்து, தொரட்டியால் சுண்டிப் பறித்த தாழம்பூ வாசனைமேல் அவளுக்குச் சொல்ல முடியாத கிரக்கம் உண்டு. ஊருக்குள் மல்லாந்து நின்றுகொண்டிருந்த பொத்தைகளையும் பாறைக் குழிகளையும் வாகுவாகாய் வெடிவைத்துப் பிளக்கும் கம்பசர் வண்டிக்காரர் ஒருத்தரை விபரம் புரிந்து கலியாணமெல்லாம் கட்டிக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறது. ஆனால் காளி சொரூபம் அவள் என்று ஆச்சி தலையிட்டு அம்மையை ஒருகட்டுக்குள் கட்டி வைத்துக் கொண்டுவிட்டாள்.

இருந்தும் அம்மையின் பத்தொன்பதாம் வயதில் ஐயாவோடு அவளுக்குக் கலியாணம் நடந்தது. காலங்களில் வயல் வேளைகள், வெள்ளாட்டுச் சேர்மானம், எண்ணெய் பிண்ணாக்கு வியாபாரம் என்று ஐயா அவர் சுத்துக்குள் சுத்தி வந்துகொண்டுதானிருந்தார். ஆணும் பொண்ணுமாக ரெண்டு பிள்ளைகள் பிறந்த கொஞ்ச வருசத்திலே ஐயாவைப் பொட்டல் நாகம் தீண்டி ஒருகால் நரம்பு முழுக்கச் சுண்டி வெடித்து வாகடம் பார்க்காமல் அப்படியே ஒரு மூலையில் இருந்து விட்டார்.

ஐயா ஒடுங்கியதும் அம்மைக்குக் காளியும் சன்னதமும் என்று காலம் பழையபடி சரிபட்டு வந்தது. அருள்வாக்கு குறிகேட்டு நிறைய சனங்கள் பழையபடி குவியத் தொடங்க வந்த வரும்படியில் கோவிலடிக்கு மேல்ச்சுவர் எழுந்தது. வாசலில் சூலம் குத்தி வைத்திருந்த இடத்தில் சிம்மக்கல் பீடம் நட்டு பூசனை சாமான்களில் சிலது புதுசேறியிருந்தது. குடும்பமாய் வந்து பொங்கல் விட்டு படைக்கிறவர்களுக்குக் குளிக்க கொள்ள மறைவு ஒன்று குடிலுக்குப் பின்னால் ஏற்படுத்தப்பட்டு பக்கத்திலே சிமெண்டுத் தொட்டியும் கட்டி முடித்திருந்தாள்.

தாக்கீதுகளோடு வந்து ரெண்டு மூணு நாள் கோவிலிலே தங்கியிருந்து போகும் வெளியூர் சனங்கள் சிலபேர் குடிலின் தார்சாவில் துண்டையும் கோணியையும் விரித்து படுத்துக் கிடந்த வகையில் ஐயாவுக்கு ஒதுக்கப் பட்டிருந்த கட்டில் அவ்வப்போது அவரிடமிருந்து பறிபோக வேண்டி யிருந்தது. பாறைத் திட்டுக்கு மேல் ஒத்தையில் நிற்கும் நீர்முள்ளி மரத்தடி நிழலில் போய்  படுத்துத் தூங்கி எந்திரித்து வந்தவர் ஒருநாள் வீட்டுப் பக்கம் சாப்பாடுக்கும் கூடத் திரும்பாமல் இருந்தார். அம்மையும் அவரை அவர் போக்கில் விட்டுவிட ஐயா ஒருநாள் காணமலே ஆனார்.

***

ல்குழி அணைக்கட்டு மாதிரி நிரம்பி வழிந்த மாரிக் காலத்தில் ஒருநாள் வெள்ளை வேட்டி ஆட்கள் சிலபேர் அம்மையின் பேரைச் சொல்லி விசாரித்துக் கொண்டே பிலசர் காரில் வந்திறங்கினார்கள். ஊரைச் சுற்றி உள்ள பழைய கோவில்கள் சிலதுக்கு துட்டு கொடுத்து இடிபாடுகளைக் கட்டிச் சரிசெய்து கொடுப்பதற்காக அரசாங்கத்தில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். கோவில் மேல்கூரையை எடுத்துக்கட்டி, வண்ணம் தீட்டிப் புதுசாகச் சிலை வைக்கவும், ஊர் கடைக்கோடிக்கும் கேட்கும்படி பாட்டுக் கேசட் குழாய் வைக்கவும் மேற்படிச் செலவுகளும் செய்து, மேற்கொண்டு ஆவதற்கு கோவில் பேரிலே அறக்கட்டளையும் ஆரம்பித்துத் தந்து அச்சடித்த ரசீதும் போட்டுக் கொடுத்துவிடுவோம் என்றார்கள்.

வந்தவர் விபரங்களை அம்மை ஆச்சியின் காதில்போய் சொன்னபோது அவள் விடாப்பிடியாக மறுத்து விட்டாள். "அவ நம்ம காளியாயி அவளுக்கு வேணுங்கத அவளே கேட்டு வாங்கிப்பா. எவனோ துட்ட கொண்டாந்து கொட்டுதான்னு அவள வித்து தின்ன நெனைச்சிராதத" என்று அம்மையை வெருட்டி எடுத்துவிட்டது ஆச்சி. அம்பாசிடர்காரர்கள் வளைத்து வளைத்து மூணு முறை நேரில் வந்து பேசி, கடைசியில் அம்மையைச் சம்மதிக்க வைத்திருந்தார்கள்.

எட்டே மாசத்தில் விறுவிறுவென கோவில் புதூசாகத் தலையெடுத்து விட்டது. மஞ்சள் காரையும் மத்தியான வெளிச்சமும் போட்டி போட்டுக் கொண்டு காளிக் கோவிலை சுத்தபத்தமாக்கிக் காட்டியது. வாசல் வைத்த சுற்றுச் சுவர். ரெண்டு நடை உயரத்துக்குக் காளி பீடம். ஊதா நிற உண்டியலுக்கு அமுக்குப் பூட்டு, சுச்சைத் தட்டினால் மேளமடிக்கும் யந்திரக் கொட்டு முழக்கு. அம்மன் படம் அச்சடித்த பேப்பர் சீட்டில் குங்குமமும் திருநீறும் என்று காளிக் கோவிலின் வனப்பே மாறியிருந்தது.

கோவிலைக் கட்டியெடுத்த பிறகு வரப்போகும் முதல் சித்திரைக்கு இன்னும் நான்கு மாசம் தான் மிச்சமிருந்தது. கல்குழியில் தண்ணீர் பாதியளவுக்கு இறங்கியிருந்தது. அக்கம் பக்கத்து ஊரிலிருந்து செவ்வாய் வெள்ளி காளிக்கு விளக்குபோட வரும் சனங்கள் எல்லாரிடமும், "இந்தச் சித்திரைக்கு சொந்தத்தார் சுகத்தார் எல்லார்த்தையும் கட்டாயம் பெரிய கும்பிடுக்குக் கூட்டிட்டு வந்துருங்க என்ன" என்று ஒவ்வொரு முறையும் அழுத்தி அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்தது அம்மை. அவர்களும் தங்கள் பங்குக்கு ஆள் மாத்தி ஆள் சொல்லி கோவில் சிறப்பை ஊரூராய் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.

***

ங்குனி விழுந்து ரெண்டாம் வெள்ளியில் பிலசர் கார் ஆட்கள் திரும்ப வந்து இறங்கியிருந்தார்கள். இந்தமுறை கூட ரெண்டு மூன்று கலர் வண்டிகளும் சேர்ந்திருந்தன.

அதிலிருந்து இறங்கினவர்களில் வெளுத்த முகமும் மீசை இல்லாத சவரமும் செய்திருந்த ஒரு பெரியவரைக் காட்டி நெல்லூர் பக்கத்தில் ஓட்டல் தொழில் நடத்திக் கொண்டிருப்பவர் என்று அம்மையிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

ரொம்ப நாளாய் கனவில் ஒரு பெண் வந்து அழுவதாகவும், தாழம்புதரும் தண்ணீரும் கெட்டிக் கிடக்கும் பாறைகளுக்கு நடுவில் தான் பசியோடு இருப்பதாகவும், 'அங்கே எனக்குச் சாப்பாடு  எடுத்துக் கொண்டு வா' என்று தினமும் கேட்பதாவும் விபரித்தார். அறிந்தவர் தெரிந்தவர்களிடம் சொல்லி  விசாரித்தபோது உங்கள் கோவிலை இவர்கள் தான் அடையாளம் கண்டுபிடித்துச் சொனார்கள். வந்திறங்கிப் பார்த்தால் அப்படியே கனவில் பார்த்த முகம் இந்த சாமிக்கு என்றார்.

நெல்லூர் ஓட்டல்காரர் சொன்ன அடையாளங்கள் காளியாயிக்குப் பொருத்தும் தான் என்றாலும், அவளை நாங்கள் பசியோடு ஒருநாளும் வைத்திருக்கவில்லை என்பதாக அம்மையும் பங்கமில்லாமல் ஒரு பதிலைச் சொன்னாள். ஆனாலும் அந்தப் பதிலில் இருந்த கனிவைப் புரிந்துகொண்ட ஓட்டல்காரர், "இந்த அம்மனுக்கு ஒருவேளை படையலாச்சும் வைக்க எனக்கு வழி ஏற்படுத்திக் கொடுங்க" என்று இறங்கிப் பேசினார். அம்மை நேரே காளியாயிக்கு முன்னால் போய் பூவெடுத்துப் போட்டு அருள் கேட்டது. வெள்ளை வந்திருந்ததால் மனசு கனிந்து ஓட்டல்காரருக்கு சித்திரை பெரிய கும்பிடுக்கு முன் கட்டளை ஏற்றுநடத்த ஒப்புதல் தந்தது.

***

ட்டல்காரர் குடும்பம் தனத்தில் செழித்திருந்தது. செவெல் எனச் சிவந்த அவர் பொண்டாட்டியும் பிள்ளைகளும் வெறுங்காலும் நெற்றியும் தரையில் அழுந்த விழுந்தெழுந்து காளியாயியைக் கும்பிட்டார்கள்.

"நாகம் எங்கள் குலதெய்வம். அவளுக்கு ஒருதுளி பால் விட உங்கக் கோயில்ல ஒரு மூலையில் இடம் ஒதுக்கிக் கொடுக்க முடியுமா?" என்று ஓட்டல்காரர் பணிந்து கேட்டபோது, "சாமியில் உங்களுது எங்களுதுன்னு என்ன இருக்கு" என்று அம்மையும் கோவிலடிக்கு வடக்கில் நாகத்தை வைத்துக் கொள்ளச் சொன்னாள்.  

அந்தச் சித்திரையில் அதுவரை காணாத அளவுக்கு கோவிலில் கூட்டம் வெள்ளணை மாதிரி திமுதிமுத்திருந்தது. நீர்முள்ளி  மரத்தடியில், வெட்டைப் பாறையில், தட்டிகட்டாத சந்தடிகளில், குடியிருப்புகளில், வயல் வரப்புகளில் எல்லாமும் கூட குடும்பங்கள் படுதா விரித்துச் சாத்தி காளியாயியைக் கும்பிட வந்துக் காத்திருந்தன. அன்றைக்கு ஒரு பகலில் மட்டும் நூற்று எண்பத்தோரு கிடாய் வெட்டு. கல்குழி பாதையெங்கும் ரத்தக் கவுச்சி. செக்கச் சிவசிவக்க அம்மை தடுப்பெடுத்து ஆடினாள். ஆயிரம் பேருக்கு மேல் குறிசொல்லி உதடு வெடித்திருந்தாள். கோவிலில் இருந்து கிளம்பிய அடுப்பாங்கரிப் மூட்டம் ஊரையே மறைத்திருந்தது. பொங்கலும் குலவையும் கொட்டுமேளச் சத்தமும் என காளியாயிக்கு வாநாள் காணாத கொடை.

***

"தப்பா எடுத்துக்காதீங்க. எங்க இஷ்ட தெய்வமா இந்த அம்மனை ஏத்துக்கிட்டாலும் நாங்க உயிர்ப் பலி கொடுக்கிறதில்ல. அதனாலேயே விழாவுக்கு நீங்க நேரில வந்து அழைச்சும் வரமுடியலை. இந்தாங்க என் காணிக்கை" என்று ஒரு துணிப்பை நிறைய ருவாய்த்தாள் கட்டுக்களை அம்மையிடம் எடுத்து நீட்டினார் ஓட்டல்காரர். அம்மைக்கு கை விடைத்து விட்டது.

"உங்க காணிக்கை எதுன்னாலும் அதை நீங்க காளிக்கே கொடுத்துடுங்க. எங்க கையில வேண்டாம்" என்றது அம்மை.

"சொல்றோம்னு வித்யாசமா பார்க்க வேண்டாம். எங்கெங்கயோ எப்படி எப்படியோ சிக்கல்பட்டு மாட்டி நின்றிருக்க வேண்டியவன் நான். இந்தக் கோவிலுக்கு வந்து, இந்த அம்மன் முன்னாடி வந்து நின்ற மறுபொழுதே என் எல்லா பிரச்சனைகளும் துரும்பு மாதிரி காணாமல் போயிடுச்சு. இந்த தெய்வத்தை நீங்க இவ்வளவு வருஷம் பாடுபட்டு கட்டிக் காப்பாத்தி இருக்கீங்க. அதுக்காக என்னால முடிஞ்ச பங்களிப்பா இதை ஏத்துக்கோங்க. உங்களுக்கும் பிள்ளைங்க இருக்காங்களே. அவங்க படிப்புச் செலவுகளுக்கு உதவட்டுமே!" என்றார் ஓட்டல்காரர்.

அம்மை அந்தக் காசை வாங்கிவிட்டிருந்தது.

***

று பவுனில் ஆரம் ஒன்றும் ஐந்து பவுனில் காசுமாலையும், அதுபோக புது ஆளுயர சூலமும் ஏழெட்டு ஜவுளிப் பட்டும் கோயிலுக்கென வாங்கிச் சேர்த்தது அம்மை. 'நம்ம பசியை அவளே தீர்க்கும் போது அவ தராம நம்ம தட்டுக்கு வர்றது எதுவும் நமக்கு ஒட்டாது' என்று அம்மை தெளிவோடு இருந்தது. எல்லா காசையும் கோவில் பேரில் இருந்த அறக்கட்டளை கணக்கில் சேர்த்து எல்லாவற்றுக்கும் ஓட்டல்காரர் பேரில் ரசீது போட்டு நானே தான் கணக்கு எழுதி வைத்தேன். 

சரியாக ரெண்டே வருடத்தில் ஆச்சிக்கு மேலுக்கு முடியாமல் பஞ்சணையில் விழுந்துவிட்டது. கோவில் காரியங்களை அம்மை ஒருத்தியால் பார்க்க முடியாமல் போக வம்படியாக என்னைச் சாமி வேலைகளில்  இழுத்து விட்டுத் தம்பியைப் படிக்க அனுப்பியது.

கோயில் அறக்கட்டளையில் ஓட்டல்காரரையும் ஒரு பொறுப்பாளராகச் சேர்த்துக் கொள்ள அம்மை முடிவெடுத் திருந்தாள். அன்னதானச் சொத்து, பொன் பொருள் கணக்கு வழக்குகளைச் சமாளிக்க அவரது உதவியும் அடிக்கடித் தேவைப்பட்டதால் அம்மை இந்த முடிவை எடுத்திருந்தாள். ஓட்டல்காரர் எந்த முகச் சுழிப்பும் இல்லாமல் கோவில் விசயங்களை தலைமேல் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.

கோவிலைச் சுற்றித் தளம் போடும் போது அவருக்கென்று நாகம் எடுத்துக் கொடுத்த இடத்திலே அன்னபூரணிக்கும் நாகபூஷணிக்கும் தெய்வம் எழுப்பி இச்சையோடு வழிபட்டு வந்தார்.

***

வதியால் துடிக்காமல் அவசரமென்றும் அழைக்காமல் ஆச்சி நல்ல குளிரிரவில் பஞ்சணையிலே உயிரை விட்டிருந்தது. கோவில் கதவை இழுத்துச் சாத்திவிட்டு எல்லா பணிவிடையும் முடித்து தெக்கே உள்ள காட்டிலே அவளைக் கொண்டுபோய் ஆச்சியை அடக்கிவிட்டு வந்தோம். சித்தியும் பெரியம்மைப் பிள்ளைகளும் வந்திருந்தாலும் தம்பிதான் ஆச்சிக்கு முடி இறக்கினான். துட்டி விழுந்திருந்த பதினாறு நாளும் சாமி பூசையை நிறுத்தக் கூடாது என்று வெளியாள் பூசகரை வரவழைத்துக் கொண்டு கோவில் காரியங்களை ஓட்டல்காரரே முன்னின்று கவனித்துக் கொண்டார்.

ஒவ்வொரு நாளும் காளியாயியைக் கட்டிச் சேர்த்து, "அம்மோ இன்னைக்கு நீ கட்டியிருந்த செகப்பு பட்டுல என்னம்மா இருந்த தெரியுமா.. எந்தக் கோவமும் இல்லாம பச்சப் புள்ளைக்கு தன்னோட பாலாடைய விலக்கி பாலூட்டுற தாய் மாதிரி உன் முகத்துல அவ்வளவு தெளிச்சி. சரம் சரமா பூ கட்டிவச்சி உன்ன அலங்காரம் பண்ணிப் பார்க்கத்தான் இந்த பொறப்ப நீ கொடுத்திருக்க. என் அம்மால்ல நீ.." என்று ஊணுருக உயிருருக அவள் தாளடியிலே  கிடக்கும் அம்மைக்கு மனசும் இருப்பும்  ஓரிடத்திலும் கொள்ளவே இல்லை. 

பதினாறாம் நாள் துட்டி கழிக்க வந்தவர்கள் திரும்பி அவரவர்கள் வீடேறிய, மறுநாள் விடிகாலைக் கருக்கலிலே அம்மை எழுந்து நேரே கல்குழியை நோக்கி நடந்தாள். கால்முட்டிக்கு வறண்டிருந்த தண்ணியில் இறங்கி கையாலே கோரிக் குளித்தாள். தனக்குப் பிடித்த மஞ்சள் நிறச் சீலையை உடம்பகலச் சுத்தி உடுத்திக் கொண்டு, கோவிலடி திசைக்கு ஏறிநடந்தாள்.

கோவிலடி முகப்பிலே நிலை வாசல் வண்ணம் மாறியிருந்தது. ரெண்டு பக்கமும் நளின முகத்தோடு கட்டுச் சரியாத துவார பாலகிகள் சல்லடை தடுப்பு போட்டு சிறையாகியிருந்தார்கள். கோயிலின் நெற்றியில் அருள்மிகு ஸ்ரீமகாதேவியர் அன்னபூரணி நாகபூஷணி அம்மன் திருக்கோயில் என்று கொட்டை எழுத்தில் விளக்கு  வாசகம் மின்னியது. சன்னதிக்கு பக்கவாட்டில் ரெண்டு பக்கமும் ஆட்கள் அகண்டு நிற்கும்படி தடுப்புக் கம்பிகளும், ஒரு சுற்றுப் பருத்த உண்டியலும், சுற்றுப் பாதையில் நவகிரகங்களும், பாதையின் கடைசி மூலையில் கன்னங்கரேலென்று காளியாயின் சிலையும் இடம்பெயர்ந்திருந்தது.

அம்மைக்கு நெஞ்சு பதபதைத்தது. கொந்தளிப்பும் தவிப்புமாய் ஓங்காரம் எடுத்துக் கதறத் துவங்கிவிட்டாள். தன்னினைவு இழந்து மூர்ச்சையாகித் தரையில் விழும் மட்டும் அந்தப் பொட்டுக் கருக்கலில் சன்னதம் வர ஆடி அசந்திருக்கிறாள். ஆளரவமற்ற கோவிலடியில் அம்மையும் காளியும் அனாதரவாய் நொடிந்து கிடக்க, பூட்டிய கர்பகிரகத்திற்குள் புதுசாய் குடிவந்த

தெய்வம் ஒரு அணுக்கமும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தது.

***

ச்சியை அடக்கம் பண்ணின எங்கள் சொந்த நிலம் அறக் கட்டளையின்  கணக்கிற்குள் வருவதாகவும், அதைச் சட்டத்துக்குப் புறப்பாகச் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டதாகவும் அம்மை மீது ஓட்டல்காரர் வழக்குப் பதிந்திருந்தார்.

பெரியம்மையின் கொழுந்தனார் கீழ்கோட்டில் வக்கீலாக இருந்ததால் அம்மைக்காக வந்து வாதாடி அந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பு வாங்கித் தந்தார். ஆனாலும் கோவிலிலும் அறக்கட்டளையிலும் முறைகேடுகள் இருப்பதாயும் அதனால் அறக்கட்டளை நிர்வாகத்தில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் புதிதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

கோர்ட்டுக்கும் வாய்தாவுக்கும் அலைந்து கையில் இருந்த காசெல்லாம் பஸ்சுக்கே கரைந்தது. தம்பியின் படிப்புச் செலவுக்காக வாங்கிய கடன்களும் கழுத்தை நெறிக்க இவ்வளவு காலமும் ஊருக்கெல்லாம் அள்ளி அளந்து அருள் கொடுத்த காளியாயி கடைசியில் எங்களுக்கு ஏன் கைவிரித்தாள் என்று புரிபடாமலே அம்மை வீட்டுக்குள்ளே முடங்கிப் போனது.

***

கொட்டு மேளச் சத்தம் நின்றடங்கி குந்துமணியும் கீழே விழுந்தால் காதால் கேட்டுத் தேடி எடுத்துவிடும் அமைதி. "யேய்.." என்ற ஒரு குரல் தான். அம்மையின் தளர்ந்த உடலுக்குள் இருந்து அவ்வளவு வலுவாய் ஒரு சத்தம் வரும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

"யாரயடா பட்டினி போட்டுப் பாக்கீங்க. பச்ச எல ஒண்ணும் பூக்காம, கருக்க மழை ஒரு துளியும் தரையில வந்து விழாம தண்ணிக்கும் சாவுக்கும் நடுவுல தவிச்சுக் கெடக்கிங்களே ஏந்தெரியுமா! ஆய்ய்... ஊம்... நான் போய்ட்டேன். இந்த மண்ணுக்கு இனி தண்ணி இல்ல. இந்த மண்ணுக்கு இனி சீவன் இல்ல. இந்த மக்களுக்கு இங்க நீதி இல்ல.. இந்த ஊருக்கு எந்தச் சாமியும் இல்ல.. நான் காடேறிட்டேன். காட்டுலருந்து மலையேறிருவேன். அதுதான் இனி என் எடம். அதுதான் இனி என் எடம். அதுதான் இனி என் எடம்...."

அருளிறங்கிய அம்மையின் உடல் தளர்ந்து, கையிலிருந்த திருநீற்றுச் சட்டி நிலமெங்கும் சிதற, வேப்பங்குலை அங்கமெல்லாம் விசிறடிக்க, கழுத்து மாலை அந்துவிழ ஆச்சியின் உடம்பு அடங்கின தெக்குக் காட்டின் திட்டையில் எரிந்து கொண்டிருந்த மாடக்குழி விளக்கின் வெளிச்சம் மறைய அதன் மீதே சாய்ந்து விழுந்தது அம்மை.

மேளக்காரர்கள் கொட்டுக் கம்பை வானத்துக்கும் பூமிக்குமாய் ஏற்றி இறக்கி அடிக்கத் துவங்கினார்கள். பெண்களின் குலவைச் சத்தம் காதைப் பிளக்க அம்மை முற்று முழுதாய் மலையேறியிருந்தாள்.


Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்