வள்ளம்




     


  வ்வொரு கோடைக்கும் இந்தக் கடல் காத்து, வெக்கை கூடி அடிக்கும். கரை அலையில்லாமல் அமைதியாகக் கிடக்கும். பருந்து வட்ட வட்டமாய் தடம் காட்ட மீன் வீச்சம் மதமதவென்று கரையேறும்.. ‘மீனெல்லாம் கரைக்கு வந்துட்டு இருக்குஎன்பார் மைதீன் முதலாளி. அதற்கு முன்பே தச்சு பார்த்து, தகர அடைப்பு கொடுத்த வள்ளங்களும், பிடி வலைகளும் தயார் நிலையாகி இருக்கும். பெஞ்சாதியின் தேர்வாலியை அடகுக்கு வைத்த காசை மடிவலையாக மாத்திய வள்ளத்துக்காரர்கள் எல்லாம் மைதீன் முதலாளியிடம் நெத்திலி அடித்துத்தான் சித்திரைப் பாட்டு வருவாயைப் பார்த்தாக வேண்டும்.

மைதீன் முதலாளி மாதிரி வலுசாலியும் உழைப்பாளியும் அந்தக் கடற்கரைப் பிராந்தியத்தில் பார்க்க முடியாது. சொன்னதைக் கேட்கும் உடம்பும் எதற்கும் கலங்காத மனசும் கொண்டவர். சொந்தம் பந்தமென்று யாரும் கிடையாது. பெரிய அத்தா போனபிறகு, எல்லாமே சுலைமான் சாச்சா தான். சாச்சாவுக்கும் வயசு கேறிக்கொண்டேயிருந்தது. மைதீன் முதலாளிக்கு, கருவாடு ஏத்துமதி தொழிலில் செய்நேர்த்தியோடு, சொன்ன வாக்கைக் காப்பாத்துகிற மனுஷன் என்று மரியாதையும் கொழும்பு வரைக்கும் நல்லபேரை வாங்கிக் கொடுத்திருந்தது. வியாபாரத்திலும் வந்தது போனது எல்லாமும் கரையோரத்து சனங்களுக்கு சரிக்குச் சமமாய் பிரித்துக் கொடுத்து அவர்களோடு ஒண்ணுமண்ணாக வாழ்ந்து கொண்டிருந்தார் மைதீன் முதலாளி.

தேங்காய்ப் பட்டணத்துக் கடலில் வள்ளம்விட்டு வெஞ்சிலா, அருக்குலா, பாறை, மடிநெத்திலி, வலைநெத்திலி அடித்து, ஏஜெண்டுகள் மூலம் சிலோனுக்கு ஏத்துமதி வியாபாரம் பண்ணிக் கொண்டே, கரையில் நாலைஞ்சு வள்ளங்களும், மடிவலைகளும் போட்டு மீனவசாரிகளுக்குப் பிழைப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். பெரிய படிப்பென்று படிக்காவிட்டாலும் சொல் ஒன்று செயல் வேறு என்றில்லாமல் நறுக்குத் தெறித்ததுபோல வியாபாரம் பண்ணக்கூடியவர் என்பதாலும், நாக்கில் இருந்த நன்னயத்தாலே அவர்மேலே மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தது மீனவச் சனங்கள்.

கடல் எல்லாருக்கும் படியளந்து கொண்டிருந்தது. இன்னும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. எல்லாம் மனிதக் கூட்டத்துக்குள் பேராசை வந்து குடிகொள்ளும் வரைக்கும் தான். அந்த வருச சித்திரைப்பாட்டின் சனிக்கிழமை சாயங்காலத்தில், பிடிபட்ட மீன்களில் சிலோனுக்கு என்று ஒதுக்கிய உணத்தல் மீன்களை வண்டிமாட்டில் ஏத்திவிட்டுக் கொண்டிருந்தார் மைதீன் முதலாளி. இன்னையிலிருந்து ரெண்டாம் நாளில் துறைமுக ஏஜண்டு கையில் கிடைத்துவிட்டால் போதும். வியாழக்கிழமை நடையில் கொழும்புக்குப் போகும் கப்பலில் அத்தனைச் சரக்கும் ஏறியிருக்கும். திரும்ப திங்களுக்குத் தான் மறுநடை. மாற்றி மாற்றி நடைகள் போய் சரக்குகள் இறக்கி ஏற்றி நடக்கும் வியாபாரத்துக்கு ஆன முதலாக சிலோன் ஏஜண்டின் தரும் முன்பணம் தான் ஆதாரம். முன்பணத்தைக் வாங்கிக் கொண்டே அத்தனை சரக்கையும் சிட்டை போட்டு வண்டியேற்றி அனுப்பி வைப்பார் சுலைமான் சாச்சா.

*

சுலைமான் சாச்சாவுக்கு மைதீன் முதலாளிகிட்டே ரொம்பவும் அன்பு இருந்தது. ஒருகாலத்தில் சாச்சாவும் மைதீன் முதலாளியின் பெரிய அத்தாவும் ஒரே வள்ளத்தில் தொழிலுக்குப் போவர்கள். ஆழ்கடலுக்குள் கைகோர்த்து எத்தனையோ இருளங்களைப் பார்த்தவர்கள். அப்படி முழுநாளும் பாடுபார்த்து பரும்பரும் மீன்களைக் கரைக்குக் கொண்டு வந்துகொண்டிருந்த ஒரு காற்றடி காலத்தில், மைதீன் முதலாளியின் பெரிய அத்தாவை புலிச்சுறா ஒன்று சுருட்டி அடித்துத் தண்ணீரில் இழுந்த்துக் கொன்று போட்டது.

அப்போதெல்லாம் கடல்புரத்தில் கரைப்பக்கம் தூண்டிபோட்டு சின்னமீன் பிடித்துக் கொண்டிருந்த சனங்களுக்கு சுறாத் தொல்லை பெருந்தொல்லை. பத்து குட்டி போட்ட தாய்ச்சுறா என்றாலும் அது தனியே கரை மேயும்போது ஆபத்தானதுதான். பசியோடு கிடந்து காத்திருந்து வேட்டையாடிப் போகும். இதன் அட்டூழியத்தை அடக்குவது என்று ஆளாளுக்குத் திணறிக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாகக் கடைசியில் கருமார்கிட்டேச் சொல்லி, சுறாவுக்கென்றே தனீ முள் தூண்டி அடித்து, இளவட்டங்களும், மூப்பர்களும் தாங்களே கடலுக்குள் இறங்கி சுறா வேட்டைகளில் ஈடுபடத் துவங்கியிருந்தார்கள். அப்படி வேட்டைக்குத் தப்பிக் காயம்பட்டிருந்த புலிச்சுறாதான் பெரிய அத்தாவைக் கொன்று போட்டிருந்தது. எப்படி இருந்தாலும் ஒருநாளில்லை ஒருநாள் அதைக் கரைக்கு இழுத்து வந்து அதன் சங்கிலே மிதித்துக் கொல்லணும் என்ற நினைப்பும் மைதீன் முதலாளி பாலறவாயனாக இருந்தபோதே அவர் அடிமனசிலே பதிந்துவிட்டது.

காது விடைத்து நடுக்கடல் தொழிலுக்குப் போக ஆரம்பித்த வயதில், மைதீன் முதலாளிக்கு என்ன ஆகிருதி என்கிறீர்கள். அந்தப் பிரதேயத்து முசல்மான்கள் எவருக்கும் வாய்க்காத வளப்பமான கட்டுடம்போடு, துளவை இழுத்துப் பிடித்தாரென்றால் ஆழி தாண்டி வள்ளம் சீறும். அப்படி ஆறுநாளாகக் கடல் கசத்திலே கிடந்து அந்த புலிச்சுறாவை அடையாளங் கண்டுகொண்டார். ஜரிகை தூண்டிலில் கொருக்கிப் போட்டு மாட்ட வைத்து, பலங்கொண்ட மட்டும் முதுகு வாங்கி இழுத்து நீஞ்சவிட்டு, களைத்து ஓய்ந்த சுறா மேலே சாடிவந்தபோது, குத்துக் கம்பியாலே அதன் ஒற்றைக் கண்ணைத் தளர்த்தை உயிரோடு தன்னந்தனி ஆளாக அதனைக் கடக்கரையில் இழுத்துக்கொண்டு வந்து போட்டுத்தான் அந்த இளவட்டம் நிமிர்ந்தது.

கடக்கரை பூராவும் மைதீன் கொண்டுவந்துபோட்ட சுறாவின் பேச்சுத்தான். சுலைமான் சாச்சா பதறிப்போய்விட்டார். இவ்வளவு துடிப்பும் ஆகிருதியும் கொண்டவனை எப்படிக் கைக்கடங்கி வளர்த்து கரைசேர்த்துவிடுவது என்று அவருக்கு பெருத்த ஆவலாதி ஏற்பட்டுவிட்டது. மருகி மருகி யோசித்தவர் அன்றைக்கு காலமே கடற்கரைப் பள்ளியில் வைத்து, ‘உன்னையும் தூண்டி வள்ளத்தோட இந்தக் கடலுக்குள்ள இறங்கவிட்டு, சுறாவுக்குக் கொடுத்துட மாட்டேன், எனக்க மேல ஆணை இந்தக் கடலில இனி நீ இறங்கக் கூடாது” என்று சத்து வாங்கி கொண்டார். பெரிய அத்தா பேருக்குத் துளியும் குறை வைக்காத மரியாதையும், அதிகப்படியான அன்பும் சாச்சாவின் மீது கொண்டிருந்த மைதீனுக்கும் சாச்சாவின் சொல்லை மீறும் வழிவகைகள் தேவையாய் இருக்கவில்லை.

கடலுக்குள் கால் வைக்காது, கரையிலே மீன்களை ஏலமெடுத்து, திற்று முதலாக்கி, உணத்தி காயவைத்த கூடைக் கருவாடுகளைச் சிலோனுக்கு ஏத்தி அனுப்பும் வணிக முறைகளையும் கற்றுக் கொண்டு முழுதாகத் தொழிலில் இறங்கிவிட்டதால் அதுமுதல் மைதீன் முதலாளி என்றே கடற்கரை முழுக்க அவரை அழைக்கலானது. அதேபோதில், ”மைதீன் முதலாளி ஏன் கடலுக்குள் இறங்க மாட்டேங்கார் என்று கேட்கும் புதுவள்ளத்து ஆட்களுக்கு இந்தக் கதையை ஒவ்வொரு தரமும் ருசிருசியாகச் சொல்வது தேங்காப்பட்டிணத்து மீன்சாரிகளுக்கு நல்ல கதைப்போக்காவும் மாறிவிட்டது.

*

சுலைமான் சாச்சா அன்றைக்குச் சிவப்புக் கலர் சிங்க முத்திரை போட்ட கொழும்புக் கடிதாசியை கையில் தூக்கிக் கொண்டு, கண்களைச் சுருக்கிக் கொண்டே கடல்ப்புரத்துக்கு வந்திருந்தார். கொழும்பு வியாபாரத்தில் விற்பனை, விலை நிலவரங்களைக் குறித்து அங்குள்ள ஏஜண்டின் கணக்கர் எழுதிப் போட்டிருந்த கடிதாசி தான் அது. இது வழக்கமான காரியந்தான். சரக்கு கேட்கும்போது, கடுதாசியில், ”லாபம் இங்கே இன்ன சரக்குகள் இன்னின்ன விலை விக்கிறது. அதில் இத்தனை இத்தனை சுமை ஏத்தி அனுப்பி வைப்பீர்களாக; மேற்படி விபரங்கள் பின்பக்கம் பார்க்கஎன்று கைவிரிந்த சொல்லாய் எழுதியிருப்பார்கள். அதுவே வியாபாரமெல்லாம் படித்து அங்குகொண்டுபோய் நிரப்பினபிறகு, கணக்கு விபரமாக வந்துசேரும் தாளை வாங்கிப் பார்த்தால் கரை யாபாரிகளுக்கு முகம் சுருங்கிப் போய்விடும்

தேங்காப்பட்டணத்து முதலாளிக்கு சலாம், இந்த சித்திரை வாடைக்கு உங்க சரக்குகள் கரை வந்து சேரும்முன்னே மலையாளத்தான் சரக்குகள் குவிஞ்சு கொழும்பில் மார்கெட் விலையெல்லாம் விழுந்து போச்சு. சொன்ன விலைக்கு கட்டாது. மேற்படி அசல், முன்பணக் கணக்கை தூத்துக்குடி பெரிய ஏஜண்டிடம் எழுதிப் பெற்றுக்கொள்ளவும். இன்ஷா அல்லாஎன்று தாள் வரும்.

தூத்துக்குடி பெரிய ஏஜண்டும் மெல்லமாக, “வாங்கிய முன்பணத்தை வச்சுப் பாக்கும்போது, மிச்சம் இத்தன காசும் இவ்வளவு சக்கரமும் படியாள் நீங்கத்தான் திரும்பக் கொடுக்கணும் போல இருக்கும். அதை அடுத்த நடைக்குள் சரிபார்த்து தீத்துக்கலாம். இப்போ இன்னின்ன சரக்குகளை அனுப்பி வைக்கச் சொல்லுங்கஎன்று பட்டும் படாமல் பதில் எழுதுவார்கள்.

இத்தனையிலும் மீன்பிடி இல்லாமல் போகிற காலத்தில். வாங்கின முன் பணத்தை இத்தனைத் தவணைக்குள் கொடுக்கணும். தப்பினால் நிலப் பத்திரங்களையோ, வலைகளையோ, வள்ளத்தையோ பேர் மாத்தி எழுதி வாங்கிக் கொள்கிற போன்ற பழக்கங்களும் கடக்கரையிலே கசமுச என்று பேசப்பட்டுக் கொண்டிருந்தன. தூத்துக்குடி ஏஜண்ட்மார்கள் பலரும் சிலோன் என்றாலோ, மாலத்தீவு என்றாலோ சரக்கனுப்ப பத்துதடவை யோசித்துக்கொண்டு கிடந்தார்கள். சிலோனிலும் தொழில் விழுந்த பலரும் தங்கள் தொழில் கிட்டங்கியை நேரடியாக, நடை கப்பல் கம்பனியின் பங்கு முதலாளிகளுக்கோ, தங்களுக்கு அனுசரணையான கொச்சிக்கடை மலையாளிகளுக்கோ கைமாற்றி எழுதிக் கொடுத்து, வேண்டியவர்கள் அவர்களோடு தொழில் பண்ணிக் கொள்ளச் சொல்வதுமான கசப்பான காரியங்களும் சிலகாலமாக நடைந்தேறிவந்தன.

*

மைதீன் முதலாளிக்கு கொடுக்கிற கை. அது அன்பானாலும் சரி அடியானாலும் சரி. தொழிலில் உள்ள நீக்குபோக்குகளை நன்றாக அறிந்த பழம்வியாபாரி. வியாபாரம் இல்லாக் காலங்களிலும் ஒரு கைக்கு மறுகையாக பணத்தை வசூலித்து உரிய ஆளுக்கு இவ்வளவு உருப்படி இவ்வளவு என்று பாடு கணக்கைக் கொடுத்து விடுகிறவர். அவருக்கேத்த மாதிரி பழைய சிலோன் முதலாளிகளும் அவர்கிட்டே கொஞ்சம் வளைந்துக் கொடுத்தே வந்தார்கள். சிலோன் முதலாளிகளிடம் அவருக்கு இருந்த நாசூக்கும் மரியாதையும் கடற்புரத்து மனிதர்களை இந்த தொழில்பாடுகளில் நடக்கும் விசாரங்கள் குறித்த எந்த அச்சமும் துச்சமும் இல்லாமல் தானுண்டு தன் பாடுண்டு என்று இருக்க வைத்தது.

அது கீழ்க்கடலில் காற்றுகாலம் ஆரம்பித்திருந்ர்க சமயம். சிலோனில் உள்ள ஏஜண்ட், தான் கடன்சுமை தாங்காமல் தொழிலை எல்லாம் புதிய ஏஜண்ட் ஒருத்தனிடம் ஒப்படைத்துவிட்டு கண்டிக்குப் போய்விடுவதாகவும், வேண்டுமானால் வியாபாரங்களை அவன் கிட்டேயேத் தொடரலாம். இல்லையென்றால் புதிய ஏஜண்டு பார்த்துக் கொள்ளுமாறும் மற்றக் கணக்குகளை திங்கள் நடைக்கு வரும் கப்பலில் கொடுத்து விடுவதாகவும் கடிதாசியில் பிரதி எழுதிப்போட்டிருந்தார். அந்தக் கடுதாசியை கையில் ஏந்திக் கொண்டுதான் சாச்சா கடல்புரத்துக்கு வெக்கு வெக்கென்று நடைபோட்டு வந்திருந்தார்.

கடுதாசியைப் படித்ததுமே சாச்சாவுக்கு மனசு பிடிபடவில்லை. ஏதோ எடங்கேறு வரப்போவதாக எண்ணிக் கொண்டார். இத்தனைக் காலமும் தொழில் பண்ணினவர் எல்லாத்தையும் வேறாளுக்கு மாற்றிக் கொடுத்து விட்டுக் கிளம்புகிறேன் என்று சொல்வது அவருக்கு சவுகரியமாகப் படவில்லை. மைதீன் முதலாளிகிட்டே விசயத்தை உடனே சொல்ல வேணும் என்று தோன்றவும்தான் அவரே கொதிக்கிற மணல்சூட்டையும் பார்க்காமல் ரொம்ப காலத்துக்குப் பிறகு கரைக்கு வந்திருந்தார்.

தன் காலத்தில் பத்து வள்ளங்கள் பாய் வைத்திருந்தாலே இந்தக் கரைக்கு அது அதிகம் என்று தோன்றும் அளவுக்கு கரை நிறைந்திருக்கும். இன்றைக்கு சரளமாக நாற்பது அம்பது வள்ளங்கள் கரையிலே திக்கு திசை காட்டிக் கொண்டு கிடந்தன. அவற்றில் காய்ந்து ஒட்டிக் கிடந்த சங்குச் சிப்பிகளில் இன்னும் ஈரம் போயிருக்கவில்லை. கரையொட்டி போடப் பட்டிருந்த நிறைய குடிசைகள் பட்டுவிட்டன. உள்ளொடிந்து தாழ்ந்து கிடந்த அந்தக் குடிசைகளின் வாசலில் காயப் போட்டிருந்த ஊளியைக் கவ்விக்கொண்டு போகக் காத்திருந்த காக்கைகளை நண்டும் சிண்டுமாகப் பிள்ளைகள் விரட்டி விளையாடிக் கொண்டிருந்தன.

அயுப் தான் சாச்சா கரையில் வந்து நிற்பதைத் தூரத்திலிருந்து கவனித்தான்.  ஹாஜியார் சுபானியுடன் தென்னந்தோப்பில் நிழலாற உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மைதீன் முதலாளியிடம் சாச்சா கடற்கரைக்கு வந்திருக்கும் செய்தியை அவன்போய்ச் சொன்னதும், செருப்பை மாட்டிக்கொண்டு ஹாஜியாரும் உடனே கிளம்பினார்.

சாச்சா கையில் வைத்திருந்த கடுதாசியை வாங்கிப் படித்துப் பார்த்த நெடுநேரத்துக்குப் பிறகு, இந்த ஒரு பாடு பழைய கணக்கோடேயே போய் வரட்டும். அடுத்ததில் இருந்து எப்படி நீக்கு என்று பார்த்துக்கொண்டு முடிவெடுப்போம் என்று சாச்சாவை சாந்தப்படுத்தி அனுப்பினார் முதலாளி. மனசில் கெதியே இல்லாமல் வீடு திரும்பின சாச்சா மறுதினத்திலே மவுத் ஆகிப்போனார்

நல்ல சாலிஹாய் மனுசன். வயசாளி. கடசீ நாளிலே இந்த சொரி மண்ணிலே அப்புடி நடந்து போவாரா! நல்ல மவுத்துத்தான் வெள்ளியாச்ச நாளில் மரிச்சவருக்கு சொர்க்கம் தான் என்று சனங்கள் பேசிக்கொண்டார்கள்.

மைதீன் முதலாளியோடு இன்னும் சிலருமாகச் சந்தூக்கைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். சாச்சாவின் மய்யத்தின் பின்னாலே சனங்கள் அலையலையாய் வந்துகொண்டிருந்தது. மய்யத்தின் தொழுகை முடிந்து கபரில் அடக்கம் செய்து, மண்ணள்ளிப் போட்டு மூடின பிறகு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது.  எல்லோரும் போனபிறகு, ‘எக்கப் பொன்னு சாச்சா என்னை  இப்படி எத்தீம் ஆக்கிட்டுப் போய்ட்டீயளேஎன்று ஒரேயொரு அதிரல் அதிர்ந்துவிட்டு அப்படியே கீழே உட்கார்ந்தார் மைதீன் முதலாளி.

*

அந்தமான் பக்கம் எங்கேயோ உள்ள தீவிலிருந்து முஸாபராக இங்கே வந்து கரைசேர்ந்ததாகச் சொல்லிக்கொண்டான் காக்கா. நல்லாய் தமிழ் பேசினான். கரேல் என்ற நிறத்துக்கு வைத்தார்களோ என்னவோ பேர் அவன் ஆளுக்கும் குரலுக்கும் பொருத்தமாய் இருந்தது. துறை முழுக்க ஆளாளுக்கு அவனையே கண்கண்ணாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு மைதீன் முதலாளிகிட்டே, ‘வள்ளத்தில் ஏறக் கேக்கான் என்று கூட்டிவந்தார்கள். ஆளை கையும் தொடையும் பார்த்து எடைபோட்டவர் கூட்டுக்குச் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்.

கப்பல்களில் வந்திறங்குகிற கேப்டன் மார்களோடு பழகினவன் என்பதால் காக்காவுக்குச் சொல்வதற்கு நிறைய கதைகள் இருந்தன. சீக்கிரமே துறை மக்களோடு ஒண்ணுக்குள் ஒண்ணாகப் பழகிப்போனான். உழைப்பிலும் ஆள் அசந்து ஓய்ந்து நின்னு விடுகிறவனில்லை. ஒரு புரட்டில் வலையை உருட்டித் தூக்குத் தோளில் ஏற்றிக் கொள்வான். கைத்தாங்கலாக ஒரு பிடி பிடித்தான் என்றால் வள்ளம் தன்னால் வந்து கரையேறிக் கொள்ளும். பேச்சில் மட்டும் தான் அசலான் என்பது எட்டிப் பார்க்குமே தவிர முழுசும் மீனவசாரி போல கடக்கரையில் சேர்ந்துகொண்டான்.

*

கடக்கரையில் இந்தச் சித்திரைக்கு மடிநெத்திலி வாசனை மணம் மணமாய் அடித்தது. உப்புப்போட்டு உணத்திய, மண்ணில்லாத அசலானதெல்லாம் கொழும்பு கப்பலுக்கு என்று பாகுபிரிக்கப்பட்டது. வலையைக் காயப்போட நேரமில்லாமல் கடலுக்குப் போனார்கள். வருக்குலாவும், மடிநெத்திலியும் தான் பிடிப்பு அதிகமாய் இருந்தது. நிற்க வைக்க நேரம் இல்லை மைதீன் முதலாளிக்கு.

வள்ளத்து கணக்கை காக்காவிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லியிருந்தார். அவனும் சிட்டைகள் போட்டுக் குறித்துக் குறித்து சரக்குகளை எடுத்தனுப்பினான். ஆள் நாணயமானவன் என்பதை யாரும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை மைதீன் முதலாளிக்கு. சாச்சா இறந்தப்போது, ஒடிந்துபோன கைக்கு மருந்து போட்டதாக இருந்தது காக்காவின் வரவு.

சிட்டை போட்டு குறிச்சு வைங்க. ஒரே நடையா சரக்கை அனுப்பிவைக்கக் கேக்கான் சிலோன் யாபாரிமார். கணக்கு வழக்கை அப்புறம் பார்த்துக்கலாம். விலை விழும் முன்னே சரக்கு சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும். மிக மிக அவசரம்என்று தாள் வந்திருந்தது கொழும்பு புதிய ஏஜெண்ட் சமதுவிடமிருந்து.

அந்த வருஷத்தின் சித்திரைப்பாட்டில் கடலுக்குப் போன வள்ளமெல்லாம் மீனை அள்ளி அள்ளிக் கொண்டுவந்து கரையில் கொட்ட, ‘படச்ச ரப்பே! இந்த கடலுக்கு மனசு தெறந்துருச்சுஎன்று வாய்விட்டுச் சொன்னாள் ஜாமியாம்மாள். தலைப் பாரத்தில் மீனைச் சுமந்து வீதிகளில் யாவாரம் பார்க்கும் ஜாமியாம்மாள் மாதிரியான பெண்ணாட்டிகளுக்கு சித்திரைப் பாட்டில் மனசு நிறைந்து போனது. ‘நேரங்காலம் நல்லா இருக்கு. ஐப்பசியில் வச்ச அலுக்கத்தை சித்திரை முடியும்போது மீட்டிடலாம் என்று அவளைப் போலவே எல்லா பெண்களுக்கும் தனித்தனி கனவுகள் பூத்துக் கிடந்தது. ஆண்களும் மனக்கணக்குப் போட்டுக் கொண்டார்கள். கொண்டது கொடுத்தது என்று பட்டியல் வரும்போது, லாவக் கணக்கில் கை நிறையாட்டாலும் மனசு நிறைஞ்சு அனுப்புவார் முதலாளி என்ற நம்பிக்கையோடு எல்லாரும் உழைத்து ஓய்ந்திருந்தார்கள்.

*

பாடு நிறுத்தி வைக்கும் காலம் வந்துவிட்டது. ரொம்ப காலம் கழித்து கப்பல் ஏறி கொழும்புக்குப் போயிருந்தார் மைதீன் முதலாளி. கடல்புரத்துப் பாடுகளும், கொழும்பு யாபார நடவடிக்கைகளும் புதிதாக ஆரம்பித்த ஏஜண்டுக்கு வணிகம் எப்படிப் போகிறது என்பதெல்லாம் பேசித் தீர்த்தபிறகு, கணக்கு வழக்குகளுக்கு வந்தார்கள். முதலாளி பேரில் அனுப்பின சரக்குக்கும், ஏஜண்ட் சமது வந்து சேர்ந்ததாகக் குறிக்கப் பட்டதுக்கும் கொஞ்சங்கூட பொருந்தவே இல்லை. எக்கச்சக்கம் கீறல் விழுந்துகிடந்தது பட்டியல்

என்னப்பா ஏழாங்கணக்கா இருக்கே

என்ன மொதலாளி சொல்லுதியோ. கொடுத்தனுப்பிச்சதுக்குத்தானே பைசல் எழுதி இருக்கேன்

ஏ அப்பா, இருவது நடைக்கு மேலெ வந்த சரக்குகளுக்கு கணக்கே இல்லைங்கிறேன்

மொத்தமே பதிமூணு நடதான் மொதலாளி. தூர்விட்டுப் பிடிச்சதுக்கு மேல நான் என்னத்தக் கொண்டு போகப் போறேன் சொல்லுங்க

இல்ல சமது சரியா பாரு. முப்பத்தினாலு நடை மொத்தம் வந்திருக்கணும். ..காக்கா நம்ம தாள்கள அப்படிக் கொண்டாந்து காமி

வாங்கின தாள்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்த சமது,“ஆமா கேட்டு அனுப்பினது இந்த கணக்குக்குத்தான். ஆனா வந்து சேர்ந்த நடைகளத் தானே நாங் கணக்கு எழுதப் போறேன். வேற ஏஜண்டுங்க யாருக்கும் சரக்கு மாத்தி எறக்கிட்டீங்களான்னு பாருங்க மொதலாளி

நாயம்ன்னு ஒண்ணு இல்லாம பேசாதப்பா. கட்ட வலிச்சு கடலுக்குப் போனவன் வயித்தில அடிக்க நெனைக்கிற. அது நல்லதுக்கில்ல. படைச்சவனுக்கே இது பொறுக்காது.”

என்ன பேசுறீங்க மொதலாளி. பெரிய ஆளா இருந்துக்கிட்டு வார்த்தைகளச் சரியா விடுங்கெ. எதோ நம்ம மக்கன்னு வாங்கி எறக்கி, கேக்கறவனுக்குக் கொடுத்து கமிசன் போக மிச்சத்தை கடல்ல கொட்டின மாதிரி உங்க கிட்டதான் கொட்ட இருக்கேன். இந்தச் சல்ல புடிச்ச யாவாரத்தில நான் கால்த் துட்டு திங்கப் போறது கிடையாது. அதுக்காண்டி இப்படி வராத சரக்குக்குச் சீட்டு காட்டுனீயள்னா புதுசா யாபாரம் ஆரம்பிச்சவன் என்ன செய்வேன் சொல்லுங்கெஎன்றான் சமது.

அவன் பேச்சில் இருந்த வீச்சு சத்தியத்தைப் பேசுகிறவனின் தெளிவோடு இருந்தது. சந்தேகத்தை என்னான்னு தீர்த்துப்போம் என்று துறைமுகத்துக்கு நடை வந்து சேர்ந்த சிட்டைகளையும், தன்னுடைய குறிச் சீட்டுகளையும் வைத்து கணக்கு பார்த்தார் மைதீன் முதலாளி. இறங்கின கணக்குகள் சமது காட்டின கணக்குக்கு நிகராய் வந்துநின்றது.

எங்கேயோ தப்பு நடந்திருப்பதை உணர்ந்த முதலாளி சமதுவை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார். அவன் ஒரு நஜீசு என்று உறைத்துவிட்டது. ஏஜண்டுகளைக் காலி பண்ணி, பெரிய கப்பல் முதலாளிகளுக்கு சரக்கு அனுப்பி, கொள்ளை லாபம் சம்பாதிப்பதோடு தொழில்காரர்கள் வயிற்றிலும் அடித்துப் புடுங்கிகிறவன் என்று புரிபட்டுவிட்டது. ஆனால் இப்படிக் கடேசியில் மைதீன் முதலாளி தலைமேலே கைவைத்துவிடுவான் என்பதை அவர் யூகித்திருக்கவில்லை.

 “நம்பி ஏமாற நான் ஆளில்லேடா. ஒழுங்கா துட்டை எடுத்து கீழ வை..” என்று சமதுவின் சட்டையைப் பிடித்துவிட்டார் முதலாளி. சிலுக்கு ஜிப்பா கிழிந்து வெள்ளித் துட்டுகள் உருண்டு ஓடியது. கொஞ்சமும் அசந்து போகாமல் தன் கணக்கு சுத்தமானது என்று வாதாடினான் சமது.

புதுப் பணக்காரனுக்கு பேராசை பிடித்தால் என்னாகும். சாட்சிகளும் கணக்குச் சீட்டும் அவனுக்குச் சாதகமாக இருந்தது. கோபம் கொப்புளிக்க கடையில் இருந்து வெளியேறினார் மைதீன் முதலாளி.

*

கப்பநடையில் சரக்கை ஏத்தாம ஏஜெண்டுச் சிட்டையும் இல்லாம நீங்க சொல்லுத சரக்குக்கு பணம்னு கேட்டா என்ன செய்யச் சொல்றீங்க. விலையும் ரொம்ப ஒண்ணும் நிக்கலை. மலையாளத்தான் வழக்கம்போல குவிச்சுட்டான். நாங்களும் நஷ்டப்பட்டுத்தான் நிக்கோம். சமது சாதாரணமான ஆள் இல்ல. பெரிய கப்பல் ஆளுங்களோட அடி போட்டுட்டு இருக்கான். அவம் மச்சினன் தான் வர்றபோற சரக்குகளுக்கு இப்போ ஆனைவிழுங்கி. ஒஸாமார்கள் யாரையும் முன்னப்போல தொழில் பண்ண விடுறதில்ல. உப்பா காலத்து யாபாரங்கள். ஹ்ம்ம் என்னெ செய்யச் சொல்லுதேங்கள். இந்த கடல்லே அலையும் ரூஹானியத்துகள் இதே எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருக்கும். ஆகிரத்திலே அவன் எல்லாத்துக்கும் அனுபவிச்சுத்தான் ஆகணும். பேசிப் பார்த்து, இப்பதைக்குக் கொடுக்கதை அனுசரிச்சு வாங்கிக்கங்க என்று ஆறுதல் சொன்னார்கள் பழைய சிலோன் யாபாரிகள். யாருக்கும் வாக்குவன்மை இல்லை.

காக்காவைக் கூடே அழைத்துக்கொண்டு மறுநாள் விடியும் முன்னே சமதுவின் கமிஷன் கடைக்குப் போயிருந்தார் முதலாளி. என்ன தானக்கேடு வந்தாலும் கொடுத்த சரக்குக்குக் காசை இப்ப இல்லைன்னாலும் பின்னாலே சேர்த்து தறுமாறு பேசிப் பார்க்க நினைத்திருந்தார். ஆனால் சமது வேறு தினுசில் தொடங்கினான்.

என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ, முன்பணமா வாங்கின கணக்குப் போக, ஆறு லட்சம் ரூவாயை இப்பவே எடுத்து வச்சிடுங்க. இனி உங்க கள்ள யாபாரம் எனக்கு வேண்டாம். பழைய ஏஜண்டு கணக்கு வரத்தெல்லாம் என்கிட்டத்தான் இருக்கு. அதையத்தனையும் கொடுத்து தீர்த்தாத்தான் ஆச்சிஎன்று கத்தித் தீர்த்துவிட்டான்.

நல்லபேர் பொல்லாப் பேரெல்லாம் கடனாளி ஆகும் முன்பு வரைதான். காசு உள்ளவன் ஊரில் அவன் வைத்தது தானே சட்டம்.

என்ன நீச்சம் பார்த்து அடிச்சுட்டியே சமது. பாடு பார்த்தவங்க குடும்பம் குடும்பமா எல்லாம் காசை எதிர்பார்த்து நிக்குதாங்க. நீ இல்லாக் கடனை பொல்லாத்தனமா கொண்டாங்குதீயே நியாயமாஎன்றார் மைதீன் முதலாளி.

என்னைய என்னச் செய்யச் சொல்லுதீங்க. நானும் அங்கவிட்டு இங்க வந்து பொழக்காண்டாமா. என் பொஞ்சாதி நகை துணிமணியும் அடவுல தான் வச்சிருக்கு. இனிப் பேச்சு வளக்க வேண்டாம். தேங்காப்பட்டணத்து பெரிய மொதலாளி கள்ளக் கணக்கெழுதி ஏமாத்திட்டார்னு ஊரு முழுக்கச் சொல்லி என்னப் பொலம்ப வச்சுடாதீங்கஎன்றான் சமது.

ரப்பே!” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவர்தான். அதற்குப்பிறகு என்ன நடந்தது, ஏதேது எழுதிக்கொடுத்து வாங்கினது என்ற விபரம் எதுவும் காக்காவுக்குத் தெரியவில்லை. கொழும்பு முதலாளிமார்கள் சிலபேர் மட்டும் ஆறுதலாய் வந்து வழியனுப்பிவிட்டார்கள்.

காற்றுக் கடல் பால்போலப் பொங்கியடித்தது. முக்கடலும் ஒன்றை ஒன்று மோதி  கலந்தடிக்கும் வேகத்தில் கப்பல் தடுமாறிச் சாய்ந்தது. கன்ணுக்கு எட்டும் தொலைவுக்கும் தண்ணீராய்க் கொந்தளித்தாலும் ஒவ்வொரு கடலும் ஒன்றல்லவே. ஒவ்வொன்றின் ஆழத்திலும் எத்தனை எத்தனை இருள்கள். எத்தனை எத்தனை தடுப்புகள். கரைபோலவே மனுஷனும் இங்கு தீவுதான். இப்படியே அழிந்து மூழ்கி ஆழத்தின் இருள்களில் மறைந்து கிடக்கிற பேரமைதிக்குள் அமிழ்ந்துவிட மாட்டோமாசஞ்சலங்களில் தவித்துக் கொண்டிருந்த மனத்துடன் கண்மூடின மைதீன் முதலாளி பிறகு கண் திறந்து பார்த்தபோது சுற்றிலும் இருள் மாத்திரமே இருந்தது.

*

வீசுவீசென்று வெய்யலோடு கொச்சிக்கடை வீதியில் அடித்த காற்றும் காக்காவின் முகத்தை அறுத்துக் கொண்டு போனது. ‘என்னப் பார்த்து கள்ளக் கணக்கெழுதிட்டான்னு சொல்லிட்டானப்பாஎன்று திரும்பத் திரும்ப முனகிக்கொண்டே இருந்தார் மைதீன் முதலாளி. காக்காவுக்கு அவரை நேர்முகமாகப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. அவன் கையில் கொத்துச் சாவியைக் கொடுத்து, “முன்னால போய் ஹாஜியார்கிட்டேச் சொல்லி, யார் யாருக்கு என்ன கணக்கோ அதை அத்தனையும் இருக்கதை வச்சு பிரிச்சுக் கொடுத்திரச் சொல்லு. மைதீனுக்க வாக்கை நம்பி அங்கன அத்தனை சனம் நிக்குது. அவன் வயித்துல அடிச்ச பாபத்தை தலையில கொட்டிட்டா திரும்ப எந்த ஜென்மத்துக்கு அள்ள முடியாது. நீ போ நான் பின்னால வாரேன்னு மட்டும் சாச்சாகிட்டச் சொல்லு.’ என்றார்.

அமைதியாகச் சற்றுநேரம் தலையைக் கவிழ்ந்தவர், ‘.. சாச்சா போய் சேர்ந்தாரில்ல..’ என்று கலங்கிக்கொண்டே வார்த்தையை முடிக்காமல் காக்காவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மீண்டும் அமைதியானார்.

*

தன்னந்த தனியாக ஊர் திரும்பிய காக்கா, கைப்பொருளாக இருந்த காசையும், சக்கரத்தையும் ஹாஜியாரிடம் ஒப்படைத்தான். எல்லாருக்கும் பாடுக் கூலியைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி முதலாளி எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டான்.

கடற்கரை பக்கம் வந்தவனை, எல்லா சனங்களும் எங்கே முதலாளியக் காங்களே என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். அத்தனை பேருக்கும் புது ஏஜண்டைப் பாக்குற விஷயமா மணப்பாட்டுக்குப் போயிருக்கார். ரண்டு நாளில் வந்துருவார் என்ற பதிலையேச் சொல்லிக் கொண்டிருந்தான்.

ரெண்டு நாள் தீர்ந்து ஒரு வாரமும் போனது.

மைதீன் முதலாளியின் தளவாடங்கள், துறை யாபாரங்கள், வள்ளங்கள், மடிவலைகள், கரணைக்குப் பக்கமுள்ள தோப்புகள் எல்லாவற்றையும் தூத்துக்குடி முதலாளிகளில் ஒருத்தரான செல்லையா நாடார் வந்து ஏலம்போட்டுக் கொண்டிருந்தார். விஷயமறியாத சனங்கள் அவரைத் தடுக்கப் பாய, காவல்காரர்கள் அவர்களை தடியைக் கொண்டு மடக்கித் தடுத்தார்கள்.‘சிலோனுக்குப் போன கப்பல்களில் ஒண்ணு ரண்டு கப்பல் சரக்கெல்லாம் கவுந்துபோனதால் நட்டக் கணக்குக்காக மைதீன் முதலாளி தன் சொத்தையெல்லாம் மாற்றிக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டேப் போய் விட்டார் என்று வாய்மொழியாக அவர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

அவர்கள் அப்படிச் சொன்னதை யாரும் நம்பவேயில்லை. எல்லாருமே காக்காவைத் தேடி அலைந்து பிடித்துவந்து உண்மையச் சொல்லக் கேட்டார்கள். அவன் எல்லாபேரின் கைகளையும் தட்டிவிட்டு கரைக்கு நேர் எதிராய் இருந்த மண்மேட்டில் ஏறி தன்போக்கில் நடக்கத் தொடங்கினான்தள்ளிப் போய் தளர்ந்து நின்றவன், தலையை மட்டும் திரும்பி, கண்முன்னால் விரிந்துகிடந்த கீழைக் கடலை வெறித்துப் பார்த்துவிட்டு, அடித்தொண்டையில் இருந்து காரித் துப்பினான்சனங்கள் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Comments

Popular posts from this blog

காந்தல்

கல்மனம்

வெட்டும் பெருமாள்